திங்கள், 31 ஜனவரி, 2022
நினைத்தது
சனி, 29 ஜனவரி, 2022
பேரனின் தங்கிலீஷ் கவிதை
Iruvaraiyum paarththaal kamal sridevi poola irukku.natippil alla.
வியாழன், 27 ஜனவரி, 2022
கல்வி ஒரு கண்ணோட்டம்
எது கல்வி. மறுபக்கம்.
---------------------------------.
நூறு சதவீதக் கல்விதான் இலக்கு. ஆனால் அது இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் அது செயல்படுவதற்கு ஆங்காங்கே விதைகள் தூவப் பட்டுள்ளன.,என்பதை மறுக்க முடியாது. நூற்றாண்டுகாலமாக இன்னாருக்குத்தான் படிப்பு, இன்னாருக்கு அது கூடாது, என்ற ஆதிக்க மனப்பான்மையில் பெரும்பாலோருக்கு எழுத்தறிவே செல்ல இயலாத நிலை இருந்தது. எல்லோரும் படித்து முன்னுக்கு வந்துவிட்டால், சிலருடைய ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வந்துவிடும் என்ற நிலையில் ஒடுக்கி வைக்கப்பட்ட மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருந்தது. ஆயிரங்காரணங்களை
கூறி அடிமைப் படுத்தப்பட்டிருந்தனர் .காரணங்களை நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் எல்லோரும் படிப்பறிவு பெற்றால் சுயமாக சிந்திக்க துவங்குவார்கள் என்ற பயம் ஆண்டைகளிடம் இருந்தது. அடிமைத்தளை இறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்பட,
அவர்களது அலுவலகப் பணிகளுக்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட மெகாலே கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்.
நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது சிந்திக்கத் தூண்டும் கல்வி மறுக்கப் பட்டதே. கல்வி கற்றவர்கள் சிந்திக்கத் துவங்கி நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டதும் வரலாறு.
நம்மை நாமே ஆளும்போது ,நாம் எல்லோரும் சமம் எனும்போது , வாய்ப்புகளும் சமமாக இருக்க வேண்டும். வாய்ப்பு வேண்டிப் போராட கல்வி அறிவு அவசியம். அதுவும் பரவலான நூறு சதவீதக் கல்வி அவசியம். நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக ஆவோம். படித்தவர்கள் எல்லோரும் அறிவுள்ளவர்கள் அல்ல. படிக்காதவர்கள் அனைவரும் அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.
தற்சமயம் நிலவி வரும் சூழ்நிலையில் கேக் ஊட்டப்பட்டு ஊக்கப்படுத்தப் படுபவர்கள் முகவரி தெரியாமல் போய்விடுகிறார்கள் என்ற அச்சமும் கல்வியறிவே காசு கொண்டு வாங்கப்பட வேண்டிய அவல நிலையில் நாம் உள்ளோம் என்ற கவலையும் இருப்பது சகஜம்
மேலே குறிப்பிடப் பட்டுள்ள பிரிவில் படாமல் எந்த ஒரு உந்து சக்தியும் இல்லாமல் படித்துயர்ந்து வந்தவர்களும் ஏராளம் உண்டு. நகரங்களில் வசிக்கும் நம் கண் முன்னே படுவது கான்வென்ட் படிப்பும் கூடவே வரும் அதிக செலவினங்களும்தான் .இல்லாதவன் தன தலைமுறைக்குப் பிறகு தன பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று பாடுபடுவதையும் பார்க்கிறோம். இயற்கைதானே. ஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப் படிப்பும்தான் மேலானது என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு அடிமையாகும்போதுதான் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்
எழுத்தறிவும் கல்வியறிவும் பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும் திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள். முனிசிபல், கார்ப்பரேஷன் பள்ளிகளில் படித்துப் பெயர் வாங்கும் சிறார் சிறுமிகளும் இருக்கிறார்கள்.,என்பது நமக்குத் தெரிந்ததே. நாம் எந்த ஒரு விஷயத்தையும் விவாதிக்கும்போது மிடில் கிளாஸ் மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப் பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின் கருத்தைக் கேட்கவோ எடுத்துச் சொல்லவோ நம்மில் பலரும் முன் வருவதில்லை இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும் படிப்பறிவும் இருநதால் அவர்களை அவர்களே மேம்படுத்திக் கொள்வார்கள்
நான் ஒரு முறை லலிதாம்பிகா கோவிலுக்குச் செல்ல திருமீயச்சூர் சென்றிருந்தேன் அங்கு பள்ளிக்கு சென்று வர சீருடை அணிந்த சிறுவர் சிறுமிகள் சைக்கிளில் செல்வதைக் கண்டபோது மனசுக்கு கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பசியாற மதிய உணவு, சீருடை, மற்றும் சென்றுவர இலவச சைக்கிள் இவை எல்லாம் கல்வியறிவு பரவலாகச் செய்யும் உந்து சக்திகள்தானே. மேலும் தற்போது
கல்வி போதிக்கும் முறையில் ஏற்ற தாழ்வு குறைந்து சம வாய்ப்பு கிடைக்கும் ஒரு திட்டம் .ஆனால் இதை நடைமுறைப்படுத்த ஏகப்பட்ட எதிர்ப்புகள். இந்த எதிர்ப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
சாதாரணமாகவே இந்தியக் குடிமகன் லேசுப்பட்டவன் அல்ல. அவனை இன்னும் சக்தி உள்ளவன் ஆக்க பரவலான கல்வியறிவு அடிப்படை அவசியம்.
கல்வியை வியாபாரமாக்கும் கும்பலுக்கு நாம்தான் துணை போகிறோம். அரசு பள்ளிகளை ஆதரித்து ,அதன் தரம் உயர நாம் ஏன் பாடுபடக்கூடாது. ?செல்வி. மாதங்கி மாலி சொல்லியதுபோல, There is a breed of race horses.and I add there is a rat race.
ஞாயிறு, 23 ஜனவரி, 2022
சந்திக்கும் சிலர்""
” காலையில் எங்கேபோய் வருகிறீர்கள் ?”-எதிரில் வந்த
நண்பரிடம் தெரியாமல் கேட்டு விட்டேன்.
“நான் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவருகிறேன்”--
இதை சொல்ல வரும் நண்பர்,”இன்று காலையில் எழும்போதே
ஒரு மாதிரியாக இருந்தது.நம்க்கு நேரம் சரியில்லையோ
என்று நினைத்துக்கொண்டே எழுந்தேன். கும்பகர்ணன் மாதிரி
தூங்கிக் கொண்டிருந்தால் போதுமா?எல்லா வேலையும் நானே
செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டில் சமைக்க ஏதாவது காய்
கறிகள் வாங்கி வரக் கூடாதாஎன்று மனைவி கத்தத் துவங்கி
விட்டாள் சரி என்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பினென்.
கொஞ்ச தூரம் போனதும் பர்ஸை எடுக்க மறந்தது தெரிந்தது.
மறுபடியும் மனைவியின் வாயில் விழ வேண்டுமெ என்று
பயந்துகொண்டே,திரும்பி வந்து பர்ஸை எடுத்துக்கொண்டு
மார்க்கெட்டுக்குப் போனேனா....எந்தக் காய்கறி நன்றாக
இருக்கிறது, விலை மலிவு என்று தெரிந்துகொள்ளபல கடைகள்
ஏறி இறங்கினேன் வெண்டைக்காய் பிஞ்சாய் இருக்கா என்று
தெரிய உடைத்துத்தானே பார்க்க வேண்டும்.?அந்தக்கடையில்
உடைத்துப் பார்க்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.
அப்போது மூன்றாம் வீட்டு முத்துச்சாமி எதிரே வந்தார். அவரது
மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதாம். சென்னையில்.
வரும் மாதம் முதல் வாரத்திலாம். அவசியம் வர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். நாம் இருக்கும் இருப்புக்கு சென்னை
போய் கலியாணம் எல்லாம் பார்க்க முடியுமா.?அப்படியே
போனாலும் வெறுங் கையோடு போக முடியுமா.?என்ன செய்ய.?
முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தப்பித்தேன்.
கொஞ்சம் வெண்டைக்காய் வாங்கினேன். முருங்கைக்காய்
எனக்குப் பிடிக்கும்.ஆனால் ஒரு காய் நாலு ரூபாய் சொல்கிறான்
கட்டுப்படியாகுமா.?ஏதோ கொஞ்சம் கீரை தக்காளிவாங்கிக்
கொண்டு இப்போதுதான் வருகிறேன். நடுவில் உம்மைப் பார்த்து
விட்டேன். நேரமாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் ஏன் லேட்
என்று மனைவியிடம் அர்ச்சனை வாங்க வேண்டும் ...”...ஏதோ
தாமதத்துக்கு நாந்தான் காரணம் போல பெசிக்கொண்டேபோனார்.
====================
( 2 )
” பதிவெல்லாம் எழுதுகிறாயாமே”
“வயதாகிவிட்டதல்லவா.நேரம் போக வேண்டுமே. ஏதாவது
செய்துகொண்டு இருந்தால்பொழுது போகும்தானே.”
“ கம்ப்யூட்டர் எல்லாம் உபயொகிக்கத் தெரியுமா.?”
“ எங்கே தெரிகிறது. ...பேரன் புண்ணியத்தில் ஒரு ப்ளாக்
துவங்கி இருக்கிறேன்.அதில் மனதில் தோன்றுவதை எழுதுவேன்”
“ நீ எழுதுவதைபடிக்க வாசகர்கள் இருக்கிறார்களா என்ன.?”
“ஏதோ பலர் படிப்பார்கள்;சிலர் கருத்தும் எழுதுவார்கள்.”
“எந்த மொழியில் எழுதுகிறாய்.?”
“ஏன், தமிழில்தான். “
“அதுதானே பார்த்தேன். ஆங்கிலத்தில் எல்லாம் எழுதத் தனித்
திறமை வேண்டுமே. இல்லாவிட்டாலும் பேரன் சொல்லிக்
கொடுக்கலாமே.உனக்கென்னப்பா...பேரன் சொல்லிக்கொடுத்து
கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய். பொழுது போக்குக்காக எழுது
கிறேன் என்கிறாய்.அதைப் படிக்கவும் ஜனங்கள் இருக்கிறார்கள்
என்கிறாய். ஹூம்.!கொடுத்துவெச்சவந்தான் “
-------------------------------------
( 3 )
” நேற்று உன்னைக் கிளப்பில் பார்த்தேன்.”
” ஆமாம், அவ்வப்போது கிளப்புக்குப் போவ்துண்டு.”
“ உன் மனைவியுடன் வந்திருந்தாயே.”
“ஆம் எங்கு போவதானாலும் மனைவியுடந்தான் போவேன்.”
“உன் மனைவியுடன் நீ போவ்தைப்பார்த்து என் மனைவி
என்னிடம் சண்டை பிடிக்கிறாள்.”
“ என் மனைவியுடன் நான் போவதால் உங்கள் மனைவி ஏன்
சண்டை போடவேண்டும்?”
“ என்னையும் உன்னை மாதிரி, எங்கு போவதானாலும் கூடவே
இழுத்துக் கொண்டு போக்ச் சொல்கிறாள்.”
“ மன்னிக்க வேண்டும். நான் என் மனைவியை அழைத்துக்
கொண்டு போகிறேன். இழுத்துக் கொண்டு போவதில்லை.”
“உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்./’
‘ படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.”
“ அவர்கள் படித்து முன்னுக்கு வர வேண்டாமா.?நீ அவர்களுக்கு
ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா.?இப்படி
மனைவியுடன் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி.?”
“ என் பிள்ளைகளை நான் அதிகம் கட்டுப்படுத்துவதில்லை.
அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும் “
“ என்னால் அப்படி விட முடியாது. எனக்கிருப்பது பெண்
குழந்தைகள். மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறேன்.”
இப்படி அறிவுரை கூறியவரின் பெண்களில் ஒருத்தி யாரையோ
காதலித்து அவனுடன் ஓடி விட்டாள்.
==============================
( 4 )
“அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
சாலையே விலசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
விட்டேன்.
“ நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.
நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று....... ”
அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
மகன் இருக்கிறான்.”
நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
என்கிறீர்களே.”
அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
அம்மாவுடன் இருக்கிறான்.”
நான்:- “புரியவில்லை.”
அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
இருந்துகொள் என்று கூறிவிட்டேன்”
நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
எடுத்து விட்டீர்களோ.?”
அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
கொடுக்க முடியாது. அப்படி இப்படி என்று பதினெட்டு
வருடங்கள் ஓடிவிட்டது.
நான்: ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?”
அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
வைத்திருக்கிறேன். “
நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?”
அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பெசுகிறீர்கள் ?”
நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை.
பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோது “எல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
========================
( 5 )
“நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.”
“யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?”
“ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன் “
============================
வெள்ளி, 21 ஜனவரி, 2022
கல்யாண நினைவுகள்(மீள்பதிவு)
கல்யாண வைபவங்கள் -நினைவலைகள்.
பல நண்பர்களது
திருமணத்துக்குச் சென்று வந்திருக்கிறேன்..அவற்றில் சில மறக்க முடியாத
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் திருச்சியில் இருந்த காலம். நண்பர்
ஒருவருக்கு வடுகூரில் ( வழுதூர் ?) திருமணம். நானும் இன்னொரு நண்பரும் முதல் நாள்
மாலையே திருமணத்துக்குப் போக திட்டமிட்டிருந்தோம். அலுவலகப் பணி முடிந்து மாலை
ஐந்து மணி அளவில் அவருடைய ஷெர்பா மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம். இரண்டு மணி
நேரப் பயணம் இருக்கும் என்று கணக்கிட்டோம். போகும் வழியில் மழை பிடித்துக்
கொண்டது. மழை நிற்கக் காத்திருக்கும்போதே இருட்ட ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு
வழியும் சரியாகத் தெரியாது. சமயம் பார்த்து வண்டியின் ஹெட் லைட் எரியாமல் மக்கர்
செய்தது. நான் பில்லியனில் அமர்ந்து கையில் ஒரு டார்ச் விளக்கைப் பிடித்துக்
கொண்டு முன்னால் அடிக்க நண்பன் வண்டி ஓட்டிக் கொண்டு போனான். எதிரில் வரும்
லாரிகளின் வெளிச்சம் கண்கூச வைத்து மெலே போக முடியாமல் அவன் வண்டியை நிறுத்தினான்.
நல்ல வேளை.! மேலே சென்றிருந்தால் அருகிலேயே ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள்
போயிருப்போம்.கையில் டார்ச்சுடன் நான் ஒளிகாட்ட தெய்வாதீனமாக விபத்து நேராமல்
தப்பித்த அந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது, அன்று ஒரு வழியாக திருமண வீட்டை அடைந்த
போது இரவு பத்து மணியாகிவிட்டது. மழையில் சகதியான சாலையில் இரண்டு
கிலோமீட்டருக்கும் அதிகமாக தள்ளிக் கொண்டே சென்றோம்.
திருவனந்தபுரத்தில் ஒரு நண்பருக்குக் கலியாணம். ஒரு பேரூந்து ஏற்பாடு செய்து நாங்கள் சென்றோம். நண்பன் வீடு நாகர்கோயிலில் இருந்ததுஎன் இரண்டாம் மகன் பிறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. போகும் வழியில் குற்றாலத்தில் குளித்துவிட்டுப் போனோம். முதன்முதல் குற்றாலக் குளியல் அனுபவம் கைக் குழந்தை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு குளித்தது மறக்க முடியாத அனுபவம். திருமணச் சடங்காக மாப்பிள்ளைக்கு உறவினர் தலைப்பாகை கட்டுகின்றனர். அதுவே சுமார் முப்பது நாற்பது பேர்கள் கட்டி முடிப்பதற்குள் பசியில் பாதி உயிர் போய்விட்டது. ஒரு வழியாய் இந்த சடங்கெல்லாம் முடிந்து பந்தியில் உட்காரப் போகும் நேரம் நாங்கள் தடுத்து நிறுத்தப் பட்டோம். முதலில் பெண்கள் என்றனர்.பெண்ணுரிமை , முன்னுரிமை என்ன என்று அப்போது தெரிந்து கொண்டோம். நண்பனின் உறவினர்கள் “ பெண்ணு கொள்ளாமோ “ என்று கேட்டனர். எங்கள் குழுவில் இருந்த பெண்கள் “ சேச்சே.. நாங்கள் இங்கிருந்தெல்லாம் பெண்கள் கொள்வதில்லை “ என்று பதில் கூறினர். அவர்கள் மலையாள வழக்கில் பெண் அழகாய் இருக்கிறாளா எனக் கேட்க அது புரியாமல் பெண் எடுப்பதில்லை என்று பதில் கூறி இருக்கின்றனர்.நாங்கள் மணம் முடிந்த பிறகு ‘திருச்சி’ போவோம் என்றதை நாங்கள் கோபித்துக் கொண்டு திரும்பிப் போவோம் என்று புரிந்து கொண்டு பரிதவித்தது மறக்க முடியாத அனுபவம்
கும்பகோணத்தில் ஒரு நண்பன் திருமணத்தில் ஒரு சடங்காக ஆர்த்தி எடுக்க வேண்டும் என்று கூறி சுமார் அரை மணிநேரம் அவனை வீதியில் காக்க வைத்தசம்பவம் இன்றும் அவனைப் பார்க்கும் போது கேலி செய்ய உதவும்.
கோவையில் ஒரு நண்பன் திருமணத்தில் அவனை கோயில் கோயிலாக
அழைத்துச் சென்று வந்ததும் இப்படியெல்லாம் வழக்கங்களா என்று நினைக்க வைத்தது.
மனைவியின் உறவினர் மகளுக்கு மும்பையில் திருமணம். என் மனைவி
அதற்கு முன் மும்பை பார்த்ததில்லை. என் நெருங்கிய உறவினர் மும்பையில் இருந்தார்.
அவருக்குக் கடிதம் எழுதி நாங்கள் அவர் வீட்டுக்கு வந்து இருக்கலாமா என்று
கேட்டிருந்தேன். அவரும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எங்களை எதிர்பார்பதாகவும்
பதிலளித்தார். பெண் வீடு உல்லாஸ்நகர். அங்கு இறங்கி மாதுங்காவில் திருமணம் முடிந்த
பிறகு என் உறவினர் வீட்டுக்குப் போவதாக ஏற்பாடு. திருமண வைபவங்கள் முடிந்து உணவு
அருந்தப் போகும் சமயம் என் உறவினர் அங்கு வந்தார். எங்களை அழைத்துக் கொண்டு
போகத்தான் வந்திருக்கிறார் என்று மகிழ்ந்து அவரையும் விருந்துக்குக் கூட்டிச்
சென்றேன் அவர் நாங்கள் அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தவே வந்திருந்தார். அவருக்கு
வேண்டப் பட்டவர்கள் அவர் வீட்டுக்கு வந்திருப்பதால் நாங்கள் அங்கு வருவது உசிதமல்ல
என்று சொல்லவே வந்திருந்தார். முன் பின் தெரியாத இடத்தில் எதிர்பாராத விதத்தில்
சங்கடப் படுத்தப் பட்டோம். நல்ல வேளை என் நண்பன் ஒருவன் விலாசம் என்னிடம் இருக்க
சமாளித்து விட்டோம். மூன்று நாட்கள் மும்பையில் தங்கி எல்லா இடங்களையும் பார்த்து
என் உற்வின்ர் விட்டுக்கும்சென்றோ ம்
.
உறவினர் ஒருவருடைய மகள் ஒரு ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டார். எல்லாருடைய சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆர்ய சமாஜ் குழுவினரால் நடத்தி வைக்கப் பட்டது. இந்திய முறைப்படி மந்திரங்கள் ஓதி மங்கல நாண் கட்டப்பட்டது. ஒவ்வொரு மந்திரம் உச்சரிக்கப் பட்டதும் அதன் பொருள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு திருமணம் நடத்தப் பட்டது. அது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது
குருவாயூரில் நண்பர் ஒருவரின் மகனது திருமணத்துக்குச் சென்றிருந்தேன். குருவாயூரில் கோயில் சன்னதி முன்புதான் தாலி கட்டுவார்கள். திருமணத்துக்கு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று அறிய ஏதாவது இடம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதா என்று பெண்வீட்டாரிடம் கேட்டேன். இல்லையென்றால் யார் வந்தார்கள் யார் வரவில்லை என்பது தெரியாமல் போய் விடுமென்ற எண்ணத்தில் கேட்டது. அவர்கள் அதை திருமணத்துக்கு வந்தவர்கள் உண்ணாமல் போய் விடுவார்களோ என்ற எண்ணத்தில் கேட்கிறோம் என்று நினைத்து, “கவலைப் பட வேண்டாம். திருமணத்துக்கு வந்தவர்கள் எப்படியாவது தெரிந்து கொண்டு சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து விடுவ்வார்கள்” என்று பதிலளித்தனரே பார்க்கலாம்.!
வேறு ஒரு முறை நண்பர் ஒருவரின் மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, என்னை மாப்பிள்ளையின் தந்தை என்று எண்ணிக்கொண்டு விசேஷமாக கவனித்தது மாப்பிள்ளையின் தந்தையார் என் மேல் கொஞ்சம் பொறாமைப் பட வைத்து என்னை சற்று ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார்.!
ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு அனுபவம்.மன்னார்குடியில் நண்பன் ஒருவன் திருமணம். திருமணம் முடிந்து என்னை அவன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான். பெண் கிராமத்தில் இருந்து வந்தவள். என்று தெரியும். அறிமுகம் ஆனவுடன் கை கூப்பி வணக்கம் தெரிவித்தேன். ஆனால் அந்தப் பெண் கை குலுக்கக் கை நீட்ட , அது கண்டு நானும் நீட்ட, அவள் கை கூப்ப ஒரே ஒர த மாஷாகி விட்டது.
குடும்பத்தில் நெருங்கிய உறவினர் திருமணம் குருவாயூரில் நடக்க இருக்க முதல் நாள் மாலையே அங்கு போய் சத்திரத்தில் தங்கினோம். திருமணம் காலை 7 மணிக்கு என்று கூறியிருந்தார்கள். அதற்கு முன்பாக விடியற்காலை 3 மணிக்கு எழுந்து கண்ணனின் நிர்மால்ய தரிசனம் காணச் சென்றோம். தொழுதுவிட்டு அறைக்கு வந்து இன்னும் நேரமிருக்கிறதே என்று சற்று கண் அயரலாம் என்று படுத்துவிட்டோம். காலை ஏழு மணி அளவில் எங்கள் அறை தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்தால் நாங்கள் இன்னும் வராதது கண்டு குழம்பி எங்களைத் தேடி வந்திருந்தனர். தாலி கட்டும் நேரத்துக்கு எப்படியோ சேர்ந்து விட்டோம்
------------------------------------------------------------------------------------------------------------- .