Saturday, February 12, 2022

நினைவுகள் பறவை

 

நினைவுகள் பறவை ஒரு மீள்பதிவு2011ல் எழுதியது

 

            நான் பதிவெழுத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் வாசகர்களை ஈர்க்கும் என்று தெரிவதில்லை. இருந்தாலும் பரவாயில்லை. நான் ரசித்து, விரும்பி எழுதியவை அவ்வள்வு ரசிக்கப் படாமலும் , ஏனோதானோ என்று எழுதியவை விருப்பத்துடன் படிக்கப் படுவதையும் பார்க்கும்போது, எழுதுவது மட்டுமே நான் செய்ய வேண்டியது, மற்றது வாசகர்கள் ரசனை என்று விட்டுவிட்டு. இதை எழுதுகிறேன்.


        ஏழெட்டு நாட்கள் நான் பெங்களூரில் இல்லாமல் என் தம்பியின் தொடர் அழைப்பின் பேரில் கோயமுத்தூர் சென்றிருந்தேன். என் தம்பியிடம் என் மனைவி ஒரே ஒரு கண்டிஷன் இட்டாள். அவளைக் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் அது. குருவாயூருக்கு எத்தனை முறை சென்றாலும் அவளுக்குத் திருப்தி இருக்காது. மறுபடியும் மறுபடியும் குழந்தை கண்ணனைக் காண விரும்புவாள்..இந்தமுறை கேரள தமிழ் நாடுகளிடையே முல்லைப் பெரியாரால் பதட்டம் நிலவ , அங்கு செல்லவே தயக்கம் இருந்தது. மதுரைக்குப் போகலாமா என்று பரிசீலிக்கப் பட்டது. எனக்கு எதுவானாலும் சம்மதமாகவே இருந்தது. அண்ணியின் விருப்பம் நிறைவேற்ற குருவாயூரே செல்ல முடிவாயிற்று. பயப்பட்டபடி ஏதும் நிகழவில்லை. நிம்மதியான ,அருமையான தரிசனம் கடந்த சில காலங்களில் கிடைக்காத அற்புத தரிசனம், அரை மணிநேரத்தில் மூன்று முறை கண்ணனின் திருவருள் காணப் பெற்றோம். கண்ணனின் அழகு சிலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு திரும்பினோம். என்ன சொல்வது. நாங்கள் வாளையாரைத் தாண்டியதும் எல்லையை மூடிவிட்டார்கள். துன்பங்கள் துடைப்பவன் கடாட்சம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.


            மறுநாள்  என் விருப்பம் பூர்த்திசெய்ய கூனூர் வெல்லிங்டன் பகுதிகளுக்குச் சென்றொம். நான் நான்கு வருடங்கள் வசித்த இடங்களையும் படித்த பள்ளியையும் முதன் முதல் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் இருந்த இடங்களையும் என் மனைவிக்கும் தம்பி, தம்பி மனைவிக்கும் காண்பித்தேன். வட்டக் குடியிருப்பில் நாங்கள் இருந்த இடம் தற்போது ஒரு குதிரை லாயாமாக உருவெடுத்திருக்கிறது. அங்கு இன்னும் நினைவுகளை தாங்கி நிறுத்தும் ஒரே சின்னமாக அந்த சாம்பிராணி மரமும், முனீஸ்வரன் இருந்த திட்டும் மட்டுமே இருக்கிறது. அடுத்த முறை செல்லும்பொது , செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது ,அவையும் இருக்குமா என்பது சந்தேகமே. இதை எழுதும்போதே மனம் வாடுகிறது.


              நான் படித்த பள்ளி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி  அப்பர் குனூரில் சிம்ஸ் பார்க் அருகே இன்னும் புதுப் பொலிவோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து ,1954-ம் வருடம் அங்கிருந்துதான் பள்ளியிறுதிப் படிப்பு முடித்தேன் என்று கூறியபோது, அவர் அப்போது தான் பிறந்திருக்கவே இல்லை என்றார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அப்பள்ளிக்குச் சென்றது மகிழ்ச்சி தருகிறது என்றார்.


             நாங்கள் மலையிலிருந்து கீழிறங்கும்போது கார் போகும் பாதையில் நான்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. நான் என் பள்ளி நாட்களின் நினைவுகளில் மூழ்கி இருந்தேன். மற்றவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்ததால் சாலையில் யானைகளைக் கவனிக்க வில்லை. சுமார் முப்பது அடி தூரத்தில் வந்ததும் தான் யானைகள் இருப்பது கவனிக்கப் பட்டது. பயத்தில் உறைந்து விட்டோம். காரைத் திருப்பி செலுத்த முடியாது. நேராகவும் போக முடியாது மூன்று பெரிய யானைகளும் ஒரு குட்டியும் இருந்தன. யானைகள் எங்களை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.ஐந்து நிமிடங்கள் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம். அவை சாலையை விட்டுக் கீழிறஙகத் துவங்கியதும் விர்ர்ரேன்று காரை செலுத்தி எங்களுக்கு நிம்மதி கொடுத்தார் எங்கள் ட்ரைவர். ஒரு திகிலான அனுபவம்தான் அது


       .       அதற்கு மறுநாள் ஒரு வித்தியாசமான கோவில் தரிசனம் .கோவையில் காரமடை அருகே கேஜி க்ரூப்ஸ் நிர்வகிக்கும் தென் திருப்பதி என்று அழைக்கப் படும் பாலாஜி ( பெருமாள், வெங்கடேஸ்வரா ) கோவில். ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைதியான பசுமை சூழ்ந்துள்ள இடத்தில் அழகான ஆலயம் இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால், சாதாரணமாக ஆலயங்களில் பக்தர்கள் செய்யும் அர்ச்சனை ,அபிஷேக ஆராதனைகள் ஏதுமில்லை. கோயில் நிர்வாகமே அந்தந்த நேரத்தில் பூஜைகள் செய்கின்றனர். எல்லோருக்கும் சமமான தரிசனம். உண்டியல் தட்டு வகையறாக்கள் ஏதுமில்லை. வாரத்தில் மூன்றுநாட்கள் அன்னதானம். மற்ற நாட்களில் தொன்னையில் பிரசாதம். நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவுக்கு நேர்மாறான நிகழ்வுகள். மனம் லேசானதுபோல் உணர்ந்தேன்


               அங்கிருந்து வரும்போது பதிவர் ஐயா டாக்டர் கந்தசாமி அவர்கள் இல்லத்துக்குச் சென்று அவரைக் கண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டேன். என்னைவிட மூத்தவர். என்னைவிட இளமையுடன் இருக்கிறார். அன்பான உபசரிப்பு. ஆதரவான பேச்சு. என் உடல் நலம் குறித்த அக்கறையான விசாரிப்பு. நினைவுப் பரிசாக ஒரு பேனாவும் ஒரு குறிப்பேடும் அன்புடன் கொடுத்தார். அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப் படம் சரியாக வந்திருந்தால் பதிவில் இணைத்திருப்பேன். ஒரு நல்ல நண்பரை சந்தித்த மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.


            

 

 

9 comments:

 1. மீள் பதிவு என்றாலும் மகிழ்ச்சியான அனுபவங்களை சொல்கிறது.  சில வரிகள் வியக்க வைத்தன.  படித்த பள்ளியைப் பார்ப்பது நெகிழ்ச்சி, யானைகள் அனுபவம் மிரட்சி!  கந்தசாமி ஐயா இப்போது நம்மிடையே இல்லை என்பது வருத்தமான செய்தி.

  ReplyDelete
  Replies
  1. என் வாழ்க்கையே நினைவுகளால்பின்னப்படுவது தெரிகிறதுஇன்று இருப்பவர் நாளை இல்லை

   Delete
 2. இனிய நினைவுகள் அருமை ஐயா...

  ReplyDelete
  Replies
  1. நினைவே வாழ்க்கை என்றாகி விட்டது

   Delete
 3. நல்ல நினைவுகள். ரசித்தேன். எப்போதும் பழைய இடங்களுக்கு மீண்டும் சென்றால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்

  ReplyDelete
 4. இடங்கள் ப்சழையதா

  ReplyDelete
 5. பழைய இடங்களைக் காண்பது சந்தோஷமாக இருக்கும் ஆனால் அதில் ஏற்பட்ட சில மாற்றங்கள் சில சமயம் கொஞ்சம் ஏமாற்றம் தரும் ஆனால் மாற்றம் ஒன்றுதானே மாறாதது.

  யானைகள் சம்பவம் கொஞ்சம் அபாயகரமான நிகழ்வு எப்படியோ நல்லவிதமாக அதைக் கடந்து வந்திருக்கீறீகள்.

  தென் திருப்பதி நானும் சென்றிருக்கிறேன் கோயில் எனக்கும் பிடித்ததற்கான காரணங்கள் நீங்கள் சொல்லியிருக்கும் அதே காரணங்கள்தான்.

  நல்ல நினைவுகள் சார்.

  கீதா

  ReplyDelete
 6. பழைய இனிய நினைவுகள் நம்மை உயிர்ப்பித்து வைத்துக் கொண்டிருக்க உதவும்தான். பதிவை ரசித்தேன் சார்

  துளசிதரன்

  ReplyDelete
 7. இனஇனிய நிலவலைகள் பகிர்ந்து கொண்டதில் நாங்களும் படித்து மகிழ்ந்தோம்.

  ReplyDelete