Saturday, October 6, 2012

வாழ்க்கை ஒரு சக்கரம்..


                                 வாழ்க்கை ஒரு சக்கரம்.
                                  --------------------------------
                                       ( ஒரு சிறு கதை )

சுசீலா கோபால் திருமணமாகி,நாலைந்து மாதங்கள் ஆகி இருக்கும். இந்த நான்கைந்து மாத இடைவெளியில் கண்ணும் மனமும் நிறைந்த துணையுடன் வெளியே தனியே செல்வது இதுவே அவர்களுக்கு முதல் தடவை. மனம் விட்டுப் பேசவோ இருக்கும் வாழ்வை அசை போடவும்,இனி இருக்கப் போகும் வாழ்வுக்குத் திட்டமிடவும், இதுவரை ஏற்படாத வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. அதற்கு ஏற்ற இடம் கடற்கரைதான் என்று முடிவு எடுத்தார்கள்.

அடுத்திருக்கும் பஸ் நிறுத்தம் வரும்வரை ‘பிடித்த கையை விடாமலே வந்தவருக்கு ‘ என்மேல் எவ்வளவு பிரியம் இருந்தாலும் நாலு பேர் பார்த்து ,நாலுவிதமாகப் பேச அவகாசம் கொடுக்கக் கூடாது ‘ என்று பிடித்திருந்த கையை ஒதுக்கி விட்டு நடந்தாள் சுசீலா.

கடற்கரை போகும் பஸ் வந்தது. பெண்கள் இருக்கையில் ஜன்னலோர சீட் கிடைத்தது. இருக்கை  காலியாக இருந்தது. அதில் உட்கார்ந்தால் நடத்துனர் எழுந்திருக்கச் சொல்லலாம். அவளுக்கு நேர் எதிர்பக்கம் ஆண்கள் இருக்கையில் கோபால் அமர்ந்தான். அடிக்கடி அவளைப் பார்ப்பதும், புன்னகைப்பதுமாக ஓரிரு நிறுத்தங்கள் கடந்தன. திடீரென்று நாலைந்து வாலிபர்கள் சிரிப்பும் கும்மாளமுமாக பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களில் ஒருவன் அடுத்தவனிடம் கோபாலின் மனைவியைப் பார்த்தபடி, “ சோக்ரி அச்சி ஹை “ என்று சொல்லிக் கொண்டே சுசீலாவின் பக்கத்தில் அமர்ந்தான்.
கோபால் உடலில் திடீரென்று உஷ்ணம் பாய்ந்தது, காலியாயிருக்கும் பெண்கள் இருக்கையில் அமர்வது அநாகரிகம் என்றுதானே இவன் அவளை விட்டு வேறு இருக்கையில் அமர்ந்தான். அப்படி இருக்க வேறொருவன் தன் அருமை மனைவியின் பக்கத்தில் உட்காருவதைக் கோபாலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
“ மிஸ்டர், அது பெண்கள் சீட். அங்கே உட்காராதீர்கள்.
“ இவங்களே ஏதும் பேசாமல் இருக்க , இவரப் பாருடா..என்று ஒருவன் சொல்ல எல்லோரும் சிரிக்க கோபாலுக்கு அவமானமாய்ப் போய்விட்டது.


“ ஏய்,மிஸ்டர் உனக்கு உட்கார இடம் வேண்டும்  அவ்வளவுதானே. இங்கே என் இருக்கையில் உட்கார். அந்த இடத்தைக் காலி செய்

“ நான் இங்க உட்கார்ந்தா உனக்கென்ன போச்சு. உன் வேலையைப் பார்ப்பியா....
“ எனக்கென்ன போச்சா... அவள் என் மனைவியடா. கண்டவனெல்லாம் அவள் பக்கத்தில் உட்கார சம்மதிக்க மாட்டேன்என்று கூறி அவனைப் பிடித்திழுத்து அந்த இடத்தில் இவன் அமர்ந்து கொண்டான். இவன் இழுத்ததனால் கோபம் கொண்ட அவனும் அவன் நண்பர்களும் கோபால் மேல் பாய ஒரு சிறிய கைகலப்பு நடந்தது. நல்ல வேளை பஸ்ஸில் இருந்தவர்கள் தடுத்து,சண்டை இட்டவர்களைப் பிரித்து விட்டார்கள்.
“ அந்தப் பெண்ணுக்கே அப்ஜெக்‌ஷன் இல்லாதவரை இவனுக்கு என்னாயிற்றுஎன்று அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டதும் கோபாலுக்கு கோபம் அவன் மனைவிமேல் பாய்ந்தது.
“ உன் வாயில என்ன கொழுக்கட்டையா....பக்கத்தில் வேறொருவன் உட்காரும்போதே எழுந்திருக்கச் சொல்லி இருக்க வேண்டாம்...?என்று அவளைக் கடிந்து கொண்டான். அவள் கண்களில் நீர் துளித்தது. குளிரில் நடுங்கும் கோழி போல் பயத்தில் உறைந்திருந்தாள். சந்தோஷமாய்ப் பொழுதை கழிக்க திட்டமிட்டவர்களுக்கு இந்த நிகழ்வுகள் சிறிது சலனத்தை ஏற்படுத்தி விட்டது.

“ இது பரவாயில்லை. நான் கூட இருந்தேன்.நீ தனியாக எங்காவது போகும்போது இம்மாதிரி நடந்தாலென்ன செய்வாய்...?
“ அவன் அருகில் உட்காருவதில் எனக்கு என்ன நஷ்டம்... என் அண்ணன் என்றோ தம்பி என்றோ நினைத்துப் போவேன்
“ அடிப்பாவி....நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் என்று பாரதி பாடிய பெண்மாதிரி இருப்பாய் என்றால் ஒரேயடியாக சாத்வீகப் பறவையாக இருக்கிறாயே ....ரௌத்திரம் பழக வேண்டும்..நீ.....
“ அதுவே நானில்லாமல் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் ....?
“ என்ன செய்திருப்பேன்..?தெரியலியே ஹூம்..! பேசாமல் இருந்திருப்பேன். எல்லோரும் என் பெண்டாட்டிகளா என்ன...?YOU ARE MINE. I HAVE TO TAKE CARE OF YOU.”

இருந்தாலும் நீங்க ரொம்பப் பொசசிவ்.. அப்பா... என்ன கோபம் .அவர்கள் எல்லோரும் சேர்ந்து அடித்து விடுவார்களோ என்று பயந்தே போனேன். “
“ அடி அசடே...!இந்த மாதிரிப் பொது இடத்தில் அதையெல்லாம் தடுத்து விடுவார்கள். நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் எனும்போதே எனக்கு அசுர பலம் வந்து விடும். “

பஸ்ஸை விட்டு இறங்கி இருவரும் கடற்கரை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.. நல்ல காற்று வாங்கவும் பொழுது போகவும் வேடிக்கைப் பார்க்கவும், காசு பணம் அதிகம் செலவு செய்யாமல் கடலைப் பார்த்துக் கொண்டே கடலை போட சென்னை கடற்கரையைவிடச் சிறந்த இடம் ஏதுமில்லை.ஆர்பரித்துவரும் அலைகள் கால்களைத் தழுவித் திரும்ப, அடுத்த அலையை  எதிர்பார்த்துக் காலை நனைக்கக் கொடுக்க எதிர்நோக்கும்போது,அது முட்டிவரை வந்து இழுத்துச் செல்ல முயற்சிக்கும்போது “ஹேய்ய்...என்று எக்காளமிட்டுச் சிரித்து மகிழ,....ஆஹா... கடற்கரை இருக்கும் இருக்கும் சென்னை சிறந்த இடம்தான்.


“ வீட்டுக்குத் திரும்பிப் போனதும் நன்றாகக் குளிக்க வேண்டும். உப்புக் காற்று பட்டு உடம்பும் கசகசவென உப்புக் கரிக்கும். ஒருவரை ஒருவர் தொட்டாலும் ஒட்டும். “

“ எப்படியானாலும் தொட்டு ஒட்டிக் கொள்ளத்தான் போறோம்.பிறகு குளிக்கலாம் :

“ ச்சீ  போ. “

“ இத இதத்தான் எதிர்பார்த்தேன். என்கெ இன்னொரு முறை சொல்லு. ‘ச்சீ போஎன்று நீ சொல்லும்போது உன் கண்களையும் வாயையும் பார்த்துக் கொண்டிருக்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்குதடி.

. கடலில் கால் நனைத்தது போதும்.வாங்க... உட்கார்ந்து பேசலாம்.

“ என்னத்தப் பேச.. ...உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு.

“ச் சீ. போ. “


“ பட்டாணி ,கடலை,மாங்காச் சுண்டல்
“ சுசீ.... அங்க பார் சின்னப் பையன் . சுண்டல் வித்துண்டு... பாவம் என்ன கஷ்டமோ..

“ கஷ்டம்னு ஏன் நினைக்கிறீங்க .. பிழைக்க அது ஒரு வழி. “

“ இல்லை சுசீ... அந்தப் பையனைப் பார்த்தா தெரிஞ்ச முகம் மாதிரி இருக்கு. . இரு கூப்பிட்டு விசாரிக்கிறேன். தம்பி,இங்க வா....நீ சேதுமாதவன் மகந்தானே.?

அந்தப் பையன் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“ ஆமா.. நீங்க யாரு.?

“ சொல்றேன். உன் வீடு எங்கப்பா இருக்கு.?

“ இதோ பக்கத்துல... தில்லக் கேணிலதான்

“ நான் உங்கப்பா அம்மாவைப் பார்க்கணுமே. எங்களைக் கூட்டிட்டுப் போறியா?

“இப்ப இல்ல சார்; சுண்டல் இன்னும் வித்து முடியலை. என் தங்கை வேற இங்க இருப்பா..கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினீங்கனா , அப்புறம் வந்து கூட்டிட்டுப் போறேன்”. “
“ சரி இதே இடத்துல இருக்கேன். கொஞ்ச நேரத்துல வா.. அப்படியே சுண்டல் விக்கலேன்னாலும் அதுக்குள்ள காசை நான் தரேன் “

“யார் அந்தப் பையன்.?தெரிஞ்சவனா ?

“ என் சித்தப்பா சேதுமாதவன் பிள்ளை அவன். ‘ஆஹா  ஓஹோ ந்னு இருந்தவர். இப்ப என்னடான்னா பிள்ளைகள் பீச்சில் சுண்டல் விக்கிறார்கள். “
                            ++++ 
விலாசம் அறிந்து வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து அவனுடைய திருமணப் பத்திரிக்கையை கொடுக்க வந்த குணாவைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டான் கோபால். வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பு உள்ளவர்களுக்கு கஷ்டங்கள் தடைக் கற்கள் அல்ல.படிக்கட்டுகளே. உனக்கு நினைவிருக்கிறதா இவன் யாரென்று..?

“ ஏன் இல்லாம.. நாம கலியாணமான புதுசில,பீச்சுல பார்த்தமே.. அந்தப் பையன் தானே.அதன் பின் ஹைதராபாதில் பார்த்திருக்கிறோம்.நம் வீட்டுக்கு அருகில் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தானேஏதோ கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னாள். ஏதேதோ நினைவுகளையும் அல்லவா அலை அலையாய் இழுத்து விட்டாள்.

சுண்டல் எல்லாம் ( ?) விற்று முடித்து, எங்களை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போக குணா அவன் தங்கையுடன் வந்தான். சித்தப்பா வீட்டுக்குப் போனபோது முதலில் சற்றுத் தடுமாறிய சித்தி பின் முகமலர்ந்து, “ வாடா..வா... பார்த்து எவ்வளவு வருஷமாச்சு.. இப்படி உங்களையெல்லாம் விட்டுட்டு உங்கப்பா அல்பாயுசில போகணுமா.என்று கூறிக் கொண்டே மூக்கைச் சிந்தினாள். கோபால் சுசீலாவை அறிமுகப் படுத்திவிட்டு விஷயங்களை எல்லாம் கேட்டான். மருந்துக் கடை வைத்திருந்த சித்தப்பா வியாபாரம் எல்லாம் நொடித்துப் போய், ,ஒரு டாக்டரிடம் காம்பௌண்டராய் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

“எது எப்படி இருந்தாலும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே. நேரத்துக்கு ஏதாவது கேட்குமே. என்ன செய்யறது. கடன் தலைக்கு மேல போயிடுத்து. பெரிய பெண்ணின் கல்யாணம் தட புடலா செஞ்சதுல கையில் இருந்த காசும் செலவாயிடுத்து. எப்படி இருந்த வாழ்க்கை.? ஹூம்....! சுண்டல் வித்துப் பிழைக்க வேண்டி இருக்கு. “

கோபாலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
                          ++++++
ந்தக் காலத்தில் சென்னையில் இவர்கள் இருந்த வீட்டுக்கு நாலு வீடு தள்ளிதான் கோபாலின் குடும்பமும் இருந்தது. தினமும் காலையில் சித்தப்பாவின் கடைசிப் பெண் கோபாலின் வீட்டுக்கு வருவாள். “ பெரியம்மே இன்னிக்கு உங்க வீட்டுல பூரியா ? என்று கேட்டுக்கொண்டே அடுக்களைக்குள் வந்து தட்டை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவாள். அவளை கண்டால் கோபாலின் அண்ணாவுக்கு ஏக குஷி. அவள் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, அவள் பின்னால் உட்கார்ந்து, தன் இரு கால்களையும் அவள் கால்களுக்கு நடுவே வைத்து அகட்டுவான். அவள் விழுந்து அழுது பார்ப்பதில் அப்படி ஒரு சந்தோஷம்.

கோபாலின் அப்பாவுக்கு வருமானம் குறைவு, ஏதோ குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இருந்தும் எல்லா குறைகளுக்கும் நடுவில் பெண்ணின் திருமணத்தை நடத்திவிட்டார். வசதி இல்லாதவர் பெண்ணுக்கு ஓரளவு நல்ல இடம் கை கூடி வந்து திருமணம் நடந்ததில் சித்திக்குப் ஒரே பொறாமை..இந்தக் கலியாணம் நடந்த ஆறே மாதத்தில் தன் மூத்த மகள் செல்லம்மாவுக்கும் பெரிய இடமாகப் பார்த்து தடல் புடலாகத் திருமணம் செய்து விட்டாள். காலச் சக்கரம் அவர்களைக் கீழே இறக்கி விட அநேகமாக எல்லாவற்றையும் இழந்து பிள்ளைகளை சுண்டல் விற்க அனுப்ப வேண்டிய நிலை.

சென்னையில் சித்தப்பா வீட்டுக்குப் போனபோது மனுஷன் விக்கி விக்கி அழுது விட்டார். கோபாலுக்கும் மிகவும் சங்கடமாகி விட்டது. அன்றிரவு பஸ் நிறுத்தம் வரை வந்து வழி அனுப்பினவரைப் பார்த்ததுதான் கடைசி முறை.

கோபாலுக்கு வேலை மாற்றலாகி ஹைதராபாதுக்கு சென்றபோது, சித்தியின் பிள்ளை ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது கேள்விப்பட்டு, விலாசம் விசாரித்து சுசீலாவுடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றான். கம்பனி காரில் போய் இறங்கிய கோபாலைப் பார்த்ததும் சித்திக்கு அழுகை தாங்க மாட்டாமல் வந்தது. வார்த்தைகளின் துக்கம் கஷ்டம் கூடவே பொறாமையும் தெளிவாகத் தெரிந்தது. ‘இரண்டு வேளை சோறு போட உங்கப்பா டிங்கி அடிச்சார். இன்றைக்குக் காரில் வந்திறங்குகிறாய். நன்றாய் இருந்த நாங்கள்......முடிக்க முடியாமல் வாய் பொத்தி அழுதாள். இதை இன்னும் அதிகமாக உணர்த்தும் முறையில் அவள் மகன் முதலாளியின் பிள்ளைகளுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் பள்ளியில்தான் கோபாலின் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். செய்யும் வேலையைச் சரிவரச் செய்து முதலாளியின் அன்புக்குப் பாத்திரமான குணா எப்படியோ வளைகுடா நாடான ஒமனின் மஸ்கட்டில் வேலைக்குச் சென்றான்.

அவனுக்குத் திருமணம். வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து முன்னுக்கு வந்து நலமாயிருப்பதை நாலு பேருக்குத் தெரியப் படுத்தும் விதமாக அவன் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியோடு திருமணத்துக்குச் சென்று மனதார மணமக்களை வாழ்த்தி வந்தனர் கோபாலும்  சுசீலாவும்.     .            

  

12 comments:

 1. வாழ்க்கை ஒரு சக்கரம்.

  அழகான கதை ! பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. ஆரம்பக் காட்சிகளை வைத்து கதையின் போக்கை வேறுவிதமாய் எதிர்பார்த்திருந்தேன். கதையை மிகவும் ரசித்தேன். சிலரது ஆடம்பர மோகமும், அடுத்தவர் மேலுள்ள பொறாமையும் வாழ்க்கை சூழலையே புரட்டிப்போட்டுவிடுகிறது. நல்ல கதை. பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete
 3. கதையும், தலைப்பும் அருமை சார்.

  ReplyDelete
 4. வாழ்க்கை ஒரு சக்கரம் என்பது உண்மைதான் ... நல்ல கதை ..ரசித்து வாசித்தேன்

  ReplyDelete
 5. கதையின் ஆரம்பக் காட்சி சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்து கணவனின்
  இயல்பான கோபத்தில் தகிக்கிறது.

  அதற்கு நேர்மாறாக, மனைவி,

  “ அவன் அருகில் உட்காருவதில் எனக்கு என்ன நஷ்டம்... என் அண்ணன் என்றோ தம்பி என்றோ நினைத்துப் போவேன் ”

  Wonderful!

  கஷ்டம் தான் நஷ்டமாகிவிட்டதோ?..

  ReplyDelete
 6. சுசீலாவுக்கும் கோபாலுக்கும் இடையில் இருக்கும் மாறுபட்ட கோணங்களை யதார்த்தாமாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

  வாழ்ந்தவர் கெட்டால் என்ற பழமொழியும், கெட்டாலும் மேன்மக்கள் பழமொழியையும் ஒன்றாக நினைவு படுத்தி விட்டீர்கள்.

  பத்திரிகைகளுக்கு அனுப்பலாமே பாலு சார்?

  ReplyDelete
 7. நல்ல கதை...

  தலைப்பும் உண்மை... நன்றி ஐயா...

  (தங்களின் மெயில் கண்டேன்... ஒரு தகவலுக்காக தான் முந்தைய பகிர்வில் சொன்னேன்... வேறு எதுவும் இல்லை... தவறாக எண்ண வேண்டாம் ஐயா...)

  ReplyDelete

 8. @ இராஜராஜேஸ்வரி,
  @ டாக்டர் கந்தசாமி
  @ கீதமஞ்சரி,
  @ கரந்தை ஜெயக்குமார்,
  @ ஷைலஜா,
  @ ஜீவி,
  @ சுந்தர்ஜி,
  @ திண்டுக்கல் தனபாலன்,
  வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஜீவி நீங்கள் கூறிய பிறகு நஷ்டம் கஷ்டமாயிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது. சுட்டியதற்கு நன்றி. ஷைலஜா என் பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நன்றி. தொடர்ந்து பதிவுகள் வாசித்துக் கருத்திடுவீர்கள் என்று நம்புகிறேன். சுந்தர்ஜியின் பின்னூட்டம் எப்பொழுதும் ஊக்கப் படுத்துவதாக இருக்கும். அண்மையில் சில கவிதைகள் ஆனந்த விகடன் சொல்வனம் பகுதிக்கு அனுப்பினேன். நம்பிக்கையான தகவல்கள் ஏதுமில்லை. எனக்கு மேலும் மோதப் பொறுமையுமில்லை. மீண்டும் நன்றி.

  ReplyDelete
 9. அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

  ReplyDelete
 10. கதை ரொம்பவே நல்லா இருக்கு...இன்னும் தொடர்ந்து நிறைய கதைகள் எழுத என் பாராட்டுக்கள்...

  நன்றி,
  மலர்
  http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 11. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete