Tuesday, November 18, 2014

கீதைப் பதிவு-18


                                         கீதைப் பதிவு--18 (இறுதி அத்தியாயம்)
                                         ----------------------------------------------------
                                                 ( சற்று நீளமான அத்தியாயம்)

சர்வம் கிருஷ்ணமயம் ஜகத்...!


மோக்ஷ ஸ்ன்யாஸ  யோகம்
அர்ஜுனன் சொன்னது
ஹிருஷிகேசா, மகாபாகுவே,கேசி நிஷுதனா, சந்யாசத்தினுடையவும் தியாகத்தினுடையவும் தத்துவத்தைத் தனித்தனியே  தெரிந்து கொள்ள விரும்புகிறேன்(1)
ஸ்ரீபகவான் சொன்னது
காமிய கர்மங்களைத் துறப்பதை சந்நியாசமென்று அறிகிறார்கள் ஞானிகள். எல்லாக் கர்மங்களின் பயனை விடுவதைத் தியாகமென்கின்றனர் தீர்க்க தரிசிகள்.(2)
கர்மங்கள் எல்லாம் குற்றமுடையவைகள் ஆதலால் துறத்தற்குரியவைகள் என்று சில அறிஞர்கள் பகர்கின்றனர்.வேறு சிலர் வேள்வி, தானம், தபசு ஆகிய கர்மங்கள் துறக்கப்படலாகாது.என்கிறனர்.(3)

பரதகுலக் கோவே, புருஷருள் புலியே, தியாகத்தைக் குறித்து நான் கொண்டுள்ள சித்தாந்தத்தைக் கேள்.தியாகமானது மூன்று விதமானதென்றே பகரப் பட்டுள்ளது(4)
யக்ஞம், தானம், தபசு ஆகிய கர்மம் விடப்படுவதன்று.அது செயற்பாலதே.யக்ஞமும் தானமும் தவமும் அறிஞர்களுக்குப் புனிதம் வழங்குபவைகளாம்.(5)
பார்த்தா, பற்றுதலையும் பயனையும் ஒழித்தே இக்கர்மங்கள்யாவும் செய்யப்படவேண்டும் என்பது என் நிச்சயமான உத்தமமான கொள்கை(6)
மேலும் நித்திய கர்மத்தை விடுவது பொருந்தாது. அறிவின்மையால் அதைத் துறப்பது தாமஸமென்று கூறப்படுகிறது.(7)
உடம்பின் வருத்தத்துக்கு அஞ்சி, கர்மத்தை துக்கமெனக் கருதி அதை விடுகிறவன் ராஜசத் தியாகம் செய்கிறான். அதனால் அவன் தியாக பலனை அடைவதே இல்லை.(8)
அர்ஜுனா, பற்றுதலையும் பயனையும் விட்டு செய்வதற்குரியது என்றே எந்த நித்திய கர்மம் செய்யப்படுகிறதோ, அந்தத் தியாகம் சாத்விகமானதென்று கருதப் படுகிறது.(9)
சத்துவம் நிறைந்தவனும், பேரறிஞனும், ஐயத்தை அகற்றியவனும் ஆகிய தியாகியானவன், துன்ப வினையை வெறுக்கான், இன்ப வினையை விரும்பான்(10)
உடலெடுத்தவனுக்குக் கர்மங்களை அறவே விடுவது இயலாது.ஆனால் வினைப்பயனைத் துறந்தவன் எவனோ அவன் தியாகி எனப்படுகிறான்(11)
தியாகிகள் அல்லாதார்க்கு, மரணத்துக்குப் பிறகு இன்னாதது, இனியது, இவ்விரண்டும் கலந்தது என மூன்று விதமான வினைப்பயன் விளைகிறது.தியாகிகளுக்கோ ஒரு பொழுதுமில்லை(12)
பெருந்தோளோய்,கர்மத்தின் முடிவு காட்டும் சாங்கிய சாஸ்திரத்தில் சகல கர்மங்களின் சித்திக்கென்று பகரப் பட்டுள்ள இந்த ஐந்து காரணங்களையும் என்னிடம் அறிந்துகொள்.(13)
உடல், கர்த்தா, வெவ்வேறு விதமான இந்திரியங்கள், பல விதமாக வேறுபட்ட செயல்கள், இவற்றுக்கு ஐந்தாவதாக தெய்வமும் காரணங்களாகின்றன.(14)
மெய்யால் மொழியால் மனதால் மனிதன் நியாயமாக அல்லது அநியாயமாக  எக்கர்மத்தைச் செய்தாலும் இவ்வைந்துமே  அதற்குக் காரணங்களாம்(15)
அது அங்ஙனமிருக்க . முழு முதற்பொருளாகிய ஆத்மாவைக் கர்த்தாவாக இனி யார் காண்கிறானோ. புத்தி பண்படாத அவ்வறிவிலி மெய் காண்கிறானில்லை.(16)
யாருக்கு அகங்காரமில்லையோ, யாருடைய புத்தி பற்று வைக்கிறதில்லையோ. அவன் இவ்வுலகத்தாரைக் கொன்றாலும் கொல்லாதவனே; பந்தப்படாதவனே.(17)
அறிவு. அறியப்படுபொருள், அறிபவன் எனக் கர்மத்துக்குத் தூண்டுதல் மூன்றுவிதம்.கருவி, கர்மம், கர்த்தா எனக் கர்மத்துக்கு இருப்பிடம் மூன்று விதம்(18)
ஞானமும், கர்மமும், கர்த்தாவும் குண பேதத்தினால் மூவகை என்று சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.அவைகளையும் உள்ளபடிக் கேள். (19)
வேறு வேறாயுள்ள பூதங்களில், வேறுபடாத, அழியாத, ஏகவஸ்துவை எதனால் பார்க்கிறாயோ அந்த ஞானத்தை சாத்விகமானதென்று அறிக.(20)
பின்பு எந்த ஞானம் எல்லாபூதங்களிலும் வெவ்வேறு விதமான பல ஜீவர்களை ஒன்றினின்று ஒன்று வேறானதென்று அறிகிறதோ அந்த ஞானத்தைராஜசமென உணர்க.(21)
ஒரு காரியத்தையே முழுதுமென்று பற்றிக் கொண்டு, யுக்திக்குப்பொருந்தாத தாயும், உண்மைக்கு ஒவ்வாததாயும் அற்பமாயிமுள்ள ஞானம் எதுவோ அது தாமசமெனப் படுகிறது.(22)
விளைவினில் விருப்பம் வைக்காதவனால், பற்று இல்லாமல், விருப்பு வெறுப்பு அற்று, நியமிக்கப் பட்டுள்ள எக்கர்மம் செயல் படுகிறதோ அது சாத்வீக மானதெனப் படுகிறது(23)
ஆசையினால் வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் பெரும் பிரயாசையுடன் இனி எக்கர்மம் செய்யப்படுகிறதோ அது ராஜசமானது எனப்படுகிறது(24)
வினையின் விளைவையும் நஷ்டத்தையும், துன்பத்தையும்,  தன் திறத்தையும் எண்ணிப் பாராதுமயக்கத்தால் எக்கர்மம் தொடங்கப் படுகிறதோ அது தாமசம் எனப்படும்(25)
பற்று நீங்கியவன், அகங்கார மற்றவன் உறுதியும் ஊக்கமும் உடையவன், வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் இத்தகைய கர்த்தா சாத்விகன் எனப்படுகிறான்.(26)
ஆசையுள்ளவன் வினைப்பயனை விரும்புபவன், உலுத்தன், துன்புறுத்தும் தன்மையன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன் இத்தகைய கர்த்தா ராஜசன் எனப்படுகிறான்.(27)
யோகத்துக்குஒவ்வாத மனமுடையவன். அறிவு வளரப் பெறாதவன், முரடன், வஞ்சகன் , பழிகாரன், சோம்பேறி, துயருறுவோன், காலம் நீடிப்பவன் இத்தகைய கர்த்தா தாமசன் எனப்படுகிறான்.(28)
அறிவினுடையவும், மன உறுதியினுடையவும் ஆகிய மூவகை வேற்றுமையைக் குணங்களுக்கேற்ப பாகுபடுத்தி பாக்கியில்லாமல் பகர்கின்றேன் கேள் தனஞ்சயா.(29)
பார்த்தா பிரவிருத்தியையும். நிவிருத்தியையும் , செய்யத்தகுந்ததையும், தகாததையும், பயத்தையும் , பயமின்மையையும் பந்தத்தையும் மோக்ஷத்தையும் அறியும் புத்தி சாத்விகமானது(30)
பார்த்தா,தர்மத்தையும் அதர்மத்தையும், தகுந்த காரியத்தையும் தகாத காரியத்தையும் தாறுமாறாக எந்த புத்தி அறிகிறதோ, அது ராஜசமானது.(31)
பார்த்தா அக்ஞான இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும் பொருள்களையெல்லாம் விபரீதமாகவும் நினைக்கிறதோ அது தாமசமானது(32)
பார்த்தா, யோகத்தைக் கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்-பிராணன் இந்திரியங்களின் செயல்களை ஒருவன் காக்கின்றானோ அந்த உறுதி சாத்விகமானது(33)
மற்று எந்த உறுதியினால் அர்ஜுனா அறம் பொருள் இன்பங்களை ஒருவன் காக்கின்றானோ,பற்றுதலால் பயனை விரும்புகின்றவன் ஆகிறானோ அந்த உறுதியானது பார்த்தா, ராஜசமானது(34)
பார்த்தா தூக்கத்தையும்,அச்சத்தையும், துயரத்தையும், மனக் கலக்கத்தையும் செருக்கையும் விடாது பிடிக்கும் அறிவிலியின் உறுதியோ தாமஸமானது.(35)
ஒருவன் எச்சுகத்தையும் பயிற்சியால் துய்த்துத் துன்பத்தின்  முடிவை அடைகிறானோ, அதன் மூவிதப் பாகுபாட்டையும் இப்போது என்னிடம் கேளாய் ,பரதகுலக் காளையே.(36)
எது முதலில் விஷம் போலவும்முடிவில் அமிர்தத்துக்கு ஒப்பானதுமாகிறதோ அந்த சுகம் சாத்விகமாம். ஆத்ம நிஷ்டையில்தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது(37)
பொறிபுலன்களின் பொருத்தத்தால்முதலில் அமிர்தம் போன்றிருந்து முடிவில் விஷம் போன்றதாகும் சுகம் ராஜசமென்று சொல்லப் படுகிறது(38)
துவக்கத்திலும் முடிவிலும் தன்னை மயக்குவதும் தூக்கம் ,சோம்பல், தடுமாற்றத்தில் இருந்து பிறப்பதுமாகிய சுகம் தாமஸமென்று உரைக்கப்படுகிறது(39)
இயற்கையிலிருந்து உதித்த இம்முக்குணங்களிலிருந்து விடுதலை அடைந்த உயிர் மண்ணுலகில் அல்லது விண்ணுலகில் வானவர்களுக்குள்ளும் இல்லை(40)
எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களுடைக கர்மங்கள் அவரவர் இயல்பில் உதித்த குணங்களுக்கு ஏற்ப பிரிக்கப் பட்டிருக்கின்றன(41)
அகக் காரணங்களை அடக்குதல், புறக்காரணங்களை அடக்குதல். தவம் தூய்மை,பொறுமை நேர்மை, சாஸ்திர ஞானம், சுவானுபவ ஞானம், ஈசுவர நம்பிக்கை-இவையாவும் இயல்பாய் உண்டாகிய பிராம்மண கர்மங்களாம்(42)
சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டாமை, கொடை, இறைமை, ஆகியவைகள் இயற்கையில் உண்டாகிய க்ஷத்திரிய கர்மங்களாம்(43)
உழவும் கால்நடை காத்தலும் வாணிகமும் இயல்பாய் உண்டாகிய வைசிய கர்மங்களாம். இட்டபணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டாகிய கர்மம்(44)
அவனவனுக்கு உரிய கர்மத்தில் களிப்புறும் மனிதன் நிறைநிலை எய்துகிறான். தன் கர்மத்தில் கருத்து வைப்பவன் எப்படி நிறை நிலை அடைகிறான் என்பதைச் சொல்லக் கேள்(45)
யாரிடத்திருந்து உயிர்கள் உற்பத்தி யாயினவோ. யாரால் இவ்வையகமெல்லாம் வியாபிக்கப் பட்டுள்ளதோ அவ் வீசுவரனை சுய கர்மத்தால் வணங்கி மனிதன் மேன்மை எய்துகிறான்(46)
நிறைவாய் அனுஷ்டிக்கும் பர தர்மத்தைவிட குறைவாய் அனுஷ்டிக்கும் ஸ்வதர்மம் சிறந்தது.சுபாவத்தில் அமைந்த கர்மத்தைச் செய்பவன் கேடு அடையான்.(47)
குந்தியின் மைந்தா, கேடுடையது எனினும் உடன் பிறந்த கர்மத்தை விட்டு விடலாகாது.ஏனென்றால் தீயைப் புகை சூழ்வது போன்று வினைகளை எல்லாம் கேடு சூழ்ந்துள்ளது(48)
யாண்டும் பற்றற்ற புத்தி உடையவனாய், சிந்தையை அடக்கியவனாய், ஆசை அற்றவனாய் இருப்பவன் சன்னியாசத்தால் உத்தமமான நைஷ்கர்ம்ய சித்தியை அடைகிறான்(49)
குந்தியின் மகனே, சித்தி அடைந்தவன் ஞானானத்தில் உயர் நிலையாகிய பிரம்மத்தை எப்படி எய்துகிறானென்பதைச் சுருக்கமாக என்னிடம் அறிந்து கொள்,(50)
தூய அறிவுடன் கூடியவன் உறுதியுடன் தன்னை அடக்கியும், சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களைத் துறந்தும், விருப்பு வெறுப்பை விட்டொழித்தும்(51)
தனித்திருந்து உண்டி சுருக்கிமனம் மொழி மெய்யை அடக்கி யாண்டும் தியான யோகத்தில் திளைத்திருந்து, வைராக்கியம் பூண்டவனாய்(52)
அகங்காரம் வன்மை செறுக்கு, காமம் குரோதம், உடைமை ஆகியவைகளை நீத்து மமகாரமற்று சாந்தமாய் இருப்பவன் பிரம்மம் ஆவதற்கு தகுந்தவன்(53)
பிரம்ம மயமாகித் தெளிந்தமனமுடையவன், துயர் உறுவதில்லை, அவா உறுவுவதில்லை, , எல்லா உயிர்களிடத்தும்  சமனா யிருப்பவன் என் மீது மேலாம் பக்தி பெறுகிறான்(54)
நான் எத்தன்மையன், யார் என்று பக்தியினால் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான், உள்ளபடி அறிந்தபின் விரைவில் என்னை அடைகிறான்(55)
எப்பொழுதும் எல்லாக் கர்மங்களையும் செய்தபோதிலும் என்னைச் சரணடைகிறவன் எனதருளால் சாசுவதமானதும் அழியாததுமாகிய பதமடைகிறான்(56)
விவேகத்தால் கர்மங்களையெல்லாம் என்பால் ஒப்படைத்து, என்னைக் குறியாகக் கொண்டு, புத்தி யோகத்தைச் சார்ந்திருந்து, யாண்டும் சித்தத்தை என்பால் வைப்பாயாக(57)
சித்தத்தை என்பால் வைத்து எனதருளால், இடைஞ்சல்களை எல்லாம் தாண்டிச் செல்வாய், அன்றி அஹங்காரத்தால் கேளாவிட்டால் கேடு அடைவாய்(58)
அஹங்காரங்கொண்டு போர் புரியேன் என்று நினைப்பாயாகில் உன் துணிவு வீணாகும். உன் இயல்பே உன்னைப் போரில் பிணைத்து விடும்(59)
குந்தியின் மைந்தா, மயக்கத்தால் எதைச் செய்ய மறுக்கிறாயோ, உன் இயல்பில் பிறந்த வினையினால் கட்டுண்டு உன் வசமிழந்தவனாய், அதையே நீ செய்வாய்.(60)
அர்ஜுனா, ஈசுவரன் உயிர்களை எல்லாம் உடல் என்னும் எந்திரத்தில் ஏற்றி, மாயையினால் ஆட்டிக்கொண்டு அவைகளின் உள்ளத்தில் இருக்கிறான்.(61)
அர்ஜுனா, எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடை. அவனருளால் மேலாம் சாந்தியும் நிலைத்துள்ள வீடு பேறும் பெறுவாய்.(62)
மறை பொருளுக்கெல்லாம் மறை பொருளாகிய ஞானம் இங்ஙனம் உனக்கு இயம்பப் பட்டது. இதை முழுவதும் ஆராய்ந்து விரும்பியதைச் செய்.(63)
அனைத்திலும் ஆழ்ந்த எனது மேலாம் மொழியை மீண்டும் கேள். நீ எனக்கு உற்ற நண்பனாகையால் உனக்கு நலத்தை நவில்கிறேன்.(64)
என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திடுவாய். என்னை வணங்கு.என்னையே அடைவாய்.உனக்கு உறுதி கூறுகிறேன்.எனக்கு இனியவன் நீ.(65)
தர்மங்களை எல்லாம் அறவே தியஜித்துவிட்டு(பரித்தியாகம் செய்து)என்னையே சரணடைக..பாபங்களில் இருந்து உன்னை நான் விடுவிப்பேன், வருந்தாதே(66)
தவமில்லாதவனுக்கும் , புத்தி இல்லானுக்கும் , தொண்டு புரியாதவனுக்கும் , என்னை இகழ்பவனுக்கும் இக்கோட்பாட்டை இயம்பாதே.(67)
மிக ஆழ்ந்த இத்தத்துவத்தைஎன் பக்தர்களிடத்து உபதேசித்து, என்னிடத்து மேலாம் பக்தி பண்ணுகிறவன் ஐயமின்றி என்னையே அடைவான்.(68)
மாந்தருள் எனக்கு விருப்பமான செயல்புரிபவனும்  அவனைவிட வேறு யாருமில்லை.. எனக்கு இனியவனும் அவனைவிட யாருமில்லை(69)
தர்மம் நிறைந்த நமது இச்சம்பாஷணையை, யார் கற்றறிகிறானோ, அவனால் ஞானயக்ஞத்தால் நான் ஆராதிக்கப் படுபவன் ஆவேன். இது என் கொள்கை.(70)
ஊக்கங்கொண்டு, அவமதிக்காது இதைக் கேட்கவாவது செய்யும் மனிதனும் விடுதலையுற்று நல்வினையாளர் எய்தும் நல்லுலகங்களை அடைவான்(71)
பார்த்தா ஒருமை மனதுடன் உன்னால் இது கேட்கப் பட்டதா.?தனஞ்சயா உனது அறியாமையாகிய மயக்கம் அழிந்ததா.?(72)

அர்ஜுனன் சொன்னது
அச்யுதா, மயக்கம் ஒழிந்தது. உமது அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது .ஐயங்கள் அகன்று போயின. உறுதியா யிருக்கிறேன் உமது சொற்படிச் செய்வேன்(73)
ஸஞ்சயன் சொன்னது.
இங்ஙனம் வாசுதேவருக்கும் மகாத்மாவான பார்த்தனுக்கும் இடையில் நிகழ்ந்த மயிர்க் கூச்சு உண்டு பண்ணும் அற்புத சம்பாஷணையை நான் கேட்டேன்(74)
வியாசர் அருளால். இந்த மேலாம் ஆழ்ந்த யோகத்தை தாமே சொல்லலுற்ற யோகேஸ்வரன் கிருஷ்ணனிடமிருந்து நான் நேரே கேட்டேன்(75)
வேந்தே கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய  இப்புண்ணிய சம்வாதத்தை நினைந்து நினைந்துநான் மீண்டும் மீண்டும் மகிழ்வடைகிறேன்.(76)
அரசே, ஹரியின் அந்த அதிசய வடிவத்தை இன்னும் எண்ணியெண்ணி எனக்குப் பெரு வியப்புண்டாகிறது. மேலும் மேலும் களிப்புமடைகிறேன்(77)
யோகேசுவரக் கிருஷ்ணனும் தனுசைத் தாங்கிய பார்த்தனும் எங்குளரோ, ஆங்கு திருவும் வெற்றியும் பெருக்கும், நிலைத்த நீதியும் உளவென்பது என் கொள்கை,(78)
                  மோக்ஷ சன்னியாச யோகம் நிறைவு.
                      ஸ்ரீமத் பகவத் கீதை நிறைவு. 
(அடுத்த கீதை பற்றிய பதிவு “சில எண்ணப் பகிர்வுகள”)   
           .    .                         
    .            
 
   

 
 

29 comments:

  1. அய்யா,
    வணக்கம். தங்களின் பதிவுகள் படிக்கச் சற்று வேதாந்த அறிவு வேண்டும்.
    வேதத்திற்கு நிருக்தம், வியாகரணத்திற்குக் காரிகை என்பார்களே அது போல...
    ஒரு ஓட்டில் ஓட்டிக் கடந்து போக முடியவில்லை.
    தங்கள் பதிவுகளை வெறும்வாசிப்பு செய்யவும் எனக்கு விருப்பமில்லை.
    அதற்கான தகுதிப்பாடு வேண்டுமல்லவா..?
    தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தங்கட்கு அறியத்தருகிறேன்.
    மீண்டும் வருவேன்.
    நன்றி

    ReplyDelete
  2. யோகேசுவரக் கிருஷ்ணனும் தனுசைத் தாங்கிய பார்த்தனும் எங்குளரோ, ஆங்கு திருவும் வெற்றியும் பெருக்கும், நிலைத்த நீதியும் உளவென்பது என் கொள்கை

    யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர: !
    தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம !! 78


    யோகேசுவரனாகிய கிருஷ்ணன் எங்கே இருக்கிறானோ, வில்வீரனான அர்ஜுனன் எங்கே இருக்கிறானோ அங்கே தான் மங்களமும் வெற்றியும் பெருமையும் நீதியும் நிச்சயமாக இருக்கும் என்பது கருத்து.

    அருமையான ஆக்கம் .
    நிறைவான பாராட்டுக்கள்.

    ReplyDelete

  3. சற்று நீளமான பதிவுதான் ஐயா தொடர்கிறேன்,

    ReplyDelete
  4. கொஞ்சமல்ல, ரொம்பவே நீளமாக இருக்கிறது! பெரிய காரியம் ஒன்று முடித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. தங்களது கீதைப் பதிவினைப் படித்துப் புரிந்துகொள்வதற்கு தனிப்பட்டநிலையிலான சிறப்பான அறிவு தேவை. இருப்பினும் அதனைப் படிக்கும் வாய்ப்பு தங்களால் எங்களுக்குக் கிடைத்தது. புரியவில்லை என்று நாங்கள் விட்டிருந்தால் ஒரு நல்ல தேவையான பதிவை நாங்கள் தவற விட்டிருப்போம். இவ்வாறான ஒரு தலைப்பினைத் தெரிவு செய்து எங்களை ஈடுபடவைத்ததே தாங்கள் செய்த அரும்பெரும் காரியம். இதனால் நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம்.

    ReplyDelete

  6. @ ஊமைக் கனவுகள்.
    நமக்கு ஒன்றுமே தெரியாது என்று எண்ணிப் படிப்பது வேறு. ஒரு சில அறிவுகளை வளர்த்துக் கொண்டு படிப்பது வேறு. என் அடுத்தபதிவில் இது பற்றிக் கூற இருக்கிறேன். மொழி தெரிந்து அதனால் வாசித்துக் கிடைக்கும் அனுபவம் நம்மைச் சிந்திக்க வைக்கும் என்பது என் கருத்து. வருகைக்கு நன்றி .மீண்டும் வாருங்கள்

    ReplyDelete
  7. @ இராஜராஜேஸ்வரி.
    சஞ்சயன் வாக்கால் பதிவு நிறை பெறுகிறது. அதுவே உங்கள் பின்னூட்டமாக இருக்கிறது உங்கள் நம்பிக்கையின் அஸ்திவாரம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  8. @ கில்லர்ஜி
    பதிவின் நீளத்துக்கு நான் பொறுப்பல்ல. 18-ம் அத்தியாயத்தில் அத்தனை சுலோகங்கள். வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  9. @ ஸ்ரீ ராம்.
    இது என் கற்பனைப் பதிவு இல்லையே. படிப்பவர்களைத் தயார் செய்யவே ஆரம்பத்திலேயே நீளம் குறித்து எச்சரித்தேன். வருகைக்கு நன்றிஸ்ரீ. என் எண்ணப் பகிர்வுகளைத் தயார் செய்து கொண்டு இருக்கிறேன். அதுவும் சற்று நீளமாகவே இருக்கும்

    ReplyDelete

  10. @ டாக்டர் ஜம்புலிங்கம். கீதை ஏதோ மகாப் பெரிய நூல் என்னும் எண்ணம் வேண்டாம். சொல்லப் போனால் என் மொழி அறிவும் புரிதலும் ஒன்றும் அதிகமில்லை. என் எண்ணப் பகிர்வுகளைப் பதிவாக்குகிறேன் அவசியம் வந்து படியுங்கள்.

    ReplyDelete
  11. யோகேஸ்வரக் கிருஷ்ணனும் தனுசைத் தாங்கிய பார்த்தனும் எங்குளரோ, ஆங்கு திருவும் வெற்றியும் பெருக்கும், நிலைத்த நீதியும் உளவென்பது சர்வ நிச்சயம்!..

    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!..

    ReplyDelete
  12. "யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ
    யத்ர பார்தோ தநுர்தர-
    தத்ர ஶஸ்ரீர்விஜயோ பூதிர்
    த்ருவா நீதிர் மதிர்மம-"
    கண்ணனும் அர்ஜுன்னும் உங்களுடன் எப்போதும் இருந்து ஊக்குவிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !

    ReplyDelete
  13. நீளமான பதிவுதான்
    நன்றி ஐயா

    ReplyDelete


  14. //தனஞ்சயா உனது அறியாமையாகிய மயக்கம் அழிந்ததா.?//


    அனைவருக்கு அறியாமை என்னும் மயக்கம் அழியவேண்டும் என்ற கருத்தை இப் பகிர்வின் அறியவைத்த உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  15. நிஷ்காம்ய கர்மத்தால் மட்டுமே மனிதன் முக்தியை அடைய முடியும் என்ற உண்மையை எத்தனை முறை படித்தாலும் இந்த பாழும் மனதிற்கு தெளிவு ஏற்படுவதே இல்லையே. அது ஏன்?

    ReplyDelete

  16. @ துரை செல்வராஜு
    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.என் அடுத்தபதிவை அவசியம் பாருங்கள்

    ReplyDelete

  17. @ செல்லப்பா யக்ஞசாமி
    நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. இதே பதிவின் பின்னூட்டங்களில் தாங்கள் கூறிய சஞ்சயனின் கருத்து பலராலும் எடுத்தாளப் பட்டிருக்கிறது. ஒரு வேளை அதிகம் மேற்கோள் காட்டப் படும் சுலோகமோ?வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  18. @ கரந்தை ஜெயக்குமார்
    சிரத்தை நீளம் தெரியாமல் போக்கும். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  19. @ வே.நடனசபாபதி.
    அறியாமை மயக்கம் தெளிய வேண்டும் என்பதே என் எண்ணமும்.அறிதல் என்பது பல பொருள்களில் உபயோகத்தில் இருக்கிறது. என் அடுத்த பதிவை அவசியம் படியுங்கள். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  20. @ டாக்டர் கந்தசாமி.
    எனக்குத் தெரிந்தவரை நீங்கள் தெளிவாய்த்தான் இருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  21. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  22. அருமை ஐயா.

    ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்து, தினமும் கொஞ்சநேரம் தினசரி பூஜை சமயம் படிக்கத் தீர்மானித்துள்ளேன்.

    மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete

  23. @ யாதவன் நம்பி.
    ஐயா நான் ஏற்கனவே உங்கள் பதிவுகளைத்தொடர்பவன் ஆகிவிட்டேன். ஆகவே உங்கள் பதிவு பற்றிய நினைவூட்டல் என் பதிவுகளின் பின்னூட்டத்தில் வேண்டாமே. நன்றி.

    ReplyDelete

  24. @ துளைசி கோபால்
    வருகைக்கு நன்றி. என்னுடைய அடுத்தபதிவைப் படித்தபின் தீர்மானிக்கலாமே இணையத்தில் பாரதியின் தமிழாக்கமும் விளக்கமும் கிடைக்கிறதே. இந்தப் பதிவுகள் பகவத் கீதை படிக்க ஒரு வாய்ப்பாகவே எழுதப் பட்டது,மீறி பக்தி என்று ஏதுமில்லை,

    ReplyDelete
  25. எப்பொழுதும் எல்லாக் கர்மங்களையும் செய்தபோதிலும் என்னைச் சரணடைகிறவன் எனதருளால் சாசுவதமானதும் அழியாததுமாகிய பதமடைகிறான்(56)

    பரமனிடம் சரணடைவது ஒன்று தான் மேலானது.

    அருமையாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. கொஞ்சம் நிதானமாய்ப் படிக்க வேண்டும். அவசரம் அவசரமாகப் படிக்க இயலாது. கீதை ஆன்மிகப் பாதையில் செல்பவர்களாலேயே புரிந்து கொள்ள இயலும் என எண்ணுகிறேன். என்னை மாதிரி வெறும் பக்தி நிலையில் இருப்பவர்களுக்கு ஸ்லோகங்கள் தான் சரியாக வரும். :))) ஆழ்ந்த அறிவு இருந்தாலே புரியும்.

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

    ReplyDelete

  27. @ கோமதி அரசு
    /அருமையாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்./ நான் எங்கே நிறைவு செய்தேன்.?18 அத்தியாயங்களுடன் கீதைப் பதிவு நிறைவு பெற்றது.சரணடைவது என்றால் உயிர் விடுவது என்றா பொருள்.இறந்தபின் சுகம் துக்கம் என்று எதுவுமே இருக்காது. என் அடுத்த பதிவு எண்ணப் பகிர்வுகளைப் படிக்க வேண்டுகிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  28. @ கீதா சாம்பசிவம்
    நிதானமாகப் படியுங்கள் bias ஏதும் இல்லாமல் படியுங்கள். ஆன்மீகம் வேறு பக்தி வேறு என்று குழப்பமாக இருக்கிறதா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  29. குழப்பமே இல்லை ஐயா, இன்று பலரும் பக்தியை ஆன்மிகம் எனச் சொல்வதால் அனைவரும் பக்தி செய்தலே ஆன்மிகம் எனத் தவறான கண்ணோட்டத்தில் இருக்கின்றனர். ஆன்மிகம் வேறு பக்தி வேறு என்பதில் எனக்கு எவ்விதக் குழப்பமும் இல்லை. ஆன்மிக நிலையை எட்ட எனக்கு எத்தனை ஜன்மம் வேண்டுமோ தெரியாது. இப்போதைக்கு என்னால் முடிந்தது எல்லாம் வெறும் பக்திதான். பல சமயங்களிலும் காரணார்த்த பக்தி! சாமானியர்களால் முடிந்தது இதுவே.

    ReplyDelete