திங்கள், 2 மே, 2022

முதுமையின் பரிசு

 


முதுமையின் பரிசு.?


                                         முதுமையின் பரிசு.?
                                         ---------------------------


சுருங்கிய தோலும்,சரிந்த தொப்பையும்,
நீர் கோத்த பை போன்ற கண்களுடன்,
கண்ணாடியில் காணச் சகிக்காத தோற்றம்
காணுமுன்பே,கண்களை உறுத்தும் பிம்பம்.,
முதுமை அளிக்கும் பரிசா.? இருந்தால் என்ன.?

செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா

பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

.கருத்த முடிக்கும் இருகிய இடுப்புக்கும்
என் இப்போதைய இருப்பை நான் பணயம்
வைக்க மாட்டேன்.வயது முதிர்ந்து,அறிவும்
வளர்ந்த என்னை முன்னைவிட நேசிக்கிறேன்.

என் குறைகள் மறந்து முன்னை விட
என்னை நான் நேசிக்கிறேன்..விரும்பும்
இனிப்பை உண்ணும்போதும் படுத்த
படுக்கை சுருட்டாதபோதும்  வேண்டாத
பொருள் ஒன்று வாங்கும்போதும் யாருக்கும்
பதில் சொல்லத் தேவையில்லாத இருப்பும்
கிடைத்த விடுதலை உணர்வின் வெளிப்பாடல்லவா?..

சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி
வாழ்வாங்கு வாழ்வது காணாது சென்றது
கண்டவன் நான்.கிடைத்த வாய்ப்பை விடுவேனா
உறங்கச் செல்வதோ விழித்து எழுவதோ,
புத்தகம் படிப்பதோ கணினியில் ஆடுவதோ
என் விருப்பம்.-இனிய அறுபது எழுபதுகளின்
இன்னிசைப் பாடல்களை கண்மூடி ரசிப்பேன்,
தோன்றினால் துள்ளி எழுந்து ஆடவும் செய்வேன்.
சில நேரம் இளமையில் தொலைத்த காதலுக்கு
கண்ணீர் வடிக்கவும் செய்வேன்.யாருக்கு என்னைக்
கட்டுப் படுத்தவோ கேட்கவோ முடியும்?

கடலோரம் நடப்பேன்,நீரில் கால்கள் நனைப்பேன்
மணலில் மல்லாந்து கிடப்பேன்.- எனைக் கடந்து
ரசித்துப் போகும்,எள்ளி நகையாடும்
பார்வைகளை அலட்சியம் செய்வேன்.

தஞ்சாவூர் ஓவியம் தீட்டுவேன் கண்ணாடியில்
கடவுளர்களை வரையவும் செய்வேன். அதை
சட்டமிட்டு மாடத்தில் வைத்து அழகு பார்ப்பேன்
எனக்குப் பிடித்த என்னைப் பிடித்தவர்களுக்கும்
பரிசாகக் கொடுத்து மகிழ்வேன், மகிழ்விப்பேன்.

சில நேரங்களில் மறதி வந்து அவதிப் படுத்தும்.
மறக்க வேண்டியதை மறந்துதானே ஆகவேண்டும்
நான் வளர்ந்த விதம்,இருந்த இருப்பு,இருக்கும் நிலை.
என்றும் என் மனம் விட்டு அகலாது.

ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.

நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்த் வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.

வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
என்னை பாதிக்க விடுவதில்லை.
என்னை நானே ஏதும் கேள்வி கேட்பதில்லை.
தவறு செய்யும் உரிமையும் எனக்குண்டு
முதுமை எனக்களித்த சுதந்திரம் எனக்குப்
பிடித்திருக்கிறது. என்றும் நான் இருக்கப்
போவதில்லை.- இருந்த காலம் இருக்கும்
காலம் இப்படி அப்படி இருந்திருக்கலாமோ
இருக்க வேண்டுமே எனக் கவலைப் பட்டுக்
கழிப்பதில் எனக்கேதும் உடன்பாடில்லை.

உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசுகின்றன.
அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன.
அனைவரும் இன்புற்றிருக்கவும் வானவில்லின்
நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.
-------------------------------------------


25 கருத்துகள்:

  1. முதுமையின் உணர்ச்சிகள் யாவற்றையும் நீண்ட கவிதையாக கொட்டிவிட்டீர்கள். உடல் ஒத்துழையாமை பற்றி எங்கேனும் சேர்த்திருக்கலாம். 
    சில சமயம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடப்பதைக் கூறீ இருக்கிறேன்க்கிறேன்நடப்ப்பதுஏற்கபழக வேண்டும்

      நீக்கு
  2. முதுமைப் பருவத்தில் முடங்கிக் கிடந்துவிடாமல், அதை 'மிச்சம் சொச்சம்' வைக்காமல் அனுபவிக்கத் தூண்டும் அற்புதமான கவிதை வரிகள்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா... ! அருமை ஐயா... மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. // நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
    கொடுத்த் வைத்திருக்க வேண்டும். //

    உண்மையிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  5. வயதாகும்போது (வேறு வழி இல்லாமல்) ஒரு பற்றற்ற நிலை வந்து விடுகிறதோ...

    பதிலளிநீக்கு
  6. முதுமையை பற்றி அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. சார் மிக மிக ரசித்து வாசித்தேன். ஒரு உத்வேகம் நாமும் சார் போன்ற எண்ணங்களுடன் நேர்மறையாக இப்படிச் சிந்தித்து இருக்க வேண்டும் என்ற உத்வேகம் குறிப்பாக,
    //என் குறைகள் மறந்து முன்னை விட
    என்னை நான் நேசிக்கிறேன்..//

    இது இது மிக மிக அவசியம். அருமையாக இருக்கிறது உங்கள் வெளிப்பாடு

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
    கொடுத்த் வைத்திருக்க வேண்டும்.//

    ஆம் சார். நல்ல நினைவுடன் என்பதையும் சேர்த்து அதாவது நல்ல நினைவுடன் என்பது வேறு எந்த வகையான மறதியும் இல்லாமல்......இதோ நீங்கள் உற்சாகமாக எழுதுவது, இப்படியான எண்ணங்களை வெளிப்படுத்தி எழுதுவது என்பதெல்லாம் நல்ல விஷயங்கள். முதுமையில் யதார்த்தம் உணர்ந்து ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்து வாழ்வது! குடோஸ் சார்!

    உங்கள் எண்ணங்களை ரசித்து வாசித்தேன். மீண்டும். உற்சாகம் வருகிறது.

    //இருந்த காலம் இருக்கும்
    காலம் இப்படி அப்படி இருந்திருக்கலாமோ
    இருக்க வேண்டுமே எனக் கவலைப் பட்டுக்
    கழிப்பதில் எனக்கேதும் உடன்பாடில்லை.

    உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசுகின்றன.
    அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன.
    அனைவரும் இன்புற்றிருக்கவும் வானவில்லின்
    நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
    வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.//

    சூப்பர்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. So wonderfully written daddy.... wish i could express myself atleast half as good as you appa.... Love.....

    பதிலளிநீக்கு
  10. எல்லா முதியோருக்கும் இப்படியான ஒரு நேர்மறையான பக்குவம் வந்துவிட்டால் நல்லதுதான். கிழப்பருவம் எய்துவதற்குக் கொடுத்து வைத்திருப்பது மட்டுமில்லை இப்படியான ரசித்து அனுபவிக்கும் எண்ணங்களும் இருப்பதற்கும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

    நல்ல பக்குவமான மனது. வாழ்த்துகள் சார்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. நன்றாக ரசிக்கிறீர்கள். பாராட்டுகிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  12. கிழப்பருவம், கிழப்பருவம் என்கிறீர்களே, அது எப்படியிருக்கும்? ஒருவேளை எனக்கும் வருமோ?

    பதிலளிநீக்கு
  13. வரும் அப்போது மீண்டும் வாசியுங்கள்

    பதிலளிநீக்கு
  14. முதுமையை ரசிக்கின்றீர்கள் மிகவும் நன்று. அனைவரும்இதுபோல ரசிக்கப் பழகினால் வாழ்க்கை இனியசுகம்தான்.

    பதிலளிநீக்கு