ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சந்திக்கும் சிலர்""

 


     ” காலையில் எங்கேபோய் வருகிறீர்கள் ?”-எதிரில் வந்த
நண்பரிடம் தெரியாமல் கேட்டு விட்டேன்.

      “நான் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவருகிறேன்”--
இதை சொல்ல வரும் நண்பர்,”இன்று காலையில் எழும்போதே
ஒரு மாதிரியாக இருந்தது.நம்க்கு நேரம் சரியில்லையோ
என்று நினைத்துக்கொண்டே எழுந்தேன். கும்பகர்ணன் மாதிரி
தூங்கிக் கொண்டிருந்தால் போதுமா?எல்லா வேலையும் நானே
செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டில் சமைக்க ஏதாவது காய்
கறிகள் வாங்கி வரக் கூடாதாஎன்று மனைவி கத்தத் துவங்கி
விட்டாள் சரி என்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பினென்.
கொஞ்ச தூரம் போனதும் பர்ஸை எடுக்க மறந்தது தெரிந்தது.
மறுபடியும் மனைவியின் வாயில் விழ வேண்டுமெ என்று
பயந்துகொண்டே,திரும்பி வந்து பர்ஸை எடுத்துக்கொண்டு
மார்க்கெட்டுக்குப் போனேனா....எந்தக் காய்கறி நன்றாக
இருக்கிறது, விலை மலிவு என்று தெரிந்துகொள்ளபல கடைகள்
ஏறி இறங்கினேன் வெண்டைக்காய் பிஞ்சாய் இருக்கா என்று
தெரிய உடைத்துத்தானே பார்க்க வேண்டும்.?அந்தக்கடையில்
உடைத்துப் பார்க்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.
அப்போது மூன்றாம் வீட்டு முத்துச்சாமி எதிரே வந்தார். அவரது
மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதாம். சென்னையில்.
வரும் மாதம் முதல் வாரத்திலாம். அவசியம் வர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். நாம் இருக்கும் இருப்புக்கு சென்னை
போய் கலியாணம் எல்லாம் பார்க்க முடியுமா.?அப்படியே
போனாலும் வெறுங் கையோடு போக முடியுமா.?என்ன செய்ய.?
முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தப்பித்தேன்.
கொஞ்சம் வெண்டைக்காய் வாங்கினேன். முருங்கைக்காய்
எனக்குப் பிடிக்கும்.ஆனால் ஒரு காய் நாலு ரூபாய் சொல்கிறான்
கட்டுப்படியாகுமா.?ஏதோ கொஞ்சம் கீரை தக்காளிவாங்கிக்
கொண்டு இப்போதுதான் வருகிறேன். நடுவில் உம்மைப் பார்த்து
விட்டேன். நேரமாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் ஏன் லேட்
என்று மனைவியிடம் அர்ச்சனை வாங்க வேண்டும் ...”...ஏதோ
தாமதத்துக்கு நாந்தான் காரணம் போல பெசிக்கொண்டேபோனார்.

                                                        ====================
                                                      ( 2 )

 ” பதிவெல்லாம் எழுதுகிறாயாமே”

 “வயதாகிவிட்டதல்லவா.நேரம் போக வேண்டுமே. ஏதாவது
செய்துகொண்டு இருந்தால்பொழுது போகும்தானே.”

 “ கம்ப்யூட்டர் எல்லாம் உபயொகிக்கத் தெரியுமா.?”

 “ எங்கே தெரிகிறது. ...பேரன் புண்ணியத்தில் ஒரு ப்ளாக்
துவங்கி இருக்கிறேன்.அதில் மனதில் தோன்றுவதை எழுதுவேன்”

 “ நீ எழுதுவதைபடிக்க வாசகர்கள் இருக்கிறார்களா என்ன.?”

 “ஏதோ பலர் படிப்பார்கள்;சிலர் கருத்தும் எழுதுவார்கள்.”

 “எந்த மொழியில் எழுதுகிறாய்.?”

  “ஏன், தமிழில்தான். “

 “அதுதானே பார்த்தேன். ஆங்கிலத்தில் எல்லாம் எழுதத் தனித்
திறமை வேண்டுமே. இல்லாவிட்டாலும் பேரன் சொல்லிக்
கொடுக்கலாமே.உனக்கென்னப்பா...பேரன் சொல்லிக்கொடுத்து
கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய். பொழுது போக்குக்காக எழுது
கிறேன் என்கிறாய்.அதைப் படிக்கவும் ஜனங்கள் இருக்கிறார்கள்
என்கிறாய். ஹூம்.!கொடுத்துவெச்சவந்தான் “

                                -------------------------------------
                                                      ( 3 )

 ” நேற்று உன்னைக் கிளப்பில் பார்த்தேன்.”

 ” ஆமாம், அவ்வப்போது கிளப்புக்குப் போவ்துண்டு.”

 “ உன் மனைவியுடன் வந்திருந்தாயே.”

 “ஆம் எங்கு போவதானாலும் மனைவியுடந்தான் போவேன்.”

 “உன் மனைவியுடன் நீ போவ்தைப்பார்த்து என் மனைவி
   என்னிடம் சண்டை பிடிக்கிறாள்.”

 “ என் மனைவியுடன் நான் போவதால் உங்கள் மனைவி ஏன்
    சண்டை போடவேண்டும்?”

 “ என்னையும் உன்னை மாதிரி, எங்கு போவதானாலும் கூடவே
    இழுத்துக் கொண்டு போக்ச் சொல்கிறாள்.”

 “ மன்னிக்க வேண்டும். நான் என் மனைவியை அழைத்துக்
   கொண்டு போகிறேன். இழுத்துக் கொண்டு போவதில்லை.”

 “உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்./’

 ‘ படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.”

 “ அவர்கள் படித்து முன்னுக்கு வர வேண்டாமா.?நீ அவர்களுக்கு
    ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா.?இப்படி
    மனைவியுடன் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி.?”

 “ என் பிள்ளைகளை நான் அதிகம் கட்டுப்படுத்துவதில்லை.
    அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும் “

 “ என்னால் அப்படி விட முடியாது. எனக்கிருப்பது பெண்
   குழந்தைகள். மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறேன்.”

இப்படி அறிவுரை கூறியவரின் பெண்களில் ஒருத்தி யாரையோ
காதலித்து அவனுடன் ஓடி விட்டாள்.

                                        ==============================
                                                   ( 4 )

 “அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
   சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
   அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
   ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
   இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
   என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
   அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
    நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
    பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
   கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
    சாலையே விலசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
    பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
    பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
    இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
    இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
    சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
     பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
     நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
     சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
     என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
     கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
     விட்டேன்.

 “ நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.

நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று....... ”

அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
                மகன் இருக்கிறான்.”

நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
                என்கிறீர்களே.”

அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
                அம்மாவுடன் இருக்கிறான்.”
நான்:- “புரியவில்லை.”

அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
                வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
                செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
                நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
                வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
                கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
                இருந்துகொள் என்று கூறிவிட்டேன்”

நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
               எடுத்து விட்டீர்களோ.?”

அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
                நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
                கொடுக்க முடியாது.  அப்படி இப்படி என்று பதினெட்டு
                வருடங்கள் ஓடிவிட்டது.

நான்:  ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
              பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
              பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?”

அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
               ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
               பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
               வைத்திருக்கிறேன். “

நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
               மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
               இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
               உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?”

அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பெசுகிறீர்கள் ?”

நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
               நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
               பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. 
பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
 கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோது “எல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
                                         ========================
                                                      ( 5 )

“நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.”

“யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?”

“ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன் “
                                          ============================          
                 
                 

15 கருத்துகள்:

  1. சில நிகழ்வுகள் "சம்பவம்" ஆகி உள்ளது...?

    நினைப்பது ஒன்று... நடப்பது ஒன்று...

    பதிலளிநீக்கு
  2. கலவையான சந்திப்புகளின் விவரங்கள்.  ஒன்றிரண்டு ஏற்கெனவே படித்தது போலவும் தோன்றியது.  பேச ஆள் இலலாதவர்கள் யாராவது பேச கிடைக்க மாட்டார்களா என்று தடி வந்து பேசி விட்டுச் செல்கிறார் போலும்.  இதற்கு கவிதை மாதிரி ஒன்று முன்னர் எழுதி வைத்திருந்தேன். 

    தேக்கி வைத்திருந்த 
    மௌன அணைக்கட்டு உடைந்தது.
    பேச்சு வெள்ளம் 
    முதியோர் இல்லம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதியோர் இல்லத்தில் பெசியெகொன்று விடுவரோ

      நீக்கு
  3. கொஞ்சம் வயதானபிறகு ஒவ்வொருவரும் இழப்பது, ஏங்குவது பேச்சுத் துணைக்காகத்தான்.

    நல்ல நண்பன், நம் குறைகளை, தவறுகளை அவ்வப்போது சொல்லிவிடுவான். நமக்கும் யோசித்து திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

    சம்பவங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. சந்தித்த சிலர் சிந்திக்க வைக்கிறார்கள். எத்தனை விதமான மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  5. எத்தனை வகை மனிதர்கள்.
    ஆனாலும் இங்கு யாரும் நிம்மதியாக வாழவில்லை.

    பதிலளிநீக்கு
  6. பல நிகழ்வுகள். மறக்க முடியா அனுபவங்கள். சிறப்பு ஐயா.

    பதிலளிநீக்கு
  7. வகை வகையான மனிதர்கள். ஏற்கனவே படித்த நினைவு இருக்கிறது. வயதானவர்கள் ஏங்குவது பேச்சுத் துணைதான். அதற்கு அந்தப் பெரியவர் வந்திருக்கிறார் போலும். மார்க்கெட் சென்று வந்தவரும் உங்களைக் கண்டதும் மனதில் உள்ளதைக் கொட்டியிருக்கிறார்! நீங்கள் ஒரு டயரி !!!

    மறக்க முடியாத அனுபவங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இம்மாதிரி பல்ரை பார்த்ததால் இருக்கலாம்

    பதிலளிநீக்கு