Monday, November 10, 2014

கீதைப் பதிவு-16


                                               கீதைப் பதிவு - 16
                                               -----------------------


தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
அஞ்சாமை, உள்ளத் தூய்மை. ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை பொறிகளை அடக்குதல், யாகம் ஸாஸ்திரம் படித்தல், தபஸ்.நேர்மை(1)
தீங்கிழையாமை, உண்மை, சினமின்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், பிறர்பொருளை விரும்பாமை, இனிமை, நாணம்,மனம் சலியாமை(2)
தைரியம் பொறை மனவுறுதி, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை, ஆகிய இவைகள் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன அர்ஜுனா,(3)
பார்த்தா பகட்டும், இறுமாப்பும் தற்பெருமையும், சினமும் ,கடுமையும், அக்ஞானமும் அசுர சம்பத்தை உடையவனாய்ப் பிறந்தவனுக்கு உண்டு.(4)
தெய்வ சம்பத்து மோக்ஷம் தருவதென்றும், அசுர சம்பத்து பந்தப் படுத்துவதென்றும் கருதப் படுகின்றன.பாண்டவா, வருந்தாதே, நீ தெய்வ சம்பத்து வாய்த்துப் பிறந்துள்ளாய்.(5)
பார்த்தா,தெய்விகம் என்றும் அசுரம் என்றும் இருவகை உயிர்ப் பிறப்புகள்  இவ்வுலகில் உண்டு.தெய்வ இயல்பு விரிவாகப் பகரப் பட்டது. அசுர இயல்பை என்னிடம் கேள்.(6)
செய்யத்தகுந்த நல் வினையையும், தகாத தீவினையினையும் அசுர இயல்புடையார் அறியார். அவர்களிடம் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்மையும் இல்லை(7)
உலகம் உண்மை இல்லாதது, தர்மப் பிரதிஷ்டை இல்லாதது, கடவுள் இல்லாதது, காமத்தைக் காரணமாகக் கொண்டு ஆண்பெண் இணக்கத்தால் ஆனது அன்றி வேறு என்ன இருக்கிறது என்கின்றனர்.(8)
இக்கொள்கை உடைய புல்லறிவாளர் ஆத்ம நஷ்டமடைந்தவர்களாய், கொடுஞ் செயல் புரிபவர்களாய், உலகின் பகைவர்களாய், அதன் அழிவுக்கென்றே தோன்றி இருக்கின்றனர்(9)
நிறைவேறாத நெடுங்காமம் பிடித்தவர்களாய், ஆடம்பரமும், பெருமையும், மதமும் பொருந்தியவர்களாய், மயக்கத்தால் கெட்ட எண்ணங்களைக் கிரகித்து தீய தீர்மானங்களுடன் தொழில் புரிகின்றனர்(10)
சாகும்வரையில் அளவுகடந்த கவலையை உடையவர்களாய், காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாகக் கருதி, மற்றொன்றுமில்லை என்று தீர்மானம் செய்தவர்களாய்;(11)
நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் தளைக்கப் பட்டவர்களாய், காமக் குரோத வசப்பட்டவர்களாய்,காம போகத்தின் பொருட்டுச் செல்வக் குவியல் தேட முயலுகின்றனர். (12)
இன்று இது என்னால் அடையப்பட்டது; இவ்விருப்பத்தை நிறைவேற்றுவேன், இது இருக்கிறது, மேலும் எனக்கு இச்செல்வம் வந்துசேரும்(13)
அப்பகைவன் என்னால் கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்லுவேன், நான் ஆளுபவன், போகத்தை அனுபவிப்பவன், காரிய சித்தன், வலிவுடையவன், இன்புறுபவன்(14)
செல்வம் படைத்து உயர் குலத்தவனாயிருக்கிறேன் எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்.? யாகம் செய்வேன், தானம் கொடுப்பேன், மகிழ்வடைவேன் என்று அக்ஞானத்தில் மயங்கியவர்கள்(15)
பல எண்ணங்களில் குழப்பமடைந்தவர்கள் மோக வலையில் மூடப் பெற்றவர்கள் காம போகங்களில் பற்றுடையவர்கள் பாழ் நரகில் வீழ்கின்றனர்.(16)
தற்புகழ்ச்சியுடையார், வணக்கமிலார், செல்வச் செருக்கும் மதமும் உடையார் பெயரளவில் யாகத்தை விதி வழுவி ஆடம்பரத்துக்காகச் செய்கின்றனர்(17)
அஹங்காரம் பலம் இறுமாப்பு காமம்  குரோதம் இவைகளை உடையவர்கள் தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலும் உள்ள என்னை வெறுத்து அவமதிக் கின்றனர்(18)
 துவேஷ குணமுடையவர்களை, கொடியவர்களை, கடையவரை, இழிந்தோரை பிறந்து இறந்து உழலும் உலகில் அசுரப் பிறவியிலேயே, திரும்பத் திரும்ப நான் அவர்களைத் தள்ளுகிறேன்(19)
குந்தியின் மகனே, மூடர்கள் பல பிறவிகளில் அசுர யோனிகளில் தோன்றி என்னை அடையாமல் இன்னும் கீழான கதியையே அடைகிறார்கள்(20)
காமம் குரோதம் லோபம் ஆகிய மூவித வாயிலை உடையது நரகம். இவை ஜீவனைக் கெடுக்கும் தன்மையன. ஆகையால் இம்மூன்றையும் துறத்தல் வேண்டும்(21)
அர்ஜுனா, இம்மூன்று நரக வாயில்களினின்றும் விடுபட்டவன் தனக்கு நலன் செய்து கொண்டு பின்பு மோக்ஷத்தை அடைகிறான்.(22)
காமத்தின் வசப்பட்டு சாஸ்திரத்தின் ஆணையை மீறி நடப்பவன் எவனோ அவன் பரி பூரணனாகான், சுகம் பெறான், முக்தி அடையான்(23)
ஆகையால் செய்யத் தகுந்ததையும்  தகாததையும் நிச்சயிப்பதில் சாஸ்திரம் உனக்குப் பிரமாண மாகிறது. இங்கு சாஸ்திரம் ஆக்ஞாபித்து உரைப்பதை அறிந்து கர்மம் செய்யக் கடவாய்.(24)
                   தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் நிறைவு.                         
    .            
 
 

20 comments:

  1. பந்தம் இருந்தாலே அசுர சம்பத்து என்றால் நாமெல்லாம் அந்த வகையறாதான் போல! :)))

    ஒருவருக்குச் சொல்லப்படும் நல்ல விஷயங்கள் அவர்களுக்கு மனதில் ஏற, அவர்களுக்கு நல்ல நேரம் அமைய வேண்டும் என்று தோன்றும். இதைத்தான் செய்யத் தகுந்த நல்வினைகளை அசுர இயல்புடையார் அறியார் என்று வருகிறது போலும்.

    ஒருவருக்கு 7 பிறவிகள் உண்டு என்று கொண்டால் 7வது பிறவியில்தான் நல்ல குணங்களும் அறிவுரைகளை ஏற்கும் மனப் பக்குவமும் அமையும் போலும்!

    இதெல்லாம் சும்மா மனதில் தோன்றுவதுதான்!

    ReplyDelete

  2. தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
  3. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  4. தெய்வ, அசுர விளக்கம் தெளிவு. எத்தனை சமயங்களில் நமக்கு அசுர குணம் தலை தூக்குகிறது என எண்ணிப் பார்த்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  5. @ ஸ்ரீராம்
    நல்லது. சிந்திக்கத் துவங்கி விட்டீர்கள். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete

  6. @ கரந்தை ஜெயக் குமார்
    வருகைக்கு நன்றி ஐயா. தொடர்ந்து படித்து வருகையில் நிச்சயம் சில எண்ணங்கள் தோன்றி இருக்கும்.

    ReplyDelete

  7. @ கில்லர்ஜி தேவகோட்டை
    தொடர் வருகைக்கு நன்றி ஜீ

    ReplyDelete

  8. @ துரை செல்வராஜு
    தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  9. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    கீதைப் பதிவுக்கு முன்னுரை படித்தீர்களா.?கீதையைப் பற்றிய பலசெய்திகளை பகிர்ந்திருக்கிறேன். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  10. @ கீதா சாம்பசிவம்
    ஓரிரு பதிவுகளில் காணோமே என்றிருந்தேன். இன்னுமிரு அத்தியாயங்கள். அதன் பின் என் எண்ணங்களைப் பதிவிடுவேன். வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  11. வீடு மாறுவதால் வேலைப் பளு ஐயா. அதோடு மதிய நேரம் இணையத்தில் அமர முடிவதில்லை. காலை அவசரமாக மடல்களைப் பார்ப்பதில் சில விட்டுப் போகின்றன. நிதானமாகத் தான் பார்க்கிறேன். இன்னும் இரு மாதங்களுக்கு இப்படி இருக்கலாம். :)

    ReplyDelete
  12. செய்யத் தகுந்ததையும் தகாததையும் நிச்சயிப்பதில் சாஸ்திரம் உனக்குப் பிரமாண மாகிறது. இங்கு சாஸ்திரம் ஆக்ஞாபித்து உரைப்பதை அறிந்து கர்மம் செய்யக் கடவாய்/

    very nice words..

    now I am in Australia..
    Hear there is no tamil fronds. after installing Tamil . I come latter..

    ReplyDelete
  13. அய்யா சமஸ்கிருத அறிவு அடியேனுக்குச் சற்றுக் குறைவாகவேனும் உண்டு!
    கண்ணன் மகாபாரதத்தில் என்னைக் கவர்ந்த மாந்தருள் ஒருவன்.
    வில்லி பாரதம் படித்திருக்கிறேன்.
    தங்களின் இப்பதிவைப் படித்தேன்.
    பழைய பதிவுகளைப் படிக்க நினைக்கிறேன் படிப்பேன்.

    வேதத்திற்கு நிருத்தமும் வியாகரணத்திற்குக் காரிகையும் என்ற ஒரு சொலவடை உண்டு!

    இனி கீதைக்குத் தங்கள் விளக்கத்தையும் அவ்வாறு சொல்லலாம் போல......!
    ஏனையவற்றையும் பார்க்கிறேன்.
    தங்களின் பதிவு வியப்பூட்டுகிறது!!!

    அடியேனின் கண்ணன் விடு தூது என்னும் பதிவையும் நேரம் வாய்க்குங்கால் கண்டு கருத்திட வேண்டுகிறேன்ி.
    http://oomaikkanavugal.blogspot.com/2014/09/blog-post_15.html
    எல்லாரையும் இதுபோல் நிர்பந்தித்தல் எனக்குப் பிடிக்காதது.
    ஆனால் தங்களிடம் ஏனோ அந்த உரிமையை எடுத்துக் கொள்ளத தோன்றுகிறது.
    ஏனென்று தெரியவில்லை.
    சரியோ தவறோ
    புகழோ இகழோ நடுநிலையான நேர்படப் பேசும் கருத்தினைத் தங்களிடத்திலிருந்து எதிர்பாரக்கிறேன்.

    மானுடர்க்கு பேச்சுபடில் வாழ்கிலேன் என்ற ஆண்டாள் தங்கள் மனிதில் தோன்றக் கூடும்.
    அது அவர்க்கென் மாறாத நன்றிக்கடன.
    உங்களைப் போலவே நானும் கவிஞன் எனச் சொல்லிக் கொள்ளப் பிரியப்படவில்லை.
    அதே நேரம் மரபுகளை அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை
    இப்பதிவிற்குத் தங்களின்
    தங்களின் வருகையை எதிர்பார்த்திருக்கிறேன்!

    சரியோ தவறோ உள்ளதைக் கூறுங்கள்.
    உங்களின் ஆசிர்வாதம் என்றும் அடியேனுக்கு வேண்டும்.
    நன்றி!!

    ReplyDelete
  14. இன்று (நவம்பர் 11 ) உங்கள் 50 ஆவது மணநாள் என்று உங்களுக்கு சுப்பு தாத்தா வாழ்த்து சொல்லி தனது பதிவில் எழுதி இருக்கிறார். அய்யா G.M.B அவர்களிடம் நான் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete

  15. @ கீதா சாம்பசிவம்
    சிலரது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது, வருகைத் தாமதமானால் ஏனோ என்று ஏங்குகிறது மனம் உடன் தெளிவு செய்ததற்கு நன்றி மேடம்

    ReplyDelete

  16. @ இராஜராஜேஸ்வரி
    கண்ணன் கூறுவதாக வரும் வார்த்தைகள். ஆஸ்திரேலியாவில் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த அந்தக் கண்ணன் அருளட்டும் வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  17. @ ஊமைக் கனவுகள்.
    முதலில் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது. இப்பதிவுகளுக்கு முன்னுரையிலேயேகூறி இருக்கிறேன். இந்த கீதைப் பதிவுகளுக்கு ஆதாரம் சுவாமி சித்பவாநந்தரின் தமிழாக்கமும் விரிவுரையும். உங்கள் கண்ணன் விடு தூது நிச்சயம் படிப்பேன். மனதில் பட்டதைக் கருத்தாகவும் இடுவேன்.மகாபாரதம் ஒரு கதையாக, ஒரு காவியமாக என்னையும் பிரமிக்க வைத்திருக்கிறது. அதில் வரும் பல விஷயங்களில் எனக்கு உடன் பாடில்லை என்பது வேறு விஷயம் என்னிடம் நீங்கள் எல்லா உரிமையும் எடுத்துக்கொள்ளலாம். கவிஞன் என்று நீங்கள் சொல்லிக் கொள்ள விரும்பாவிட்டாலும் நீங்கள் கவிஞர்தானே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  18. @ தி. தமிழ் இளங்கோ
    நான் பல மாதங்களுக்கு முன் சென்னை சென்றிருந்தபோது திரு சூரி சிவா வீட்டுக்குச் சென்றேன். (மனைவியுடன்)பேச்சு வாக்கில் என்னைப் பற்றியும் எங்கள் மண வாழ்வு பற்றியும் பேசிக் கொண்டிருந்தபோது எதேச்சையாக என் மண நாளும் பிறந்த நாளும் ஒன்றே என்றும் அது நவம்பர் 11- என்றும் கூறி இந்த ஆண்டு பொன் விழா மண ஆண்டு என்றும் சொன்னேன். அவர் பெங்களூரு வந்து வாழ்த்துவதாகவும் ஒரு முறை நாளை நினைவூட்டவும் கேட்டுக் கொண்டார், அதன் படி அவருக்குத் தெரிவித்தேன் மெயிலில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். இன்னும் அவர் வலையை நான் பார்க்கவில்லை. எங்கள் நல் வாழ்த்து என்றும் உங்களுக்கு உண்டு. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete