Friday, March 2, 2012

நினைவில் நீ...(அத்தியாயம்--பதினொன்று.)


                             நினைவில் நீ ( நாவல் தொடராக )
                            ------------------------------------------------

                                                   ----  11  -----

      பாபு இரண்டு மூன்று நாட்களாக வேலைக்குப் போகவில்லை. உடல் நிலை சரியாயிருந்தாலும் மன நிலை சரியாக இருக்கவில்லை.. இரவில் வெகு நெரம் விழித்து உறங்கப் போவது, காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருப்பது, பகற்பொழுதில் வெறிச்சென்று உட்கார்ந்திருப்பது, என்று பார்க்கப் பார்க்க கல்யாணி அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. “ என்னடா இது, ..நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நீயே இப்படி மனசு ஒடிஞ்சு போயிட்டா, வீட்டிலே எப்படிடா சந்தோஷம் இருக்கும்.? குழந்தைகள் வேறு உன்னைப் பார்த்தாலே பயந்து சாகிறதுகள். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் எல்லோருக்கும் சரியெது தப்பெது என்று தெரியத்தான் போகுது. நீ வேலைக்குப் போய் சாதாரணமாய் இரு. எல்லாம் சரியாயிடும்.,“ என்று தான் மிகவும் பயந்து சொல்ல வந்ததை ஆறுதல் அளிக்கும்படிக் கூறினாள். பாபுவுக்கும் அதுதான் சரியெனப் பட்டது. மேலும் சும்மா இருக்கும் நேரத்தில் மன உளைச்சல் படுவதைவிட, அதை ஏதாவது ஆக்க வழியில் பயன் படுத்தினால், அதுவும் லாபகரமானதாய் இருக்கும் என்று தோன்றியது. கலை இலக்கியங்களுக்கு என்று ஏற்படுத்தப் பட்ட தமிழ் மன்றத்தை தற்கால இயல்புகளுக்கு ஏற்றபடி மாற்றலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதும், மன்றத்து காரியக்குழு உறுப்பினர்கள் தேர்வு அன்று மாலை நடக்க இருப்பதும் நினைவுக்கு வந்தது. தானும் போட்டி போடுவது, தேர்ந்தெடுக்கப் பட்டால் தன் எண்ணங்களை செயல் படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

     ஆதவனின் கிரணம் பட்டு விலகும் பனி போல பாபுவின் கவலைகள் அவனை விட்டு சற்றே விலகியது. பழைய பாபுவாக தன்னம்பிக்கை மிகக் கொண்டவனாக மாறினான்.

    காரியக் குழு உறுப்பினர் தேர்தலில் பாபு போட்டியிடுகிறான் என்ற செய்தி தெரிய வந்ததும், அமோகமான வெற்றியைத் தேடித் தந்தனர் பாபுவின் நண்பர்கள். அதோடு மட்டுமல்லாமல் குழுவின் தலைவனாகவும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டான்.

     பாபுவின் பேச்சுத் திறமையை மட்டுமே அறிந்திருந்த மன்றத்து உறுப்பினர்கள், மன்றத்தின் வருங்கால செயல் முறைகளை பாபு விளக்க முற்பட்டதும், பாபுவே எதிர்பார்க்காத முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட முத்தமிழின் வளர்ச்சிக்கென்று உருவாக்கப்பட்ட மன்றத்தை அன்றாடம் நடக்கும் வயிற்றுப் பாட்டு விவகாரத்தில் முக்கிய பங்கு ஏற்க வேண்டும் என்று பாபு கூறியதே எதிர்ப்புக்குக் காரணம்.

    ” கலையை வளர்க்கிறோம், தமிழ்ப் பணி புரிகிறோம், என்று சொல்லிக் கொண்டு, பழைய கம்ப ராமாயணச் சர்ச்சையிலும், வள்ளுவத்தின் மகத்துவத்தை மற்றவர் அறியச் செய்வதிலும், பாரதியின் பாட்டுப் புலமையை சிலாகிப்பதிலும் நேரத்தை செலவிடும் நம் மன்றம், உண்மையில் தமிழை வளர்க்கிறதா.? கலையை வளர்க்கிறதா,? இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பொழுது போக்கு மன்றமாகவே செயல் புரிகிறது. கம்பனும் வள்ளுவனும், இளங்கோவும் பாரதியும் தமிழுக்குத் தொண்டாற்றினார்கள். அதை அனைவருக்கும் உணர்த்த வேண்டியது அவசியம். ஆனால் அதுவே தமிழை வளர்க்கும் பணியென்று சொல்வது முறையா,?
இன்னொன்று கேட்கிறேன் நண்பர்களே, ! சற்று முரண்பாடாகத் தோன்றினாலும் உண்மை தெரிய வரும். தமிழ்ப் பணி என்று கூறி, மன்றம் நடத்தி, வளர்ந்த தமிழை வளர்க்கிறோம் என்று பெருமைப் படுவதைவிட , சற்றே பரந்த மனங்கொண்டு தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டாற்றும் மக்கள் மன்றமாக இதை மாற்றினால் இன்னும் நன்றாகத்தானே இருக்கும். மன்றம் நிறுவப் பட்டிருக்கும் இந்தப் பகுதி, பெங்களூருக்கே சிற்ந்த உதாரணமாகத் திகழ, வழி வகுக்கப்படக் கூடாதா,?ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குடும்பத்துப் பிள்ளைபோல் பணி ஆற்றக்கூடாதா.? எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை நாடாமல் நம் தேவைகளை நாமே ஓரளவுக்காவது பூர்த்தி செய்யக் கூடாதா. ? அந்த முறைக்கு அந்த வழியில் பணியாற்றும் மக்கள் மன்றமாக இது திகழக் கூடாதா.? இதுதான் என் கேள்வி. தனி மனிதனால் ஆகாத விவகாரங்கள் இவை. இவற்றுக்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் நல்லெண்ணமும்  ஆசிர்வாதமும் தேவை. நான் கொண்ட எண்ணங்களில் தவறிருந்தால் திருத்தப்படத் தயாராயுள்ளேன். “ பாபு அஸ்திவாரத்தையே மாற்ற விரும்புவதாக எல்லோரும் எதிர்த்தார்கள்.

      ‘தலைவர் கூறுவதுபோல் மக்கள் மன்றமாக மாற்றப் பட்டால் நாம் என்னதான் சாதிக்க முடியும். ?பசித்தவனுக்குச் சோறு போடும் அன்னதான மண்டபமாகக் காண்கிறாரா நம் மன்றத்தை. அப்படியானால் ஒவ்வொரு உறுப்பினரும் பிச்சை எடுத்துத்தான் மன்றம் நடத்த வேண்டி இருக்கும்.”

     பொழுதுபோக்கு மன்றமா இது என்ற பொருள் தொனிக்கக் கேட்கிறார் தலைவர். நான் கூறுகிறேன். ஆம்.! ஆயிரக்கணக்கான குடும்ப விவகாரங்களைக் கொஞ்ச நேரமாவது மறந்திருக்கலாமே என்றுதான் இந்த மன்றத்தின் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் வருகிறார்கள். சமூகத் தொண்டாற்றுகிறோம் என்று நாம் துவங்கினால், எள்ளி நகையாடப் படுவோம். நான் இதை வன்மையாக எதிர்க்கிறேன். “

     “சமூகத் தொண்டாற்றும் மன்றமாக மாறலாம் என்று சொல்வதைக் கேட்க என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் அது என்ன என்று வரையறுக்கப் படாத வரையில் நாம்புரிந்து கொண்டு வருவதும் சமூகத் தொண்டுதான் என்பது என் அபிப்பிராயம். “

     எல்லாவிதமான எதிர்ப்புக் கருத்துக்களும் தெரியப் படுத்த்ப் பட்டன. பாபுவுக்கு, ஏன் என்னைப்போல் நினைக்கும் ஒருவராவது இங்கில்லையா.? இல்லை ,நான் நினைக்கும் விதமே இயற்கைக்கு முரண்பாடாக உள்ளதா.?என்ற ஐயமே மேலிட்டது. கடைசியாக விட்டுக் கொடுக்கும் எண்ணத்திலும், ஒரு சிலவற்றையாவது மன்றத்தின் முன் வைத்து செயல் படுத்தக் கடைசி முயற்சி என்ற விதத்தில் “ சமூகத் தொண்டென்பது இன்னதுதான் என்று வரையறுக்கப் பட வில்லை என்றார் ஒரு நண்பர். பிச்சை யெடுக்க வேண்டி இருக்கும் என்றார் இன்னொருவர். யாருமே நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டார்கள் என்றார் மூன்றாமவர். நான் கூற வந்ததென்னவோ, தமிழ் மன்றத்தின் பணியில் ,இன்னும் சிலவற்றை சேர்க்கலாம் அதுவும் சமூகத் தொண்டு என்ற பரந்த நோக்கத்தில் இருக்கட்டும் என்பது தான். பாரதியைப் பற்றிப் புகழ்கிறோமே தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினவன், ஆஹா என்கிறோமே , அந்தக் கள்ளிகளையும் களான்களையும் அழிக்கும்வகையில் ஒரு முயற்சி நாம் செய்யக் கூடாதா என்றேன். அதற்காகப் பிச்சை எடுத்து அன்னதான மண்டப மாக்கவும் வேண்டாம்.பள்ளிகள் துவக்குவோம். அங்கு பிஞ்சு உள்ளங்களில் பாரதியின் இனி ஒரு விதி செய்வோம்என்ற ஊக்கத்தை புகட்டுவோம். ஏமாற்று காரர்களும் எத்தர்களும் நிறைந்த நம் சமூகத்தில் ஏய்த்துப் பிழைப்பவர்களை காட்டிக் கொடுக்கும் வகையில் கூட்டுறவு பண்டக சாலைகள் நிறுவுவோம்.  இதற்கான முதலுக்கு இருக்கவே இருக்கிறது நமது முத்தமிழ். நாடகங்கள் நடத்துவோம், நல்லதை உணர்த்துவோம். ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு பத்து பேராவது நம்மோடு சேர மாட்டார்களா. ? நமது மன்றம் வலுக்காதா.? மக்கள் குரல் ஓங்காதா.? நம்மைப் பிடித்திருக்கும் சோம்பலை ஒழிக்க ,மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய, இந்த மன்றம் வழி வகுக்கக் கூடாதா.?அஸ்திவாரத்தையே நான் மாற்ற விரும்புகிறேன் என்றால் அது ஓரளவுக்குத்தான் உண்மை.அந்த அளவுதான் நம் சக்தி என்று எண்ணுகிறேன். பாரதியோ ஒழித்துக் கட்டு என்றல்லவா முழங்கினான்.

   .இந்த எண்ணங்க்ளுக்கு உயிர் கொடுக்கவே நான் போட்டியிட்டேன். உணர்த்தப் படாத எண்ணங்களும் உணர்ச்சிகளும் இலை பழுத்து உதிர்ந்து சருகாகிப் போகும் நிலைமை போலாகி விடக் கூடாதே என்றுதான் என் எண்ணங்களை உங்கள் முன்னிலையில் வைத்தேன். எதிர்ப்பு இருந்தாலும் அது இப்போது மறைந்திருக்கும் என்றே நம்புகிறேன் “என்று அழுத்தமாக ,ஆணித்தரமாகக் கூறினான்.

     மொத்தத்தில் பாபு தமிழ் மன்றத்தை வலுவுள்ளதாகச் செய்யத்தான் மக்கள் மன்றமாக மாற்றச் சொல்லுகிறான், என்று உணர்ந்த மன்றத்து உறுப்பினர்கள், பாபுவின் தீர்மானத்தை ஆதரித்தார்கள் இது பாபுவுக்குக் கிடைத்த வெற்றிகளில் ஒன்று என்று அவனே எண்ணினான். அந்த எண்ணம் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை நிரூபிக்கச் செய்யும் வகையில் இருந்ததால், பாபு முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று உறுதியாக நம்பினான்.

     ஏற்படுத்திய மாற்றத்தை வெள்ளோட்டம் விட ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார்கள். முத்தமிழும் இடம் பெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க பெரிய மனிதர் ஒருவரைத் தேடி அலைய வில்லை. அவர்கள். உள்ளூரில் நல்லவர் என்று பெயரெடுத்த ஒரு சாதாரணமான வரையே அழைத்தனர். அலசூரிலேயே நிகழ்ச்சிகளைக் கொண்டாட திட்டமிட்டனர். ஏற்பாடுகளைக் கண்டும் கண்காணித்தும் வந்த பாபுவுக்கு ஒரு புது வேகமும் உற்சாகமும் ஏற்பட்டது. நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் நடத்தி கணிசமான தொகையைத் திரட்டி ஆரம்பத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்துவதென்பதும், அதில் பணியாற்ற ஊதியம் பெற விரும்பாத நல் உள்ளத்தவரைத் தேடிக் காண்பதும் பாபுவின் சுமையாகி விட்டது.
------------------------------------------------------------------

                                                           ( தொடரும் )    
 

  




8 comments:

  1. //சுமையாகிவிட்டது. //

    சுமை?..

    ReplyDelete
  2. சுமை என்பது கடமை ,பொறுப்பு என்னும் பொருளில் எழுதப் பட்டது. இது பெண் கருவில் இருக்கும் குழந்தையைச் சுமப்பதுபோல் ஆகும். தவறா ஜீவி.?

    ReplyDelete
  3. கதைவழியே...அற்புதமான கோணங்களும் கருத்துக்களும் வைத்திருக்கிறீர்கள்...ரொம்பவும் பாராட்டத்தக்கது...

    ReplyDelete
  4. தவறு, சரி என்று இல்லை.

    இலட்சியங்கள் எப்பொழுதும் உணர்வு சம்பந்தப்பட்டவை. அந்த மாதிரியான உணர்வு இல்லாதவர்கள் எப்பொழுதும் இந்த மாதிரியான எண்ணங்களிலிருந்து விலகியே இருப்பர். முதலில் மனத்தைப் பற்றிக் கொள்ளும் அவை பின் அவனையே பற்றிக் கொண்டு அவனாகவே ஆகும்.

    அதற்காகத் தான் உயிர் வாழ்கிறோம் என்கிற நினைப்பில் சுமையாவது ஒன்றாவது?

    அப்படியான இலட்சியங்கள் அவனுள் பொய்த்துப் போகும் போது தான் அதன் ஆளுகையின் பிடிப்பிலிருந்து விலகல் ஏற்படும்.

    இலட்சியங்கள் வெற்றியடைந்தாலோ அதற்கும் மேலான இன்னொரு இலட்சியத்திற்கு இட்டுச் செல்லும்.

    கடமை பொறுப்பு என்பதற்கெல்லாம் மேலான ஒன்று இதெல்லாம். கருவில் இருக்கும் குழந்தையை தாய் சுமப்பதும் கடமை, பொறுப்பினால் அல்ல.

    குழந்தை என்பது அவள் உயிரை பின்னமிட்ட இன்னொரு உயிராகவே வளர்கிறது. அதனால் தான் இன்னொரு உயிராகவே வெளிப்படுகிறது. தாயும், தந்தையும் தங்கள் குழந்தையில் தங்களையே தரிசிக்கலாம்.

    ReplyDelete
  5. தேர்தல் முழக்கம் போலவே இருந்தது படிக்க.
    சுமை பற்றிய கருத்துப் பரிமாற்றம் சுவை.
    எப்பொழுதோ படித்த என் நண்பனின் கவிதை.
    சிறுகுழந்தையைப் பற்றியத் தாயின் புலம்பல்:
    - கையிலெடுத்தால் கை வலிக்கிறது; இறக்கி வைத்தால் மனம் வலிக்கிறது.

    சுமை இங்கே பொருத்தமாகவே தோன்றுகிறது.

    ReplyDelete
  6. @ ஜீவி,
    கருவில் தாய் சுமப்பது கடமை என்றோ பொறுப்பு என்றோ அர்த்தத்தில் கூறவில்லை. சுமை அதுவும் சுகமான சுமை என்பது போல.

    ReplyDelete
  7. எப்பொழுது அது சுமை என்று ஆகிவிட்டதோ, அப்பொழுது அது
    சுமை தான். அது சுகமானது என்று நினைத்துக் கொள்வது பிரமை தான்.

    அப்பாஜி கூட ஒரு தாயின் புலம்பல் கவிதையை எடுத்துச் சொல்லியிருக் கிறாரே! அந்தக் கவிதை குழந்தை பிறந்த பிறகான தாயின் மன இயல்பை, உடல் வலுவில்லாத தன் இயலாமையைச் சொல்வது. 'இறக்கி வைத்தால் மனம் வலிக்கிறதாம்'-- இரண்டே வரிகளில் எவ்வளவு அருமையான வெளிப்பாடு என்று வியக்கிறேன்.

    கருவிலிருந்த பொழுது சுமை தெரியவில்லை. அந்த சுமையை அவளது மகிழ்ச்சி தாங்கிக் கொண்டிருந்தது.
    கைக்கு வந்த பிறகு, பலஹீனமான உடல் வாகு, வலிக்கிறதாம்! இறக்கி விட்டாலோ மனம் வலிக்கிறதாம்.
    தூக்கினாலும் வலி; இறக்கிவிட்டாலும் வலி. ஒரு தாயின் துடிப்பை இதை விட அருமையாக சொற்களில் அடக்கி வைக்க முடியுமா? அந்தக் கவிதையை படித்து விட்டு பிரமிப்பு தான் மிஞ்சுகிறது.

    வரிசையாக குழந்தையைப் பெற்ற தாய், வறுமையின் பிடியில், சுமக்கின்ற காலத்தில், "இது இல்லேன்னு இப்ப யார் அழுதா?" என்று கூட வார்த்தைகளை உமிழலாம். அதற்குக் கூட சுமை காரணமில்லை. அந்த வறுமை தான்.

    தமிழ் அற்புதமான மொழி. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பொருள் கொடுக்கக் கூடிய ஏகப்பட்ட சொற்கள். அதனால் தான் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாம் இருவரும் நினைப்பது ஒன்றே தான் எனில் இந்த விளையாட்டு முக்கியமில்லை.

    யார் எழுதியதோ தெரியவில்லை. அருமையான கவிதை ஒன்றை எடுத்தாண்ட அப்பாஜிக்கு நன்றி.
    தங்கள் அன்பு மறுமொழிக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. என் தொடர் கதையைப் படித்து கருத்துப் பதிவிட்ட ஜீவி, ஷக்திபிரபா,அப்பாதுரை அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete