Wednesday, September 11, 2013

பாரதியாரை நினைப்போம்


                                        பாரதியாரை நினைப்போம்
                                      --------------------------------------

சுப்பிரமணிய பாரதியார்



இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள். பாரதியின் பல கவிதைகளைப் படித்திருக்கிறேன். படித்ததை விட படிக்க முடியாமல் விட்டது அதிகமாய் இருக்கும். பாரதியின் பல பாடல்கள் பலராலும் மேற்கோள் காட்டப் படுகின்றன. பாரதி அநேகப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றை நான் படிக்கும்போது அவர் எழுதிய சூழ்நிலைகள் என்னவென்று தெரியவில்லை. இருந்தாலும் பாடல்களைப் படிக்கும்போது அவரும் பல இன்னல்களின் நடுவே பல விதமான எண்ணங்களால் பாதிக்கப் பட்டு தன்னைத்தானே தேற்றிக் கொள்ள எழுதியவை காலத்தினால் அழியாப் புகழ் பெற்றுவிட்டது. இன்னல்கள் சூழும்போது மனதை திடப் படுத்திக் கொள்ள அறியவொண்ணா சக்தியிடம் அடைக்கலம் தேடிய பலனே அவரது பல தோத்திரப் பாடல்கள் என்று தோன்றுகிறது.
சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்னும் பாடலில் அவர் தனது கை, கண், செவி, வாய், மூக்கு, , மெய், கண்டம், தோள் நெஞ்சம், வயிறு, இடை, கால், மனம்,சித்தம், மதி, அகம் இவை எல்லாவற்றையும் சக்தி தனக்கே கருவியாக்கு, என்று அறிவுறுத்துகிறார், உதாரணத்துக்கு சில பாடல்கள். 


கையைச்
        சக்திதனக்கே கருவியாக்கு-அது
        சாதனைகள் யாவினையுங் கூடும்-கையை
        சக்தி தனக்கே கருவியாக்கு அது
        சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்
மெய்யைச்
         சக்திதனக்கே கருவியாக்கு சிவ
         சக்திதருந் திறனதி லேறும்-மெய்யைச்
         சக்திதனக் கேகருவி யாக்கு-அது
         சாதலற்ற வழியினைத் தேறும்
நெஞ்சம்
         சக்திதனக்கே கருவியாக்கு-அது
         சக்தியுற நித்தம் விரிவாகும்-நெஞ்சம்
         சக்திதனக்கே கருவியாக்கு-அதைத்
         தாக்க வரும் வாளொதுங்கிப் போகும்
இதுபோல மனதை
         சக்தி தனக்கே கருவியாக்கினால்- அதில்
         சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும்
         சாத்வீகத் தன்மையினைச் சூடும்
         சக்தியற்ற சிந்தனைகள் தீரும்
         அதில் நல்ல உறுதியும் சீரும் சாரும்
         தான் விரும்பிய மாமலையைப் பேர்க்கும்
         தீவினையும் ஊழும் அதில் சாகும்
         அதில் சத்திய விளக்கு நித்தம் எரியும்.
மதியை சக்திதனக்கே அடிமையாக்க
         அது சங்கடங்கள் யாவினையு முடைக்கும்
         அங்கு சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்
         அது சத்தியத்தின் வெல் கொடியை நாட்டும்
         தாக்க வரும் பொய்ப் புவியை ஓட்டும்
என்றெல்லாம் கூறி
         சக்தியென்றும் வாழியென்று பாடு-சிவ
         சக்தி சக்தியென்று குதித்தாடு-சிவ
         சக்தி சக்தி என்று விளையாடு.
முடிக்கிறார்.

அங்கிங்கெனாதபடி அலைக்கழிக்கப் பட்டவர்  தனக்கென ஒரு இடம் வேண்டும் என்று கனாக் காண்கிறார்
காணிநிலம் வேண்டும் பராசக்தி
காணிநிலம் வேண்டும்-அங்குத்
தூணிலழகியதாய் நன் மாடங்கள்
தூய நிறத்தினவாய்-அந்தக்
காணிநிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித்தரவேண்டும்...........என்றெல்லாம் கனவு கண்டவர் அவரும் ஒரு மனிதர்தானே. உள்ளத்தில் தோன்றியதை உள்ளபடியும் நயம் பெறவும் எழுதியதால் மாமனிதர் ஆனார்
நெஞ்சு பொறுக்குதில்லையே என்றவர் கொஞ்சமோப் பிரிவினைகள் , -ஒரு கோடியென்றால் அது பெரிதாமோ?ஐந்துதலைப் பாம்பென்பான்அப்பன்;
ஆறுதலை யென்று மகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரித்திடுவார்பின்பு
நெடுநாளிருவரும் பகைத்திருப்பார்

சாத்திரங்க ளொன்றுங் காணார்பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு
கொள்கையில் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் என்றெல்லாம் கூறிக் குமைகிறார்.இன்றும் இச்சூழலில் வித்தியாசம் இல்லை என்பதே நிதர்சனம்.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியி லெறிவதுண்டோ என்று ஆதங்கப் படும் அவர் சிவ சக்தியிடம் கேட்பது ஒன்றும் கிடைக்கக் கூடாதது அல்ல. என்ன கேட்கிறார்.?
“விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையுறு மனங் கேட்டேந்-நித்தம்
நலமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைச் தீசுடினும்- சிவ
சக்தியைப் பாடுநல்லகங் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ>என்று முடிக்கிறார்.

வரம் கேட்கும்போதும் தன்  எண்ண ஒட்டத்தையும் கூறிச் சீறுகிறார்.
“தேடிச் சோறு நிதந் தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிகவுழன்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக்கிரை யெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ ?

பாரதியை நினைவு கூறும்போது அம் மாமனிதனின் எழுத்துக்கு அடிமையாகாமல் இருக்க முடியவில்லை. எனகொன்று தோன்றுகிறது. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை பாரதி வாழ்ந்திருந்தால் அத்தனை அல்லல்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார். அப்படி ஆளாகாமல் இருந்திருந்தால் இத்தகு உயிரோட்டமுள்ள எழுத்துக்களை எழுதி இருக்க மாட்டார். பல வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்டவர் உடலம் கிடத்தியபோது அவர் பெருமை அறிந்தவர்கள் யாரும் இருக்கவில்லையோ எனும் படித் தானே காடேகினார்.?

“ காலாஉனை நான்சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா.! சற்றே உனை மிதிக்கிறேன்
என்று காலனுக்கே சவால் விட்டவனைக் காலன் யானையின் காலாக வந்து மிதித்ததுதான் அவரது வாழ்க்கையின் IRONY.!
பாரதியின் எல்லாப் பாடல்களையும் நான் படித்ததில்லை. பாரதியின் வாழ்க்கை வரலாறு என்று ஏதும் படித்ததில்லை. அங்கும் இங்கும் படித்துத் தெரிந்து கொண்டதுதான், அவற்றில் சில எதிர்மறை விமரிசனங்களும் உண்டு. அவற்றைத் தேடித்துருவிப் படிக்க நான் விரும்பியதில்லை. அப்படிப் படிக்க நேர்ந்து எதிர்மறை விமரிசனங்களால் நான் அவர் மீது கொண்டிருக்கும் பக்தியும் மதிப்பும் குறைந்து விடுமோ என்ற பயமும் ஒரு காரணம்.

பாரதியின் எழுத்து வலிமைக்குக் காரணம் என்று நான் நினைப்பதுஅவரது தீர்க்கமான பார்வையும் தெளிந்த எண்ணமும்தான். அவரது கருத்துப் பதியாத பொருளே இல்லையோ என்று சந்தேகமெழுவது உண்டு. நாட்டின் நிலை,. தான் வாழ்ந்த சமூகத்தின் அவல நிலை, இது எல்லாவற்றையும் மீறி ஏதும் செயல்பட முடியாத ஆற்றாமை எல்லாம் சேர்ந்து அவரை ஒரு புரட்சியாளராக மாற்றி இருக்க வேண்டும். மனதில் பட்டதைக் கொட்டித் தீர்க்க அவரது மொழி ஆளுமை கை கொடுத்திருக்க வேண்டும்.

பாரதி கண்ணன் என் சற்குரு  எனும் பாடலில்
“ சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு
சங்கை இல்லாதன சங்கையாம்- பழங்
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம்- பொய்மைக்
கூடையி லுண்மை கிடைக்குமோ?நெஞ்சில்
மாத்திர மெந்த வகையிலும் சக
மாய முணர்ந்திடல் வேண்டுமேஎன்னும்
ஆத்திர நின்றதிதனிடை- நித்தம்
ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன.
என்றெல்லாம் கூறித் தன் ஆதங்கதினைப் பகிர்ந்து கொள்கிறார், வேறென்ன செய்ய முடியும்.? மன அமைதி தேடி
“ ஆயிரம் தெய்வங்களு ண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள் பல்

லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்

டாமெனில் கேளீரோ



மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கு மதியிலிகாள் எத

னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்

றோதி யறிவீரோ என்றெல்லாம் பாடி அறிவே தெய்வமென்கிறார்.


அந்த நாளில் ஏதென்சு நகர மக்களை அறிவாயுதம் ஏந்தத் தூண்டிய
குற்றத்துக்கு மரண தண்டனை பெற்றான் சாக்கரடீஸ் . இந்தக் காலத்தில் அறிவார்ந்த சொற்களால் மக்களை விழிக்கச் செய்ய முயன்ற குற்றத்துக்குமாளாத் துயர் எய்தினார் பாரதி. அவரது நினைவு நாளில் தோன்றிய கருத்துக்களைப் பகிர்வதன் மூலம் அவரை ஓர்க்கிறேன்.    ..             
                    
                  
               .       













 



20 comments:

  1. அனைத்தும் அருமை...

    சிறப்பிற்கு நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. பாரதி நினைவு நாள் சிறப்புப்பதிவில்
    விளங்களுடன் அவர் வடித்த அற்புத வரிகளை
    பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு. அருமை.

    "பாரதியாரை நினைப்போம்"

    ReplyDelete
  4. மகாகவியை நினைவுகூர மிக அருமையான,ஆழமான பதிவு.நன்றி ஐயா.

    ReplyDelete

  5. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி
    @ ரமணி
    பாரதியின் கவிதைகளில் அவரைக் காண உதவிய சில வரிகளைப் பகிர்ந்து கொண்டேன். கருத்துக்கு நன்றி ஐயா.
    @ கோபு சார்
    பாராட்டுக்கு நன்றி
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    / மகாகவியை நினைவு கூர மிக அருமையான ஆழமான பதிவு/பாராட்டுக்கு நன்றி உமெஷ்.

    ReplyDelete
  6. எனகொன்று தோன்றுகிறது. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை பாரதி வாழ்ந்திருந்தால் அத்தனை அல்லல்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார். அப்படி ஆளாகாமல் இருந்திருந்தால் இத்தகு உயிரோட்டமுள்ள எழுத்துக்களை எழுதி இருக்க மாட்டார்.//

    இருக்கலாம். ஆனால் சமூகத்தின் மீதான அவருடைய பார்வையில் பெரிதாக எவ்வித மாற்றமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அவருக்கிருந்த அந்த கோபம் வேண்டுமானாலும் காலப்போக்கில் சற்று குறைந்திருக்கலாம். ஆனால் இரவா கவிதைகளை அவர் நிச்சயம் படைத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

    அவருடைய மிக அருமையான பாடல் வரிகளை மீண்டும் ஒருமுறை வாசிக்க வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  7. மகாகவியை நினைவுகூரும் வகையில் அவரது மகத்தான கவிவரிகளைத் தந்து சிலாகித்தப் பதிவுக்கு சிறப்பு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  8. மனதில் பட்டதைக் கொட்டித் தீர்க்க அவரது மொழி ஆளுமை கை கொடுத்திருக்க வேண்டும்.


    இன்னமும் அதில் கட்டுண்டு நிற்கிறோம் !

    ReplyDelete
  9. @ டி.பி.ஆர் ஜோசப்
    @ கீதமஞ்சரி
    @ ரிஷபன்
    எனக்கு அப்படி தோன்றக் காரணம் பொதுவாக மனிதன் அல்லல்களில் இருக்கும்போது அதிகமாகச் சிந்திக்கிறான். பாரதிக்குக் கவிதை தொழில். ஆகவே சிந்தனைகளின் வெளிப்பாடு இறவாக் கவிதைகளாகக் கிடைக்கப் பட்டு நாம் கட்டுண்டு இருக்கிறோம்

    ReplyDelete
  10. பாரதியின் நினைவு நாளில் அவரின் பாடல்கள் பகிர்வு அருமை.
    அனைத்தும் படித்தேன்.
    நன்றி சார்.

    ReplyDelete
  11. அன்புள்ள ஐயா.


    வலிமையான கட்டுரை.

    பாரதி குறித்த வலியுணர்த்துவது.

    வலுவான கட்டுரை.

    ReplyDelete
  12. மன்னிக்கவும்! மேலே உள்ள படத்தில் பாரதியின் பெயர்
    “ ப்பிரமணிய பாரதியார் ” என்று உள்ளது.

    பாரதி நினைவுநாளில் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

  13. @ கோமதி அரசு
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி
    @ஹரணி
    ஐயா உங்கள் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது நன்றி

    @ தி.தமிழ் இளங்கோ
    பிழை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்

    ReplyDelete
  14. பாரதியாரை நேர்மறையான விஷயத்திற்கு உதாரணம்
    காட்டப்படுவதுண்டு.
    அவர் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.
    ஆனால் அவரோ "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" எனப் பாடியிருக்கிறார்.
    கோடி என்பதே மிகப் பெரியது. ஆனால் அவரால் இன்பத்தை அதற்குள்ளும் அடக்க முடியவில்லை.

    ReplyDelete
  15. பாரதியின் நினைவினைப்போற்றுவோம் ஐயா. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  16. நானும் பாரதியின் பாடல்களுக்கு அடிமை தான். அவருடைய கவிதைகளில் ஒரு கோபம் ஒளிந்திருப்பது போல் தோன்றும்.
    கடவுளிடம் வேண்டுவது கூட ஒரு மிரட்டலோடு உரிமையாக மிரட்டுவது போல் எனக்குத் தோன்றும்.
    எனக்குப் பிடித்த பல் பாடல்களிக் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete

  17. ஐயா! கொஞ்சம் படித்தேன் என்று கூறி நெஞ்சம் நெகிழ வைத்த தங்கள் பதிவு அருமை! நன்றி!

    ReplyDelete

  18. @ நாகசுப்பிரமணியம்
    எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் இருப்பதில் காண்பதில் இன்பம் காண முடிந்தவர் பாரதி. அதனால்தான் அவர் மகாகவி. கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

    @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும்கருத்துப் பதிவுக்கும் நன்றி

    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
    பாரதியைப் பற்றி எழுத ஒரு பதிவு போதாது. ஏதோ சில பாடல்களைக் கொண்டு அவரை நினைவு கூர்ந்திருக்கிறேன். பாராட்டுக்கு நன்றி.

    @ புலவர்0 இராமாநுசம்
    ஐயா வெகு நாட்களுக்குப் பின் என்பதிவுக்குப் பின்னூட்டம் இடுவது காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  19. பாரதியின் பாடல்கள் மனதை அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவைகள். கவிஞர் வைரமுத்து சொல்வார் கவிதை என்பதை மனதை வருட வேண்டும் அல்லது குறைந்த பட்சம் மனதை நெருடவாது வேண்டும் என்று. பாரதியின் கவிதை இரண்டையும் செய்யும் ஆற்றல் பெற்றது. தீர்க்கத்தரிசி பாரதியை போற்றுவோம். அவர் சொல்லிய வழி நடப்போம்.. பகிர்வுக்கு நன்றீ அய்யா.

    ReplyDelete
  20. பாரதிக்கு அருமையான அஞ்சலி. ஊரில் இல்லாததால் உடனே வரமுடியலை. :)

    ReplyDelete