புதன், 23 செப்டம்பர், 2015

பதிவர் விழா நினைவுகள்

                பதிவர் விழா நினைவுகள்.
               ----------------------------------------
2015-ஆம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் விழா புதுகையில் நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே.  2013-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வலைப் பதிவர் விழாவுக்கு என்னால் செல்ல இயலவில்லை. சென்றிருந்தால் என் கருத்துக்கள் சிலவற்றைப் பகிர விரும்பி அதையே “ நான் ஒரு கனா காண்கிறேன் எனும் பதிவாக்கினேன் 2014-ல் மதுரையில் நடந்த விழாவுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விட்டதும் அல்லாமல்  என் கனாக் காணும் உரையை மேடையில் நிகழ்த்தியும் விட்டேன்  இப்போது புதுகை விழா அக்டோபர் 11-ல் . போகும் உத்தேசம் இருக்கிறது. பார்ப்போம்  ஆனாலும் நடந்து முடிந்த விழாக்களை  நினைவு கூர்வதிலேயே நேரம் போய் விடுகிறது. பதிவுகள் எதுவும் எழுதத் தோன்றுவதில்லை. சில நாட்கள் பதிவுகள் வெளியாக வில்லை என்றால் என் இருப்பே சந்தேகத்துக்கு  இடமாகிவிடலாம் ஆகவே மதுரைப் பதிவர் விழாபற்றிய என் பழைய பதிவு மீண்டும் இங்கே 
மதுரையில் சந்தித்த பதிவர்களையும் அங்கு வர இயலாது இப்போது புதுக் கோட்டைக்கு வரும் பதிவர்களையும்  சந்திக்கும் ஆவலிலும் நினைவுகள் இப்பதிவில்  

திங்கள், 21 செப்டம்பர், 2015

முன்னேற்றமும் பண்பாடும்


                  முன்னேற்றமும்  பண்பாடும்
                  -----------------------------------------------
முன்னேற்றம் என்பதுதான் என்ன அதன் பொருள்
பலருக்கும் பலவிதம்-, சிலருக்கு
நடை உடை பாவனையில் தெரிவது
முன்னேற்றம்-.  சிலருக்கோ வாழ்க்கைத்
தரமே முன்னேற்றத்துக்கு கட்டியம்--
நல்ல பண்பாட்டுடனானதே முன்னேற்றம்.
பண்பாடென்பது சிறு வயதில் பயிற்றுவிப்பது
நல்லது எது அல்லது எது  என்பதெல்லாம்
உணர வைத்தல் பெற்றொரின் கடமை
ஐந்தில் வளைத்தல் பலன் பல தரும்  
என்றுஅடித்துக் கூறுவேன் நான்
   
அன்பே சிவம் என்றுணர்த்தல்--
அவனுக்கும் இவனுக்கும் எவனுக்கும்  
இதழ் விரிந்த சிரிப்பு, மூத்தோரிடம் மதிப்பு,
எளியோரைப் பேணுதல், இல்லார்க்கு ஈதல்,
இருப்பதில் இன்பம் காணல், ஔவையின்
ஆத்தி சூடி அறிதல், அதன் வழி நடத்தல்
கடின உழைப்புடன்  மனம் தளராமை,
இவையன்றோ நற்பண்பாட்டின்  குறியீடுகள்
நற்பண்புகள் மேலோங்க முன்னேற்றம் தானே வரும்

அதுவின்றி நெற்றியில் பட்டை நாமம்
கூடவே சதா நாவில் ஈசன் நாமம்
முன்வாய்ச் சிரிப்புகடைவாய்க் கடிப்பு
கபடதாரி வேஷம்உயர்வு தாழ்வு சிந்தனை
ஆலயங்கள் ஏனையாஅபிஷேகங்கள் ஏனையா
கோலங்கொடிகள் ஏனையாகொட்டு முழக்கம் ஏனையா
பாலும் பழமும் வைத்து நிதம்பணிந்து நடிப்பது ஏனையா
சீலம் பேணும் உள்ளத்தைத் தெய்வம்  தேடி வாராதோ
முன்னேற்றமும் கூடவே ஓடி வாராதோ


 முன்னேற்றமும்  பண்பாடும்
எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்
முன்னேறிய  உலகில் பண்பாட்டின் தேவை  என்னும் பிரிவுக்கு (வகை -4 ) இதனை அனுப்புகிறேன்  



.





புதன், 16 செப்டம்பர், 2015

பொருள்தெரிந்து ஓத


                          பொருள் தெரிந்து ஓத
                         ----------------------------------
என் புதிய கணினி

இந்தப் பதிவு என் புதிய கணினியில் இருந்து பதிவிடுகிறேன்  4 gb ram . 500 gb hdo, intel dual core. 19'  led, Dell  monitor  போன்ற வசதிகள் கொண்ட  விண்டோஸ்  7 கணினி.விநாயகச் சதுர்த்தி ஒட்டி இப்பதிவு வருவதாலும்  என் மனைவி கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் முதலில் விநாயக தோத்திரம்  இந்த ஸ்துதிகளை எனக்குத் தூக்கம் வராதபோது சொன்னால் தூக்கம் வரும் என்று என் மனைவி கூறியதால்  எனக்கு இவை மனனம்

சுக்லாம் பரதரம்  விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப  சாந்தயே

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
அவிக்னம் குருவே தேவ சர்வகார்யேஷு சர்வதா

கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேஸ்வர பாத பங்கஜம்

அகஜானன பத்மார்க்கம் கஜானன மஹர்நிசம்
அநேக தந்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

மூஷிக வாகன    மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித  ஸூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

இந்தப் பதிவு அது பற்றியதும் அல்ல. ஔவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல் பலராலும்  மனனம் செய்து வேண்டப்படுவது. ஆனால் அதில் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்கள் சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாதது. இந்தப் பதிவில் ஔவையாரின் அகவலின் பொருளைக் கூற முயற்சிக்கிறேன்  இருந்தாலும் அதை வரும் சில வார்த்தைகள் அர்த்தம் தெரியாதவையே  முதலில் அகவல்
சீதக்களப செந்தாமரைப்பூம் 
பாதச் சிலம்பு பல இசை பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழகெறிப்ப 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 
வேழமுகமும் விளங்கு சிந்தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும் 
நான்ற வாயும் நாலிறு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் 
திரண்ட முப்புரி நூல்  திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 
இப்பொழுது எனை ஆட்கொள வேண்டி
தாயாயெனக்கு தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதல் ஐந்தெழுத்துத் தெளிவாய்
பொருந்தவே எந்தன் உளன்ந்தற்புகுந்து
குருவடிவாகிக் குவலயம் தன்னில் 
திருவடி வைத்துத் திறமிது பொருளென
 வாடாவகைத்தான்  மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தால் கொடுவினைக் களைந்தே
உவட்டா............
முதலில் விநாயகப் பெருமானை வர்ணித்துப் பிறகு வேண்டுதல்களை வைக்கிறார்.
“........................................................................................................................
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து....

படிக்கும்போதே ஓரளவுக்குப் புரிகிறது.  இனி அவர் கேட்பது தெரிந்து கொள்வதே கடினம். அவரது ஒரு வார்த்தை புரிய என்னென்னவோ தெளிய வைக்கிறார்.

”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி 

நல்வினை தீவினை அதனால் ஏற்படும் மாய இருளை நீக்கி
சாலோகம்  சாயுஜ்யம் சாமீபம் சாரூபம்  என்னும் நான்கு தலங்களையும் எனக்குத் தந்து.....( இவையெல்லாம் எங்கிருக்கின்றன,அதன் நலங்கள் என்ன 
என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் )
“மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.

ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்களினால் ஏற்படும் மயக்கத்தை இறுத்து


” ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்
 ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
 ஆறாதாரத்து அங்குச நிலையும்
 பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே.

உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி மூலாதாரம் , சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்களில் நிறுத்தி
அதன் பயனாய் பேச்சிலா மோன நிலை அருளி ( குறிப்பிட்ட ஆறு ஆதாரங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பது என்று எண்ணுகிறேன் )

”இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்த்றிவித்து
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 


இடகலை பிங்கலைஎனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3)
சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி,

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
என் முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்படஎனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி,
இருத்திமுத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்து அருள்வழி காட்டி,
சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,
அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே.

இடையிலிருக்கும்  சக்கரத்தின் பதினாறு நிலையையும் உடலின் எல்லா சக்கரங்களின் அமைப்புகளையும் காட்டி உருவமான தூலமும் ,அருவமான சூட்சுகமும் எனக்கு எளிதில் புரியும்படி விளக்கி, மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன்மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி,கபால வாயிலை எனக்குக் காட்டித்தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்கருளி, நான் யார் என்பதை எனக்குத் தெளிவித்து,பூர்வ ஜன்ம வினையை நீக்கி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கருளி, அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி ,இருள் ஒளி இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே என்பதை உணர்த்தி
அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாகக் கூறி, அளவில்லாத ஆனந்தம் தந்து துன்பங்கள் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, உள்ளும் புறமும் சிவனைக்காட்டி, சிறியவற்றுக்கு சிறியது பெரியவற்றில் பெரியது எதுவோ அதை கணு முற்றி உள்ள கரும்பு போல எனக்குள் காட்டி , உண்மையான தொண்டர்களுடன் என்னைச் சேர்த்து ,அஞ்சக் கரத்தினுள்ள உண்மையான பொருளை என் மனதில் நிலை நிறுத்தி எனை ஆட்கொண்ட விநாயகப் பெருமானே உன் பாதார விந்தங்கள் சரணம்

அது சரி முதலில் நான் எழுதத் துவங்கியதற்கும் ஔவையின் அகவலுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். எண்ணங்களை அடக்க வேண்டும் . எண்ணங்களே எல்லாவற்றுக்கும் காரணம் .எண்ணங்களை நிறுத்த முடியாது. ஆனால் அடக்க முயலலாம். மூலாதாரத்து மூண்டெழு கனலை ( அதுதான் குண்டலினி சக்தியோ ?)ஆறு ஆதாரங்களின் வழியே கொண்டுவந்து கபால வாயிலில் நிறுத்தி..... அப்பப்பா. எண்ணங்களை கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்லிச் சென்றிருக்கிறாள் ஔவைப் பாட்டி. இதனை சுருக்கமாக தியானம் என்று சொல்லலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. உடற்கூறு பற்றி ஒரு பெரிய பாடமே அகவலில் இருக்கிறது. .

தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்தது என்று சொல்ல முடியவில்லை. பல நூறாண்டுகளுக்கு முன்பே இதை எழுதி இருந்தார் என்றால் , எல்லாம் அனுபவித்து அறிந்ததன் பயனாய்த் தான் இருக்கும்.
ஆனால் இதைச் சொல்லும்  நமக்கு இதில் ஏதாவது கை கூடி வருகிறதாஎன்று சிந்திக்க முனைபவன் என்னைப் போல் ஒரு பைத்தியக் காரன் என்றே தோன்றுகிறது ஒன்றுமட்டும் புரிகிறது. ஔவையாருக்கும் இவை கை கூடி வரவில்லை. அதனால்தானோ என்னவோ வேண்டுதல்கள். 
இந்தியாவின் பல பகுதிகளிலும் விமரிசையாகக் கொண்டாடப் படும் பண்டிகை விநாயகச் சதுர்த்தி/ இந்நாளில் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள் 

புதுகை பதிவர் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் களை கட்டிக் கொண்டிருக்கும் வேளையில் பதிவர் கையேட்டுக்கான விவரங்களை அளித்து விட்டீர்களா. இல்லையென்றால் உடனே செய்ய வேண்டுகிறேன்  இன்னுமொரு வேண்டுகோள் இடியாப்பச் சிக்கல் கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன்  பங்கேற்க  எழுதத் துவங்கி விட்டீர்களா விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்  




















   
  














திங்கள், 14 செப்டம்பர், 2015

சில பிரச்சனைகள் சில தீர்வுகள்


                                சில பிரச்சனைகள் சில தீர்வுகள்
                                 ----------------------------------------------


அண்மையில் தமிழ்மணமா புதிர் மணமா என்று எழுதி இருந்தேன்  அதில் நான் எழுப்பி இருந்த கேள்விகளுக்குத் தீர்வு கிடைக்காமல்தான் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் சில பதிவர்களின் பதிவுகளைப் படிக்கப் போனால் அவற்றின் அகலம் கணினியின் அகலத்தை விட அதிகமாக இருக்கிறது கர்சரை அங்கும் இங்கும் நகர்த்தி வாசிப்பது பெரும் பாடாக இருக்கிறது. குறிப்பிட்ட பதிவர்களுக்கும் தெரியப் படுத்தியும் எந்த தீர்வும் கிடைக்க வில்லை. நான் சற்றும் எதிர்பாராவிதமாக இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது
பொதுவாக பதிவுகளுக்குள் நுழைய நான் மோஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் உலவியை உபயோகிப்பேன் . அதை உபயோகிக்கும் போது என்னால் காணொளிகளைக் காண முடியாமல் இருந்தது. காணொளியைக் காண இருக்கும் பதிவுகளுக்கு நான் கூகிள் க்ரோம் உலவியை உபயோகிப்பது வழக்கம்  அதே உலவியில் இந்த கணினியை விட்டுப் போகும் பதிவுகளைப் பார்வையிடும் போது பிரச்சனை இருக்கவில்லை. ஏன் என்று தெரியாவிட்டாலும் ஒரு பிரச்சனைக்கு முடிவு கிடைத்தது.

இன்னொரு பிரச்சனை என்னவென்றால்  நான் பி எஸ் என் எல் ப்ராட் பாண்டை உபயோகிக்கிறேன்  அண்மையில் என் மாத பில் ரூ 3000/-வரை ஆகி வந்தது. எனக்கு இது கட்டுப்படி யாகவில்லை. ஆகவே அவர்கள் பில் கணக்கிடும் முறையைக் கண்டு வர ஒருவரை அனுப்பி இருந்தேன்  நான் கணினியைத் திறந்ததும் மோடம் மும் ஆன் ஆகிவிடும்  மோடம் ஆன் ஆன நேரமெல்லாம் கணக்கில் வரும் என்று தெரிய வந்தது. நான் பதிவுகளை வாசிக்காமல் இருக்கும் போதோ  கணினியில் கார்ட் விளையாடும் போதோ மோடம் ஆனில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் என் பதிவுகளை நான் எம் எஸ் வேர்டில்  ட்ராஃப்டாக எழுதும்போதும் மோடம் ஆனில் இருக்கத் தேவை இல்லை.  இவற்றிலும்  நான் கணினியில் கணிசமான நேரம் செலவிடுகிறேன் அப்போதெல்லாம் மோடம் கனெக்க்ஷனை எடுத்து விட்டால் கணினியில் கணக்காகும் நேரம் குறையும்  ஓரிரண்டு நாட்களாகக் கவனமாக இருக்கிறேன் பில் எப்படி எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும் ஒவ்வொரு நாளும் ஆகும் பில் எவ்வளவு என்று கணினியிலேயே பார்க்கவும் தெரிந்து கொண்டேன்
இந்தத் தீர்வுகள் பிறருக்கும் உதவலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன் 
இன்னொரு புரிந்து கொள்ள முடியாத பிரச்சனை. சிலரது பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதினால்  அந்தப் பதிவில் பின்னூட்டம் வந்தாலும் மறு நிமிஷமே என் மெயில் பாக்சில்  டெலிவெரி ஃபெயில்ட் என்றும் வருகிறது.காரணம் தெரிந்தவர்கள் விளக்கலாமே 
திடீரென்று என் கணினியில் பிரச்சனை. டெஸ்க் டாப்பின் பின்னணி நிறம் மாறி சிவப்பாகமாறி விடுகிறது. மானிடருக்கும் வயசாகி விட்டது. ஆனால் வலைப் பக்கம் வராமல் இருக்க முடியவில்லை. எழுத்துக்களைப் படிக்கவே மிகவும் சிரமம் கண் கெட்டு விடும் போலிருக்கிறது. ஒரு முறை கோபம் வந்து மானிட்டரை ஓங்கி அடித்து விட்டேன் . என்ன ஆச்சரியம் பழைய நிலைக்கு வந்து விட்டது. ஆனால் சிறி து நேரத்திலேயே மீண்டும் நிறம் மாறித் தொல்லை கொடுக்கிறது. அவ்வப்போது அதனுடன்மல்லுக் கட்டி வருகிறேன் பாவம் அதுவும் எத்தனை அடிதான் தாங்கும் . பேசாமல் ஒரு புதிய கணினி வாங்க ஐடியா. விசாரிக்கிறேன் பார்ப்போம். அது வரை மானிடர் அடி வாங்கும்  இல்லை ஒரேயடியாய் உயிர் துறக்கும்..    .  

  

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

இடியாப்ப சிக்கல் ( போட்டிக்கதை,)


                           இடியாப்ப சிக்கல் (போட்டிக்கதை)
                          -----------------------------------------------------


 போட்டி மகத்தான போட்டி.

 இதுவரை  ஓரளவு நிகழ்வுகளை ஒட்டியே எழுதிய  ஒரு கதையினைப் பதிவிடுகிறேன்  பதிவுலகின் வாசகப் பெருமக்களை அழைக்கிறேன். எழுதி உள்ள நிகழ்வுகளை  ஒட்டி இந்தக் கதையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எழுத்தாளப் பெருமக்களின் கற்பனைக்கும் திறமைக்கும் ஒரு சவால். உங்கள் தளங்களிலேயே எழுதி எனக்குத் தெரியப் படுத்துங்கள்

போட்டியில் பங்கு பெறுபவர்கள் அக்டோபர் 2015 முதல் வாரத்துக்குள்  எழுதி அவர்கள்  தளங்களிலேயே  பதிவிட்டு விட வேண்டும் வெற்றி பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கும்  பணியை சிறுகதை மன்னன்  திரு அப்பாதுரை சார் ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தேன் அவரும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் ,குறைந்த பட்சம் எட்டு கதைகளாவது வந்தால் பரிசு உண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பட்டத்துடன் முதல் பரிசாக ரூபாய் ஆயிரமும். இரண்டாம் பரிசாக ரூபாய் ஐநூறும் வழங்கப் படும் பதிவின் நீளம் குறித்து அவரவர்களே முடிவு செய்து கொள்ளலாம் 

இடியாப்ப சிக்கல்( போட்டிக்கான கதை )

நிகழும் மன்மத  ஆண்டு உற்றாரும் உறவினரும் குறிக்கும் நாள் ஒன்றில்
திருவளர்ச் செல்வன் சிவராமனுக்கும், திருவளர்ச் செல்வி

ராஜேஸ்வரிக்கும், நடை பெற இருக்கும் திருமணத்துக்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள, மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க , காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர, கன்னியவள் கையில் கட்டிவைத்த மாலை தர, காளைத் திருக்கரத்தில் கனகமணி சரமெடுக்க, ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்கக்.,கொட்டியது மேளம், குவிந்தது கோடிமலர், மனை வாழ்க, துணை வாழ்க,குலம் வாழ்க எனவே கட்ட வேண்டிய மாங்கல்யம் கட்டப்படாமலேயே  வந்து நின்ற பேரனைப் பார்த்துத் திடுக்கிட்டு நின்றனர். சிவராமனின் தாத்தாவும் பாட்டியும் . இருந்தாலும் அவர்களுக்கு ராஜேஸ்வரியை மிகவும் பிடித்துப் போயிற்று.



இந்த ராஜேஸ்வரி யார், என்ன செய்கிறாள்  என்றெல்லாம் கேள்விகள் எழுந்தபோது, சிவராமன் ”இதையெல்லாம் கேட்டுக் கொண்டா காதல் வருகிறது. எனக்கு இவளைப் பிடித்து விட்டது. அவளுக்கு என்னையும் பிடித்து விட்டது. சேர்ந்தே வாழ்கிறோம் உங்கள் மேல் இருக்கும் பிரியத்தினால் இவளை இங்கு அழைத்து வந்தேன்” என்றான். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்  காதல் வந்து விட்டால் எல்லாமே மாறும் என்று தெரிந்து கொண்டவர்கள் மேலே ஏதும் கேட்காமலேயே இருந்து விட்டனர்.
ராஜேஸ்வரிக்கும் எதையும் தெளிவு படுத்தப் பிரியமில்லை. தாயே இவளைத் தன் தங்கை என்று கூறும்போது. எதையாவது சொல்லப் போய் ரிஷி மூலம் நதிமூலம் கண்டு பிடிக்க முனைவது போல் ஆகிவிடும்
ராஜேஸ்வரியின்  தாயைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவள் பெயர் கல்யாணி. பெயர்தான் கல்யாணியே தவிர அவளது நடவடிக்கைகள் எல்லாமே இந்தியக் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். ஆனால் கல்யாணியோ கனவிலேயே வாழ்ந்தவள் அவளது அதீதக் கனவுகளே அவளது வாழ்க்கையின் திசை திருப்பலுக்குக் காரண்மாக இருந்தது. ஒரு சிறு நகரப் பெண். வாழ்க்கையில் எல்லா வற்றையும் நுகர்ந்து பார்த்து விட வேண்டும் என்பதே அவள் குறிக்கோள். அந்த வயதுக்கே வரும் ஆசைகள் அபிலாக்ஷைகள் எல்லாம் கல்யாணிக்கும் இருந்தது.  எந்த உறவிலும் தன்னை கட்டிப் போட விரும்பவில்லை அவள். கல்யாணம் செய்யாமலேயே கல்யாணி கணவனுடன்  வாழ்க்கை நடத்தி இரு குழந்தைகளையும் பெற்று விட்டாள். வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது அதைத் துரத்திச் செல்ல குழந்தைகள் தடையாய் இருந்தனர். அவர்களைத் தன் தாய் தந்தையருக்கே தத்து கொடுத்து விட்டு அவள் விலகி விட்டாள்  எப்போதாவது அவளைப் பார்க்கவரும் குழந்தைகளை தன் உடன் பிறப்புகள் என்றும் சொல்லிக் கொண்டாள். அவளது மனப் போக்கைத் தெரிந்து கொண்ட  அவளது மாற்றான் தகப்பனார் அவளைப் பலவந்தப் படுத்தியதின் விளைவே ராஜேஸ்வரி என்றும் அதனால்தான் தன் பிள்ளைகளை தன் தாய் , மாற்றான் தந்தையிடமே வளரவிட்டதாகவும் அரசல் புரசலாகப் பேச்சு இருந்தது. கல்யாணிக்குத் தகாத உறவின் விபத்து ராஜேஸ்வரி என்பது சரியாய் இருக்கும் பட்சத்தில் கல்யாணி ராஜேஸ்வரியைத் தன் தங்கை என்று சொல்லிக் கொள்வது புரிகிறது போல் இருக்கிறது 
கல்யாணிக்கு தன் சேர்ந்து வாழும் கணவனுடனான வாழ்க்கை  கசந்துவிட அவனை விட்டு வேறு ஒரு பசுமையான இடம் நோக்கி மேயத் துவங்கினாள்,கல்யாணிக்கு ஒரு கண்ணன் அகப்பட்டான் அவன் ஏற்கனவே மணமாகி ஒரு பெண்ணுக்குத் தந்தை.அந்தப் பெண்ணும் கல்யாணியுடனே வளர்ந்தாள். கண்ணன் கல்யாணி உறவு கல்யாணியின் மூன்றாம் திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்தது  கண்ணனால் கல்யாணியின் அதீத ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால் கல்யாணியின் வாழ்க்கைப் பாதையை திருத்தவும் முயற்சிக்கவில்லை. கல்யாணி வாழ்க்கை ஏணியில் எப்படியாவது மேலேறி விடவேண்டும் என்ற முனைப்பில் இருந்தாள். அவளுக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. ஏற்கனவே இருவருடன் வாழ்க்கை நடத்தியவளுக்கு மூன்றாமவன் ஒருவன் அதுவும் புளியங்கொம்பாய் இருப்பவன் கிடைத்து விட்டதால் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் அவளது இலக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.
இந்த மாதிரி சேர்ந்து வாழுபவர்களுக்கு கூட வாழ்பவர் ஏற்கனவே அதன் சுவை அறிந்தவர் என்பது  பற்றியெல்லாம் கவலை இல்லை. மேலும்வாழ்க்கையில் அந்தஸ்து என்பது பணத்தால் நிர்ணயிக்கப் படும்போது அது ஒன்றே குறிக் கோளாகி விடுகிறது.
என்னதான் நாம் வாழ்க்கைத் தரங்களை நாமாகவே தீர்மானித்துக் கொள்ளமுயன்றாலும் நம் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் நம்

 கலாச்சாரமும் பண்பும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது
கல்யாணியின் தற்போதையக் கணவனுக்கும் அவருடைய முன்னாள் மனைவிக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான் அவனே நாம் முன்பு சொன்ன ராஜேஸ்வரியுடன் வாழத்துணிந்த சிவராமன், இந்த சிவராமனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையிலான தொடர்பு கல்யாணிக்குப் பிடிக்கவில்லை. அவளும் இப்போதெல்லாம் ஒரு நவ நாகரிகமான பெரிய அந்தஸ்தில் உள்ளவள் ஆயிற்றே. மேலும் தன்


முன்னாள் கணவனின் மகளையும் தன்னுடனேயே தற்போதையக் கணவனின் பராமரிப்பில் வளர்த்து வருகிறாள்.
இந்த உறவு முறைகளையெல்லாம் வைத்தே விக்ரமாதித்தன் வேதாளம் இப்போது இருந்தால் கேள்வி கேட்டு மடக்கும். .கல்யாணிக்கு ஒரு ஆறுதல். யார் என்ன உறவுமுறையில் வாழ்ந்தாலும் மரபணு வேறாக இருக்கும் வரை அதிகம் சிந்திக்கத் தேவையில்லை. ஓரிரு தலைமுறைகளைப் பார்த்து அதில் வாழ்ந்து முன்னேறியவளுக்கு இந்த உறவு முறைச் சிக்கல்கள் ஆபத்தைக் கொண்டு சேர்க்குமோ என்னும் பயம் வந்தது. திட்டமிட்டுச் செயல் புரிபவளல்லவா. தன் தங்கையும் மக்ளுமான ராஜேஸ்வரியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தாள். ஏதோ ஒரு காரணம் சொல்லி  அவளைத் தன்னுடன் இருக்க வரவழைத்தாள். அவளைத் தேடிய சிவராமனிடம் அவள் அமெரிக்கா சென்றிருப்பதாகக் கூறினாள். பாவம் அவனும் நம்பிக் கொண்டிருந்தான் எந்த சந்தேகமும் இல்லாத ராஜேஸ்வரியைத் தன் முன்னாள் கணவன் கண்ணனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டாள்.

( கதையின் சிக்கல்கள் புரிகிறதா வாசகர்களே. உங்கள் கற்பனைக் குதிரையை முடுக்கி விடுங்கள். பரிசுகள் வெல்வதற்கே.)


 


 

புதன், 9 செப்டம்பர், 2015

பல்சுவைப் பதிவு


                                               பல்சுவைப் பதிவு
                                              --------------------------


ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வரமஹாலக்ஷ்மி நோன்பு அல்லது விரதம் . தமிழ் நாட்டைவிட இங்கு கர்நாடகாவில் பரவலாகக் கொண்டாடப் படுகிறது.அன்றைக்கு என்று என் வீட்டு மாவிலைகளுக்கு ஏககிராக்கி யாகிவிடும் கலசத்தில் மாவிலையை வைத்து அதில் வரமஹாலக்ஷ்மியை ஆவாகனம் செய்துபூஜிப்பார்கள். இது முற்றிலும் பெண்களுக்கான பண்டிகை, என் மனைவிக்கு நிறையவே இன்விடேஷன்கள் இருக்கும். ஆனால் என் வீட்டில் என்றுமே மஹாலக்ஷ்மி பூஜைதான் , ஒரு குத்து விளக்கில் அம்மனின் முகம் வைத்து எளிய ஆராதனை தினமும் செய்வாள் என் மனைவி 
விளக்கில் வெள்ளி முகம்
 
வெள்ளிமுகம் பாலிஷ் செய்யப்படும்போது இந்த பித்தளை முகம்

ஆகஸ்ட் 28-ம் தேதி ஓணம் பண்டிகை. நல்ல ஒரு அரசனை வதைத்த நாள் என்று சொன்னால் இல்லை அவனுக்கு மோட்சம் கொடுத்த நாள் என்று வாதிடுவோரும் உண்டு, மலையாளிகளின் மிக முக்கிய பண்டிகை. அவர்கள்தான் மகாபலிச்சக்கரவர்த்தியால் ஆளப்பட்டவர்கள் என்றும் அவர்களைக் காண மஹாபலிச் சக்ரவர்த்தி விஜயம் செய்வதாகவும் ஐதீகம் அன்று மலையாளிகள் பெரும்பாலோர் உற்றமும் சுற்றமும் கூட இருப்பார்கள்மக்கள் சந்தோஷமாக இருப்பதாகப் பாவிக்கும் நாள். மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. “உள்ளப் போள் ஓணம், இல்லெங்கில் ஏகாதசி”எது இருக்கிறதோ இல்லையோ ஓணம் பண்டிகையை விமரிசனமாகக் கொண்டாடுவார்கள். முன்பெல்லாம் கொண்டாடியதுபோல் இல்லை இப்போது. முன்பெல்லாம் வீட்டு வாசலில் மாதேறு என்று மண்ணால் பிடித்து வைத்து மலர்களால் அலங்கரித்துபத்து நாட்களுக்குக் கொண்டாடுவார்கள். அதைச் சுற்றி கைகொட்டுக்களி என்னும்நடனம் நடக்கும்.
 ஆனால் இப்போதெல்லாம் பூக்களம் என்று மலர் அலங்காரம் செய்து தங்கள் திறமையை நகரங்களில் வெளிப்படுத்துகிறார்கள்
மகன் வீட்டில் பூக்களம் 

பூக்களப் போட்டி...?
 
மகன் வீட்டில் சத்தியை.


 என்ன இருக்கிறதோ இல்லையோ ஓணம் சத்தியை இருக்கும் நகரங்களில் அதுவும் என்றாவது ஒரு நாள் ஓணம் சத்தியை கம்யூனிடி விருந்தாக சாப்பிடுகிறார்கள் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நமக்கு எப்போது சௌகரியமோ அப்போது இந்த விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. என் இரண்டாம் மகனும் மருமகளும் இன்று அதாவது செப்.ஆறாம் தேதி ஓணம் விருந்துக்குச்செல்கிறார்கள். என் மூத்தமகனும் மருமகளும் ஐந்தாம் தேதியே ஓணம் விருந்துக்குச் சென்று வந்தார்கள் என்று தகவல். ஆக பண்டிகைகள் அவற்றின் சாங்க்டிடியை இழந்து சௌகரியத்துக்கு கொண்டாடப் படுவதாகவே இருக்கிறது. ஓணம் முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்கு நான் மலையாளநண்பர்கள் வீட்டுக்குச் செல்லவே பயப்படுவேன்  ஓணத்துக்குச்சமைத்து வைத்த ஐட்டங்கள் பழையதாகி இருக்கும் அவையே நமக்கும் பறிமாறப்படும். என்ன இருக்கிறதோ இல்லையோ அவியல் இருக்கும்.......!இந்த ஓணத்தன்று நான் என் இரண்டாம் மகன் வீட்டில் விருந்துண்டேன்
மறு நாள் 29-ம் தேதி ஒரு தெலுங்கு நண்பர் வீட்டில் ச்ராவண சனிவார என்று மஹாலக்ஷ்மி நோன்புக்கு மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். அங்கும் பூஜையுடன் விருந்து.
நண்பர் வீட்டில் வரமஹாலக்ஷ்மி  அலங்காரம்
 
நண்பர் வீட்டில் விருந்து
5-9-2015 கிருஷ்ணஜயந்தி. அருகே இருக்கும் நாயர் செர்வீஸ் சொசைட்டியினர் சோபா யாத்திரா என்று ஊர்வலம் நடத்தினார்கள். மலையாளிகளுக்கே உரித்தான தால விளக்குகளைப் பெண்குழந்தைகளும் மகளிரும் ஏந்திவர சிறுவர்களும் சிறுமிகளும் கிருஷ்ண கோபிகைகள் வேஷம் அணிந்து ஊர்வலமாக வந்து ஐயப்பன் கோவிலில் உறியடியுடன் முடித்தனர்.  சென்ற ஆண்டு ஊர்வலத்தில் லோக்கல் அரசியல் வாதியும் கலந்து கொள்ள மிகப் பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது. இந்த வருடம் ஆர்பாட்டமில்லாத ஊர்வலம் 

கோகுலாஷ்டமி ஊர்வலத்தில் தால  விளக்குகள்.
வீட்டின் முன்பாக ஊர்வலம்
 
ஊர்வலத்தில் சிறார்கள் கிருஷ்ணன் கோபியராக

 
கிருஷ்ண விக்கிரகம் ஊர்வலமாக


பஞ்ச வாத்தியம்

 இதே கோகுலாஷ்டமி மும்பையில் கோவிந்தர்கள் என்னும் குழுவினர் மனிதப் பிரமிட் செய்து மிக உயரத்தில் இருக்கும் பானையை உடைப்பார்கள் தஹி ஹண்டி என்கிறார்கள். விழாக்கள் பல்வேறு விதமாகக் கொண்டாடப் பட்டாலும்  அவை இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் போது இதமாக இருக்கிறது.
இதற்கே மத வேஷம் போடாமல் சமூக விழாக்களாகக் கொண்டாடப்பட்டால் சந்தோஷமே. தீபாவளி கிருஸ்துமஸ்  போன்ற பண்டிகைக்களும் மதவேறுபாடில்லாமல் ஐக்கியமாகக் கொண்டாடப்படுவது நன்றே.
என் பெரியஅண்ணியின் முதல் ஆண்டு நினைவு தினத்துக்கு பாலக்காடு போயிருந்தபோது அவரது தம்பி வீட்டில் இருந்து ஒரு வெற்றிலைக் கொடியின் கிளை ஒன்றை எடுத்து வந்து என் வீட்டில் வைத்தோம் அது சற்றும் எதிர்பாராவிதமாக பின்பக்கத் தோட்டம் எங்கும்  பரவி  அருகே இருந்த மாமரத்தையும் பற்றிக் கொண்டு கடவுளைப் போல் எங்கும் நிறைந்திருக்கிறது. அவ்வப்போது சிலர் அதன் கிளைகளை வாங்கிக் கொண்டு போகிறார்கள். நாங்கள் வெற்றிலை போடுவதில்லை. வெற்றிலை போடுபவர்களுக்குக் கொடுக்கலாம் என்றால் யாரோ என் மனைவியிடம் வெற்றிலையைச் சும்மா கொடுக்கக் கூடாது என்றிருக்கிறார்கள் நாம் என்ன வியாபாரமா செய்ய முடியும் பூஜைகளுக்கு கொடுப்பதோடு சரி.

வெற்றிலைத் தோட்டம்
 .
மாமரத்தில் வெற்றிலைக் கொடி.
 


என் இரண்டாவது மகன் வீட்டுக்கு ஓணத்துக்குச் சென்றோம் என்றேன். அப்போது அவன் வளர்க்கும்  BUDDY என்னும் கோல்டென் ரெட்ரீவர் நாய் என் மனைவியிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டு விட்டது. ஐந்து மாதங்களே ஆன அந்த நாய்( குட்டி என்பதா ) நன்றாகவே வளர்ந்திருக்கிறது. ஆனாலும் அது அருகே வரும்போது ஒரு வித தயக்கமும் ஏற்படுகிறது. அதை ஒரு ராஜகுமாரன் போல் நடத்துகிறார்கள்.   .       .           
என் மனைவியின் மடியில் BUDDY
  அன்பு வாசகப் பெருமக்களேபுதுக்கோட்டை பதிவர் விழா ஏற்பாடுகள் களை கட்டிக் கொண்டிருக்கின்றன. பதிவர் கையேட்டிற்கான விவரங்களைக் கொடுத்து விட்டீர்களா.? இல்லையென்றால் உடனே செய்யவும்.அவர்களுக்கும் நேரம் வேண்டுமல்லவா. விவரங்கள் திண்டுக்கல் தனபாலன் வலைப்பூவிலும் bloggersmeet2015.blogspot.com  லும் இருக்கிறது.நன்றி.     . 


    .          

     .