Wednesday, April 8, 2015

நேர் காணல்


                           நேர்காணல்
                            -----------------


பதிவுகள் எழுதத் தலைப்புகள் எதையாவது யோசித்து எழுதலாம் என்றால் அந்தத் தலைப்பில் நான் ஏற்கனவே எழுதி இருப்பது தெரிகிறதுஅதனால்தானோ என்னவோ என் அண்மையப் பதிவுகள் பலதும் மொக்கையாய் இருக்கிறதுஎன்னை பாதிக்கும் விஷயங்களை நான் எழுதும் போது அதனால் சிலருக்காவது புதிய சிந்தனைகள் தோன்றவேண்டும் . என் அனுபவங்கள் சிலருக்குப் பாடமாக இருக்கலாம் நான் முன்பே எழுதி இருந்தாலும் இன்னுமொரு முறை படிப்பதால் நஷ்டமோ சுவை குறைவோ ஏற்படப் போவதில்லை.
நம்மில் பலரும் இப்போது இருக்கும் பதவிக்கு ஏதாவது நேர்காணல் மூலம் தேர்வாயிருக்கலாம். இன்னும் பதவி உயர்வு பெற இன்னும் சில நேர்காணல்களை சந்திக்க நேரலாம் இந்த எண்ணம் தோன்றியவுடன் எழுத ஆரம்பித்த போது என் பழைய பதிவொன்றே இன்னும் புதியதாகத் தோன்றவே அதையே எழுதுகிறேன் எத்தனையோ ஆன்மீகக் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்பது இல்லையா, வாசிப்பது இல்லையா?ஆனால் அதைவிடப் பயன் தரும் பதிவைப்படிப்பதில் குறை ஒன்றும் இருக்காது
 நேர்காணல்

சில பிரபலங்களை சந்திக்கும்போது பேட்டிக்காக காணும் நேர்காணல் பற்றியது அல்ல இப்பதிவு. வேலை வேண்டி மனு செய்திருந்து அவர்களிடம் இருந்து அழைப்பு வந்து அவர்கள் மனுதாரரிடம் அவரை தேர்வு செய்யவா வேண்டாமா என்று சோதித்து அறிய நடத்தும் நேர்காணல் பற்றிய சில அனுபவ டிப்ஸ்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மனு செய்யும் விதமே இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் மனு செய்பவர் தங்கள் குடும்ப சூழ்நிலையை விளக்கி, இவர் வேண்டும் அந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்று கண்ணீர் வருத்தாத குறையாக எழுதி கடைசியில் I WILL TRY MY LEVEL BEST TO SATISFY MY SUPERIORS AND REMAIN FAITHFUL FOR EVER “ என்று முடிப்பார்கள். இப்போதெல்லாம் அவரவர் தகுதிகளைக் கூறி RESUME என்ற பெயரில் ஒரு அல்லது சில தாள்களை அனுப்புகிறார்கள் அல்லது மின் அஞ்சல் செய்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தேர்வு செய்பவர் ஒரு நேர்காண்ல் அல்லது க்ரூப் டிஸ்கஷன் மூலமே தேர்வு செய்கிறார்கள். நேர்காணலுக்குச் செல்லும்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து நிறையவே கைடன்ஸ் புத்தகங்கள் அல்லது குறிப்புகள் வந்திருக்கின்றன

நேர்காணலுக்குச் செல்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். முதன் முதலில் வேலை தேடி செல்பவர் தன் இப்போதிருக்கும் நிலையை மேம்படுத்திக் கொள்ள செல்பவர் முதன் முதலில் வேலை தேடிச் செல்பவர் அதிகம் நெர்வஸாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நேர்காணலில் தங்கள் அறிவை சோதனை செய்கிறார்கள் என்று மட்டும் எண்ணக் கூடாது. கால்மணி முதல் அரை மணிக்குள் ஒருவரது அறிவை சோதித்து தெரிந்து கொள்ள முடியாது. அவர்கள் நோக்கமும் அதுவல்ல. உங்கள் அறிவை தெரியப் படுத்தும் சான்றிதழ்கள் அவர்களிடம் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் ஆட்டிட்யூட்  மற்றும் பிறரை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பதை அறிய அவர்களது முயற்சியே. நேர்காணல். எந்த நிறுவனத்துக்கு வேலைக்கு மனு செய்திருக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றி சில விவரங்களாவது தெரிய வேண்டும். நான் முதன் முதலில் என் பதினேழாவது வயதில் பள்ளி இறுதி முடித்து HAL-ல் மெகானிக் பணிக்கான பயிற்சிக்குத் தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். நான் இருந்தது வெல்லிங்டனில். நேர்காணல் மதராசில். திரும்பி வருவதற்கான பணம் மட்டும்தான் என்னிடம் இருந்தது. ஆனால் உலகை வெல்லும் தைரியம் நிறையவே இருந்தது. நான் பட்ட பாடுகள் பற்றிக் கூறப் போவதில்லை. நேர்காணலுக்கு வந்திருந்தவர்களில் காலில் செருப்புடன் டை அணிந்து வந்தவன் நான் மட்டுமே. தமிழ்வழிக் கல்வியே படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக என்னால் பேச முடிந்தது. என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கேட்டவர்கள் நான் காம்பொசிட் மாத்ஸ் படித்தவன் என்று தெரிந்து என் அறிவை சோதிக்க பித்தாகோரஸ் தீரம் பற்றிக் கேட்டார்கள். நான் தமிழ் வழிக்கல்வியில் படித்ததால் தமிழிலேயே பித்தாகோரஸ் தேற்றம் கூறினேன்.தமிழ்வழிக் கல்வி படித்தும் ஆங்கிலத்தில் என்னால் உரையாட முடிவது கண்டு அவர்கள் அதே தீரத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். நான் ஒரு தாள் கேட்டு வாங்கி முடிந்தவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அவர்கள் அப்போதே கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் நாம் படிப்பது தேர்வில் பாஸ்செய்ய மட்டுமல்ல. படிப்பதைப் புரிந்து கொண்டால் அதை விளக்கவும் முடியும். என்ன.. என்னால் அது முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் அந்த நேர்காணலில் நான் தேர்வு பெற்றேன் என்று கூறவும் வேண்டுமா. ?
தேர்வுக்குச் செல்பவர்களுக்கு முக்கிய தேவை, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை. அதுவே ஓவர் கான்ஃபிடன்ஸாக மாறி விட்டால் சொதப்பலாகி விடும். அதற்கு என்னிடமிருந்தே ஒரு உதாரணம் கூறுகிறேன். நான் HAL-ல் வேலையிலிருக்கும்போது  மதராஸ் ப்ரேக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு எஞ்சினீரிங் இன்ஸ்டரக்டர்ஸ் என்ற பணிக்காக வந்த விளம்பரம் கண்டு மனு செய்தேன். என் மனுவில் நான் பயிற்சியின்போது சென்ற இடங்களிலெல்லாம் தேர்ச்சி உள்ளவன் போல் எழுதி இருந்தேன். என்னை நேர்காணல் செய்ய வந்தவர் ஒரு ஆங்கிலேயர். என் மனுவைப் படித்த அவர் எனக்கு டூல் டிசைன் செய்ய வருமா என்று கேட்டார். இரண்டே வாரம் அங்கு பயிற்சியில் இருந்தவன் நான். டூல் டிசைன் என்றால் என்ன செய்கிறார்கள் என்று தெரியும் அவர் கார் எஞ்சினின் ஒரு பாகத்தைக் காட்டி அதற்கு என்னால் டூல் டிசைன் செய்ய முடியுமா என்று கேட்டார். நேர்காணல் நடக்கும் நேரத்தில் எந்தக் கொம்பனாலும் டூல் டிசைன் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். என்னை டிசைன் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்றும் தெரியும். ஆகவே வீராப்பாக என்னால் முடியும் என்றேன். எவ்வளவு நேரமாகும் என்றார்கள் நான் குத்து மதிப்பாக பதினாறு மணி நேரம் ஆகும் என்றேன். அந்த ஆங்கிலேயருக்கு நான் புருடா விடுகிறேன் என்று
நன்றாகத் தெரிந்து விட்டது. ஒரு வாரம் எடுத்துக் கொண்டாலும் என்னால் முடியாது என்று கூறியவர் முகம் சிவக்க எனக்கு எந்த பணியும் தர முடியாது என்று கூறினார். முகத்தில் அடித்தாற்போல் எந்த வேலையும் கிடையாது என்று சொன்னது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. நானும் என் பங்குக்கு எந்தப் பணியாவது கேட்டு நான் வரவில்லை, எஞ்சினீரிங்.இன்ஸ்ட்ரக்டர்  பதவிக்கு மட்டுமே மனு செய்திருந்தேன். அது மட்டும் இல்லை என்றுதான் அவர்கள் கூறலாம் என்று கோபமாகக் கூறி வெளியே வந்து விட்டேன். நேர்காணலில் தவறான அணுகு முறைக்கு இது ஒரு சாம்பிள்
. மைகோ MICO நிறுவனத்துக்கு ஒரு நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்கள். ஒரு நாள் முழுவதும் தேர்வு. காலையில் ஒரு வினாத்தாளைக் கொடுத்து பதில் எழுதச் சொன்னார்கள். கொஞ்சம் டெக்னிகல் விஷயங்கள் பின் நிறையவே முதலாளி தொழிலாளி உறவு பற்றிய கேஸ் ஸ்டடீஸ். உதாரணத்துக்கு ஒன்று. ஒரு நிறுவனத்தில் இருக்கும் மேலாளர் வீட்டில் வேலை செய்யும் தோட்டக் காரனை அவர் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துகிறார். மேலாளருக்கு வேண்டப் பட்டவன் என்ற காரணத்தால் ஒரு பகுதியின் மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அதே காரணத்துக்காக இன்னொரு மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் அமர்த்தியதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு நிறையவே சலுகைகள் கொடுத்து ப்ரொமோஷனும் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இந்த கால கட்டத்தில் மேலாளர்  ஓய்வு பெறுகிறார்.அதற்குப் பிறகு அந்த தோட்டக்காரனுக்கு எந்த சலுகையும் வழங்கப் படவில்லை. இரண்டாம் பதவி உயர்வும் தடுக்கப் படுகிறதுஅவன் இதை யூனியனிடம் முறையிட அந்தக் கேஸ் விசாரிக்க உங்களிடம் வருகிறது . நீங்கள் எப்படி பிரச்சனையைத் தீர்ப்பீர்கள்.?

மதியம் நேர்காணலில் கேள்வி பதில்களை அலசுகிறார்கள் கேள்வித்தாளில் இல்லாத கேள்வி ஒன்று. உன் பகுதியில் வேலை செய்யும் தொழிலாளி அரை நாள் லீவ் கேட்கிறான். நிலைமை உங்களால் லீவ் கொடுக்க முடியாத சூழ்நிலை.அந்தக் கோபத்தில் நீங்கள் ஒரு திருப்பத்தில் வரும் போது அந்த தொழிலாளி உங்களுக்குத் தெரியாமல் உங்களைத் தாக்குகிறான் நீங்கள் என்ன செய்வீர்கள்.?

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தாக்குதலுக்கு உள்ளான பிறகு  நான் என்ன செய்ய
 முடியும்.? நான் அவர்களிடம் சொன்னேன். எனக்கு இந்த மாதிரி பணி வேண்டாம். அடியும் உதையும் பெற எதிர்பார்க்கும் அந்த நிறுவனத்தை நான் நிராகரிக்கிறேன் என்று கூறி வந்து விட்டேன். ( அந்த காலகட்டத்தில் தொழிலாளர் பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்து நாளொரு கலவரமும் கதவடைப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தது.)

விளம்பரங்கள் மூலம் தெரிய வந்து மனு செய்யும் காலம் மாறிக்கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் எனக்கு வருகிறது. எந்தக் காலத்திலும் நேர்காணலுக்குச் செல்பவர் தன்னிடம் கேள்விகள் கேட்பவர் தன்னை சோதிக்க அல்ல, அவருக்கே தெரிந்து கொள்ள என்னும் எண்ணத்துடன் அணுகினால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். முன்பிருந்த மாதிரி ஒரே நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பணி புரியும் காலம் மலை ஏறிவிட்டது. வேலைக்கு எடுத்துக் கொள்பவர்களும் வேலை தெரிந்தவர்களையே அதிகம் விரும்புகிறார்கள். இல்லையென்றால் அவர் வேலை கற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு வேறு நிறுவனத்துக்குப் பறந்து விடுகிறார். இண்டக்‌ஷன் லெவலில் சேர்ந்தால் வேலைகற்றும் கொள்ளலாம். நேரம் வரும்போது மாற்று வேலைக்கும் செல்லலாம்
.
என்ன நண்பர்களே இதே பதிவை ஏற்கனவே படித்து நினைவில் இருத்திக் கொண்டிருப்பவர்களுக்கு  ஒர் ஓ போடலாமா    ,                            


   .   


35 comments:

  1. நன்றாக ஆயத்தம் செய்யாவிட்டால் நேர்காணலில் வெற்றி பெற முடியாது போல் இருக்கிறதே?

    ReplyDelete
  2. சுவாரஸ்யம்.

    நள்ளிரவு 2 மணிக்கும் நேர்காணலில் இருந்த ஒருவர் க்ரூப் டிஸ்கஷனில் தன்னிடம் 'இவ்வளவு நேரம் கழித்தும் நேர்காணல் நடைபெறும் நிலை பற்றிய உரையாடலில் மற்றவர்கள் அதை 'இது கம்பெனியின் பொறுப்பையும் பொறுமையையும் காட்டுகிறது என்ற ரீதியில் பேச, இவர் மட்டும் கடுப்படித்திருக்கிறார். அவர் செலெக்டட்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. என் அப்பாவைப் போலவே இரவு விழித்து வேலை செய்யும் பணியை விரும்பவில்லை என்று சொன்னதால் ,ஷிப்ட்டில் இயங்கும் பணியில் நான் சேர முடியாமல் ரிஜெக்ட் ஆனது நினைவுக்கு வருகிறது !

    ReplyDelete

  5. நான் முதன் முறையாக படிக்கிறேன் ஐயா வேலை தேடுவோருக்கு நல்லதொரு பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  6. பதிவை ஏற்கனவே படித்து நினைவில் இருத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஒர் ஓ போடலாம்,

    ReplyDelete
  7. சார் வணக்கம்.

    இது அவனது நேர்காணல் அனுபவம்,
    அப்பொழுது அவனது இடைநிலை ஆசிரியப் படிப்பின் முடிவுகள் வந்து ஒரு மாதம் ஆயிருந்தது.

    பிரபல பள்ளியில் காலிப்பணியிடம் ஒன்றிற்கு விண்ணப்பித்திருந்தான்.

    நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.

    நிரந்தரப் பணிக்கான நேர்காணல் அது...,
    வந்திருந்தவர்கள் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள்.
    காலை சான்றிதழ் சரிபார்ப்பின் பின்னர், வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். அதற்கான தயாரிப்பிற்கு இரண்டு மணி நேரம் இருந்தது.

    சிலர் முன்னதாகவே பாடத்திட்டமும் வரைபடங்களும் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுள் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உறவினரும் மக்களுமாய்ச் சிலர் இருந்தனர்.

    சிலர் இப்பணிக்கு இத்தனை லட்சம் வாங்கி முன்கூட்டியே ஆட்களைத் தேர்வு செய்துவிட்டு கண்துடைப்பிற்காக நேர்காணல் நடத்துகிறார்கள் என்றார்கள். பணியாற்றும் ஆசிரியர்களின் மகன் ஒருவனுக்கு அளிக்கப்போவதாய்ச் சொன்னார்கள்.

    இடைநிலை ஆசிரியப்படிப்பென்பது, சீட்டுக் கட்டின் ஜோக்கர் போன்றது. எந்த இடத்திலும் எந்தப் பாடத்தையும் கற்பிக்க வேண்டியிருக்கும்.

    பயிற்சியில், தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் வரலாறு புவியியல் குடிமையியல் என அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் முறைகளையும் பாடப் பொருண்மையையும் தெரிந்து தனித்தனியே அப்பாடத்திற்குரிய தியரி, பிராக்டிகல் என இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


    வியர்வையும் நடுக்கமுமாய் உள்சென்று வெளிவந்தவர்களுக்கு மத்தியில் அவனிடம் பதற்றம் இல்லை.

    மதியத்திற்கான கற்பித்தலை அளவிடும் நேர்காணலுக்கு 16 ஆம் எண் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

    அவன் முறை வந்தபோது கைகளில் சாக்பீசும் , டஸ்டரும் மட்டுமே அவனிடம் இருந்தன.

    மதிப்பீட்டாளர்கள் ஐந்துபேர் கொண்ட நேர்காணல் குழுவும் 40 மாணவர்களும் அவன் முன்.

    அலட்சியப்பார்வையுடன் அவனை எதிர் கொண்ட நேர்காணல் குழுவினரிடம் அவன் கேட்டது “ என்ன பாடம் நடத்த வேண்டும்? என்ன தலைப்பு? ” என்ற இரண்டு கேள்விகளைத்தான்.

    கையில் புத்தகம் இல்லை. கரும்பலகையைத் தவிரக் கற்பித்தல் துணைக் கருவிகளும் இல்லை.

    அதிர்ச்சியுடன் பார்த்த அக்குழுவின் தலைவர் ஒரு பாதிரியார். அவர் கேட்டார்.

    “ முன்தயாரிப்பின்றி, எதையும் நடத்திவிடுவாயோ? என்ன மேதையோ நீ?“

    அவன் மீண்டும் கேட்டான்.

    “ என்ன பாடம் ஃபாதர்? நான் கற்பிக்க வேண்டிய தலைப்பு என்ன ? “

    தலைப்பு கொடுக்கப்பட்டது.

    15 நிமிடங்கள் கெடுவும்.

    13 ஆம் நிமிடத்தில், குழுவினரின் கைதட்டலுடன் கற்பித்தல் முடிந்தது.


    நேர்காணல் குழுவினரிடம் அவன் சொன்னான்,

    “ இங்குக் கற்பிக்கப்பட்ட தலைப்புத் தொடர்பாக எந்தக் கேள்விகள் வேண்டுமானாலும் என் முன்னுள்ள மாணவரிடம் கேட்டுக் கொள்ளலாம். என் வகுப்பு முடிந்தது.!”

    “தேவையில்லை நீ போகலாம்!” என்றார் அந்தப் பாதிரியார்.

    நேர்காணலில் முதல் அனுபவத்தோடு சிரித்தபடி வீடு வந்த அவனது வீடு தேடி, இருநாட்கள் கழித்துப் பணி நியமன ஆணை வந்திருந்தது.

    அப்பொழுது அவனுக்கு வயது 20.

    அவனது முதலும் கடைசியுமான நேர்காணல் அனுபவம் அது.

    தங்களின் இடுகை கண்டதும் அது நினைக்கத் தோன்றிற்று.

    தாங்கள் BHEL இல் சேர்ந்த அனுபவம் குறித்து எப்பதிவிலேனும் குறிப்பிட்டிருக்கிறீர்களா?

    இருப்பின் சுட்டி தர வேண்டுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  8. ****ஒரு நிறுவனத்தில் இருக்கும் மேலாளர் வீட்டில் வேலை செய்யும் தோட்டக் காரனை அவர் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துகிறார். மேலாளருக்கு வேண்டப் பட்டவன் என்ற காரணத்தால் ஒரு பகுதியின் மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அதே காரணத்துக்காக இன்னொரு மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் அமர்த்தியதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு நிறையவே சலுகைகள் கொடுத்து ப்ரொமோஷனும் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இந்த கால கட்டத்தில் மேலாளர் ஓய்வு பெறுகிறார்.அதற்குப் பிறகு அந்த தோட்டக்காரனுக்கு எந்த சலுகையும் வழங்கப் படவில்லை. இரண்டாம் பதவி உயர்வும் தடுக்கப் படுகிறதுஅவன் இதை யூனியனிடம் முறையிட அந்தக் கேஸ் விசாரிக்க உங்களிடம் வருகிறது . நீங்கள் எப்படி பிரச்சனையைத் தீர்ப்பீர்கள்.?***

    நல்ல கேள்வி சார்! அவன் எப்படி வேலைக்கு வந்தான்? வரும்போது அவன் தகுதி எப்படி இருந்தது என்கிற ஆராச்சியை விட்டுத் தள்ளிவிட்டு, இன்று அவன் 8 மணிநேரம் வேலையில் இருக்கிறானா? கொடுக்கப்பட்ட வேலைகளை செய்கிறானா? பொதுவாக ப்ரமோஷன் எத்த்னை வருடங்களில் கொடுக்கப் படுகிறது? இவன் அத்தனை வருடங்கள் உழைத்துவிட்டானா? என்று பார்த்து அவனுக்கு ப்ரமோஷன் கொடுப்பேன்.

    We should not give importance to how he got this job. We should just look at how he is doing the job today without any prejudice. Is he competent? Is he punctual? Does he have work ethics? I would promote him unless he is awfully bad. :-)

    ReplyDelete
  9. //எத்தனையோ ஆன்மீகக் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்பது இல்லையா, வாசிப்பது இல்லையா?ஆனால் அதைவிடப் பயன் தரும் //

    ரொம்ப மோசமான ஆளா இருக்கீங்களே! ‘அந்தக் கதைகளை’த் திரும்பத் திரும்ப கேட்டால் எம்புட்டு புண்ணியம் சேரும் என்று நினைக்க வேண்டாமா? பக்தியோடு இருங்க சார்! (எப்படி இருக்கு இந்த ‘ஆன்மீக அவதாரம்”!)

    ReplyDelete
  10. அடேங்கப்பா நேர்காணலில் இவ்வளவு இருக்கின்றதா...ராத்திரி எல்லாம் கூடவா? இதுவே நாங்கள் முதன் முதலில் வாசிக்கின்றோம். பயனுள்ள பல தகவல்கள் உங்கள் அனுபவம்.

    ஆம் சார் நாம் படிப்பதைப் புரிந்து கொண்டு படித்தால் நம்மால் எந்த நேர்காணலையும் எதிர்கொள்ள முடியும்.
    அருமையான அனுபவப் பகிர்வு சார். நிறைய தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  11. ஊமைக்கனவுகள் அவரது அனுபவத்தை எழுதியுள்ளார் அசாத்தியமான அனுபவம் அவர் அவன் என்று குற்ப்பிட்டிருப்பது அவரைப் பற்றித்தான். என்ன ஒரு திறமை. ம்ம்ம் அவர் எவ்வளவு ஆழ்ந்து அனுபவித்துப் படித்திருக்கின்றார் என்று தெரிகின்றது.

    ReplyDelete
  12. ஒரு சின்ன கோபம் எல்லாவற்றையும் மாற்றி விடும் என்பதை விட அந்த நேர்முக தேர்வில் வெற்றி அடைந்திருந்தால்....... உங்களின் வாழ்க்கை... யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

    ஏற்கனவே எனது இரு பதிவுகள் தங்களால் தான் தோன்றியவை என்பதை அறிவீர்களா... ?

    ReplyDelete
  13. நேர்காணல் என்பதானது பல படிநிலை மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. துணிவு, எச்சூழலையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், துறை சார்ந்த அறிவு, மனதில் உள்ளதைத் தெளிவாக முன்வைக்கும் முறை அனைத்திற்கும் மேலாக தவறாகப் பேசிவிட்டால் அதனைப் புரிந்து ஒத்துக்கொள்ளும் மன நிலை போன்றவை நேர்காணலை எதிர்கொள்பவரிடம் இருக்கவேண்டியது அவசியம்.

    ReplyDelete

  14. @ டாக்டர் கந்தசாமி
    என்னதான் ஆயத்தம்செய்து கொண்டாலும் விஷய ஞானம் இல்லாவிட்டாலும் நேர்காணல்களில் வெற்றி பெறுவது கஷ்டமே. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ ஸ்ரீராம்
    காம்பஸ் நேர்காணலுக்கு தேர்வு செய்ய என் மகன் போவதுண்டு.அவன் இந்த மாதிரி இரவு நேரங்களில் நேர்காணல்செய்வது பலருக்கும் தொந்தரவு தரும் விஷயம் என்று நான் கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  16. @ பகவான் ஜி
    நான் லூகாஸ்டிவிஎஸ் கம்பனியில் ஷிஃப்ட் இன் சார்ஜ் ஆகப் பணி ஆற்றியிருக்கிறேன் வாரம் ஐந்து நாட்கள் வேலை. ஆனால் ஒவ்வொரு வாரமும் ஷிஃப்ட் மாறும் பகல் ஷிஃப்ட் காலை ஏழே முக்கால் முதல் மாலை ஐந்தரை வரை. இரவு ஷிஃப்ட் இரவு ஒன்பது மணி முதல் காலை ஏழேகால்வரை. உடல் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் வருவதற்குள் ஷிஃப்ட் மாறும் இதனாலேயே நான் பணி மாற்றம் தேடினேன் வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  17. @ கில்லர்ஜி
    வாசகர்களுக்குப் பயன் படலாம் என்றுதானே இந்த மீள் பதிவு. வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  18. @ கரந்தை ஜெயக்குமார்
    உங்களுக்கு ஒரு ஓ போடவேண்டுமா ஐயா. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  19. @ ஊமைக்கனவுகள்
    இளங்கன்று பயம் அறியாது என்பார்கள். ஆசிரியப் பணிக்குப் படிக்கும் போதே வகுப்பு எடுக்கும் பயிற்சி பாடதிட்டத்தில் உண்டல்லவா. விஷய ஞானம் இருக்க வேண்டும் இருந்தால் மனோதிடம் கூடவே வரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete

  20. @ வருண்
    வருண், perceptions differ. It is very difficult to say what is right or wrong.Moreover that question was designed to find one's attitude towards union activities. Thanks for your reading and comments

    ReplyDelete

  21. @ தருமி
    யாருடைவாவது ஆன்மீகக் கொள்கைகளைக் குறை கூறி விட்டேனாஇந்தப் பதிவைப் படித்தால் உலக ஞானம் சிறிதாவது கிடைக்கும் என்பதைத்தானே எழுதி இருக்கிறேன் வருகைக்குக் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா( ஐயா என்று கூறிப் பழகி விட்டது)

    ReplyDelete

  22. @ துளசிதரன்
    ஆம் இரவெல்லாம் கூட நேர்காணல்கள் நடத்துகிறார்களாம் என் இளைய மகன் காம்பஸ் நேர்காண்லுக்கு போகும் அனுபவம் பகிர்ந்திருக்கிறான் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  23. @ துளசிதரன் தில்லையகத்து
    விஷய ஞானம் இல்லாவிட்டால் தைரியம் வராதூஉமைக்கனவுகள் அதன் பிறகு நேர்காணல் சென்றாரா தெரியவில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  24. @ திண்டுக்கல் தனபாலன்
    என் வீம்பான பதில் அவர்கள் என்னை ரிஜெக்ட் செய்ய வைத்தது. என் கோபத்துக்குக் காரணம் பதிவில் கூறி இருக்கிறேன் நான் கோபப்பட்டிருக்காவிட்டாலும் அந்தப் பணி எனக்குஇல்லை என்று தெரிந்து விட்டது. கோபப் படாமல் இருந்தாலும் பெரிய மாற்றம் ஏதும் இருந்திருக்காது. கோபத்தை வெளிப்படுத்தியது என் உணர்வுக்கு ஒரு வடிகால் அவ்வளவே ஏற்கனவே இரு பதிவுகள் என்னால் தோன்றியதா.? கோடி காட்டி இருக்கலாமே. என்னை வைத்துக் காமெடி ஏதும் பண்ணவில்லையே. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது உங்கள் குறள் ஞானமும் திரைப்பாடல் கவனமுமே முதலில் கவருகிறது. மற்றபடி எழுத்துக்கள் பெரும்பாலும் உபதேசங்களாகவே நான் காண்கிறேன் கருத்துரைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  25. @ சோழ நாட்டில் பௌத்தம்
    நான் பதிவில் கூறவந்ததை நச் என்று நான்கே வரிகளில் கூறி விட்டீர்கள். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  26. நேர்காணலின் புதிய அனுபவங்கள் வியக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  27. நானும் மூன்று நிறுவனங்களில் நேர் காணலுக்கு சென்று வெற்றி பெற்றிருக்கிறேன். நானும் பல நேர்காணலை நடத்தியிருக்கிறேன். தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள்,தெரிந்தவற்றை தெளிவாய் சொல்வது, தெரியாததை தெரியவில்லை என நேர்மையாய் ஒப்புக்கொள்வது, தற்போது செய்யும் பணி பற்றி கோர்வையாய் சொல்வது போன்றவை இருந்தாலே நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம்.

    ReplyDelete
  28. நேர்மையான நேர்காணல் என்றால் நம்முடைய sincere ஆன பதில்கள் நிச்சயம் மதிக்கப்படும். ஏற்கெனவே ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஒப்புக்கு சப்பாக நடத்தப்படும் நேர்காணல் என்றால் நீங்கள் என்ன பதில் சொன்னாலும் குதர்க்கமாகவே நிர்வாகத்தினர் மறுமொழி தருவார்கள். -இராய செல்லப்பா

    ReplyDelete

  29. @ கீதாசாம்பசிவம்
    ஒரு சிறுமாற்றம் மேடம் . நேர்காணலின் புதிய அனுபவங்கள் அல்ல பழைய அனுபவங்களே, வருகைக்கு நன்றி

    ReplyDelete

  30. @ வே.நடனசபாபதி
    உங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  31. @ செல்லப்பா யக்ஞசாமி
    பின்னூட்டங்கள் இப்போது போட முடிகிறதா.? பதவி உயர்வுக்காக நடத்தப் படும் நேர்காணல்களில் நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பு அதிகம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  32. மிக சுவாரஸ்யமாகசொல்லியிருக்கிறீர்கள். நேர்க்காணல் எதிர்கொள்வது மட்டுமல்ல,அதை நடத்துவது கூட சவாலான காரியமே.. சில கேள்விகளில் ஒருவனை எடைபோடுவது சிக்கலான காரியம்... பதிலை சொல்லும் விதம்,உடல்மொழி,தன்னம்பிக்கை இவற்றைத் துல்லியமாய் அளவிடுதல் எப்படி என்பதை பாடம் சொல்லும் பணியும் செய்திருக்கிறேன்.. நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  33. நான் இப்போது தான் தங்களுடைய பதிவினைப் படிக்கின்றேன்..

    பயனுள்ள பதிவு.. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது!..

    ReplyDelete

  34. @ மோகன் ஜி
    சொன்னதில் ஏதும் கற்பனை இல்லை மோகன்ஜி சிலவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது என்பது என் கணிப்பு.என் அனுபவங்களைச் சொல்லிப் போனேன் வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  35. @ துரை செல்வராஜு
    வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete