Wednesday, March 25, 2015

எழுதத் தூண்டிய எண்ணங்கள்


                                  எழுதத் தூண்டிய எண்ணங்கள்
                                  -----------------------------------------------


என்னுடைய சென்ற பதிவில் கேள்விகளே பதிலாய் எழுதப் பின் புலமாக  குழந்தைப் பேறு இல்லாத ஜோடி பற்றிய கதையை கருவாக எழுதி இருந்தது பற்றிக் கூறி இருந்தேன் 1970-ல் இதே கருவை வைத்து வேறு விதமாகக் கதை பின்னி இருந்தேன் அதையே நாடகமாகவும் மேடை ஏற்றி இருக்கிறேன் ஆனால் அந்தக் கதைக்கு குழந்தை பேறு இல்லாத ஒரு காரணத்துடன் ஏதேதோ செயல்களைச் செய்து விட்டு அதற்கு மனசாட்சியைத் துணைக்கழைப்பவர்களையும் கதாமாந்தர்களாக்கினேன் அந்தக் காலத்தில் ஏதோ புரட்சிகரமான கரு என்று பலரும் கருதினார்கள்.
நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவரது பதிவுகளில் சில கருத்துக்களைக் கூற மனசாட்சியைத் துணைக்கழைப்பார். ஒரு பின்னூட்டத்தில் அது பற்றி அவரிடம் விளக்க்வும் வேண்டி இருந்தேன். இல்லாவிட்டால் நானே மனசாட்சி பற்றி எழுதுவேன் என்றும் பயமுறுத்தினேன் நான் ஏற்கனவே மனசாட்சிப் பற்றி எழுதி இருந்ததையும் அது எப்படி என் கதைக்குக் கருவாக இருந்ததையும் இப்போது கூறுகிறேன்
மனசாட்சி பற்றிய என் கணிப்பே வேறு.பல சமயங்களில் நாம் கேள்விப்படுவது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பதாக வரும் சம்பாஷணைகள். என் கேள்வியே மனசாட்சி என்பது என்ன.?அதற்கென்று ஏதாவது அளவு குறியீடு இருக்கிறதா. எவனாவது தன் எந்த செயலையாவது மனசாட்சிக்கு விரோதமாகச் செய்ததாகச் சொல்கிறானா. ஒரு கொலையையும் செய்து விட்டு அதற்கான காரண காரியங்களை விவரிக்கும் போது மனசாட்சிக்கு விரோதமாக செய்யவில்லை என்பான் எந்த ஒரு செயலுக்கும் அவரவருக்கு ஒரு காரணம் இருக்கும். அதுவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும் மனசாட்சிதான் என்ன?கொண்ட கொள்கைகளின் மேல் எண்ணத்தின் மேல் இருக்கும் அசையாத நம்பிக்கையின் நிரந்தரமான சாசுவதத் தன்மையைக் குறிப்பிடுவது அல்லவா?அப்படியானால் கொள்கைகள் அல்லது எண்ணங்கள் (அவை சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்) அதன் காரணமாக எழும் செயல்கள் மனசாட்சியின் பிரதிபலிப்பல்லவா? அதாவது செய்யும் எல்லா செயல்களுக்கும் காரணங் காட்டி தெளிவு படுத்தி ஏதாவது ஒரு கோணத்திலிருந்தாவது மனசாட்சிக்கு விரோதமில்லாதது என்று நிரூபிக்க முடியும்
இந்த மனசாட்சி பற்றியும் குழந்தைப்பேறு பெற முடியாதவனின் செயல்கள் விளைவுகள் குறித்தும் எழுதிய கதையே மனசாட்சி. இதில் சொல்லப் பட்டிருக்கும் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லாதவை அல்ல. ஆனால் நடக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளும் மனோநிலை நம்மில் பலருக்கும் இல்லை. அதுவே இந்தக் கதையை நான் எழுதவும் மேடையேற்றவும் எனக்கு இருந்த உந்து சக்திகளாகும். ஏனென்றால் எப்போதும் நான் என்னை “ I AM DIFFERENT” என்று காட்டிக் கொள்ளத் தயங்கினது இல்லை.
திரு ஹரணி அவர்கள் என் சிறு கதைத் தொகுப்புக்கான வாழ்த்துரையில் “ ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஒவ்வொரு சுவையை உணர்த்துபவை. சில கதைகள் இயல்பாய் இருக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சியூட்டுகின்றன.சில கதைகள் நம்மைக் கசிய வைக்கின்றன. சில கதைகள் வலி யேற்படுத்துகின்றன எவ்விதத் தயக்கமுமின்றி உள்ளதை உள்ளவாறே எடுத்துப் பேசிப்போகிறார் கதையாசிரியர்.அவரின் மனக் கிடக்கை வெகுவான நியாயங்களுடன் இக்கதை தொகுப்பு முழுக்கப் பயணிக்கிறதுஎன்று கூறுகிறார்
என் கதைகள் சிறுகதை எனும் கட்டமைப்புக்குள் ( அப்படி ஒன்று இருக்கிறதா என்ன.?) வருவதில்லை என்னும் குறையை நான் கேட்டிருக்கிறேன் . ஒரு சிறுகதை என்றால் ஒரு ஆரம்பம் நடுவு முடிவு என்று இருக்க வேண்டும் என்பதும் ஒரு சாராரின் வாதம் கதையின் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள் கதையின் முடிவில் பின்னூட்டங்களும் காணுங்கள் உங்கள்கருத்துக்களையும் தாருங்கள்

 


                                     

22 comments:

  1. அய்யா வணக்கம்.
    மனசாட்சி என்றதும் என் நினைவிற்கு வருவது,

    தன்நெஞ்சு அறிவது பொய்யற்க என்பதும்
    அறிவது பொய்த்தபின் தன்னை உள்ளுக்குள் இருந்து சுடுவதும் என்பதையும் தான்.
    வெளியே நான் ஆயிரம் நியாயம் கற்பிக்கும்போதும் உனக்குத் தெரியாத இது அநியாயம் தானே என்பதும்.
    உண்மை உண்மை என ஊர்முழுக்கச் சொல்லும் போதும், இது போய்தானே என உள்ளுக்குள் இருந்து சிரிப்பதும்...

    என்னைப் பொருத்தவரை அதையே மனசாட்சி என்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  2. சித்தாந்தங்களின் மோதல் இந்தப் பதிவில் பிரதிபலிக்கிறது. வாதங்கள் எந்த சித்தாந்தத்தையும் நியாயப் படுத்தும். ஒவ்வொருவனும் இதைத் தான் செய்கிறான். அதையே தன் மனச்சாட்சி என்று கூறிக்கொள்கிறான்.

    இந்தக் கருத்தை இந்தப் பதிவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் சொல்வதுதான் சரி என்று அவர் மனச்சாட்சி சொல்லித்தான் இந்தப் பதிவை எழுதியிருக்கிறார்.

    அது பற்றி யார் என்ன கருத்து கூறினாலும் அவர் மனச்சாட்சி அதை ஏற்றுக்கொள்ளாது.

    ReplyDelete

  3. மனசாட்சி சொன்னது 80தை தீர்மானிப்பது யார் ? அவன்தானே நல்லதோ, கெட்டதோ அவனே தீர்மானம் எடுக்கிறான், ஆக மனசாட்சியும், அவனும் வேறு அல்ல 80 எமது கருத்து.

    ReplyDelete
  4. மனசாட்சி என்றால் என்ன என்பது கேள்விக்குரியது தான். நல்ல அலசல்.

    ReplyDelete
  5. மனிதனின் உண்மையான ஊனம் எது...? என்கிற பதிவில் ஆளுங்க அருண் அவர்களின் கருத்துரையை வாசிக்கவும்... அதே போல் அதற்கு கீழ் எனது கருத்துரையும்...

    நன்றி ஐயா...

    http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/Real-Handicapped-Person.html

    ReplyDelete

  6. @ ஊனை விழிகள்
    ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மன சாட்சி என்பது பொதுவாக் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் எண்ணப் பிரதிபலிப்பு என்றே நம்புகிறோம்.ஆனால் தவறுகள் செய்துவிட்டு மனசாட்சியை துணைக்கழைப்பவரை என்ன செய்ய.?ஒன்று புரிகிறது ஐயா. வாசகர்கள் கனமானபதிவுகளை விரும்புவதில்லை என்று.

    ReplyDelete

  7. @ டாக்டர் கந்தசாமி
    சரியென்று தோன்றியதை எழுதவில்லை. in fact எல்லா தரப்பு நியாயங்களையும் கதையில் காட்டி இருக்கிறேன் . இருந்தாலும் values in life என்று வரும்போது முன்பே எடுத்த சில முடிவுகளை ஏற்க முடிவதில்லை என்பதையும் கதையில் சொல்லி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  8. @ கில்லர் ஜி
    ஆக மனசாட்சி என்பதற்கு அளவுகோல் ஏதும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  9. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேம்

    ReplyDelete

  10. @ திண்டுக்கல் தனபாலன்
    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவைப் படித்தேன் அன்று எழுதி இருந்தபோது நான் அதை எப்படி மிஸ் செய்தேன் தெரியவில்லை. சில விஷயங்கள் பல கருத்துக்களைக் கொண்டது. அதில் இந்த மனசாட்சியும் உண்டு. எனக்குத் இதன் அடிப்படை நாம் வளரும் சூழலைப்பொறுத்தது என்று தோன்றுகிறதுவாழ்வியலே வேறுபட்டிருக்கும்போது மனசாட்சியும் வேறு பட்டிருக்கும். வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி டிடி.

    ReplyDelete
  11. கில்லர்ஜி சொல்லியிருப்பது சரி என்று படுகிறது.

    ReplyDelete
  12. சார்! மனசாட்சி என்பது நம் மனதிற்குள் ஒலிக்கும் மற்றொரு குரல்! இது ஹாலூசினேஷன் குரல் அல்ல....அது நாம் தவறு செய்யும் போது தட்டிக் கேட்கும். அதுவும் நம் மனதுதான் மூளையின் ஒரு பகுதி சென்சர் தான்....னாமும் நம் மனமும் ஒன்றுதான் என்றாலும், சில சமயம் மட்டும் நாம் தவறு செய்யும் போது இல்லை தவறான முடிவு எடுக்கும் போதும் ஏதோ ஒன்று நம்மை அறிவுறுத்துகின்றதே....அதைத்தான் மனசாட்சி என்று நாமே சொல்லிக் கொள்கின்றோம்....

    ReplyDelete

  13. @ ஸ்ரீராம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி
    கில்லர்ஜிக்கு கொடுத்த மறு மொழியைப் பாருங்கள்.

    ReplyDelete

  14. @ துளசிதரன் தில்லையகத்து
    நான் எந்த மறு மொழிகொடுத்தாலும் டாக்டர் கந்தசாமி சொல்வதுபோல் ஆகிவிடும். தவறு செய்வதை எத்தனை பேர் நியாயப் படுத்துகிறார்கள் என்பதும் உங்களுக்க்த் தெரியும். அப்போது தவறு எது சரி எது என்னும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிவரும். உங்கள் எண்ணங்களை பின்னூட்டமிட்டதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  15. மனசாட்சியைக் கூட நாம் பல சமயங்களில் நமக்கு வசதியாகப் (மனசாட்சி என்பதைத் தள்ளிவைத்துவிட்டு)பயன்படுத்திக்கொள்கிறோம் என எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete

  16. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. எல்லோருக்கும் பொதுவாக மனசாட்சி இல்லாதவரை அதன் படி நடந்தேன் எனச் சிலர் கூறுவது விளங்குவதில்லை. இச்சிந்தனையின் விளைவே இச்சிறு கதை . வாசித்தீர்களா?

    ReplyDelete
  17. மனம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறதோ
    (நம்மாலோ அல்லது பிறராலோ )
    அதன்படிதான் அது சாட்சி சொல்லும்
    திருடனுக்கும் போலீசுக்கும் மனச்சாட்சி
    வெவ்வேறாக இருக்கத்தானே சாத்தியம் ?

    ReplyDelete

  18. @ ரமணி
    அதனால்தான் மனசாட்சிக்கு ஏதோஅளவுகோல் இருப்பது போல் பலரும் அதைத் துணைக்கழைப்பதை நினைத்து உருவான கதை. கதையை வாசித்தீர்களா? வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. மனச்சாட்சி என ஒன்றுமில்லை. அது இருப்பதுபோல் பேசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான் என நினைக்கிறேன்.

    ReplyDelete

  20. @ வே நடன சபாபதி
    ஐயா வணக்கம். ஏறத்தாழ என் கருத்துடன் உடன் படுகிறீர்கள்

    ReplyDelete
  21. ஒரு செய்கை செய்யும்போது இது நல்லது இது கெட்டதுன்னு ஒரு உள்ளுணர்வு வருது பாருங்க அதுதான் மனசாட்சி.
    அதற்கு எதிராச் செஞ்சோமுன்னா.... மனசாட்சி வந்து நம்மையே கேவலமா நினைக்கவைக்கும். வெளியே யாருக்கும் இது புலப்படாதுன்னாலும் தன் நெஞ்சு அறியுமே!

    ReplyDelete

  22. @ துளசி கோபால். வாருங்கள் மேடம் ஒரு செய்கையை நல்லது கெட்டது என்று தீர்மானம் செய்ய ஒரு பொது அளவீடு வேண்டும் அல்லவா.. வருகைக்கு நன்றி.

    ReplyDelete