Thursday, March 15, 2012

நினைவில் நீ (அத்தியாயம் பதினான்கு.)


                                 நினைவில் நீ.( நாவல் தொடராக.)
                                -----------------------------------------------

                                                      -----  14  -----

        பாபு வந்த பிறகும்,அவனது பேச்சுகளைத் தான் கேட்ட பிறகும், சியாமளாவுக்கு அவன் மேல் ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டிருந்தது. அவள் கல்யாணி அம்மா வீட்டுக்கு வருவதை மிகவும் குறைத்துக் கொண்டிருந்தாள். அப்படியே வந்தாலும் பாபு இல்லாத சமயம் பார்த்து வருவாள். அவளுக்கு பாபுவின் வீட்டில் நடந்த விவகாரங்கள் எல்லாம் ஓரளவுக்குத் தெரிய வந்தது. ஒன்றிரண்டு முறைகள் அவள் இருக்கும்போது பாபு திரும்பினால், அவளுக்கு பேச்சு வராது, நிலை கொள்ளாது மனம் அடித்துக் கொள்ளும் .இந்த மாதிரியதான ஒரு உணர்ச்சி அவளுக்கே புதுமையாக இருந்தது. இதற்கு காரணங்காணத் தன் உள்ளத்தை வெகுவாக ஆராய்ந்தவளுக்கு விடை ஏதும் கிடைக்க வில்லை.


    வீட்டில் அம்மை வந்திருந்தபோது ,கல்யாணி அம்மா அவள் வருவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள வேண்டி இருந்தாள். அது மிகவும் சரியானதென்றே அவளுக்குத் தோன்றியது. இருந்தாலும் பாபுவுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேட்ட போது, அவனைப் பார்க்க வேண்டுமென்று ஒரு ஆசை அவள் மனதில் ஆல விருட்சமாய்ப் படர்ந்தது. சந்துரு, ரவியிடம் அவ்வப்போது விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவள் பாபு தேறிவிட்டான் என்று அறிந்ததும் அடக்க முடியாத ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் வீட்டுக்குச் செல்வதென்று முடிவு செய்தாள்


    பாபுவுக்கு தமிழ் மன்றம்,மக்கள் மன்றமாக மாறும் பணி தன்னால் தடை பட்டுக் கொண்டிருக்கிறதே என்ற ஏக்கம் அதிகரித்து வந்தது. உடல் நிலை சரியானதும், செய்ய வேண்டிய காரியங்களில் முழு மூச்சுடன் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். துவக்க வேண்டிய பள்ளியில் பணியாற்ற வேண்டிய ஆட்களை சேகரிப்பது அவ்வளவு கடினமாகத் தோன்ற வில்லை.அவனுக்கு. தன்னுடன் கானும் வருவான், இன்னும் ஒருவர் கிடைத்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு சியாமளாவின் நினைவே எழுந்தது. அவளைப் பார்த்து நாட்கள் ஆகிவிட்டன என்று அறிந்த போது அவளைக் காண வேண்டும் என்ற ஒரு உத்வேகம் அவனிடம் ஏற்பட்டது. சியாமளாவுக்கும் பாபுவுக்கும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே மற்றவர் மீது அன்பேற்பட்டது. அது எந்த அள்வுக்குச் சரியானது என்று இருவருமே தீவிர மாக சிந்திக்கவில்லை. சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.

      பாபுவுக்கு சியாமளாவைக் காண வேண்டும் என்ற நினைவு வந்ததும் சியாமளாவே அவன் வீட்டுக்கு வருகை தந்தது அவனுக்கு மிகவும் இதமாக ஆறுதலாக இருந்தது.

     “ டேய், இந்த லெட்டரை உங்க டீச்சர்கிட்டக் கொடு, “என்று பாபு ஒரு உறையை ரவியிடம் கொடுத்ததும்.லீவ் லெட்டரா அண்ணா என்று அவன் கேட்டான்..லீவ் லெட்டருமில்லை, லவ் லெட்டருமில்லை,சொன்னதைச் செய் .போநினைத்துப் பார்க்காமலேயே சொல்லப் பட்ட வார்த்தைகள் தான் என்றாலும், உண்மையிலேயே லவ் லெட்டரைக் கொடுத்தால் சியாமளா என்ன நினைப்பாள், எப்படி அதை ஏற்றுக் கொள்வாள் என்ற எண்ணங்கள் பல அவனுள் எழுந்தது. நினைத்ததைச் செயலில் காட்ட தைரியம் போதவில்லை.


    ரவி கொண்டுவந்த உறையைக் கண்டதும் சியாமளாவுக்கு எழுந்த முதல் எண்ணமும், “ ஏதடா இது. ! எதையாவது கன்னா பின்னா என்று எழுதி இருப்பாரொஎன்ற சந்தேகம் தான். பிரித்துப் படித்துப் பார்த்ததும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கன்னா பின்னா என்று எழுதப் பட்டிருக்கக் கூடிய கடிதமாய் இருக்கக் கூடாது என்று படிக்கும் முன் பயந்தவள், அப்படி இல்லையே என்று வருத்தப் பட்டாள். வேண்டாம் என்று எண்ணிய மனமே இல்லை என்று அறிந்ததும் ஏங்கிற்று.

      கல்யாணி அம்மாவும் எதிர் பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்த ஒரு பெண்ணிடம் தன் பிள்ளை இப்படியொரு கடிதத்தை தன் முன்னாலேயே கொடுக்கச் சொல்கிறானே என்று கோபம் வந்தது. ஆனால் அதை சியாமளா பிரித்துப் பார்த்துப் படிக்கக் கேட்டதும் தன் சந்தேகமே உண்மையாய் இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்கத் தோன்றியது. இருவருக்கும் உள்ள பொருத்தத்தைப் பார்த்ததும் , தான் அப்படி நினைத்துப் பார்ப்பதே தவறு என்று அவளுக்குத் தோன்றியது. “ பாபு ஒரு பிராமணப் பிள்ளை.சியாமளாவோ மராத்தியப் பெண். வேண்டாமடாப்பா வெண்டாம்.! என்னால் ஏற்பட்ட புகைச்சலே பெரிசா இருக்கு. நாளைக்கு இந்த மாதிரி ஏதாவது நடந்தால் வேறு வினையே வேண்டாம். நான் தான் அப்படி நடக்கத் தூண்டினேன் என்று பழிப்பார்கள். “

          இல்லாத ஒன்று எல்லார் மனசிலும் இருப்பதாகத் தோன்றியதே, வரப் போகும் நிகழ்ச்சிகளுக்கு அறிகுறி என்று யாருக்குமே சந்தேகம் எழவில்லை.

     “தமிழ் மன்றத்தின் சார்பில் துவங்கப் பட இருக்கிற பள்ளிக்கு மாலை நேரத்தில் ஊதியமில்லாமல் உங்களால் உழைக்க முடியுமா, என்பதைத் தெரிவிக்கவும். சாதாரணமாக நடத்தப் படும் பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாக விளங்கப் போகும் இப்பணியில் பணியாற்ற ஒப்புதல் தெரிவிக்கும் முன், அது துவக்கப் படும் நோக்கத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று உங்கள் உள்ளத்தை அலசி ஆராய்ந்து முடிவைத் தெரியப் படுத்த விரும்புகிறேன். இப்படிக்கு பாபு.

     பாபுவால் தொடங்கப் படும் எதுவும் சிறந்த தாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் “ ஒப்புதல். நம்புகிறேன். சியாமளா.என்று ஒரே வரியில் அதே கடிதத்தில் பதிலையும் அப்போதே எழுதிக் கொடுத்து விட்டாள்.

         என்னவோம்மா.! ஆண் பிள்ளைகள் ஆரம்பித்திருக்கிற காரியங்களிலே பெண்கள் கலந்துக்கிற போது கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். “

     “ஆரம்பிக்கிறது ஆண்பிள்ளைகளாக இருந்தாலும் படிக்கப் போறதென்னவோ பச்சைப் பிள்ளைகள் தானே மாமி. ஒரு நல்ல காரியத்துலெ பங்கு எடுத்துக்கிறோம்  என்கிற நிறைவு ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாய் இருக்குமா என்ன..?

     “ சரியாகச் சொன்னீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு என்பது பேச்சோடு மட்டும் இருக்கக் கூடாது. செயலிலும் இருக்க வேண்டும்.பெண்களெல்லாம் பாரதி கண்ட பெண்களாயிருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னேறி இருக்கும்.”-எதிர் பார்க்காத முறையில் பாபுவும் பேச்சில் பங்கு கொண்டான்.

             அம்மா, ரஷ்யாவிலே எல்லாம் நாங்க இங்கே செய்யற கஷ்டமான இயந்திர வேலைகளை எல்லாம் பெண்களும் ரொம்பத் திறமையாகச் செய்யறாங்களாம்.

    அப்படியானா, பெண்களுக்கே சொந்தமான ஒரு நளினம் கெட்டுப் போயிடுமேடா.

    “அதுவும் சரிதான். அதனால்தானோ மேல் நாட்டுப் பெண்களை அடையாளம் கண்டு பிடிப்பதே கஷ்டமாயிருக்கு. “

    “இங்கு சியாமளா அக்காவைச் செய்யச் சொல்லும் வேலை டீச்சர் வேலைதானே அண்ணா.அதனால் அவங்க பயப்பட வேண்டாம் இல்லையா.?விசுவும் பேச்சில் கலந்து கொண்டான்.

    மேலை நாடுகளுக்கு எதுக்கண்ணா போகணும். இந்த பெங்களூரிலேயே ,கஷ்டப்பட்டு  வேலை செய்யாத எவ்வளவோ நம்ம நாட்டுப் பெண்களையே அடையாளம் கண்டுக்க முடியலை. அதுதான் இப்போ ஃபாஷன். ஆண் பெண்ணைப் போல இருக்கறதும் பெண் ஆணைப் போல இருக்கறதும்....ராஜுவும் விட்டு வைக்க வில்லை.

      சியாமளாவுக்குத் தன் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஏதோ ஒன்று அவளைப் பேச விடாமல் தடுத்தது. பாபுவுக்கு சியாமளா என்ன சொல்லுவாள் என்ற ஆர்வம் அதிகரித்தது. இருந்தாலும் பலனிருக்க வில்லை.

     நாம் முதன் முதலில் ஆரம்பிக்கப் போகும் பள்ளிக் கூடம் இது. இதற்குப் பிறகு வாழ்வாதாரக் கைத் தொழில்கள், கூட்டுறவு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் இத்தியாதி, இத்தியாதி வகைகளை நடத்த நிறைய ஆட்கள் தேவைப் படும்

          “ அண்ணா, நீங்க சொல்வது சரியில்லை.தமிழ் வளர்க்கும் மன்றத்தின் காவலன் ஆங்கிலச் சொற்களைப் பயன் படுத்தலாமா.? கைத் தொழிலகம், கூட்டுறவு பண்டக சாலை என்றல்லவா கூறி இருக்க வேண்டும்..விசு நாடக பாணியில் நீட்டி முழக்கியதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்தனர்.

      “ இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. முத்தமிழ் விழா நடந்து முடிந்த கையோடு, செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமிருக்கிறது. சியாமளா நீங்கள் ஆசிரியைத் தொழில் துவங்க உங்கள் வீட்டில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அம்மாவை கொண்டு அவர்களை கேட்கச் சொல்கிறேன். “- பாபு சீரியஸாக மறுபடியும் சியமளாவைப் பேச வைக்க முயன்றான்.

     “ ஆட்சேபணை இருக்கோ இல்லையோ நான் எதுக்கும் அவ அம்மாகிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டு வருவதுதான் முறை. நீ என்ன சொல்றே சியாமளா “
என்று கல்யாணி அம்மா கேட்டாள். சியாமளாவும் சரியென்று தலை ஆட்டியது தவிர எதுவும் பேசாதது பாபுவுக்கு மிகவும் ஏமாற்றமாயிருந்தது.

             அடிக்கடி சியாமளா வருவதும், அவள் வரும் சமயத்தில் பாபுவும் தன்னை ஆஜராக்கிக் கொள்வதும் சகஜமாகப் போய்விட்டது. கல்யாணி அம்மாவுக்கு மட்டும் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் தானாக விஷயம் வெளிப்படாத வரை தான் வீணாக எதையும் அனுமானித்துக் கொள்ள வேண்டாமென்றே அவளுக்குத் தோன்றியது.

    சியாமளாவைக் காணும்போதும் ,அவள் பேச்சைக் கேட்கும்போதும் ,பாபுவுக்கு ஒரு அலாதியான இன்பம் கிடைக்கும். தான் அவளைப் பற்றி எண்ணுவது போல அவளும் தன்னைப் பற்றி சிந்திக்கிறாளா என்றறிய அவன் உள்ளத்தில் அடக்க முடியாத ஆசை எழுந்தது. கண்டதும் காதல் என்பதில் பாபுவுக்கு நம்பிக்கையே கிடையாது. காதல் என்பது ஒரே சமயத்தில் இருவர் உள்ளத்திலும் ஒருவருக்காக மற்றவர் தோற்றுவிக்கும் அன்பின் எழுச்சியே என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் மட்டும் அவளிடம் அன்பு கொண்டு ஏங்குவது, அவளுக்கு அந்த எண்ணமே இல்லாமல் இருந்தால் பைத்தியக்காரத்தனமானது என்று எண்ணியதால்தான அளிடம் அவன் அன்பு கொள்வது முறையா என்ற கேள்வி அவன் உள்ளத்தில் அடிக்கடி எழுந்தது.

       எந்தப் பெண்ணையும் காணும்போது ஏற்படாத நெகிழ்ச்சி, ,பரிதவிப்பு, ஏக்கம் ,ஆதங்கம் எல்லாம் ஒரே சமயத்தில் சியாமளாவைக் காணும்போது மட்டும் எழுவது அவனுக்குப் புரியாததாக , வேடிக்கையாக இருந்தது..அவள் அவனிடம் அன்பாகப் பேசுகிறாள் என்று கனாக் காணும்போது கூட உள்ளம் வெட வெடக்கும், மூச்சுத் திணறும் , பேச்செழும்பாது. இன்பமான மௌன நிலையில் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்வதே  காதலின் பேரின்பம் என்றெல்லாம் எண்ணுவான். எண்ணத்திலேயே இன்புறுவான்.உண்மையில் அனுபவிப்பது எப்போது என்று ஏங்குவான்.

    இந்த மாதிரி நினைவுகள் எழும்போதெல்லாம் பாபுவுக்கு பயமாய் இருக்கும். அவனை அறியாமலேயே அவன் உள்ளத்தில் அவன் அதிக நாட்கள் வாழ மாட்டான் என்ற எண்ணம் சிறுகச் சிறுக அடிக்கடி எழுந்து, நிரந்தரமானதாகவெ குடி கொண்டு விட்டது..அதுவே உண்மையானதாகவும் நடக்கும் என்று தீவிரமாக நம்பினான். அதனால்தான் சியாமளாவைப் பற்றி எண்ணுகையிலேயேதான் அவளுக்கு ஒரு சமயம் இன்பத்துக்குப் பதில் துன்பத்தை கொடுத்து விடுவோமோ என்று அஞ்சினான்.

     விளக்க முடியாத இந்த உணர்ச்சி ஒரு சமயம் தனக்கு வாழ்க்கையில் உள்ள பற்று இல்லாத தன்மையைக் காட்டுகிறதோ,,அது ஒருக்கால் மாறி, அன்பு துணை கிடைக்கப் பெற்றால் தன்னுடைய இந்த அர்த்தமற்ற கற்ப்னை உணர்ச்சி, வாடி சருகாகலாமோ என்றும் அடிக்கடி அவன் சிந்தித்தான்.

     எப்படி இருந்தாலும் சியாமளா அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள்,அவன் மீது அவளுக்கு அன்பு உண்டா என்றெல்லாம் அறியத் துடித்தான் பாபு..உறங்கினால் கனவில் உருவாகவும், விழித்திருந்தால் நினைவில் உருவாகவும், எங்கும் எதிலும் சியாமளாவை கண்டான் பாபு. வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை வெள்ளைத்தாளில் எழுதி ஓரளவு வெளிப்படுத்த முயன்றான்..இலக்கணமே இல்லாத கவிதைகள் பல உருவாயின. அவற்றுள் ஒன்றை அவனுக்கு சிறந்தது என்று தோன்றியதை ஒரு நாள் சியாமளாவிடம் சேர்ப்பித்தும் விட்டான்.

    வாங்கும்போதே உள்ளிருக்கும் செய்தி இதுதான் என்று யூகித்து அறிந்து கொண்டாள் சியாமளா..மனம் வேண்டாம் தவறு என்று தடுத்தாலும், அதைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பள்ளி சம்பந்தப்பட்ட ஏதாவது இருக்கும் என்றுதான் போலியாக நம்பிக்கொண்டே, நொண்டி சமாதானம் கூறிக் கொண்டு அதை பத்திரப் படுத்திக் கொண்டாள். நடுங்கும் கைகளையும், நிலம் நோக்கும் பார்வையையும் கண்ட பாபு, அவள் மேல் இரக்கம் கொண்டு தான் அவளைப் புண் படுத்தி விட்டோமோ என்று தன்னையே நொந்து கொண்டு அவ்விடத்தை விட்டகன்றான். முடிவு தெரியாத மாணவனின் மனக் குழப்பத்தைவிட அதிக மாயிருந்தது பாபுவின் சஞ்சலம். உடனே படித்துப் பார்த்து பதிலையும் கூறி விடுவாள் என்று முதலில் எண்ணினாலும்,அவள் ஒரு மென்மையான பெண், அவளால் அப்படிக் கூற முடியாது என்றுதான் திடமாகத் தோன்றியது.அவளது முடிவை அறிய கடிதத்தில் அவன் குறிப்பிட்டிருந்த தேதி வர வேண்டும்.

    கடிதத்தைப் பெற்றுக் கொண்டவளுக்கு அது மறைத்து வைக்கப் பட்டிருந்த இடத்தில் மிகவும் உறுத்தியது. வழக்கத்தைவிட சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டாள். யாரைப் பார்த்தாலும் எல்லோரும் சந்தேகக் கண்களோடு தன்னைக் காண்கிறார்களோ என்ற அச்சம் அடிக்கடி எழுந்தது. யாராவது தன்னைக் கண்காணிக்கிறார்களோ என்று அச்சம் ஏற்பட்டது. தூரத்தில் யாராவது வந்து கொண்டிருக்க அது பாபுவாக இருக்குமோ, அவர் ஏதாவது தன்னைக் கேட்பாரோ என்றெல்லாம் எண்ணி அல்லல் பட்டவள்.,அருகில் வந்த அந்த மனிதனைக் கண்டு, பாபு அல்ல என்று தெரிய வந்ததும், நிம்மதியும், கூடவே அது பாபுவாக இருக்கவில்லையே என்ற ஏக்கமும் கொண்டாள்.

     ஒரு வழியாக தனிமையில் அந்தக் கடிதத்தைப் பிரித்தவளொரு வரிதான் படித்திருப்பாள் ;வேர்த்துக்கொட்டத் தொடங்கியது. அதை அப்படியே மடித்து வைத்து  தன் சிந்தனைக் குதிரைக்குக் கடிவாளம் இட்டு, மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது. கடிதத்தை நடுங்கும் கைகளால் பிரித்தவள் முகத்தில் செம்மை படர்ந்தது.இமை படபடத்தது.நாக்கு உலர்ந்து விட்டது போன்ற உணர்ச்சி. ஒரு முறை படித்து முடித்தாள். ஒரு கூஜா தண்ணிரைக் குடித்து முடித்த பிறகுதான்,ஓரளவு சுய நிலைக்கு வரப் பெற்றாள்.இந்த முறை படிக்கும்போது  நிதானம் இருந்தது.
                  நிலவைப் பழிக்கும் முகம்
                  நினைவைப் பதிக்கும் கண்கள்
                  நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்
                  சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்
                  கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு
                  படர்கொடி வெல்லும் துடியிடை-என்
                  இடர் சேர்க்க இடையிடையாட-மென்னடை
                  நடந்தென்முன் நிற்கும் இன்பக்
                  கனவினை நனவாக்க எண்ணி-வந்தக்
                  கற்பனைக் கண் கண்ட கன்னி,

நீயென்றால்,அன்பு சியாமளா, டபுள் ரோட் காஃபி பார் அருகே காத்திருப்பேன் ,சந்திப்பாயா.?( வருகிற ஞாயிற்றுக் கிழமை மாலை 4-30 மணிக்கு )----பாபு.

      சமாச்சாரம் இதுதான். தனியாக சந்திக்க வேண்டுமாம். நான் அங்கு போக வேண்டுமாம். என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.? ஒரு ஆடவன் என்னை வந்து பார் என்று சொல்வதற்குள் போக வேண்டுமா. ? நன்றாகக் கேட்கப் போகிறேன். அட....அப்படிக் கேட்கக் கூடப் போகத்தானே வேண்டும்.? போகிறேன். கேட்கிறேன். கேட்டுத் திரும்பி வந்து விடுகிறேன்.இல்லை நான் போகாமலெயே இருந்து விட்டால்......தன் மேல் அன்பில்லை என்று தவறாக நினைத்துக் கொள்வாரோ.? எண்ணினால் எண்ணிக் கொள்ளட்டும். சேச்சே.! அது மட்டும் கூடாது. பாவம் .எவ்வளவு நல்லவர்..ஹும்.! போய்ப் பார்க்கலாமே. எதற்குப் பயப்பட வேண்டும். ? கரடியா. புலியா.?ஆனால் நிச்சயம் இதுதான் முதலும் கடைசியும் ஆன தனிச் சந்திப்பு. என்பதை மட்டும் திட்டமாகத் தெரிவித்து விட வேண்டும்..அது பிறகுள்ள பிரச்சினை. போவது என்று முடிவு செய்தாகி விட்டது. என்ன பேசுவது.? எந்த உடை அணிந்து கொள்வது.?அவருக்கு எப்படிப் போனால் பிடிக்கும்.?.....எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தேட இன்னும்தான் நாட்களிருக்கிறதே. “
-----------------------------------------------------------------                          

                 .                                      ( தொடரும். ) 

       
     


        4 comments:

 1. சூடு பிடிக்கிறது.

  ReplyDelete
 2. //” லீவ் லெட்டரா அண்ணா ” என்று அவன் கேட்டான்..” லீவ் லெட்டருமில்லை, லவ் லெட்டருமில்லை,சொன்னதைச் செய் .போ” நினைத்துப் பார்க்காமலேயே சொல்லப் பட்ட வார்த்தைகள் தான் என்றாலும்..//

  இப்படித்தான் எதிர்பாராமல் பொருத்தமாய் வந்து விழும் வார்த்தைகள் கூட அடுத்தாற்போல என்ன செய்வது என்பதற்கு வழி காட்டும்.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 3. //கன்னா பின்னா என்று எழுதப் பட்டிருக்கக் கூடிய கடிதமாய் இருக்கக் கூடாது என்று படிக்கும் முன் பயந்தவள், அப்படி இல்லையே என்று வருத்தப் பட்டாள். வேண்டாம் என்று எண்ணிய மனமே இல்லை என்று அறிந்ததும் ஏங்கிற்று.//

  வேண்டும் என்றால் வேண்டாம்;
  வேண்டாம் என்றால் வேண்டும்..

  காதல் ஒரு தினுசு தான்!

  ReplyDelete
 4. “ சரியாகச் சொன்னீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு என்பது பேச்சோடு மட்டும் இருக்கக் கூடாது. செயலிலும் இருக்க வேண்டும்.பெண்களெல்லாம் பாரதி கண்ட பெண்களாயிருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னேறி இருக்கும்.”-எதிர் பார்க்காத முறையில் பாபுவும் பேச்சில் பங்கு கொண்டான்.

  எதிர்பாராத திருப்பம்...

  ReplyDelete