Thursday, March 7, 2013

மதுரைப் பயணம்.

      
                                                          மதுரைப் பயணம்.
                                                          --------------------------

                                              மதுரை மீனாட்சி அம்மன் ஓவியம்
                                              ------------------------------------------------   
மதுரைக்கு நான் நான்கைந்து முறை வந்திருந்தாலும் இப்போதையப் பயணம்,ஒரு விதத்தில் சிறப்பாக அமைந்தது. அமைய வேண்டும் என்று விரும்பி திட்ட மிட்ட பயணம், திட்டமிட்டுச் செய்த பயணம். என் மனைவி பலமுறை பார்த்த மதுரைக்கு இப்போது செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டாள்.. மதுரையில் தமிழ் வளர்க்கும்  முகம் காணாத பதிவுலக நண்பர்களைக் காண வேண்டும் , அவர்களுடன் சற்று நேரமாவது பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தைக் கூறியவுடன் அவளும் பச்சைக் கொடி காட்டினாள்.  பெங்களூரில் இருந்து மதுரைக்கு ரயில் பயணச்சீட்டு கிடைப்பது அரிதாயிருந்தது. நான் வார இறுதி நாட்களைத் தேர்வு செய்தேன். அப்போதுதானே எல்லோரையும் சந்திக்க ஏதுவாயிருக்கும்..டிக்கட் கிடைக்க ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டும்.எனக்கோ பொறுமை இல்லை. “சங்கம் முழங்கும் திரு மதுரை நகர் வளரும் இங்கிதம் பொங்க வரும் எழில் தரும் மீனாட்சிஎன்று சிறு வயதில் பாடும் என் தம்பிக்கு மதுரைப் பயணம் கூறி ஆவல் ஏற்படுத்தினேன். அவனது மனைவியின் வீட்டில் மீனாட்சி அம்மனுக்கு தனி பூசை செய்யும் வழக்கம் கேள்விப்பட்டு அவர்களுக்காக, மீனாட்சி அம்மனின் திரு உருவப் படம் ஒன்றை தஞ்சாவூர் ஓவியமாகத் தீட்டி இருந்தேன். அதை ஒரு வருட காலமாக அவர்களிடம் சேர்ப்பிக்க முடியாமல் காத்திருந்தேன். அதை அவனிடம் சேர்ப்பித்து கோவையிலிருந்து அவர்களையும் கூட்டிக்கொண்டு மதுரை செல்லத் திட்டமிட்டேன்.பிறகென்ன. ஒரே கல்லில் பல மாங்காய்கள். ஓவியத்தை அவர்களிடம் சேர்ப்பது, அவர்களுக்கு மதுரையைச் சுற்றிக் காண்பிப்பது, எனக்கு என் பதிவுலக நண்பர்களைக் காண ஒரு சந்தர்ப்பம் அமைப்பது. என்று எல்லாமே திட்டமிட்டபடி நடந்து இன்றுதான் பெங்களூர் திரும்பினோம். மதுரையில் பதிவுலக நண்பர்களுக்கு என் பிரயாண திட்டங்களை அஞ்சல் மூலம் தெரிவித்தேன். நண்பர் S.வெங்கட்டுக்கு என் தனி நன்றியைச் சொல்ல வேண்டும். திரு. ரமணியின் அஞ்சல் முகவரி தொலை பேசி எண்ணென்று கொடுத்து உதவினார். மதுரை சரவணனை முன்பே பெங்களூரில் சந்தித்து இருக்கிறேன். என் வீட்டுக்கும் வந்திருந்தார். என்னைப் பற்றி பெங்களூர்த் தந்தை என்று ஒரு பதிவையே எழுதி கௌரவித்திருந்தார். எனக்கு அவர் மேல் ஒரு தனி மரியாதை. ஆசிரியப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்பவர். அவர் மூலம் திரு. சீனா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரிடம் திரு. சீனாவையும் பார்த்துப் பேச விருப்பம் தெரிவித்து அவரையும் அழைத்து வர வேண்டி இருந்தேன். சிவகுமாரனின் கவிதைகளுக்கு நான் அடிமை. என்னவோ அவர் மேல் ஒரு சொல்ல முடியாத பாசம். அவரையும் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தேன். இதையேல்லாம் விட ஒரு போனசாக சரவணன்  தமிழ் வாசி பிரகாஷையும் அழைத்து வந்திருந்தார்.
நான்தான் ஒவ்வொருவரையும் அவர்களுடைய இடத்துக்குச் சென்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் மாறாக என் விருப்பத்துக்குக் மதிப்பு கொடுத்து நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் டைம்ஸுக்கு என்னைப் பார்க்க வந்து அவர்களது நேரத்தை எனக்காக ஒதுக்கி வைத்தது மகிழ்ச்சி அளித்தது. நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மகிழ்ச்சியில் மூழ்கிய தருணங்கள். அவை. என்னால் மறக்க முடியாதது.


சிவகுமாரனின் மனைவிக்கு உடல் நலம் சரியாக இல்லாமலிருந்ததால் அவர் சற்று நேரம் தாமதித்து வந்தார். ரமணி அவர்களுடன் நிறையப் பேசினேன். அவரவர் எழுத்து மற்றும் சொல்லும் விதம் என்று நிறையப் பேசினோம். எல்லோருக்கும் அப்பாதுரையின் எழுத்தையும் அவரையும் பிடித்திருந்தது தெளிவாகப் புரிந்தது.அந்த சில மணிநேரம் மதுரை குலுங்கி இருக்க வேண்டும். இந்தப் பயணத்தின் மூலம் தமிழ்வாசியின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. நான் அவரது பதிவுகளை எப்படி தவற விட்டேன் என்பது புரியவில்லை. என்னுடைய காமிராவில் சில படங்கள் எடுத்தேன். அவை அவ்வளவு நன்றாக வரவில்லை. தமிழ் வாசி அவரது பதிவில் ஒரு போட்டொ இணைத்திருக்கிறார். பதிவர் சந்திப்பு என்று எழுதியும்விட்டார்.
திருமதி .கீதா சாம்பசிவம் நான் மதுரை சென்று வந்த பிறகு மதுரையைப் பற்றி எழுதச் சொல்லி இருந்தார்.

மதுரையின் மைந்தர்கள் அநியாயத்துக்கும் நல்லவர்களாக இருக்கிறார்கள். போகுமிடத்துக்கு வழி கேட்டால் ஒன்றுக்கு மூவர் ஆர்வத்துடன் பதில் தருகிறார்கள். எல்லாமே கோவிலைச் சுற்றியே இருப்பதாலும். எப்படி இருந்தாலும் மக்கள் வருகை குறையாது என்பதாலும், எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன என்று தோன்றுகிறது. கஸ்டமர் திருப்தி என்பதைப் பற்றிக் கவலையே படுவதில்லை என்றே தோன்றுகிறது. கோவிலுக்கு வெளியே ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் கோவிலுக்கு உள்ளே புகைப்படக் காமிராவுக்கு இவ்வளவு , வீடியோ காமிராவுக்கு இவ்வளவு கட்டணம் என்று அறிவிப்பு தொங்குகிறது. காரணம் கேட்டால் ஹைதராபாத் குண்டு வெடிப்பு என்கிறார்கள். என்ன. .... எனக்கு ஃபோட்டோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லை. மீனாட்சி அம்மனின் கோவிலை அனுபவித்து தரிசிக்க “ஒரு நாள் போதுமா.?அருமையான சிற்பங்கள், ஓவியங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை கூறுகிறது. சிவகுமாரன் ஒரு முறை கல் யானைக்குக் கரும்பு கொடுத்தவரே என்று எழுதி இருந்தார்.அக்கதைகூறும் ஒரு சிற்பம் கண்டேன். என் மகனின் நண்பர் ஒருவரின் உபயத்தால் மீனாட்சி , சோமசுந்தரர் தரிசனம் திவ்யமாய் அமைந்தது. திருப்பரங்குன்றம் சென்றோம். அங்கே குமரனின் திருக்கல்யாணம் யார் உபயத்திலோ நடந்து கொண்டிருந்தது.  கண்ணாரக் கண்டோம். அழகர் மலையில் நூபுர கங்கை காண அவ்வளவு கூட்டம். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது.  நாங்கள் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது என் குடும்பத்தவர் நாயக்கர் மஹாலில் லைட் அண்ட் சௌண்ட் ஷோ, கண்டு வந்தனர்.
எல்லோரும் திருப்தியடைந்த இந்தப் பயணம் will linger in my memory for a long time.                

 


 

 
 
                             

17 comments:

 1. /// மதுரையின் மைந்தர்கள் அநியாயத்துக்கும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ///

  !!! சந்தோசம் ஐயா...

  ReplyDelete
 2. எங்கள் ஊருக்கு சென்று வந்தீர்களா! மகிழ்ச்சி.
  நீங்களே செய்த மீனாட்சி தஞ்சை ஓவியம் அருமை.
  மதுரையில் பதிவர்களை சந்தித்தது அறிந்து மகிழ்ச்சி.
  நானும் சீனா சாரை மதுரையில் சந்தித்து பேசி இருக்கிறேன்.
  மதுரை மைந்தர்கள் நல்லவர்கள் என்று சொன்னதற்கு நன்றி.

  ReplyDelete
 3. மீனாட்சி அம்மனின் திரு உருவப் படம் ஒன்றை தஞ்சாவூர் ஓவியமாகத் தீட்டி இருந்தத்து கண்களையும் மனதியும் நிறைத்தது ஐயா..

  மதுரைபற்றி மறக்கமுடியாத அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. // கோவிலுக்கு வெளியே ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் கோவிலுக்கு உள்ளே புகைப்படக் காமிராவுக்கு இவ்வளவு , வீடியோ காமிராவுக்கு இவ்வளவு கட்டணம் என்று அறிவிப்பு தொங்குகிறது. காரணம் கேட்டால் ஹைதராபாத் குண்டு வெடிப்பு என்கிறார்கள். என்ன. .... எனக்கு ஃபோட்டோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லை. //

  நானும் மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் கோயிலை விதம் விதமாக படம் எடுக்கலாம் என்று இருந்தேன். இனிமேல் அவ்வளவுதான் போலிருக்கிறது. போட்டோ எடுக்க அனுமதித்தால் நல்லது.

  ReplyDelete
 5. உங்களுடைய மதுரை மீனாட்சி
  Tanjore paintingஇல் மனதை கொள்ளையடிக்கிறாள்.
  மதுரை பயணம் மிக அருமையாக
  பதிவு செய்துள்ளீர்கள்.
  பதிவர் சந்திப்பு வேறு நடந்திருக்கிறது.அதையும் அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.
  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 6. தங்களின் மதுரை பயணம் அருமையான பதிவு அய்யா. தஞ்சாவூர் பக்கம் வந்தால் தெரிவியுங்கள் அய்யா. ஆவலுடன் சந்திக்கக் காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
 7. நல்ல கால நிலை. மே மாசம் போயிருந்தால் சுக்காகி இருப்பீர்கள்.

  ReplyDelete
 8. அன்பின் பாலசுப்ரமணீயம் அய்யா - மதுரையில் சந்தித்து அளவளாவி - பதிவர் சந்திப்பினை வெற்றிகரமாக நடத்தியமை நன்று. நண்பர்களைக் கண்டு மகிழ்ந்தமை பாராட்டுக்குரியது. மனைவி உள்ளிட்ட உறவினர்களீடம் எங்கள் அன்பினைத் தெரிவிக்க வேண்டியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. அதான் கொஞ்ச நாளா அமைதியா இருந்துச்சா?
  பிற பதிவர்களைச் சந்திக்க நேரம் எடுத்துக்கிட்டது சந்தோஷம் சார். ரமணி கிட்டே எம்ஜிஆர்/கழக அரசியல் பத்தி பேசச் சொன்னீங்கன்னா நாள் முழுக்க ரசிச்சுக்கிட்டே இருக்கலாம். சிவகுமாரனையும் தனபாலனையும் எப்படியாவது அடுத்த இந்தியப் பயணத்தில் சந்தித்து விடவேண்டும். நான் சந்திக்கத் துடிக்கும் இன்னொரு மதுரைப்பதிவர் சித்திரவீதிக்காரர்.

  ReplyDelete
 10. எங்க ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. :)))) மதுரைப் பதிவர்களில் சீனா சாரைத் தவிர்த்து மற்றவர்கள் குறித்து அறிந்ததில்லை. மதுரை சரவணனை மட்டுமே சில பதிவுகளின் பின்னூட்டங்கள் வாயிலாக அறிவேன். அருமையான பகிர்வுக்கு நன்றி. பொதுவாகத் தென் மாவட்டத்துக்காரங்களே மென்மையாகவும், ஆர்வமாக உதவிகள் செய்பவர்களாகவும், அதே சமயம் சத்தமாய்ப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். :)))))

  ReplyDelete
 11. படம் நன்றாக வந்திருக்கிறது.

  ReplyDelete
 12. மதுரைப் பயண அனுபவம் அருமையாக இருந்தது ஐயா. படம் அழகாக வந்துள்ளது.

  ReplyDelete
 13. அய்யா . தங்களை சந்தித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. தங்களிடம் என் தந்தையின் அரவணைப்பை உணர்ந்தேன். உண்மை. மிகையன்று.
  அதிகநேரம் தங்களுடன் செலவழிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம். மீண்டும் சந்தித்து , என் கவிதைகளை தங்களிடம் வாசித்துக் காட்ட அன்னை மீனாட்சியை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 14. வணக்கம் ஐயா,
  தங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
  சந்தித்த நேரம் குறைவு என்றாலும் நிறைவான நீங்கா நினைவான சந்திப்பாக அமைந்தது என்பதில் ஐயமில்லை...

  புகைப்படத்தை எனது பதிவில் காண:
  http://www.tamilvaasi.com/2013/03/blog-post.html

  ReplyDelete
 15. மீனாட்சி தஞ்சை ஓவியம் அருமை.

  பதிவர்சந்திப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.

  ReplyDelete
 16. சந்திக்க முடியாமல் போச்சே ...

  இவ்வளவு பெரிய ஓவியரா நீங்கள். அதற்கு என் தனிப்பட்ட வாழ்த்து.

  ReplyDelete