பாரதி மன்னிப்பாராக
-------------------
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
மந்திரம் வேதம் என்பார் சொன்ன
மாத்திரம் பலன் தரும் என்பார்-தீதில்லை
தாரீர் விளக்கமென்றால் துச்சமெனவே
மதித்திடுவார் வீண்கேள்வி ஏனோ என்பார் ( நெஞ்சு )
கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ
காரணங் கேட்டே விளங்கியதிங்கு
யாவரும் உணர்ந்திட மறுத்திடுவார் ( நெஞ்சு )
கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் யாதெனும் அறிவுமிலார்
துடி துடித்து துஞ்சி மடிவோர் –துயர்
தீர்க்கக் கிஞ்சித்தேனும் சிந்தையிலார் ( நெஞ்சு )
சிற்றெறும்பு சேர்ந்தே கட்டிய புற்றதற்கு
வினை தீர்க்கும் பாம்புயிர்ப்பிடம் கூறியே
பால் வார்ப்பார்ஆறுதல் வேண்டி-மலர் தூவி
மணி அடித்துத் தீபம் காட்டுவார் ( நெஞ்சு )
சாத்திரங்களொன்றுங் காணார்-பொய்ச்
சாத்திரப்பேய்கள் சொல்லும் வார்த்தையிலே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் –ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் ( நெஞ்சு )
தோத்திரங்கள் சொல்லியவர்தாம்-தமைச்
சூதுசெயும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங்கொண்டதை வினவினால் –அது
முன் ஜென்மப் பாவ பலன் என்பார் ( நெஞ்சு )
எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார்
இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர்
சிந்தையில் உரைக்க இவர் வணங்கும்
தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.? ( நெஞ்சு )
-------------------------------------------
-------------------------------------------
சிறப்பான விழிப்புணர்வு வரிகள்...
பதிலளிநீக்குஅருமையா எழுதியிருக்கீங்க சார். பல வரிகள் நச்சென்று இருக்கிறது
பதிலளிநீக்குகீதா
முதலில் பாரதியின் பாடல் என்று நினைத்துவிட்டேன். வரிகள் வாசித்ததும் நீங்கள் எழுதியது என்று தெரிகிறது அந்த அளவிற்குச் சிறப்பான வரிகள் உங்கள் திறமை சார்.
பதிலளிநீக்குதுளசிதரன்
அருமை.
பதிலளிநீக்கு