Wednesday, October 17, 2012

இப்படியும் ஒரு கதை......


                              இப்படியும் ஒரு கதை.
                              ------------------------------


பல்த்மநாபா.... பல்த்மநாபா...விளிச்சால் கேக்குனில்லே. ?

“ இதா வந்நு திருமேனி. “

இல்லத்தின் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறார் தாசன் நம்பூதிரி.. பத்மநாபன் அவருடைய காரியஸ்தர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டும்.

கூப்பிட்டீர்களா ...என்ன வேணும்.?

வெற்றில அடக்கை தீர்ந்து போச்சு. எடுத்துவாரும்.“

திருமேனியின் தேவைகள் எல்லாம் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்.,திருமேனி என்று மரியாதையுடன் அழைக்கப் படும் தாசன் நம்பூதிரிக்கு வயசு சுமார் நாற்பது இருக்கலாம். காரியஸ்தர் பத்மனாபன் அவர் பிறந்தது முதல் அந்தக் குடும்பத்துக்காக உழைப்பவர். மிகவும் விசுவாசமான ஊழியர். தாசன் நம்பூதிரி திருமணம் ஆகாதவர். அதாவது பொறுப்புடன் ஒரு மனைவி குழந்தைகள் என்ற கட்டுப்பாடு இல்லாதவர். அவரது மூத்த சகோதரர் திருமணம் செய்து கொண்டார். நூறு பரை நெல் பயிரிடும் அளவுக்கு இருக்கும் கிருஷிக்குச் சொந்தக்காரர். திருமணம் செய்து கொண்டால் சொத்து பிரிக்கப்பட்டு  அனுபோக பாத்தியதை குறைந்து விடும் என்னும் காரணத்துக்காக மூத்தவர் மட்டும் திருமணம் செய்வது வழக்கத்தில் இருந்ததுதான். மற்றவர்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் பிரம்மசாரிகள் அல்ல. அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள நாயர் மேனோன் குடும்பங்களில் சம்பந்தம் ( தொடுப்பு ) வைத்துக் கொள்வார்கள். அது அனுமதிக்கப் பட்ட ஒரு வழக்கம். அப்படி தொடுப்பு கிடைப்பதே ஒரு அங்கீகாரம், மரியாதை என்ற எண்ணம் நிலவி வந்தது.

“ பத்மநாபா, இன்றைக்கு நேரம் காலம் எல்லாம் கணிக்கும்போது , என் உறவில் ஒரு சந்தான பாக்கியம் கிடைக்க யாருக்கோ கொடுத்து வைத்திருக்கிறது.அது யார் என்று தெரிய வேண்டுமே.

தேவை தெரிவிக்கப் பட்டாயிற்று. திருமேனியின் விருப்பம் பூர்த்தி செய்யப் பட வேண்டும் “ யார் அந்த அதிர்ஷ்டசாலி ?

பத்மநாபனுக்கு இரண்டு சகோதரிகள். முறையாகப் புடவை கொடுக்கப் பட்டு வாழ்க்கைப் பட்டவர்கள். இருவருக்கும் சந்தானபாக்கியத்துக்கு குறைச்சலில்லை. ஒவ்வொருவருக்கும் மூன்று பெண்கள் ஒரு மகன். ஆனால் கட்டியவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது. அவர்களை வளர்த்திப் பெரியவர்கள் ஆக்குவது மாமா பத்மநாபனின் பொறுப்பு. இல்லத்தில் காரியஸ்தராக இருந்ததால் வயிற்றுப் பாட்டுக்குக் குறை விருக்கவில்லை. குடிக்கக்கஞ்சியும் உடுத்த முண்டும் கிடைத்தது, யாருக்கும் எந்த குறையும் தெரியவில்லை. பத்மநாபனின் சொத்துபத்து எல்லாம் அவரது சகோதரிகளுக்குச் சேரும் இருந்த சொத்து என்று சொல்ல ஒரு வீடும் அதைச் சுற்றி இருந்த தோட்டத்தில் இருந்த சில  தென்னை மரங்களும் ஓரிரண்டு பலா மரங்களும்தான். சகோதரிகளின் பிள்ளைகளில்  ஒருவனான கோவிந்தனுக்கு  அங்கே இருந்த நிலவரங்கள் எதுவும் பிடிக்கவில்லை. இல்லத்து ஜமீனுக்காகப் பாடுபடுபவர்கள் அனுபவிப்பது என்னவோ மிகவும் குறைவான வசதிகள்தான். இல்லத்து ஜமீனில் பாடுபட வேண்டும் , மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் மெள்ள மெள்ள அவர்களது சிந்தனைகள் மாறுபடத் தொடங்கின. செய்யும் பணிக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வில்லை எனும் எண்ணம் விருட்சமாய் வளரத்தொடங்கிற்று.

எந்த ராஜாவோ எதற்காகவோ கொடுத்த ஏகப்பட்ட நிலபுலன்களில் வேலை செய்பவர்கள் தாழ்த்தப் பட்ட மக்களாக , அடிமைகள் போல் நடத்தப் பட்டது கொஞ்சம் கொஞ்சமாக உரைக்கத்தொடங்கிற்று. ஏன் இப்படி என்ற கேள்வி எழத்தொடங்கிற்று. அப்போதிருந்த நிலைமையில் பத்மநாபனின் சொத்து சகோதரிகள் இருவருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் என பத்து பங்காகப் பிரிக்கப் பட்டால் புறங்கையை நக்கக் கூடப் போதாது. ஆனால் சகோதரிகளின் பெண்களுடைய குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு அந்த இரண்டு ஆண்வாரிசுகளை சாரும்.

காலங்காலமாக அடிமைத்தளையில் இருந்த மக்கள் மெதுவாக சிந்திக்கத்தொடங்கினர். அந்தக் கூட்டத்துக்கு முன் நின்று இந்தப் பழக்க வழக்கங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று முழங்கத் துவங்கியவர்களுள் கோவிந்தன் முக்கியமானவனாகக் கருதப் பட்டான்.

“ கர்ஷகர்களே ஒன்னு சேரின்.பணி செய்யுன்னோருக்கே பூமி சொந்தம் “என்று தொழிலாளிகள் திரளத் தொடங்கினர்.

இந்த நிலையில் தான் தாசன் நம்பூதிரி பத்மநாபனிடம் அவருக்கிருந்த சந்தான யோகம் பற்றிக் கூறினார். தாசர்களாகவே இருந்து பரம்பரை பரம்பரையாக ஆண்டைகளை ஆண்டவனாகவே நினைத்துப் பழகிப் போன பதமநாபனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திருமேனி ஆக்ஞை இட்டு விட்டார். அதை எப்படியாவது நிறை வேற்ற வேண்டும். திருமேனியின் பீஜம் நம் குடும்பத்தில் இருப்பது நல்லதுதானே. சகோதரிகளின் பெண் ஒருத்தி பருவமடைந்து அன்று பூத்த மலர்போல இருக்கிறாள். திருமேனி மூலம் அவளுக்கு ஒரு குழந்தை கிடைக்கவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

பத்மநாபன் தன் சகோதரியிடம் பேசி அவளை இந்த ஏற்பாட்டுக்கு இணங்க வைத்தார். வீட்டின் கார்னவர் , பெரியவர் கூறினால் முறையீடு ஏது.?கோவிந்தன் பகலெல்லாம் எங்கெங்கோ திரிந்து மாலை வீடு திரும்பியவன் நம்பூதிரியை வரவேற்க நடந்து கொண்டிருந்த  முஸ்தீபுகளைப் பார்த்து துணுக்கிட்டான்.,

“ மாமா , என்ன நடக்கிறது இங்கே.?
“ இல்லத்துத் திருமேனி தாசன் நம்பூதிரி நம் வீட்டுக்கு , உன் தங்கைக்குப் புடவை கொடுக்க வருகிறார்.

“ விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டீர்களா.?

“ ஏஎய்ய்ய். அவர்கள் நம் வீட்டில் உணவருந்த மாட்டார்கள். பாலும் பழமும் , வெற்றிலை அடக்கையும் மட்டும்தான் எடுப்பார்கள். “

புடவை கொடுப்பவர் என் தங்கையை அவர் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போவாரா>?

ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை( வழக்கமில்லை ) அவர் நம் வீட்டில் சம்மந்தம் வைப்பதே பெருமை அல்லவா.

“ அவர் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கு அவர் பொறுப்பாவாரா.

“ இது என்ன அதிகப் பிரசங்கித்தனமான கேள்வி. உனக்கும் உன் சகோதரிகளுக்கும் உன் அச்சன் பொறுப்பா இருக்காரா.,? எப்படி உன் அம்மா சின்னம்மா குடும்பமான உங்களுக்கு நான் பொறுப்போ , அதுபோல, உன் கூடப்பிறந்ததுகளுக்கு நீதான் பொறுப்பு “ என்று  மாமா பத்ட்மநாபன் கூறியதை கோவிந்தனால் ஜீரணிக்க முடியவில்லை.

அன்றிரவு தாசன் நம்பூதிரி பத்மநாபன் மருமகள் சங்கமம் இனிதே நடந்தது.
அதற்குப்பின் பல நாட்கள் நம்பூதிரி இரவில் வருவார். விடியலில் காணாமல் போய்விடுவார். ஆணும் பெண்ணும் இணைந்தால் என்ன நடக்குமோ அது நடந்தது

 நடைமுறை சம்பிரதாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த கோவிந்தனுக்கு தன் வீட்டிலேயே நடப்பதை தவிர்க்க முடியாத்து வேதனைக் குள்ளாக்கியது. நம்பூதிரியின் வரவு சிறிது சிறிதாகக் குறைந்து முற்றிலும் நின்று விட்டது. தகப்பன் இருந்தும் இன்னார் மகன் என்று சொல்லும் உரிமை இழந்து வீட்டின் பெயரையும் இன்னாரின் மருமகன் என்று சொல்வதுமே பெருமைக்குரியதா,? தனக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்த்துப் பரிபாலிக்கும் கடமையை நாம் செய்ய வேண்டும்.ஒரு முறை இல்லத்துக்குச் சென்று தாசன் நம்பூதிரியுடன் பேச வேண்டும் எப்படியும் தன் சகோதரியை அவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவளை இப்படியே விட்டால் இவ்ளும் என்ன செய்வாள். இளமைக்காலத்தை தனியே கழிக்க வேண்டி இருக்குமே. இல்லையென்றால்,, இல்லையென்றால்  இவள் தவறான வாழ்க்கை முறையை எடுத்துக் கொள்ள வழி செய்வது போல் இருக்குமே.

என்னவெல்லாமோ சிந்தனையால் அலைக்கழிக்கப் பட்டவன் அடுத்த நாள் நம்பூதிரியின் இல்லத்துக்குச் சென்றான்.

“ வந்நிருக்கின்னது ஆரா ?”  என்ற நம்பூதிரியின் வரவேற்பு கோவிந்தனின் ரத்தத்தை கொதிக்கச் செய்தது.

:ஞான் நிங்களிடே அளியனாண.  தெரிய வில்லையா .?

“ இந்த உறவெல்லாம் சொல்லிட்டு வரக் கூடாது. உனக்கு என்ன வேண்டும்.?

“ எண்டெ பெங்கள் இவிட தாமசிக்கணம். இல்லெங்கில் திருமேனி ஞங்கள்டே வீட்டில் தாமசிக்கணம். “ உள்ளத்தில் இருந்த கோபாக்கினியை அடக்கி நிதானமாகக் கூறினான். கோவிந்தன்.

“ தனிக்கி எந்தா வட்டோ.?  போடோ இவடிருந்நு... “ என்று கூறி அவனை விரட்டினார். என்னவெல்லாமோ நினைத்து வந்த கோவிந்தன் ஒரு வினாடி அவனையே இழந்தான்.அவன் கண்களும் மனமும் அலைபாய அங்கிருந்த தேங்காய் சீவும் அரிவாளை எடுத்து ஒரே வெட்டு. நம்பூதிரியின் தலையைச் சீவி எடுத்தான். அறுபட்ட தலையுடன் ஆவேசமாக நடந்து வந்தவனைக் காண்கையில் அந்த ருத்ரனே வருவதுபோல் நினைத்த ஊரார் அவன் பின்னே செல்ல காவல் நிலையத்தில் சரணடைந்தான்.            
.

13 comments:

 1. கற்பனைக் கதையாக இருந்தாலும், மனதை கலங்கடிக்கிறது அய்யா

  ReplyDelete
 2. புரட்சி வெடித்தது.

  ReplyDelete
 3. நல்ல சரளமான கதை சொல்லல்.

  மரத்தின் வேர் எல்லைதாண்டும் போது நாம் கவனிப்பதில்லை. அதன் கிளைகள் பரவுகையில் சில சமயங்களில் மரமே சாய்க்கப்படுகிறது.

  ஒவ்வொரு மாநிலத்திலும் இதே மாதிரியான வரலாறு இருக்கிறது. முடிவும் கிட்டத்தட்ட இதுபோலவேதான் இருக்கிறது.

  ReplyDelete
 4. தத்ரூபமான எழுத்து.

  ReplyDelete
 5. கதையும் எழுத்து நடையும்
  மனம் கவர்ந்தது
  அந்தச் சூழலை அந்த மொழி கலந்து
  சொல்லிப் போனது மிக மிக அருமை

  ReplyDelete

 6. @ கரந்தை ஜெயக்குமார்,
  @ டாக்டர் கந்தசாமி,
  @ சுந்தர்ஜி,
  @ திண்டுக்கல் தன பாலன்.
  @ ஜீவி,
  @ ரமணி.
  வருகை தந்த அனைவருக்கும் உற்சாக மூட்டும் பின்னூட்டங்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 7. shocking.
  'புடவை கொடுக்கப்பட்டு வாழ்க்கைப்பட்டவர்கள்' என்றால் என்ன?
  தமிழ் மலையாளம் கன்னடம் என்று கலந்து கட்டி எழுதுகிறீர்கள். அமர்க்களம்.

  ReplyDelete
 8. மனம் கலங்கியது. ஆனால் இந்த வழக்கம் பற்றி நாலுகெட்டு வீடு நாவலில் படித்திருக்கிறேன். பல மலையாள நாவல்களைத் தமிழில் படித்திருப்பதால் ஓரளவுக்கு இந்த வழக்கம் குறித்தும் அதனால் எழுந்த புரட்சி குறித்தும் அறிவேன். என்றாலும் மனம் மிகவும் வேதனைப் பட்டது. இது ஒரு கொடிய வழக்கம் தான். நல்லவேளையாக ஒட்டுமொத்த மக்கள் மனமும் மாறியது.

  ReplyDelete
 9. அந்தக் காலத்தில் பெண்களின் நிலை அறிந்து மனம் கலங்கியது.
  கதையை நல்ல முறையில் சொன்னீர்கள்.

  ReplyDelete
 10. அந்தக் காலத்தில் பெண்களின் நிலை அறிந்து மனம் கலங்கியது.
  கதையை நல்ல முறையில் சொன்னீர்கள்.

  ReplyDelete
 11. தெய்வமே !! மனம் உண்மையில் பதறிப்போனது ..
  இயல்பான அழகிய எழுத்துநடை சார் ..ஒரு இடத்தில கூட நிற்காம அப்படியே வாசித்தேன் ..
  அக்காலப்பெண்கள் பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க அதைவிட பிறக்கும் குழந்தைகள் :(


  /அனுமதிக்கப் பட்ட ஒரு வழக்கம். அப்படி தொடுப்பு கிடைப்பதே ஒரு அங்கீகாரம், மரியாதை என்ற எண்ணம் நிலவி வந்தது./எவ்வளவு சுயநலமா இருந்திருக்கிறாங்க நல்ல காலம் ..எல்லாம் மாறிவிட்டது கோவிந்தன் போன்றோரின் புரட்சி யால்

  ReplyDelete
  Replies
  1. நல்ல காலம் நான் தாக்குதல்களிருந்து தப்பித்தேன் காலம் மாறிவிட்டது

   Delete