திங்கள், 29 ஜூலை, 2013

கனவுகள்.... எண்ணச் சிதறல்கள்.


     


            கனவுகள் எண்ணச் சிதறல்கள்.


நண்பர்:--. இப்போதெல்லாம் வலைப் பூ பதிவுகளில் பதிவாகிக் கொண்டிருக்கும் சுவாரசியமான விஷயங்கள் என்ன என்று கூற முடியுமா.?

நான்:-- இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் பலரது துவேஷங்களையும் நான் சம்பாதிக்க வேண்டி இருக்கும். .ஒவ்வொருவர் பதிவிடும்போதும் அது சுவாரசியமாக இருக்கிறது என்று நினைத்துத்தான் பதிவிடுகிறார்கள்.

நண்பர்:-- அது சரி. உனக்குப் பதிவிட ஒரு தலைப்பு சொல்லட்டுமா.?

நான்:- நான் பல தலைப்புகளில் எழுதி விட்டேன். நகைச்சுவை என்னும் பெயரில் பலர் எழுதுவதுதான் எனக்கு சீரணிப்பதில்லை.என் வசப்படுவதுமில்லை.

நண்பர்:- இதிலிருந்தே தெரியவில்லையா உனக்கு வயது அதிகமாகிவிட்டது என்று.?

நான்:-ஒப்புக் கொள்கிறேன். , அதுவும் திரைப் படங்களில் நகைச் சுவை என்று அவர்கள் அடிக்கும் கூத்து சகிக்க முடியவில்லை. ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர் வாய்விட்டுச் சிரித்து நோய் அண்ட விடாமல் செய்கிறார்கள்.


நண்பர்:- ஒரு அந்தரங்கக் கேள்வி. கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே.

நான்:- அது கேள்வியைப் பொறுத்தது.

நண்பர்:- உனக்கு மாதச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப் படும்.? உனக்கு வருமானம் எவ்வளவு.?

நான்:- இரண்டு கேள்விக்குமே பதில் கிடைக்காது. இருந்தாலும் எங்களுக்கு மாதச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதே அபத்தமானது. எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதாது. ஆனால் கிடைக்கும் பணம் போதுமானது.

நண்பர்:- விதண்டா வாதமான பதில் . ஒரே கேள்விக்கு எப்படி இரண்டு முரணான பதில்கள் சரியாயிருக்கும்.?

நான்:- அங்குதான் சூட்சுமமே இருக்கிறது. பண வரவு அதிகமாக அதிகமாக தேவைகளும் அதிகமாகும். கிடைப்பது பற்றாக் குறையாய் இருக்கும். பண வரவு குறைவாக இருந்தால் தேவைகள் சுருங்கும். இருப்பதில் வாழ மனம் நினைக்கும்..

நண்பர்;-சற்று விளக்கமாகப் பதில் தரலாமே.

நான்:- சரி. விளக்கமாகவே கூறுகிறேன்.இங்கிருந்து சென்னைக்குப்போக வேண்டும். எப்படியெல்லாம் பயணிக்கலாம்.? சாதாரண அரசு பஸ்ஸில் செல்லலாம். தொடர் வண்டியில் பயணிக்கலாம் இரண்டாம் வகுப்பில் போகலாம் ஸ்லீப்பரில் போகலாம், குளிர்சாதன வசதியுடன் a/c யில் பயணிக்கலாம். காரில் பயணம் மேற்கொள்ளலாம். விமானத்தில் பறக்கலாம். இவற்றில் எந்த விதப் பயணம் மேற்கொள்வோம் என்பது கையிருப்பைப் பொறுத்தும் நம் மன திருப்தியைப் பொறுத்தும் அமையும். அதிக செலவு அதிக வசதி. ஆனால் இலக்கு ஒன்றுதான் சென்னை செல்ல வேண்டும். ஒரு காலத்தில் முன் பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பு ரெயிலில் பயணித்து இருக்கிறேன். இப்போது வசதி (என் மக்கள் உபயம்) கூடி விட்டதால் அதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. இன்றும் அநேக மக்கள் முன் பதிவு இல்லாமல் இரண்டாம் வகுப்பில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதனால் அவர்களைவிட  நான் என்னை மாறுபட்டவனாக நினைப்பதில்லை. வசதி பெருக்கத்தால் நான் என்னை வித்தியாசப் படுத்திக் காண்பித்துக் கொள்வதில்லை.

நண்பர்:- இவ்வளவு விளக்கமும் எதற்காக.?

நான்:- இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று சொல்கிறேன். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிறேன்

நண்பர்:- நீதானே contentment  smothers improvement என்று சொல்வாய்.

நான்:- அந்த context- வேறு. அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். ஏற்ற தாழ்வுகள் மாற வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் எல்லாமே சரியென்று எண்ணத் துவங்கினால் முன்னேற்றம் இருக்காதுஆனால் ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும் போது இன்னும் இன்னும்  என்று தேவைகளை அதிகரித்துக் கொள்கிறோம் திருப்தி அடைந்தால் முன்னேற்றம் இல்லை.ஒரு புறம் முன்னேற்றம் கருதி திருப்தி கூடாது. இன்னொருபுறம் நிம்மதி வேண்டி திருப்தி தேவை. THAT IS THE PARADOX. இரண்டுக்கும் வரையறை  தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்:- அதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்.

நான்:-சில நாட்களுக்கு முன் எங்கே நிம்மதி என்று எழுதி இருந்தேன். அதில் வாழ்க்கையில் சில தேவைகள் சரியாக இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்று எழுதி இருந்தேன். அதில் குடியிருக்க சொந்தமாக ஒரு வீடும் தேவை என்று எழுதி இருந்தேன். நண்பர் ஜோசப் அவர்கள் அது குறித்துப் பின்னூட்டமிடும்போது நிம்மதிக்கு சொந்த வீடு... உண்மையில் அது தேவையா? அப்படியானால் ஏழைகள் எவருமே நிம்மதியாக இல்லையா, என்ற கேள்வியும் எழுகிறதே. அன்றைக்கு மட்டும் உழைத்து, ஈட்டியதையெல்லாம் அன்றே கரைத்துவிட்டு வெட்ட வெளியில் உறங்கி எழும் பலரும் நம்மைப் போன்ற நடுத்தரவாசிகளை விடவும் நிம்மதியாய் உறங்கி எழுகின்றனர் என்பதை மறுக்கமுடியுமா? வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை இதைத் தான் நான் PARADOX என்று சொல்கிறேன். ஏழைகள் எல்லோருமே நிம்மதியாய் இருக்கிறார்கள் என்றால் நிம்மதி என்பதன் பொருளே விளங்காமல் போய் விடுகிறது. அவர்களது பிரதிதின வாழ்வே ஒரே போர்க்களமாகி விடுகிறது. வாய்க்கும் வயிற்றுக்கும் வழி வகுக்கவே அவர்கள் படாத பாடு படுகிறார்கள். இவை இருப்பவர்களுக்குப் புரிவது கஷ்டம்.

நண்பர்:- நீ அப்ஸ்ட்ராக்ட் ஆக ஏதோ எண்ணிக்கொண்டு பேசுகிறாய்.

நான்:- உனக்குப் பசி என்றால் என்னவென்று தெரியுமா.?பசிக்கும் நேரத்தில் உண்ண ஏதும் கிடைக்காமல் யாரிடமும் கேட்க வழியில்லாமல் அவதிப் படிட்டிருக்கிறாயா.? நேரம் தாழ்ந்தாவது உணவு கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லாமல் அரை வயிறோ கால் வயிறோ கஞ்சிக்கும் அல்லாடும் பலரது வாழ்வில் நிம்மதி எங்கிருந்து வரும்? முதலில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப் படவேண்டும்.இருந்தால்தான் மனம் அமைதியில் இருக்கும். எனக்கென்னவோ இந்த உண்மையைப் புரிந்துகொண்டுதான் இலவசமாகத் தேவைகளைக் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.என்னதான் உழைத்து முன்னேற நினைத்தாலும் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இருக்கும் DISPARITY மிக அதிகம் என்று நினைக்கிறேன்.

நண்பர்:- இதற்கு நீயும் நானும் என்ன செய்ய முடியும்.?அதது பூர்வ ஜென்ம பலன் படி நடக்கும்.

நான்:- நீயும் நானும் என்ன செய்ய முடியும் என்பதை விட என்ன செய்யாது இருக்க வேண்டும் என்பதே முதல் காரியம். அடுத்தவன் கஷ்டப் படும்போது , உன்னுடைய பகட்டை வெளிச்சம் போட்டுக் காட்டாதே. பெரிய பெரிய மால்களிலும் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ்களிலும் அதிக செலவு செய்து பொருட்களை வாங்காதே. அடுத்து இருக்கும் நாடார் கடையிலோ அண்ணாச்சி கடையிலோ கிடைக்கும் பொருட்களுக்கு ஸ்டைலாகக் காரிலோ பைக்கிலோ போய்  பெரிய கடைகளில் வாங்கினால்தான் உன் மதிப்பு உயரும் என்று நினைக்காதே. பகட்டான கட்டிடத்துக்கும் குளிர்சாதன வசதிக்கும் அவர்கள் உன்னிடம்தான் பணம் வாங்குகிறார்கள். வீதியில் வண்டியில் வரும் காய்கறிகளை வாங்கினால் அந்த ஏழையின் வீட்டில் அடுப்பெரிய நீ வழி வகுப்பாய். தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவனுக்கும் வாயும் வயிறும் இருக்கிறது

நண்பர்:- பேச விட்டால் பொதுவுடமைக் கொள்கைகளை பரப்பி விடுவாய் போலிருக்கிறதே.

நான்:-நமக்கு விருப்பமில்லாதவற்றை யாரும் நம் மேல் திணிக்க முடியாது. சூழ் நிலைக்கைதிகள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளக் கூடாது. எனக்கும் உனக்கும் நன்றாகவே தெரியும். எத்தனையோ நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் பணத்தில் முழங்கையில் வழிவதே நமக்குக் கிடைக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்பதை அடையாளப் படுத்த குடும்ப அட்டைகள் வழங்கப் படுகின்றன. ஆனால் புழக்கத்தில் இருக்கும் அட்டைகளோ இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு இரண்டு மடங்கு. இது எப்படி சாத்தியம். நலத் திட்டங்களின் பலன் அது தேவை இல்லாதவர்களால்பறிக்கப் படுகிறது

நண்பர்: இந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தால் அநேகமாக எல்லோரையும் குற்றவாளிகளாக்கி விடுவாய்.

நான்:- என் ஆதங்கமே நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லையே என்பது தான் மீண்டும் கூறுகிறேன். இருக்கும் நிலையை இருப்பதுபோல் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் எனக்குக் குறைவு. நான் அதிகமாகக் கனா காண்கிறேனோ.?                        



 







 

சனி, 27 ஜூலை, 2013

கணினியும் நானும் எண்ணங்கள்( தொடர் பதிவு )


 க்ணினியும் நானும் எண்ணங்கள் ( தொடர்பதிவு. )
-------------------------------------------------------------------



திருமதி. கீதமஞ்சரி என்னை கணினி அனுபவம் குறித்த தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கென்னவோ தொடர் பதிவு என்றாலெயே ஒரு அலர்ஜி. பெண் எழுத்து என்னும் தலைப்பில் தொடர் சங்கிலியில் ஒரு கண்ணியாக நானும் எழுதி இருந்தேன். பின்னர் “ உறவுகள் “ என்ற தலைப்பில் நான் ஒரு பதிவு இட்டிருந்தேன். பெயர் சொல்லி யாரையும் அழைக்காமல் இந்தத் தலைப்பில் அதைத் தொடரலாமே என்று குறிப்பிட்டிருந்தேன். ஒருவராவது முன் வரவேண்டுமே... ஹூம்  மூச். இருந்தாலும் என்ன.? கணினியில் என் அனுபவம் பகிர்ந்து கொள்ள கீதமஞ்சரி அழைக்கிறார். நானும் எழுதுகிறேன்
.

முதலிலேயே ஒன்று கூறிவிடவேண்டும்.இன்றும் எனக்குக் கணினி வசப்படவில்லை. அது பற்றிய என் ஞானம் next to nothing. . இருந்தாலும் நானும் கணினியை இயக்குகிறேன், மின் அஞ்சல் செய்கிறேன், வலைப்பூவில் எழுதுகிறேன். இதையெல்லாம் செய்யும் போது அது குறித்த அனுபவங்களும் இருக்க வேண்டும்தானே.அதை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.
1985-1986 என்று நினைக்கிறேன். திருச்சிக்கு சற்று தொலைவில் ஒரு கல்லூரியில் ( பெயர் நினைவுக்கு வரவில்லை ) கல்லூரி பாட திட்டத்தில் கணினியும் சேர்த்து ஒரு பட்டப் படிப்பு துவங்கப் பட்டது , எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு அதில் இருந்ததாகக் கேள்வி. என் இளைய மகனைக் கல்லூரியில் சேர்க்க முனைந்து கொண்டிருந்த நேரம். தூரம் கருதியோ, போக்கு வரத்து வசதி குறைவு காரணமாகவோ அது தடை பட்டுப் போயிற்று. அதுதான் கணினி பற்றி கேள்விப்பட்ட முதல் நினைவு. என் மூத்தமகன் 1988-ல் MBA  படிப்பை முடித்த கையோடு திருச்சியில் COMPUTER POINT  என்னும் கணினி போதனை சம்பந்தப் பட்ட நிறுவனத்தில் மார்கெட்டிங் ஆஃபீசராகச் சேர்ந்தான். அப்போது அவன் என்னிடத்தும் என் மனைவியிடத்தும் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ளச் சொன்னான். அது என்னவோ தெரியவில்லை. கம்ப்யூட்டர் என்றாலேயே எனக்கு ஒரு MENTAL BLOCK இருந்தது. பணிச்சுமை நேரமின்மை என்று கூறி மறுத்து விட்டேன். என் நண்பன் அவனுடைய மகனை அங்கு சேர்க்கச் சென்றபோது என் மகனை ( என் மகன் என்று தெரியாமலேயே) சந்தித்து இருக்கிறான்..அது பற்றி அவன் என்னிடம் கூறும்போது IGLOO வீட்டில் வசிப்போருக்கே REFRIGERATOR  விற்கக் கூடிய ஒருவன் கம்ப்யூட்டர் பாயிண்டில் மார்க்கெட்டிங் ஆஃபிசராக இருக்கிறான் என்று சொன்ன போது நான் மிகவும் மகிழ்ந்தேன்.


என்னைக் கணினி  பற்றிய பதிவிடச்சொன்னால் என்னென்னவோ எழுதிக் கொண்டுபோகிறேன். என்ன செய்ய . நினைவுகள் என் மனத்தையும் கைகளையும் இயக்குகிறது. விஷயத்துக்கு வருகிறேன். சென்னையில் என் மகன் வீட்டில் ஒரு டெஸ்க் டாப் இருந்தது. என் மகன் துபாயில் இருந்தான். அவனுடன் தினமும் தொடர்பு கொள்ள அந்தக் கணினி பயன் பட்டது. YAHOO MESSENGER மூலம் முகம் பார்த்துப் பேசிக்கொள்ளவும் வசதி. அது தான் நான் கணினியை முதலில் கையாண்டது. என் பேரன் கனெக்‌ஷன் கொடுப்பான் நாங்கள் பேசுவோம். அப்போது எனக்கு ஒரு மெயில் ID  ஏற்பாடு செய்து கொடுத்தான். எனக்கு யார் மின் அஞ்சல் அனுப்புவது , நான் யாருக்கு எழுதுவது. அது காலாவதியாயிற்று. 


எனக்கு கணினி இயக்கம் தெரியாதே தவிர கணினியில் என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரியும்.அந்த அறிவுடனே திருச்சியில் நான் பணியில் இருந்தபோது  MCA மாணவர்கள் சிலருக்குப் ப்ராஜெக்ட் கைடாக இருந்திருக்கிறேன். அது பற்றி ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன்(.இதுபார்க்கவும் )
நான் கணினியை உபயோகிக்க துவங்கியது , எனக்கு ஆஞ்சியோ ப்லாஸ்டி செய்து, நான் ஓய்வில் இருக்கும்போது எனக்கே எனக்காக இப்போது நான் உபயோகிக்கும் இந்தக் கணினியை என் மகன் எனக்குக் கொடுத்தான். பொழுது போக்கவும் , எண்ணங்களைப் பகிரவும் எனக்கு இந்த வலைப்பூவை என் பேரன் தயார் செய்து கொடுத்தான். முறையாக கணினி பயிலாத நான் அதை இயக்கிக் கொண்டு , நானும் எழுதி . பிறரையும் அதை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.


இன்னும் எனக்கு இந்த MENTAL BLOCK  போகவில்லை.  தமிழ் மணத்தில் இணைக்கவே மிகவும் சிரமப் பட்டேன். இணைப்பு பற்றி தமிழ் மணத்தில் கொடுக்கப் பட்ட குறிப்புகள் தமிழில் இருந்தன. எனக்கு உதவி செய்ய விரும்புவோருக்கு தமிழ் தெரியாது. எப்படியோ இணைத்து விட்டேன்.(அனுபவம்) திரு . திண்டுக்கல் தனபாலன் எனக்கு விரிவாக பல பதிவுகளில் இணைக்க குறிப்புகள் கொடுத்திருந்தார். நான் ஏதாவது செய்யப் போக இருப்பது எல்லாம் போய் விட்டால் என்னும் பயம். பிறரது பதிவுகளில் கணினியின் நுட்பங்களால் விளையாடுகிறார்கள். நான் அவற்றைப் பார்த்தே திருப்தி அடைவேன். அண்மையில் தமிழ்வாசி ப்ரகாஷ் அவர்கள் பதிவுகளில் LINK  கொடுப்பது பற்றி சொல்லிக் கொடுத்தார். அதன் உபயோகம் இந்தப் பதிவிலும் காணலாம்
கடைசியாக நான் தட்டச்சு பயின்றவனல்ல. தமிழில் எழுதலாம் என்று ரகு எனும் ‘சித்ரன் அவர்கள்  NHM WRITER  பற்றிக் கூற என் மகன் அதை டௌன்லோட் செய்து கொடுத்தான். ஒரே விரலில் தட்டச்சு செய்கிறேன். இதில்  ஓரளவுக்கு SPEED ம் கிடைத்து விட்டது. நிமிடத்துக்கு சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து வார்த்தைகள் தட்டச்சு செய்வேன். தமிழில் தட்டச்சு செய்து பழகிப் போய் ஆங்கிலத்தில்  டைப் செய்யும்போது spelling   தடுமாறுகிறது/ சில நேரங்களில் ஆங்கிலத்தை PHONETIC ஆக டைப் செய்து விடுகிறேன்.( compliment becomes kaampliment )
அப்பாடா.. ! ஏதோ ஒப்பேற்றிவிட்டேன். . இதோடு முடியவில்லையே. இதைத் தொடர நான் கீழ்கண்டவர்களுக்கு விண்ணப்பம் செய்கிறேன்.


முதலில் என்னை இந்த மாதிரி தொடர் பதிவுக்கு அறிமுகப் படுத்திய “அன்புடன் மலிக்கா  நீரோடை     niroodai.blogspot.com

இரண்டாவதாக இதே துறையில் இருக்கும் திரு. நாக சுப்பிரமணியம்
நதியில் விழுந்த இலை nathiyil-vizhuntha-ilai.blogspot.in

தற்போது கணினி துறையை விட்டு விலகி இருக்கும் மாதங்கி மாலி  மைத்துளிகள்
 .
AAA என்றும் கலிடாஸ்கோப் என்றும்கலக்கும் சமுத்ரா  samudrasukhi.blogspot.in

கடைசியாக திருமதி. ஷைலஜா எண்ணிய முடிதல் வேண்டும்
Shylajan.blogspot.com

 

 
 
 

 

வியாழன், 25 ஜூலை, 2013

கதையாகவும் கொள்ளலாம்


                                      கதையாகவும் கொள்ளலாம்.....
                                      -----------------------------------------



திருச்சியிலிருந்து கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் போக ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள்.  போகும் வழியில் சில்வெர் காஸ்கேட், பின் கொடை சேர்ந்ததும் குழுக்களாகப் பிரிந்து அப்செர்வேடரி, மற்றும் பெய்ர்பெற்ற நடைபாதை( கோக்கர்ஸ் வாக்.? பெயர் நினைவுக்கு வரவில்லை.) தற்கொலை முனை என்று எங்கெல்லாமோ சுற்றி விட்டு ஏரிக்கரையோரம் வந்தோம். படகு சவாரி. அப்போதைய பிரபல ஹிந்தி நட்சத்திரம் வஹிதா ரஹ்மானும் அங்கிருந்தார். சிலர் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். இரண்டு மூன்று குடும்பங்கள் படகில் ஏறினோம். சிறிது தூரம் செல்வதற்குள் நண்பர் ஒருவர் திடீரெனப் படகை கரைக்குத் திருப்பச் சொன்னார். அவர் முகம் பயத்தால் வெளிறி இருந்தது. உல்லாசமாக படகு சவாரிக்கு கிளம்பின நாங்கள் அவரை கரையில் இறக்கி விட்டு சவாரியை மகிழ்ச்சியுடனும் கும்மாளத்துடனும்  தொடர்ந்தோம்.


எல்லாம் முடிந்து நாங்கள் திரும்பி வந்ததும் நண்பரிடம் அவர் ஏன் படகு சவாரியைத் தொடரவில்லை என்று காரணம் கேட்டோம். அவருக்கு கல்லணையில் நீரில் மூழ்கி இறந்து போன நண்பர் ஒருவரின் நினைவு திடீரென வந்து ஏதேதோ எண்ணங்களை வரவழைத்து விட்டதாம். அந்த சோக முடிவு எங்கள் எல்லோரையும் வெகுவாக பாதித்திருந்தாலும் அவருக்கு அது அந்நேரத்தில் நினைவுக்கு வந்து அவருடைய மகிழ்ச்சியையே பாதித்து விட்டது. சில அசந்தர்ப்பமான நினைவுகள் வந்தால் ..... நாங்கள் ஐந்து பேர் ஒரு பூசாரி, மற்றும் துடுப்பு தள்ளும் படகோட்டி கங்கையில் பயணித்தபோது ...... நல்ல வேளை வேண்டாத எண்ணங்கள் ஏதும் வந்து எங்களை பயமுறுத்தவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும்போது .....பயமாக இருக்கிறது. 


அப்போதுதான் புதிதாய்த் திருமணம் ஆனவர். புது மனைவியுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்க இன்னொரு ஜோடியுடன் கல்லணைக்குச் சென்றார் கல்லணையில் நீர் அதிகம் இல்லை. நிறையவே மணல் திட்டுக்கள். மனைவியர் இருவர் கரையில் இருக்க கணவன்மார் இருவரும் நீரில் இறங்கினர். நீர் கணுக்காலுக்கும் சற்றே அதிகமாகத்தான் இருந்தது. ஒருவர் திரும்பிப் பார்த்து பெண்களிடம் சத்தமாக ஏதோ கேட்டுக் கொண்டிருக்க. மற்றவரின் மனைவி திடீரெனக் கூவ ஆரம்பித்தார். என்ன ஏது என்று தெரியாமலேயே திரும்பிய நண்பர் அருகில் நின்று கொண்டிருந்தவரை காணாமல் தேடவும் அவரது மனைவி அதற்குள் அருகே ஓடிவந்து கணவர் நீரில் மூழ்கி விட்டார் என்று கதறவும் அப்போதுதான் நிலைமை எல்லோருக்கும் விளங்க ஆரம்பித்தது. முழங்காலுக்கும் குறைவாகவே நீர் இருந்த இடத்தில் ஒருவர் எப்படி மூழ்கி இருக்க முடியும்..? அருகில் எங்கும் காணாதவரைக் கண்டு பிடிக்க கரைக்குவந்து அழுதார்கள். பலரும் அங்கு வந்து தேடியும் எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. அநேகமாகப் புதை மணலில் மூழ்கி இருக்க வேண்டும் என்றே எல்லோரும் சொல்ல நீரில் இறங்கவே பலரும் பயந்தார்கள். என்ன சொல்லி என்ன. .. அவரிடைய உடல் கிடைக்கவே இரண்டு நாளாயிற்று.



கொடைக்கானல் ஏரியில் நண்பருக்கு நீரைக் கண்டதும் கல்லணை நண்பரின் நினைவு வந்து விட்டது. ஒரு மொட்டு மலரும் முன்பே கருகி விட்டது. தகப்பன் உண்ணும்போது இறந்து விட்டான் என்று மகன் உண்ணாமலேயே இறந்தானாம் என்றொரு கதை உண்டு. முடிவு எப்போது எந்த ரூபத்தில் வரும் என்று நிர்ணயிக்கவே முடியாத வாழ்க்கை. சாலையில் நடக்கும்போதோ, பஸ்ஸில் பயணிக்கும்போதோ, ரயிலில் போகும்போதோ விமானத்தில் பறக்கும்போதோ எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம்.இருந்தும் எல்லோரும் நம்பிக்கையுடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்   


 



 


 



 



செவ்வாய், 23 ஜூலை, 2013

எங்கே நிம்மதி...?


                                  எங்கே நிம்மதி.....?
                                   --------------------



ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்து முடிக்கும் இவ்வேளையில் என் வாழ்க்கை எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்று அசை போடாத நாளில்லை. வாழ்நாளில் முக்கியமாகத் தேவைப்படுவது மன அமைதி. அதை எங்கெல்லாமோ தேடி அலைகிறோம். என்னைப் பொறுத்தவரை வாழ்வில் திருப்தியும் மன அமைதியும் பெற நமக்கு வேண்டியது என்ன என்பதைப் பட்டியலிடுகிறேன்.
முதலாவதாக இருக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம் நம் கட்டுக்குள் இருப்பவற்றை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நியமங்களை வகுத்துக் கொண்டு உடலைப் பேணல் அவசியம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


இரண்டாவதாக வாழ்க்கையை குறைவில்லாமல் வாழத் தேவையான பொருட்செல்வம். இலட்சக் கணக்கிலோ கோடிக்கணக்கிலோ இருக்க வேண்டாம், தேவைக்கேற்ப உண்ணவும் உடுத்தவும் பிறர் கையை எதிர்நோக்காமல் இருக்கத் தேவையான பணம். இதை இளவயதில் உழைக்க முடியும்போது நேர்மையாய் உழைத்து தீட்ட வேண்டும். கடன் வாங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது பிறர் முன் தலை தூக்கி நடக்க இயலாதபடி செய்து விடும். உழைக்க வலு இல்லாத நேரத்தில் உழைக்கும்போது சேர்க்கும் பணமே உதவ வேண்டும்.பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை
 

மூன்றாவதாக அவரவருக்கென்று வசிக்க ஒரு சொந்த வீடு. அதில் வசிக்கும் சுகமே தனி. கூடியவரை சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்து, முடிந்தால் ஓரிரு செடிகளோ மரமோ நட்டு அவை தரும் சந்தோஷங்களை அனுபவிக்க நேரும்போது ஒரு அலாதியான இன்பம் வரும்.நம் வீடு நம் வீடுதான்


நான்காவதாக நம் வாழ்வில் எல்லா நேரங்களிலும் நம் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஒரு துணை. புரிந்து கொள்ளாத துணையை விட நிம்மதியைக் குறைக்கும் மனைவியோ கணவனோ இல்லாதிருப்பதே மேல்மனைவி(துணை) அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.


ஐந்தாவது பொறாமையைத் தவிர்க்க வேண்டும் நம்மை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. நம்மைவிட வாழ்க்கையில் வசதியானவரைப் பார்த்து ஏங்கினால் துன்பமே மிஞ்சும் “ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” .ஒளவியம் பேசேல்”


ஆறாவதாக புறம் பேசுவோரைத் தவிர்க்க வேண்டும். இவர்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு கொள்ளாவிட்டால் இருக்கும் சூழலையே விஷமாக்கி விடுவார்கள்.


ஏழாவதாக நமது நேரத்தை உருப்படியாகச் செலவிட வேண்டும் மனம் லயிக்கும் ஏதாவது உபயோகமான கைவினைப் பொருள்கள் செய்வதிலோ இசைப்பதிலோ இசை கேட்பதிலோ கவனம் செலுத்தும்போது தேவையில்லாத மறைமுக சிந்தனைகள் எழுவது தவிர்க்கப் படும்

கடைசியாக தினமும் நம்மை நாமே விமரிசிக்க குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களாவது காலையிலும் மாலையிலும் ஒதுக்க வேண்டும் என்ன செய்தோம் என்ன செய்ய விட்டோம் , என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே ஒரு மூன்றாவது மனிதனின் இடத்தில் இருந்து கணிக்க வேண்டும்(.INTROSPECTION)

இன்னும் பலவும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலே கூறியவை குறைந்த பட்ச தேவைகள்.

        LET US FIND THE POWER OF DREAMS.. WHAT DO YOU SAY.?

      
 


சனி, 20 ஜூலை, 2013

பணிக்கால நிகழ்வுகள் சிலவும் அயல் நாட்டினரும்


     பணிக்கால நிகழ்வுகள் சிலவும் அயல் நாட்டினரும்
-----------------------------------------------------------------------------



அயல் நாட்டினர் பலரைக் கண்டிருந்தாலும் சந்தித்துப் பழகியது ஒரு சிலரே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இவர்களுடைய நாட்டினரைப் பற்றி கணிக்க முடியுமா.?

அம்பர்நாத்தில் நான் பயிற்சிக்குச் சென்றபோது பயிற்சி பள்ளியின் ப்ரின்சிபால் ஒரு ஸ்விட்ஜர்லாந்துக் காரர். பெயர் AGUSTO  FREIDRICSAN ஒருவர் வேலையைத் துவங்கு முன்னே தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்வதில் இருந்து அவரை எடை போடலாம் என்பார். எங்கள் துரதிர்ஷ்டம் , நாங்களங்கு சேர்ந்த சில நாட்களிலேயே ஊர் திரும்பிவிட்டார்.

பெங்களூர் எச். ஏ. எல் லின் ஏரோ எஞ்சின் டிவிஷன் துவக்க காலத்தில் எங்கள் பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்திருந்தோம். BRISTOL SYDLEY  கம்பனியுடன் ஏரோ எஞ்சின் தயாரிக்கக் கூட்டு முயற்சியில் ஆங்கிலேயர்கள் பலரும் இருந்தனர். அவர்களுக்கு இந்தியர்கள் இன்னும் அடிமைகள் என்ற எண்ணத்துடன் கூடிய ஒரு சுபீரியாரிடி காம்ப்லெக்ஸ். அதற்கு தூபம் போடுவதுபோல் நம்மவர்களின் அடிவருடித்தனம். அப்போதெல்லாம் ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். வெறும் அனுபவ அறிவே படைத்த சில தொழிலாளர்கள்ஒரு க்யூபுக்குள் ஒரு க்யூபுக்குள் ஒரு க்யூப் என்று சாதாரண லேத் மெஷினிலிருந்து கடைந்தெடுப்பார்கள். ! அவற்றை பெருமையுடன் எக்சிபிட் செய்வார்கள். ஏரோ எஞ்சின் டிவிஷனில்  முதல் ஆயுத பூஜை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. என்னையும் விழாப் பொறுப்புக் கமிட்டியில் இருக்கச் சொன்னார்கள். அலங்காரப் பொருட்கள் வாங்கும் போது நான்கைந்து பெரிய ரோஜா மாலைகள் வாங்க வேண்டும் என்றார்கள். எதற்கு என்று கேட்டபோது அங்குள்ள சில ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அணிவிக்க என்றார்கள். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆயுத பூஜை ஆயுதங்களுக்கே தவிர ஆசாமிகளுக்கல்ல என்று வாதாடினேன். இந்திய அதிகாரி அவரது சொந்தச் செலவில் மாலைகள் வாங்கி அவர்களுக்கு அணிவித்தார். நாங்கள் அந்த விழாவைப் புறக்கணித்தோம். என்ன.... இந்த நிகழ்வு என் மீது அதிகாரிகளுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டு பண்ணிற்று.

 ஏரோ எஞ்சின் டிவிஷனுக்காக அயல் நாடுகளில் இருந்து மெஷின்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் சில ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வரவழைக்கப் பட்டன. உதிரி பாகங்களாக வந்த அவற்றை ஒருங்கிணைத்து முழு மெஷினாக்கி வேலை செய்யும் விதத்தையும் விளக்க ஒரு ஃப்ரென்ச்சுக்காரர் வந்திருந்தார். அவர் பெயர் ஆந்த்ரே என்று ஏதோ வரும் அவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. ஃப்ரென்ச் மொழி மட்டுமே தெரியும். மேலும் ஆங்கிலேயர்கள் என்றாலேயே வெறுப்பைக் கக்குவார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளாக இங்கிலாந்தும் ஃப்ரான்சும் இருந்த போது ஆங்கிலேயர்கள் ஃப்ரென்ச் படைகளை முன்னுக்கு அனுப்பி அவர்கள் தப்பித்துக் கொள்வார்களாம். ஆங்கிலேயர்கள் நம்ப முடியாதவர்கள் என்பார். சைகையினாலும் படங்களினாலுமே கருத்துப் பரிமாற்றம் நடக்கும். அப்போது அவரிடம் இருந்து சில ஃப்ரென்ச் வார்த்தைகள் கற்றுக் கொண்டேன் Very interesting personality.!( கேல வாத்ர நாம்= உங்கள் பெயர் என்ன: பான் மஜூர்= நல்லநாளாய் இருக்க: பான் மதா= குட் டே: த்ரெ பான் = வெரிகுட்: ந த்ரெ பான்= நொட் குட்: துஷ்ம = கொஞ்சம் )

எச் ஏ எல் ஐ விட்டு சென்னையில் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தேன். அப்போது அங்கும் நிறைய ஆங்கிலேயர்கள் பணியில் இருந்தனர். அங்கே சில நூதனமான (?) வழிமுறைகளைக் கண்டேன். நான் அங்கு ஷிஃப்ட் இன் சார்ஜ் ஆக இருந்தேன். ஒரு மெஷினில் இருந்து உருவாகி வரும் சில பொருட்கள் அடுத்த மெஷினுக்குச் சென்று இன்னும் சில மாற்றங்களுடன் வேறு மெஷினுக்குச் செல்லும்.  இதில் எங்காவது ஒரு மெஷினில் உற்பத்தி அளவில் குறைந்தால் அது அடுத்த மெஷின்களையும் பாதிக்கும். ஆங்கிலேயர்கள் அந்த மெஷின்களின் இயக்க முறைகளை வரை வகுத்து இருந்தார்கள். அதன்படி மெஷினை இயக்கும் தொழிலாளியோ மேற்பார்வையாளரோ எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏன் எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. எனக்கு இந்த முறை புதியதாய் இருந்தது. அங்கு வேலை செய்யும் மேற்பார்வையாளர் தொழிலாளி நிறுத்தாமல் நேரத்தை வீணாக்காமல் உழைக்கிறானா என்று மட்டும் பார்க்க வேண்டும் இந்த நிலையில்  நான் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெஷினில் கட்டிங் டூல் வேகமாக உடைந்து கொண்டிருந்தது. அதை மாற்றி மாற்றி செயல் படுவதில் நேரம் விரயமாகியது, உற்பத்தி குறைந்தது. நான் ஆராய்ந்த அளவில் தவறு எனக்குப் பிடிபட்டது. இருந்தாலும் அங்கு நிலவிய நியதிகளின்படி நான் ஏதும் செய்யக் கூடாது. பகல் ஷிஃப்டில் ஆங்கிலேய நெறியாளரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார். நான் இரவு நேர ஷிஃப்ட் வரும்போது செய்யும் அமைப்பை மாற்றி அதிக உற்பத்தி கொடுத்துக் கொண்டிருந்தேன் வேலை முடிந்து போகும் முன் பழைய நிலையில் வைத்து விட்டுப் போவேன். இதை அவர்கள் கண்டு என்னிடம் காரணம் கேட்டார்கள். நான் எனக்கு எந்த சுதந்திரமும் இல்லாமல் பகலில் எதையும் மாற்ற முடியாமல் வேலை செய்வதையும் இரவு ஷிஃப்டில் என் விருப்பம் போல் என் முறையில் வேலை செய்வதையும் கூறினேன். அங்கிருந்த ஆங்கிலேயத் தலைமை அதிகாரி பகலில் என் செய் முறையை விளக்கக் கேட்டார். என்னைச் சுற்றி பலரும் இருக்க நான் செய்த மாற்றங்களை விளக்கிக் கூறி என் செயல் முறையில் அதிக உற்பத்தியை காட்டினேன். அனைத்து வெள்ளைக் காரர்களும் என்னை பாராட்டினார்கள் (என் மெஷினுக்கு செயல் முறை தந்திருந்த அந்த ஒரு ஆங்கிலேயர்  தவிர.)ஒரு ஷிஃப்டில்நான்கு ஐந்து டூல்கள் உடைந்து நேரம் விரயமாக்கிய நிலை போய் ஒரே டூலால் இரண்டு ஷிஃப்ட் வேலையும் தடை இல்லாமல் சென்றது..

நான் விஜயவாடாவில் இருந்தபோது ஒரு ஜெர்மன்காரர் வந்திருந்தார். அவர்களது வேலையில் ஒரு ஒழுங்கு இருக்கும். பணியில் டெடிகேஷன் இருக்கும். மற்றபடி  பணியில் இல்லாத மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் அவர்கள் வாழ்க்கையே வேறாயிருக்கும். நான் குறிப்பிட்ட இவர் பெயர் மார்டின் வாக்னர். அவருக்கு விஜயவாடா முழுவதும் அத்துப்படி . சைகிள் ரிக்‌ஷாவில் ஊர் சுற்றுவார். எந்த இடத்தில் இரவு கேளிக்கைகள் நன்றாக இருக்கும் என்றெல்லாம் தெரிந்து கொண்டவர். கிருஷ்ணா நதிக்கரையில் துவைத்துக் காயப் போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து அவர் பார்க்கும் BIGGEST WASHING MACHINE  என்பார். ஒரு முறை அவரை என் வீட்டுக்குக் காலை உணவு அருந்த அழைத்திருந்தேன். இரண்டு முட்டைகள் பச்சையாகவும் இரண்டு முட்டைகள் ஆம்லெட்டாகவும்  சாப்பிட்டார். மற்றபடி நம்
இட்லி சாப்பிட மிகவும் பயந்தார். நிறைய  தேத்தண்ணீர் அருந்தினார். அவரிடமிருந்து இரண்டு ஜெர்மன் வார்த்தைகள் கற்றேன். ‘டாங்கெ ஷான்பிட் அஷ்ஹன் ( thank you , no mention )

திருச்சி மிகுமின் கொதிகலத் தொழிற்சாலை செக்கோஸ்லவேகியா நாட்டுடனான கூட்டு முயற்சியால் தொடங்கப் பட்டது. ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் அவர்களது பிரதிநிதிகள் இருந்தார்கள். அவர்களுக்கென்று ஒரு வரைமுறை வகுத்துக் கொண்டு பணி புரிந்தார்கள் ஒரு முறை நான் எடுத்த ஒரு முடிவு நமது டிசைன் டிபார்ட்மெண்ட்காரர்களுக்கு சரியாகப் படவில்லை. மத்தியஸ்தத்துக்கு செக் உயர் அதிகாரியிடம் சென்றது. அவர் என் முடிவு சரியென்றார். ஆனால் இதை உங்களுக்குள்ளேயே பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார். குடியிருப்பில் அவர்கள் குடும்பங்களோடு வசித்தனர். அதில் ஒருவரின் உறவுக்காரப் பெண் ஒருத்தியை நம்மவர் ஒருவர் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு பிறகு அவர்களுடனேயே செக்கோஸ்லாவேகியாவில் செட்டில் ஆனார்.

அமெரிக்கக் கூட்டுடன் (Dresser industries) வால்வுகள் தயாரிக்கப் பட்டன. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து வேறு ஒரு வால்வ் தயாரிப்பாளர் (பெயர் நினைவுக்கு வரவில்லை ) அவர்களது ப்ராடக்ட் முன்னேற்றத்துக்காக வந்திருந்தனர். நாங்கள் தயார் செய்து கொண்டிருந்த ட்ரெஸ்ஸர் வால்வுகளுடன் ஒப்பிட்டு அவர்களது தயாரிப்புகள் மேலானது என்று கூறினர். நடை முறையில் இருக்கும் ஒரு கூட்டுக் கம்பனியின் தயாரிப்புகளை ஒப்பிட்டுக் குறைகள் கூறுவது சரியா என்று கேட்டோம். Everything is fair in war and love என்றார்களே பார்க்கலாம்.!

ஜப்பானுடன் கூட்டுத்தயாரிப்பில் ஒப்பந்தம் இருந்தது. எனக்கு ஜப்பான் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானில் நான் என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். ஜப்பானிய மானேஜர் ஒருவர் இல்லத்துக்கு என்னை அழைத்திருந்தார். ஒரு ஜப்பானிய குடும்பத்தைக் காணும் வாய்ப்பாயிருந்தது. என்னதான் ஜப்பானியர்கள் முன்னேறியது போல் தோன்றினாலும் At least அவர்களது முந்தைய தலை முறையினர் பாரம்பரியத்தை கட்டிக்காப்பவராகவே எனக்குப்பட்டது. நான் அங்கு சென்றபோது அவரது தாயார் அவர் மணவிழாவின் போது அணிந்த பாரம்பரிய KIMONO உடையை கண்களில் ஒளி வீசக் காண்பித்துப் பெருமை அடைந்தார்.எங்களுக்கு ஒரு சிறப்பு விருந்து கொடுக்கவும் எங்களுக்கு உபசாரம் செய்யவும் ஒரு அதிகாரியிடம் கூறப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய  குடும்பத்தையும் பங்கு கொள்ளச் செய்ய விரும்பினார். மேலதிகாரிகளுக்குத் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஆகவே எங்களிடம் அவர் குடும்பம் வருவதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.எங்கள் தயவால் செலவில்லாமல் அவர் குடும்பத்துக்கு ஒரு விருந்து. . அடிப்படையில் ஜனங்கள் எல்லா நாட்டிலும் ஒரு போல்தான் என்று தோன்றுகிறது.
அவர்களது வழிமுறைகளை விளக்க வந்த ஒருவர் என்னைப் பற்றிக் கேட்டார். நான் இந்த துறையில் முப்பது ஆண்டுகளாக இருக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் சடாரென்று என் காலருகில் அமர்ந்து கொண்டு எனக்கு ஏதும் சொல்ல அருகதை இல்லாதவர் என்றார்.

நம் நாட்டிலேயெ பலதரப்பட்ட மனிதர்களுடன் பழக வாய்ப்பிருந்த எனக்கு இம்மாதிரி அயல் நாட்டினருடன் பழக வாய்ப்பு இருந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவை விட இந்தியா மேல் என்றார். அமெரிக்காவில் பயம் இல்லாமல் நடமாட முடியாது என்றார். எந்த நேரத்திலும் YOU CAN BE MUGGED என்றார். அக்கரைக்கு இக்கரை பச்சை.    -    




                      



 








                                                                                                                           
       

 

 


புதன், 17 ஜூலை, 2013

மாமுண்ணவே கண்ணா ஓடிவா....



                 

            மாமுண்ணவே கண்ணா ஓடிவா...
            -------------------------------

(சில நாட்களுக்கு முன் நான் குருவாயூருக்கு நாராயணீய பாராயணம் செய்யச் சென்ற என் மனைவியுடன் சென்றிருந்தேன். பாராயணம் முடிந்து அவர்கள் மலையாளத்தில் கண்ணனை உணவு உண்ண அழைப்பதுபோல் ஒரு பாட்டுப் பாடினார்கள்.அதன் பொருள் எனக்கு அரைகுறையாய் விளங்கியது. வந்தது முதல் நானும் ஒரு பாட்டு எழுத வேண்டும் என்று ஏனோ தோன்றியது. முயன்றிருக்கிறேன் அதுவே கீழே.)  

கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி
கோவிந்தாஹரி கோவிந்தா.! ( கோவிந்தா...)


வெய்யிலில் ஓடி மண்ணிலே ஆடி
மேனி தளர்ந்தது போதுமே செல்வா
மண்ணுண்டவன் நீ என் கையால் இங்கு
மாமுண்ணவே கண்ணா ஓடிவா  ..............( கோவிந்தா ஹரி...)

பசியால் வாடியே மங்கிய நின் முகம்
சோர்ந்ததே கண்ணா அதைக்
காணவே உன் தாய் எனக்குத் தாங்காதே
அதனால் மாமுண்ணவே கண்ணா ஓடி வா ......( கோவிந்தா ஹரி....)

.வற்றல்,பொரியலும் சாம்பாரும் சாதமும்
கட்டித்தயிர் கலந்து நான் தருவேன்
வேண்டிய வெண்ணை நெய்யும் கலந்து
மாமுண்ணவே கண்ணா ஓடி வா.         ......( கோவிந்தா ஹரி....)

இனிக்கும் கனிவகை மூன்றும் உண்டு
ஊறுகாயுடன் பபபடமுண்டு பாயசம்
பணியாரம் எல்லாம், உண்டு மகிழ்ந்திட
மாமுண்ணவே கண்ணா ஓடிவா.       ......( கோவிந்தா ஹரி....) 


பாலும் பழமும் கிண்ணத்தில் வைத்தே
கோபியர் உன்னைச் சுற்றி ஆடியே
வாவென்றழைத்து உன் வாயினில் ஊட்ட.
மாமுண்ணவே கண்ணா ஓடிவா.         ( கோவிந்தா ஹரி.....)

கொம்பும் குச்சியும் அக்குளில் வைத்திடு
ஆடும் பம்பரம் அரையினில் செருகிடு
அன்னிய்ர் எவரும் வந்தெடுக்க இயலுமோ
மாமுண்ணவே கண்ணா ஓடிவா.          ( கோவிந்தா ஹரி....)

கெட்டித்தயிரும், பருப்பும் வெண்ணையும்
சப்பிகொட்டியே நீ உண்டால் கண்ணா
கார்நிற மேனியும் கருத்தும் மினுமினுக்கும்
மாமுண்ணவே கண்ணா ஓடிவா.           ( கோவிந்தா ஹரி.....)
            
காகம் கொண்டு போய். நாயும் கொண்டு போய்
பூனை கொண்டு போய் , யார் கொண்டுபோயினும்
செல்வா, கிண்ணத்தில் இருப்பது தாராளம்
மாமுண்ணவே கண்ணா ஓடிவா.           ( கோவிந்தா ஹரி.......)
--------------------------------------- 
( நான் பத்து வயதாயிருக்கும்போது என் தந்தை வழிப் பாட்டியுடன் சில காலம் எங்கள் கிராமத்தில் கோவிந்தராஜபுரத்தில்  இருந்தேன். அவர் அக்காலத்தில் தினமும் காலையில் பாடும் பாட்டின் சில வரிகள் ஏனோ இப்போது  நினைவுக்கு வருகிறது ” ஐயனே உம்முடைய அழகான பாதத்தை நான் அர்ச்சித்திருப்பதும் எப்போ.”)
--------------------------------------------------------------