திங்கள், 28 பிப்ரவரி, 2022

சேவை மனோபாவமும் சில நினைவுகளும்

 

                                       சேவை மனோபாவம்
                                         -----------------------------
  வேலை தேடும் படலம் என்றொரு பதிவு எழுதி இருந்தேன்.
அதில் நான் HAL-ல் பயிற்சிக்குத் தேர்வானது வரை எழுதினேன்.
பெங்களூரில் வேலைக்குச் சேர நான் வந்தபோது,நான் என்
சொந்தக் காலில் நிற்க வேண்டும் உறவுகள் யாரிடமும் உதவி
பெறலாகாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தேன்.

 அப்பாவின் சங்கடம் அனுபவித்திருந்தால்தான் தெரியும். நேர் காணலுக்கே மெட்ராஸுக்கு அனுப்ப முடியாமல் அவர் தவித்த தவிப்புபர்மா ஷெல் சுப்பிரமணியம் அவர்களால் உதவப்பட்டதால் தீர்ந்தது. மறுபடியும் அவரிடம் கையெந்த அவருடைய தன்மானம் தடுத்தது. அவர் கணக்குப்படி, அடுத்த மாதம் என் ஸ்டைபெண்ட் பணம்வரும்வரை, சமாளிக்க ரூ.60-/ ஆவது வேண்டும். என் தங்கும் செலவு, போகவர செலவு, சாப்பாட்டுச் செலவு. என்றெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். என்ன செய்தார், ஏது செய்தார் என்று நினைவில்லை. ட்ரெயின் டிக்கட் போக என்னிடம் ரூ.15-/ கொடுத்து மகனே உன் சமத்து எப்படியாவது சமாளி.இன்னும் பத்து நாட்களில் இன்னும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்.என்று ஆறுதலும் கூறினார். எனக்குத்தான் எந்த பயமும் கிடையாதே. கவலைப் படாதீர்கள் சமாளித்துக் கொள்கிறேன் என்று சமாதானம் கூறினேன்.



       இப்படியாக ரூ.15-/ உடன் 1956-ம் வருடம் ஏப்ரல் 28-/ம் தேதி, பெங்களூர் வந்தேன். என்னிடம் ஒரு சிறிய ட்ரங்க் பெட்டி என் உடைமைகளுடனும், என் சான்றிதழ் , நியமன உத்தரவு போன்றவற்றுடனும் இருந்தது.

       பெங்களூரில் ஏதாவது ஓட்டலில் தங்க வேண்டும். எங்கு போவது.?எனக்கு பெங்களூரில் கண்டோன்மெண்டில்( கொஞ்சம் முன்னே வந்து போன பழக்கத்தில் )தங்கலாம் என்றும், அதுவே எஸ். ஜே. பாலிடெக்னிக் சென்று வர சௌகரியமாக இருக்கும் என்றும் தோன்றியது. ரயிலில் வந்து கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் இறங்கினேன். ஒரு குதிரை வண்டிக்காரரிடம், ஹோட்டலில் தங்க இருப்பதாகவும் சிவாஜி நகரில் எங்காவது தங்குமிடம் காட்டுமாறும் வேண்டிக்கொண்டேன். அவர் என்னை ஓல்ட் புவர் ஹௌஸ் ரோடின் ஆரம்பத்தில் இருந்த அசோகா லாட்ஜ், என்ற இடத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில், மாதத்துக்கு தங்கும் முறை அங்கில்லை என்றும், தினமும் தங்க ரூ.30-/ க்கும் மெலாகும் என்றும் கூறினார்கள். வேறிடம் காட்டுமாறு குதிரை வண்டிக்காரரிடம் வேண்டிக்கொண்டேன் அவரும் என் நிலைமை நன்றாகப் புரிந்து கொண்டு கமர்ஷியல் ஸ்ட்ரீட் அருகிலுள்ள இப்ராஹிம் சாஹிப் தெருவில் இருந்த ராஜா லாட்ஜ் என்ற இடத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில் மூன்று பேர் தங்கும் அறையில் எனக்கு ஒரு கட்டில் தரப்படும் என்றும் மாத வாடகை ரூ.10-/ என்றும் கூறினார்கள். நானும் மாதவாடகை ரூ.10-/ அட்வான்ஸாகக் கொடுத்தேன். லாட்ஜில் காலை சிற்றுண்டிக்கும் மதிய இரவு உணவுக்குக் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். என் தங்கும் பிரச்சினை முடிய என் தந்தைக்குக் கடிதம் எழுதினேன். அன்று மாலை டஸ்கர் டௌனில் இருந்த என் சகோதரி ராஜி வீட்டுக்குச் சென்று விவரங்கள் கூறினேன். என் பள்ளி நண்பன் தாமோதரன் வீட்டை விசாரித்து அவனைப் போய் பார்த்தேன். அவன் என்னை மறுநாள் வாடகை சைக்கிளில் எச்.ஏ.எல். இருக்குமிடம் காண்பிக்கக் கூட்டிச் சென்றான். நான் தங்கி இருந்த இடத்திலிருந்து சுமார் 10.. அல்லது 11 கிலோமீட்டர் தூரத்தில் எச்.ஏ. எல் இருந்தது.

                  மறு நாள் என் நியமன உத்தரவுடன் எச்.ஏ.எல்.சென்று பர்சனல் டிபார்ட்மெண்டில் காண்பிக்க, அவர்கள் நான் அங்கு சேரும்போது நிறுவனத்துடன் ஒரு பாண்டில் கையெழுத்திட வேண்டுமென்றும், அதற்கு என் தந்தையின் ஒப்புதலும் வேண்டுமென்றும் கூறினார்கள். மூன்று வருடப் பயிற்சி ஒப்பந்தம் பயிற்சி முடிந்தபின் பீ. மெகானிக் பதவி நியமனம், பயிற்சி முடிந்தபின் 5-/ வருடம் பணியில் இருப்பேன் என்று உத்தரவதம்,மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பல ஷரத்துக்களுடன் கூடிய ஒப்பந்த பத்திரத்தைக் கொடுத்தனர் மறுநாளிலிருந்து எஸ்.ஜே. பாலிடெக்னிக் செல்ல வேண்டுமென்றும் , மதியம் 12- மணிமுதல் இரவு 8-/ மணி வரை அங்கு பயிற்சி என்றும் அறிவிக்கப்பட்டோம். அதில் மதியம் 12-/ மணி முதல் மாலை 4-/ மணி வரை வகுப்பறைப் பாடங்கள் என்றும், மாலை 4-/ மணி முதல் இரவு 8-/ மணி வரை ப்ராக்டிகல் ட்ரெயினிங் இருக்கும் என்றும் கூறினார்கள். எச்.ஏ.எல்.-ல்பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கான மெஷின்களோ வசதிகளோ இல்லாதிருந்ததால் இந்த அணுகு முறை. ஆறு மாதம் பயிற்சி முடிந்தபிறகு, தொழிற்சாலையில் எல்லா பிரிவுகளிலும் பயிற்சியுடன் பணி புரியும் வாய்ப்பும் தரப்படும் என்றும் அறிந்தோம்.


 இப்படியாக நான் பயிற்சியில் சேர்ந்து வாழ்வின் இன்னொரு அத்தியாயத்துக்குள் காலடி வைத்தேன். என்னுடன் அந்த அறையில் இன்னும் இருவர் இருந்தனர்.அதில் ஒருவர் பெயர் சந்திரசேகரன்.பின்னி மில்லில் வேலையிலிருந்தார்.தந்தை மறுமணம் செய்த மாற்றாந்தாயின் கொடுமைகளுக்கு ஆளானதை சொல்லும் அவருக்கு எனக்கிருந்த மாற்றாந்தாயைப் பற்றி நான் உயர்வாகப் பேசுவதை நம்புவது கஷ்டமாயிருந்தது. மற்றவர் பெயர் வாசுதேவன். கேரளக்காரர்.பெங்களூர் வந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு செலவுக்கு ஊரிலிருந்து பணம் வரவேண்டும். நான் அந்த லாட்ஜில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும்.வாசுவுக்கு வீட்டிலிருந்து பணம், வரத் தாமதமாகி ஒரு முறை அவனால் லாட்ஜ் வாடகை கொடுக்க முடியவில்லை. அறையைக் காலி செய்ய ஓட்டல் முதலாளி கூறினார்.அதற்கு முன் வாசு தன் உடைமைகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், வாடகைப் பணம் கட்ட வரும்போது அதை அவன் என்னிடமிருந்து எடுத்துக் கொள்வதாகவும்கூறிப் போனான். அவனை ஓரிரு தினங்கள் காணாமல் அவனது பெட்டியைப் பறிமுதல் செய்ய ஓட்டல் முதலாளி என் அறைக்கு வந்தார். நான் அது தற்சமயம் என் பாதுகாப்பில் இருப்பதால் அதனை அவர் எடுக்கக் கூடாது என்று தடுத்தேன். அவருக்கு என் மேல் கோபம் அதிகமாகி காலையில் குளிக்க வென்னீர் தருவதை நிறுத்தினார். சிற்றுண்டி சாப்பிடும்போது குடிக்க நீர் தரமாட்டார். எப்படியும் என்னையும் அறையைக் காலி செய்ய்விக்க முயற்சிகள் மேற்கொண்டார். எந்த ஒரு செயலையும், பிற்பகல் விளையும் பலன்களை அதிகம் யோசிக்காமல் எந்த பயமும் இன்றி செயல்களை செய்து வருபவனாக நான் இருந்தேன். தவறு செய்பவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லாதிருக்கையில் எனக்குக் கஷ்டங்கள் கொடுத்த அந்த லாட்ஜ் முதலாளி மீது கமர்ஷியல் ஸ்ட்ரீட் பொலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன்.அந்த இன்ஸ்பெக்டருக்கு என்னைப் பார்த்ததும் ஒரு பரிவு உண்டாகி இருக்க வேண்டும். என்னிடம் கவலைப் பட வேண்டாம் என ஆறுதல் கூறியவர், இரண்டு பொலீஸ்காரர்களை லாட்ஜுக்கு அனுப்பி அந்த முதலாளியை வரவழைத்து அவரைக் கடுமையாய் எச்சரித்து அனுப்பினார். இதனால் ஓட்டல் முதலாளி என் மேல் கோபம் அதிகமாகி இருந்தார். அவரை நான் அவமானப் படுத்தி விட்டதாக நினைத்தார். நானும் சுமூக நிலை வராது என்று உணர்ந்து சிறிது நாட்களில் அங்கிருந்து விலகி வேறு ஒரு லாட்ஜில் சில நாட்களும் அதன் பிறகு என் நண்பன் ஸ்ரீதரனின் லாட்ஜ் கோமள விலாஸிலும் தங்கினேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் நான் இளங்கன்று பயமறியாது என்ற படியும், கூடுதலாக இம்பல்ஸிவ்வாக இருந்திருக்கிறேன் என்றும் தெரிகிறது

விடுமுறைக்கு பெங்களூர் சென்றிருந்தபோது என் சகோதரி ராஜியின் மைத்துனன் கங்காதரன் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததும் நான் சைக்கிள் ஓட்டப் பயின்ற இடம் தற்போது ஜனத்திரளும் சந்தடியும் வண்டி ஓட்டங்களும் மிகுந்திருக்கும் சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்  இருக்குமிடமாகும்..அப்போது ஒன்றுமே இல்லாத திறந்த வெளியாக இருந்தது.

நாங்கள் நடந்து செல்லும் பாதையில் பெங்களூர் ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்  இருந்தது. நான் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்து தங்கினாலும் என் செலவுக்குப் பணம் தேவைப் பட்டது. அப்பா எனக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் நான் அதை எப்படிப் பெறுவது.? என் பயிற்சி நேரம் மதியம் 12- மணி முதல் இரவு 8-/மணி வரை. சுமார்பதினொன்று பதினொன்றரை மணிக்கு நான் என் இருப்பிடத்தை விடுவேன். போஸ்ட் மேனைப் பார்க்க முடியாது. மேலும் என்னுடைய ஒப்பந்தப் பத்திரங்கள் அப்பாவின் கையெழுத்தாகி எனக்கு வர வேண்டும். அதை அவர் ரெஜிஸ்தர் தபாலில் அனுப்ப வேண்டும்..இதையெல்லாம் யோசித்து நாங்கள் போகும் வழியில் இருந்த தலைமைத் தபால் நிலைய போஸ்ட் மாஸ்டரை அணுகி, எனக்கு வரும் தபால்களை என் அப்பா c/o postmaster  என்று அனுப்புவார் என்றும் ,அவரிடமிருந்து நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன் என்றும் வேண்டிக்கொண்டேன். அவரும் ஒப்புதலளிக்க எனக்கு வரும் தபால்கள் என் பெயரிட்டு C/O POST MASTER என்று வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரிய வில்லை. பிறருக்கு உதவும் எண்ணங்கள் கொண்ட மக்கள் ஊழியர்கள் ( பப்ளிக் செர்வண்ட்ஸ் )இருந்த காலம் அது. நான் பெங்களூரில் இருந்து கடிதம் அனுப்பினால் அது மறு நாள் வெல்லிங்டனில் பட்டுவாடா ஆகும். எனக்கு வந்த ஒரு கடிதத்தில் அப்பா ஒருமுறை நான் எழுதிய கடிதம் மூன்றாம் நாள் கிடைத்ததாகக் கூறி ஆதங்கப் பட்டிருந்தார். இப்போது தபல்கள் ஒரு வாரம்
 ஆனாலும் கிடைக்கிறதா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தபால் சேவையின் முக்கியத்துவம் மிகவும்குறைந்து விட்டது. பயிற்சி வகுப்புகளில் இருந்து விலகாமல் ,விடுமுறை எடுக்காமல், எனக்குப் பெற வேண்டிய தபால் மற்றும் மணி ஆர்டர்களை நான் பெறுவதற்கு செய்த உத்திதான் இந்த C/OPOSTMASTER  விவரம்.

முன்பின் தெரியாத ஒரு சிறுவனுக்கு உதவியாய் இருந்த அந்தக் குதிரை 
வண்டிக்காரரும் , ஒட்டலில் தங்கி யிருக்கும் ஒருவன் கஷ்டப்படும்போது
ஆறுதல் கூறிஅவன் துயரங்களைத் துடைக்க உதவும் மனப் பான்மையுள்ள 
போலீஸ் அதிகாரியும் அரசின் தலைமைத் தபால் நிலையம் ஆனாலும் ஊர்
பேர் தெரியாத ஒரு இளைஞன்உதவி என்று வந்தபோது எந்த சட்டமும் 
பேசாமல் உதவி புரிந்த அந்தத் தலைமைத் தபால் நிலைய போஸ்ட் 
மாஸ்டரும் சேவை மனப் பான்மையுடனே செயல் பட்டனர் என்று எண்ணும் 
போது “ ஓ, அது அந்தக் காலம் “என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
-----------------------------------------------------------------.  











8 கருத்துகள்:

  1. உதவும் மனப்பான்மை கொண்ட உங்களுக்கு உதவிய அந்த மனிதர்கள் போற்றத்தகுந்தவர்கள்தான்.  இப்போதும் அப்படி இருக்கக் கூடும்.  போஸ்ட் ஆபீஸில் அந்த நடைமுறை உண்டு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். நமக்கு அமையும் சூழ்நிலைகளே நாம் நம் செயல்களை எப்படிச்  செய்கிறோம் என்று செய்ய உதவுகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Eஎன்செயல்கள் பற்றி நான் நினைத்துப் பார்க்காத் காலம் அது

      நீக்கு
  2. உங்களுடைய இப்பதிவு நான் கல்லூரிப்படிப்பு முடித்து பணியில் சேரும்போது பட்ட சிரமங்களை நினைவூட்டியது. உங்களின் மனோதிடமும், நீங்கள் சூழல்களை எதிர்கொண்ட விதமும் வியக்கவைக்கிறது ஐயா,

    பதிலளிநீக்கு
  3. உதவும் மனப்பான்மையோடு கூடிய மனிதர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. சார் ரொம்ப ரசித்து வாசித்தேன். எத்தனை அனுபவங்கள் உங்களுக்கு! அத்தனையுமே பாடங்கள்தான். அப்போதைய உதவும் உள்ளங்கள் போன்று இப்போதும் இருக்கிறார்கள்தான்.

    அந்த இம்பல்சிவ்னெஸ் அப்போதைய வயது அது. இளங்கன்று பயமறியாது என்பது போன்று.

    நீங்கள் 15 ரூபாயுடன் பங்களூர் வந்ததை வாசித்த போது, தாஸேட்டனும் சென்னைக்குப் பாட்டு சான்ஸ்காகப் பிழைக்க வந்த போது நண்பரிடம் 16 ரூபாய் கடன் வாங்கி வந்தது பற்றிச் சொல்லிய நினைவும் வந்தது.

    அப்போதைய காலகட்டத்தில் உங்களுக்கு அந்த 15 ரூபாய் பெரிய விஷயம் இல்லையா சார். அதில் 10 ரூ லாட்ஜ் அட்வான்ச் மீதி 5 ரூ வை வைத்து எப்படி ஒரு மாதம் சமாளித்தீர்கள்? பிரமிப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. உங்களின் திட்டமிடலும் கவனமும் கவர்ந்தன ஐயா...

    பதிலளிநீக்கு