வியாழன், 29 மார்ச், 2012

நினைவில் நீ. ( அத்தியாயம் பதினேழு )


                                    நினைவில் நீ ( நாவல் தொடராக.)
                                    ---------------------------------------------

                                                      -----   17   -------

        தமிழ் மன்றம் மக்கள் மன்றமாய் மாறும் நாள் நெருங்க நெருங்க அதில் சம்பந்தப் பட்டவர்களின் வேலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பிரமாண்டமான முறையில் மூன்று நாள் விழாக் கொண்டாட திட்டமிட்டு அதன்படி செயல் நடத்தும்போதுதான்,இது எதிர்பார்த்த சுபிட்ச பாதையில் முன்னேற , அந்தப் பாதையின் துவக்கம் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.

     நிகழ்ச்சியின் முதல் நாளும் வந்தது. ஊரே திரண்டு வந்து ஆதரவு கொடுத்ததைக் கண்டபோதுதான், தாங்கள் பட்ட கஷ்டத்தின் பயனை அடைந்ததாக ஒரு நிறைவு ஏற்பட்டது.முத்தமிழ் விழாவில் இயல் இசை நாடகம் எல்லாம் பங்கு பெற்றன. பட்டிமன்றமும் கவி அரங்கமும் ,ஆடலும் பாடலும், நாடகமும், ஓவியமும் எல்லாம் கண் கொள்ளாக் காட்சியாக அமையப் பெற்றதோடு, அவர்கள் கொண்ட லட்சியத்தின் அடிப்படையில் எழுந்ததால், அவ்விடத்தில் தமிழ் மன்றம் ஒரு புரட்சியையே தோற்றுவித்து விட்டது.

     வீட்டிற்கு வீடு சென்று எல்லோரையும் அழைத்தனர். தாங்கள் எடுத்துக் கொண்டிருந்த திட்டங்களை விவரமாக எல்லோருக்கும் எடுத்துரைத்து அதில் எல்லோரும் பங்கு பெறுவதான ஒரு திருப்தியை எல்லோருக்கும் அளித்தனர்.

    எந்தக் காரியத்திலும் ஒவ்வொரு தனி மனிதனும் பங்கு பெறுகிறான் என்ற உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான் அந்தக் காரியம் வெற்றி பெறும் என்பதை நன்கு உணர்ந்திருந்த பாபு ,திட்டங்களை நிறைவேற்ற சீரான வழி முறைகளை வகுத்துக் கொடுத்திருந்தான். அதையும் அவரவர்களே உணர்ந்து செயவது போன்ற ஒரு சூழ் நிலையையும் ஏற்படுத்தி இருந்தான். எந்தக் காரியத்துக்கும் ஒரு காசு கூட தராத மகாப் பிரபுக்கள் எல்லோரும் அவரவர்கள் சக்திக்கும் மீறி உதவினார்கள் என்றால் அது அவர்களுக்கே மனதில் பட்ட குறைகளை சீர் திருத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பின் காரணம் என்றே திட்ட வட்டமாகக் கூறலாம்..

     இன்ன காரணத்துக்காக விழா நடைபெறுகிறது, இன்னின்ன பிரச்சினைகள் தீர்வு காணப் பெறப் போகின்றன என்றெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும் அவை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன், மன்றத்து உறுப்பினர்களேகூட எதிர் பார்க்கவில்லை., பாபுவைத் தவிர.. பாபுவுக்கு இதையும் விட நன்றாகச் செய்ய முடிய வில்லையே என்ற குறைதான் மேலோங்கி இருந்தது. ஊண் ஒழித்தான், உறக்கம் ஒழித்தான், உடலின் உபாதைகளையே மறந்தான் தான் செய்யும் பணியில் ஆண்டவனைக் கண்டான். லட்சியக் கனவு ஈடேறுகிறது என்று அறியும்போது, ,--ஆண்டவனே இந்தப் பணி சீரான பாதையில் சென்று ,இந்த சமுதாயம் ஓரளவு நன்மை பெறுகிறது என்றால், அது தொடர்ந்து நடக்க அதில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருக்கும் உன் ஆசிகள் தேவை. நல்லெண்ணத்தில் எழும் காரியங்களை செயல் படுத்த மனோ திடமும், உடல் தெம்பும் எங்களுக்குக் கொடுப்பாய் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் பணிகளை செய்ய எவ்வளவு பிறவிகள்  எந்த இன்னல்களிலும் , வேண்டுமானால் எடுக்கத் தயாராய் இருக்கிறேன் ---என்று அடிக்கடி வேண்டிக் கொண்டான்

   பாபுவுக்கு இரு கரங்களாகவும் , கண்களாகவும்,சியாமளாவும் கானும் பணி புரிந்தனர். பட்டி மன்றத்தில் விவாதம், “ சமுதாயம் வளர்வது தனி மனிதன் முயற்சியாலா, அல்லது கூட்டுறவாலா “ என்ற தலைப்பில் நடந்தது. சான்றோர்களும் பாமரர்களும் பங்கு கொண்ட விவாதம் சூடு பிடித்தது.

     “ கூட்டுறவு என்பதே தனி மனிதனின் முயற்சியின் அடிப்படையில் எழுந்ததுதானே. ஒவ்வொருவனும் சமுதாயத்தின் சீர்கேட்டை உணர்ந்து அதற்கு நிவர்த்தி தேடும்போது, தேடும் பாதையாகக் கூட்டுறவு கொள்கை உருவாகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களென்ற அளவில் எல்லோரும் செயல் படுவது , அவரவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துஆட்சிக்கு அனுப்புவதில் மட்டும் இருக்கக் கூடாது. ஒவ்வொருவனுக்கும் உள்ள கடமைகளை தன்னைச் சார்ந்தவர்கள் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வில் செய்தால், அது நன்மையாகத்தான் முடியும். ஆக அந்த உணர்வோடு செயல்படும் தனி மனிதனின் முயற்சியால்தான் சமுதாயம் வளரும் என்று ஒரு கட்சியினர் சான்றுகளும் மேற்கோள்களும் காட்டி விவாதித்தனர். மேலும் ஒவ்வொருவனும் அவனது கடமைகளை ,உடைமைகளைப் பெருக்கும் விதத்தில் செயலாற்று கையில் சமுதாயம் தானாக வளரும் என்றும் விவாதித்தனர்.

     கூட்டுறவு முயற்சி என்பது பல தனிப்பட்ட மனிதர்கள் தங்களது தனிப்பட்ட பல கருத்துகளை ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து,, அடுத்தவர்களை வாழ வைப்பதோடு தாங்களும் வாழ வேண்டும் என்ற கொள்கையில் எழுந்தால், சீர் கேடுகள் நிறைந்த சமுதாயம் சீர்திருத்தப் பெறும் பலரது கூட்டுறவால் விளையும் பலனும் அதிகமாகும். நான் எனது என்ற அகங்கார எண்ணம் மாய்ந்து , நாம் நமது என்ற பரந்த எண்ணம் விரியும். அதனால் சோம்பல் ஒழியும் கட்டுப் பாடு அதிகரிக்கும்.விட்டுக் கொடுத்து வாழும் சமூகத்தில் அன்பே மலரும், போட்டி பொறாமை குறையும் .எல்லோரும் ஓர் குலம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற நிலையை ஏற்படுத்தும். உலகில் சமதர்மம் சிறப்பாக நிலை பெறும். என்றெல்லாம் மற்ற கட்சியினர் விவாதித்தனர்

    தீர்ப்போ,தனி மனிதன் வளர்ந்தான் என்றால் சமூகம் வளர்ந்தது என்ற நிலை சரியாகத் தோன்றினாலும் எல்லோரும் ஒரே காலத்தில் மேன்மையடைவது என்பது இயலாத காரியம் ஆதலால், அவ்வளவு சரியெனக் கொள்ள முடியாது. ஆனால் தனி மனிதனின் கட்டுப் பட்ட வளர்ச்சி கூட்டுறவால் விளைந்தால் வளர்ந்த வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். ஆதலால் அதுவே சிறந்தது என்று இருந்தது.

     கவி அரங்கம் கூடி இருந்த மக்களின் அறிவுக்கு விருந்தாகவும் ,வளர்ந்து வரும் சமுதாயத்தின் சிறப்பை உணர்த்துவதாகவும் இருந்தது.. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நமது கலை வளர்ச்சியை எடுத்துக் காட்டும் முறையில் இருந்தது. நாடகமோ நல்லது கெட்டது என்பன போன்றவற்றை நகைச் சுவையோடு வெளிப் படுத்துவதாக அமைந்தது.

     நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் நிறைவு பெற்றனர். நினைத்ததை நினைத்தபடி எடுத்துரைக்கவும், எடுத்துரைக்கப் பட்டவற்றை சீர்தூக்கி முடிவுக்கு வரவும் அவர்களால் எளிதில் முடிந்தது என்றால்,,எடுத்துரைக்கப் பட்டவை அனைத்தும் ஒவ்வொருவரையும் பாதிப்பதாகவும் சார்ந்ததாகவும்  இருந்ததாகும்

     நிகழ்ச்சிகளாலும் நன்கொடைகளாலும் ரூபாய் ஐம்பதாயிரம் திரட்டினர். அதுவே மக்கள் மன்றத்தின் தொடக்க ரொக்கமாக அமைந்தது.

    ” என்னடா பாபு, வேளா வேளைக்குச் சாப்பிடாமல்,தூங்காமல் இப்படி உழைத்தால் உடம்பு என்னத்துக்காகும்? சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும். என்பார்கள். முதலில் உடம்பு ஆரொக்கியத்தைப் பார்த்துக் கொள்ளணும்டாதன் மகனின் தன்மை உணர்ந்த கல்யாணி அம்மாவின் பேச்சில் கனிவோடு, பரிவும் ஆதங்கமும் கலந்திருந்தது., பாபுவின் தளர்ந்த உடம்புக்கு இதமாகத்தான் இருந்தது.இருந்தாலும் இதே போன்ற உள்ளுணர்வோடு இதே தாயால், தன்னோடும் தன்னைவிடவும் அதிகமாக உழைத்த தன் நண்பர்களிடம் பரிவு காட்ட முடியுமா என்றே அவன் எண்ணினான். இவர்களாவது வளர்த்த பாசத்தால் எழும் உணர்ச்சிகளைத் தன் மகனிடம் காட்டுகிறார்கள். இந்த அனுபவம் இல்லாத சியாமளாவால் எல்லோரையும் ஒரே மனத்தோடு நேசிக்க முடியுமா, கனிவு காட்ட முடியுமா என்றும் அவன் சிந்தித்தான். சியாமளாவின் நினைவு வந்ததும் அவனது உடற்சோர்வும் உள்ளச் சோர்வும் அவனிடமிருந்து சற்றே விலகிச் செல்வது போல்ஒரு பிரமையும் அவனுள் எழுந்தது. அவள் நினைவே இப்படி என்றால் ..அவள் அருகில் இருந்தால்....?அருகில் இல்லாமலா இருந்தாள்.? விழாவின் பெரும் சுமையைத் தாங்கினவர்களில் அவளும் ஒருத்தி அல்லவா.விழாவே இவ்வளவு சிறப்பாக நடந்தது என்றால் அதில் பெரும் பகுதி பெருமை அவளையே சாரும். என்றெல்லாம் எண்ணத்தொடங்கிய பாபுவுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவளிடம் தனிமையில் பேச வேண்டும் போல இருந்தது. அவளோடு காதற் பண் பாட வேண்டும் போல இருந்தது.

     கல்யாணி அம்மாவைத் திருப்திப் படுத்தவென்றே ஒன்றிரண்டு கவள்ம் சோறு சாப்பிட்டு, சியாமளாவைக் காணப் புறப்படத் தயாரானான்.வாசல்படி அருகே வந்தவன் திடுக்கிட்டான். அவன் அங்கு கனவிலும் கமலத்தை எதிர் பார்த்திருக்க மாட்டான்.அவளது தோற்றம், நடை அதில் கண்ட பரபரப்பு எல்லாம் பாபுவுக்கு ஏதோ எதிர்பாராத சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று உணர்த்தியது.

     வந்தவள் அந்த நிலையிலும் வீட்டுப்படி ஏற வில்லை. வாசலில் இருந்தபடியே பாபுவைத் தன்னோடு வரும்படி அழைத்தாள்.

    “ உள்ளே வா, அக்கா. விஷ்யத்தைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லேன் .அம்மாவும் தம்பிகளும் ரொம்ப சந்தோஷப் படுவார்கள்.

    “ நான் இப்போது இருக்கும் நிலை எல்லோரும் சிரிக்கும்படித்தான் இருக்கு. பாபு நான் இப்போது உள்ளே வரதா இல்லை.உனக்கு உன் அக்கா மேல் அன்பிருந்தால் உடனே என் கூட வா. “

     வெளியே புறப்பட்ட பாபு யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டதும் கல்யாணி அம்மா வெளியே வந்து பார்த்தாள்., கூடவே ராஜுவும் விசுவும் வெளியே வந்தனர். வந்தவர்களைக் கண்டதும், கமலம் எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டாள். பாபுவுக்கு எதுவும் புரிய வில்லை. கல்யாணி அம்மாவுக்கு கமலம் வந்ததும், அவள் தன்னைக் கண்டும் எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றதையும் பார்த்த போது மனசை என்னவோ செய்தது போல இருந்தது.
”அவள் வந்து என்னிடம் பேசியதைக் கேட்கும்போது, ஏதோ கலவரம் நடந்த மாதிரித் தெரிகிறது. என்னவென்று விசாரித்து வருகிறேன் அம்மாஎன்று தெரிவித்தவனுக்கு  ஏனோ தானே குற்றவாளிக் கூண்டில் நிற்பது போல் இருந்தது. தாயிடம் தமக்கை நடந்து கொள்ளும் விதம் இதுவல்ல என்று அவன் உள்மனம் கூறியது. தாயென்றே அவள் ஏற்க வில்லையே என்று மறு புறம் சமாதானம் கூறிக் கொண்டது.

   “ இந்தப் பெண்ணுக்கு என்னிடம் ஏன் தான் இந்த வெறுப்போ.என்று நினைத்துக் கொண்ட கல்யாணி அம்மா, பாபு சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே காட்டிக் கொள்ள வில்லை. ராஜுவுக்கும் விசுவுக்கும் பற்றிக் கொண்டு வந்தது. “ வீடு வரை வந்தவளுக்கு வீட்டுக்குள் மட்டும் வரப் பிடிக்க வில்லை என்றால் வராமலேயே இருந்திருக்கலாம்என்றான் ராஜு.

     “ உன்னையும் என்னையும் காண வரவில்லை அவர்கள். பாபு அண்ணாவைப் பார்க்க வந்தார்கள். பார்த்தார்கள்,பேசினார்கள் போய் விட்டார்கள். ஏதோ இழவுக்கு சொல்லிக் கொள்ள வந்த மாதிரி இருக்கு “ என்றவனை மேலே பேச விடாமல் “கண்டபடி உளறாதேடா விசு. தமாஷுக்கும் அரட்டைக்கும் கூட அந்த மாதிரிப் பேசக் கூடாதுஎன்று கல்யாணி அம்மா தடுத்து விட்டாள்.

     கமலத்தை தொடர்ந்து சென்ற பாபு, அவளோடு அவள் வீட்டை அடையும்போது குழந்தைகள் எல்லாம் பயந்து போய் வெளியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நடந்த சம்பவங்களை ஓரளவு கேட்டுத் தெரிந்து கொண்டான் பாபு.

   ” நேற்றைக்கு இவர் வீட்டுக்கு வரும்போதே ராத்திரி பத்து மணிக்கு மேலாயிடுத்து. நீ அன்றைக்கு கொண்டு வந்த மாதிரி நேற்றைக்கு யாரோ கொண்டு வந்து சேர்த்தார்கள். வந்ததும் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ராத்திரி பூரா மூன்று நாலு தடவை வாந்திதான். ரொம்ப துவண்டு போனவருக்கு காலையிலேருந்து நல்ல சுரம். என்னென்னவோ சொல்றார். எனக்கு ரொம்ப பயமாயிடுத்து. கண்ணனைக் கூப்பிடலாம்னு போனா அவன் அங்கிருக்கலை.பாட்டியும்தான் இல்லையே. டாக்டர் கிட்டே காட்டலாம்னா கையிலெ கொஞ்சங்கூடப் பணமில்லை. கடைசிலே உங்கிட்ட வந்தேன். பாபு இந்த தடவை எப்படியாவது உதவி பண்ணு. அப்புறம் உதவின்னு நீ இருக்கிற திக்குலே கூடத் தலை வைத்துப்படுக்க மாட்டேன்.

     கமலம் பேசிய விதமே பாபுவுக்குப் பிடிக்க வில்லை. வேறு கதி இல்லையே  என்று அவனிடம் வந்த்ததாகக் கூறியவள் நடந்து கொண்ட முறையிலும் அதேதான் தெரிந்தது. எந்த வார்த்தைகளை எப்படி உபயோகிப்பது என்று கூடத் தெரியாமல் இருக்கிற திக்குலே கூட தலை வைக்க மாட்டேன் என்கிறாள்

    அறியாதவர்கள் அறியாமல் செய்யும் பிழைகள் பொறுக்கப் படட்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டவன், சிவராமனை நன்றாகக் கூர்ந்து கவனித்தான். மூடிய கண்களிலும் குழி விழுந்து கரு வளையம் மூடிக் கொண்டிருந்தது. உயர்ந்த உருவம் குறுகிய் மார்பு ஒட்டிய கன்னம் எல்லாவற்றையும் பார்த்தவனுக்கு சிவ ராமனின் உதடுகளும் நாசியும் புரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் பாவனையில் இருப்பது போல் தோன்றியது. அதிலும் ஒரு குரூரத் தன்மை, மூச்சுவிட்டு இழுக்கும்போது மூக்குடன் சேர்ந்தியங்கும் உதடுகளில் இருப்பது தெரிந்தது.

   “ பாபு உன்னை என் கூட வரச் சொன்னேன். நீயும் வந்தாய். விவரங்களும் புரியும்படி சொல்லி யாயிடுத்து.நீ என்னடான்னா, பேசாமலேயே இருக்கே. என்ன பண்றதுன்னு சீக்கிரம் சொல்லு. எனக்கென்னவோ பகீர் பகீர்ன்னு அடிச்சுக்கிது. “

   “அளவுக்கு மீறி குடிச்சதுனால ஏற்படற ஆஃப்டர் எஃபெக்ட்ஸ். அன்னக்கே நான் சொன்னேனே. அத்திம்பேர் இந்தப் பழக்கத்த நிறுத்தப் பண்றது உன் பொறுப்புன்னு. நீ கேட்கலை. என்ன உதவி என்னாலே இப்போ செய்ய முடியும்னு நீ நெனைக்கிறே. அவருக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லை. மயக்கம் தெளிஞ்சா எல்லாம் சரியாயிடும். உடம்பு சூடு குடிச்சதனாலே ஏற்பட்டது. சுரம் அல்ல. நீயும் வீணா மனசைக் குழப்பிக்காதே.நான் வரேன்.என்று வெளியேறியவனை கமலம் தடுத்து நிறுத்திக் கேட்டாள்..

     “என்ன பாபு பேசாமப் போறியே. உன் அக்காள் இருக்கும் நிலையில் அவளுக்கு உதவணும்னு கூடத் தோணலியா. வராத இடத்துக்கு வந்து உதவி கேட்டவளை இப்படித்தான் நடத்திறதா.?

     . கோபமும் ஆத்திரமும் மேலிடப் பேச ஆரம்பித்தவளுக்கு, அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. பாபுவுக்கும் தான் செய்வது சரியல்ல என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் மறுகணமே அவன் மனம் மாறிவிட்டது.ஏமாற்றுகாரர்களின் வலையில் தான் வந்து விழ இருந்த நிலை பூரணமாகப் புரிய ஆரம்பித்தது. அவன் கண்கள் வீட்டு சன்னலிலிருந்து இங்கு நடப்பதை ஆராய்ந்து கொண்டு இருந்த சிவராமனைக் கண்டன. ஒரு நாடகமே தன் முன்னால் நடிக்கப் ப்டுகிறது என்று ஒரு நொடிப் பொழுதில் யூகித்துக் கொண்டான்.

      “ அக்கா ...நான் உனக்கு உதவினால் அது உபத்திரவமாகத்தான் முடியும். குடியைக் கெடுக்கும் குடிக்குப் பணாம் கொடுத்து உதவ என்னிடம் காசில்லை. பணத்துக்காக இந்த நாடகம் நடித்திருக்கவும் தேவை இல்லை. “என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டான்.

       சென்று கொண்டிருந்தவன் காதில் “அவன் கிடக்கிறான் மடப் பயல் “ என்ற சிவராமனின் குரல் தெளிவாக விழுந்தது.
------------------------------------------------------------------------------------------ 
                                                                        ( தொடரும் )                   
  
 .
          


      



செவ்வாய், 27 மார்ச், 2012

நிர்வாக விளையாட்டுக்கள்.


                                          நிர்வாக விளையாட்டுக்கள்
                                          --------------------------------------
                                            (  MANAGEMENT GAMES..)

     ஒரு நிர்வாகத்தில் பல அடுக்குகளில் பணி புரிபவர் இருக்கிறார்கள்..ஒவ்வொரு நிலையில் இருக்கும் பணியாளருக்கும் ஒரு மேலதிகாரி இருப்பார். இப்படி பல அடுக்குகளிலும் பணி புரிபவர்கள் ஒற்றுமையுடனும் புரிதலுடனும் பணி புரிய வேண்டியது அவசியம். இதை விளக்கும் முகமாக இந்த விளையாட்டுப் பயிற்சி.

இந்த விளையாட்டை விளையாட குறைந்தது மூன்று குழுக்கள். வேண்டும்.ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருக்க வேண்டும். 1.மேலதிகாரி 2. மேற்பார்வையாளர். 3. தொழிலாளி. மேலதிகாரி குறியீடுகளை நிர்ணயம் செய்து, மேற்பார்வையாளர் வழிமுறைகளை வகுக்க தொழிலாளி அதை செய்து முடிக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் குறியீடு TARGET  என்பது எத்தனை கன சதுரங்களை (CUBES) ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும் என்பதே. மேலதிகாரி குறிப்பிடும் இலக்கை அடைய மேற்பார்வையாளர் தன் கீழ் பணியெடுக்கும் தொழிலாளிக்கு தன் கைப்பட செய்வது தவிர எல்லா உதவிகளையும் செய்யலாம். தொழிலாளியின் கண்கள் கட்டப் பட்டிருக்கும். அது தொழிலாளிக்குள்ள CONSTRAINT ஐ குறிப்பிடுவதாகும்.

இப்போது விளையாட்டைத் துவக்க ஒரு மேசை வேண்டும். தேவையான அளவு கனசதுரங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டு ஒரு குழுவின் டார்கெட் மற்ற குழுவுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும். மேலதிகாரி குறிப்பிடும் இலக்கு தொழிலாளிக்குத் தெரியக் கூடாது. மேற்பார்வையாளர் தொழிலாளிக்கு நிர்ணயிக்கும் இலக்கு மேலதிகாரிக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மூன்று கற்பனைக் குழுக்கள் விளையாடுவதைக் காணலாம்.

முதல் குழுவின் மேலதிகாரி-- மேற்பார்வையாளரிடம், “ இன்னும் அரை மணிநேரத்தில் 25-/ க்யூப்ஸ் அடுக்கப் பட்டிருக்க வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது I WANT THE RESULTS.  இலக்கு அடையப் படாவிட்டால் நிலைமை உங்களுக்கு எதிராக இருக்கும். YOU KNOW THAT I AM VERY STRICT. சொன்னது ந்டக்காவிட்டால் ...........

இரண்டாவது குழுவின் மேலதிகாரி:-, அவரது மேற்பார்வையாளரிடம். “ உங்களுக்கு நாம் இலக்கை அடைய வேண்டிய அவசியத்தை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. நாம் எவ்வளவு க்யூப்ஸ் அடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.? நீங்கள் எதையாவது செய்து 25-/ அடுக்கிவிட்டால் எல்லோருக்கும் நல்லது. 23-ஆவது நிச்சயம் அடுக்க வேண்டும். இல்லையென்றால் முதலாளிக்கு பதில் சொல்வது கஷ்டமாகிவிடும்.

மூன்றாவது குழுவின் மேலதிகாரி:-, அவரது மேற்பார்வையாளரிடம் “ கடந்த முறை
23-/ க்யூப்ஸ் இலக்கு அடைந்திருக்கிறோம். இதில் உங்கள் அனுபவமும் பங்கும் நான் சொல்லத் தேவை இல்லை.. தொழிலாளியின் திறமையும் தேவையும் உங்களுக்குத் தெரியும். 23-/ க்யூப்ஸ் அடுக்கியவர் இன்னும் சற்று முயன்றால் உங்கள் ஒத்துழைப்புடன் 25-/ அடுக்குவது முடியாததல்ல. 25-/க்கு மேல் செய்வதெல்லாம் கூடுதல் போனஸ் பெற வழிவகுக்கும். ALL THE BEST. !”

 இதை ஊன்றி கவனித்தால் நிர்வாகத்தின் மூன்று வித்தியாசமான அணுகு முறைகளைக் காணலாம்

இனி மேற்பார்வையாளர்கள் இதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்.

முதற்குழுவின் மேற்பார்வையாளர் நன்றாக மிரட்டப் பட்டிருக்கிறார், விரட்டப் பட்டிருக்கிறார். மேலதிகாரியின் இலக்கை 27-/ ஆக மாற்றினால்தான் 25-/ ஆவது செய்ய முடியும், விரட்டாவிட்டால் வேலை நடக்காது. மிரட்டி உருட்டிஎப்படியாவது இலக்கை அடைய வேண்டும் நம் இலக்கை அடையாவிட்டாலும் மேலதிகாரியின் இலக்காவது எட்டலாம்  என்று எண்ணிக் கொண்டு களத்துக்கு வருகிறார்.

இரண்டாம் குழுவின் மேற்பார்வையாளர் நன்றாக யோசிக்கிறார். 25-/ தான் இலக்கு என்றாலும் 23-/  அல்லது 24-/ ஆவது செய்ய வேண்டும். 22-/ ஆனாலும் எதாவது சமாதானம் சொல்லி சமாளிக்கலாம்  என்ற ரீதியில் அவரது எண்ண ஓட்டம் இருக்கிறது.

மூன்றாவது குழுவின் மேற்பார்வையாளர், எந்த வழிமுறையைக் கையாளலாம் என்று யோசிக்கிறார். அவரது அனுபவத்தையும் சாமர்த்தியத்தையும் ஒருங்கே உபயோகிக்க வேண்டும். தொழிலாளிக்கு அவரது திறமையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். எங்கே சமயம் விரய மாகிறதோ அதை நீக்க வேண்டும். தொழிலாளியை ஊக்கப் படுத்தி உற்சாகப் படுத்த வேண்டும் இருக்கும் நிலையை அவருக்கும் சொன்னால் புரிந்து கொண்டு முழுத் திறமையையும் காண்பிப்பார். முதலில் ரிலாக்ஸாக  இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொண்டு தயாரகிறார்.

எந்த மாதிரி நிலையில் மேற்பார்வையாளர்களின் செயல் பாடுகள் உருவாக்கப் படுகின்றன என்பது தெரிய வருகிறது

இனி திட்டங்களும் அணுகுமுறைகளும் என்ன பலன் தருகிறது என்று பார்க்கலாம்
முன்பே கூறியபடி தொழிலாளியின் கண்கள் கட்டப் படுகின்றன முதல் குழு தொழிலாளியிடம் கண்கள் கட்டப் படும் முன்பே தேவைகளும் இலக்குகளும் விளக்கப் படவில்லை.இலக்கு 27-/ க்யூப்ஸ் அடுக்கப் பட வேண்டும் இல்லையென்றால் தண்டனை கிடைக்கலாம் என்று பயமுறுத்தப் படுகிறார். ( விளையாட்டில் கண்களைக் கட்டுவது நடைமுறை குறைபாடுகளை குறிக்கவே என்று கூறி இருந்தேன். மேற்பார்வையாளரின் கைகளும் கட்டப் படும். அவர் தொழிலாளியை வேலை வாங்க வேண்டும். அவரும் சேர்ந்து செய்யக் கூடாது என்பதுதான் காரணம்.) முதல் குழுவில் அடுக்குதல் துவங்கு முன்பே ஒரு வித இறுக்கமான சூழ்நிலை இருக்கும். இந்தச் சூழலில் அவரது கண்கள் இன்னும் இருக்கமாகக் கட்டப் பட்டுவிடும். ( SHOWS MORE CONSTRANTS ) மேசையில் க்யூப்ஸ் ஒழுங்காக இல்லாமல் இருக்கிறது. இலக்கைச் சொல்லி விட்ட மேற்பார்வையாளர் தொழிலாளி எப்படி வேலை செய்கிறார் என்று கவனிக்காமல் அதை முடிக்க வேண்டியது அவன் பொறுப்பு எனும் பாவத்தில் இருப்பார் .நடுநடுவே வந்து முடிந்து விட்டதா என்று கேட்பார்.

இரண்டாவது குழுவில் மேற்பார்வையாளர் தொழிலாளியிடம் கெஞ்சாத குறையாக இலக்கினை அடைய வேண்டிய காரணத்தைக் கூறுகிறார். அடையாவிட்டால் தானும் சேர்ந்து தண்டிக்கப் படுவொம் என்று கூறுகிறார். எப்படியாவது கடந்த இலக்கான 23-/வது அடுக்க வேண்டும். ஓவர்டைம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். மேசையில் எவ்வளவு க்யூப்ஸ்கள் இருக்கிறது என்று கவனிக்கவில்லை.

மூன்றாவது குழுவில் மேற்பார்வையாளரும் தொழிலாளியும் எப்படி இலக்கை அடையலாம் என்று சேர்ந்து சிந்திக்கிறார்கள். க்யூப்ஸ் அடுக்க வேண்டிய மேசை ஆடாமல் இருக்கிறதா என்று சோதிக்கப் படுகிறது. அடுக்கப் படவேண்டிய க்யூப்ஸ் தேவையான எண்ணிக்கையில் இருக்கிறதா என்று பார்க்கப் படுகிறது. கூடிய மட்டும் ஒரு ரிலாக்ஸான சூழல் கொண்டு வரப் படுகிறது. வேலை துவங்குமுன் தொழிலாளியும் மேற்பார்வையாளரும் கை குலுக்கிக் கொள்கிறார்கள்.

விளையாட்டு முடிந்து மூன்று குழுக்களும் அடைந்த இலக்கை கவனிக்கலாம்.
முதல் குழு 20-/ க்யூப்ஸ் அடுக்கியிருந்தது. இரண்டாவது குழு 24-/ க்யூப்ஸ் அடுக்கி யிருந்தது. மூன்றாவது குழு 27-/ க்யூப்ஸ் அடுக்கி இருந்தது.



ஒவ்வொரு குழுவையும் விசாரிக்கும்போது


குழு 1-/ன் மேலதிகாரி:-தொழில் தெரியாத தொழிலாளியும் உருப்படாத மேற்பார்வையாளரும் இருந்தால்  எப்படி இலக்கை அடைய முடியும்.?

குழு 1-/ன் மேற்பார்வையாளர் இலக்கு நிர்ணயித்து விட்டால் போதுமா.? இந்தமாதிரியான தொழிலாளியை வைத்துக் கொண்டு இதைச் செய்ததே அதிகம்.. வெறுமே மிரட்டினால் வேலை நடக்குமா.?

குழு 1-/ன் தொழிலாளி. அங்கிருந்த க்யூப்ஸ்களை அடுக்கினதே என் சாமர்த்தியம். தேவையான க்யூப்ஸ்களே இல்லாதிருக்கும்போது இலக்கு மட்டும் நிர்ணயித்து எந்தக் கவலையும் இல்லாமல் குறை சொல்லும் அதிகாரிகளிடம் வேலை செய்வதே என் தலை எழுத்து.

குழு 2-/ன் மேலதிகாரி.. கடந்த முறையை விட இந்தமுறை அதிக இலக்கை அடைந்து விட்டோம் என்ன.... ஒரு குறை என்னவென்றால் இலக்கை அடைய செலவு கூடிவிட்டது

குழு 2-/ன் மேற்பார்வையாளர்.. தொழிலாளி அடுக்கும்போது கூடவே இருந்து அவரை உற்சாகப் படுத்திக் கெஞ்சிக் கூத்தாடி ஓவர்டைம் எல்லாம் கொடுத்து அப்பப்பா என் தாவு தீர்ந்து விட்டது. நானும் சேர்ந்து செய்திருந்தால் என் கை கட்டில்லாமல் இருந்திருந்தால். 30-/ க்யூப்ஸ் கூட வைத்திருக்கலாம்.

குழு 2-/ன் தொழிலாளி. ஓவர்டைம் இல்லாமல் இவர்கள் சொல்வதை செய்தால் நம் மேல் குதிரை ஏறிவிடுவார்கள். இலக்கு நிர்ணயிக்கிறார்களே , இவர்களால் இதை செய்ய முடியுமா. நம் பாடு இவர்களுக்கு எங்கே தெரிகிறது.

குழு 3-/ன் மேலதிகாரி.. ஊக்கப்படுத்தி வசதிகள் செய்து கொடுத்தால் இலக்கை அடைய முடியும். என் குழுவில் நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. நான் ஒரு ஊக்குவிப்பானாக செயல்படவே விரும்புவேன்.



குழு 3-/ன் மேற்பார்வையாளர். என் மேலதிகாரிக்கு என் மேல் நம்பிக்கை. எனக்கு என்னோடு பணி செய்யும் தொழிலாளியிடம் நம்பிக்கை. திறமை இருக்கும் இடத்தில் தட்டிக் கொடுத்தால் இலக்கை அடைய முடியும்.


குழு 3-/ன் தொழிலாளி. எனக்கு வேலை செய்ய பூரண சுதந்திரம் உண்டு, என் தேவைகளை உணர்ந்து வேண்டிய சமயத்தில் உதவும் மேற்பார்வையாளர். க்யூப்ஸ் அடுக்கும்போது பக்கத்தில் இருந்து கோணலாகப் போகாமல் நேராக வர அவ்வப்போது எனக்கு உதவியது மட்டுமல்ல, மேசை ஆடாமல் இருக்கவும் கைக்கெட்டியவாறு க்யூப்ஸிருக்கும்படியும் பார்த்துக்கொண்டு ஊக்கப் படுத்தும் மேற்பார்வையாளருக்கும் இதில் பெரும் பங்குண்டு.

MANAGEMENT  என்பதில் MAN-MANAGEMENT பெரும் பங்கு வகிக்கிறது. நான் வேலையில் சேர்ந்ததில் இருந்து பலதரப் பட்ட அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் தொழிலாளிகள் என்று பார்த்து விட்டேன். தொழிலாளிகளை அவர்களின் திறன் அறிந்து அவர்களுடைய முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வருவது மேலதிகாரிகளின் கையில் இருக்கிறது. என் பழைய பதிவு ”எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் “ நான் அந்தக் காலத்தில் எழுதியது. அதில் ஓரளவுக்கு ஒரு தொழிலாளியின் மன நிலையைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறேன்.

எந்த ஒரு தொழிலாளியும் தான் வேலைவாங்கப் படுவதாக எண்ண விரும்புவதில்லை..வேலை வாங்கும்போது அது அவர்களாக விரும்பிச் செய்வதாக இருக்க வேண்டும்.அதிகாரிகள் தொழிலில் நெளிவு சுளிவுகள் தெரிந்தவராக இருக்க வேண்டும்.வேலை தெரிந்த அதிகாரிகளுக்கு தொழிலாளர் மத்தியில் என்றும் மதிப்பு உண்டு..
---------------------------------------------------------------              .         .                            




.

ஞாயிறு, 25 மார்ச், 2012

நினைவில் நீ. ( அத்தியாயம் பதினாறு )



                                  நினைவில் நீ ( நாவல் தொடராக )
                                 -----------------------------------------------

                                                      ----  16  -----

          ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்றரை மணிக்கே பாபு டபிள் ரோடில் காத்துக் கொண்டிருந்தான் சியாமளாவின் வருகைக்காக.வருகிற பஸ் ஒவ்வொன்றிலும் ஏறித் தேடாத குறைதான். அவள் வருவாளா, வர மாட்டாளா என்ற சந்தேகம் வேறு அடிக்கடி எழ ஆரம்பித்தது. அவள் வரக் கூடாது, வருவது தவறு என்றுதான் அவள் எண்ணுவாள்,;இருந்தாலும் என்மீது அவளுக்கு அன்பிருக்குமானால் என்னை ஏமாற்ற மாட்டாள், தவறு என்று சுட்டிக் காட்டும் மனதையும் மீறி வருவாள். வராவிட்டால்......? அவளுக்கு என்மீது அன்பில்லை என்று நினைக்கலாமா.?சேச்சே... அதெப்படி.?அவளுடைய நிலையையும்தான் யோசிக்க வெண்டுமே. ! அவளோ பாவம் பெண்..! எதற்காக இப்படி மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் தெரிந்துவிடும். ---என்றெல்லாம் எண்ணிக் கொண்டும், தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டும், விடையளித்துக் கொண்டும் அரை மணி நேரத்தைப் போக்கி இருப்பான். இதன் கூடவே அவனுக்கு இன்னொரு சங்கடமும் ஏற்பட்டது.” வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாயிற்று. வந்தால் என்ன பேசுவது.? வந்தவுடன் “ நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன்.நீயும் என்னை நேசிக்கிறாயா.?என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கேட்கலாமா? அப்படி ஒரேயடியாக விஷயத்துக்கு வர முடியுமா.?அப்படியே கேட்டால் அவள் என்னைப் பற்றி ஒரு சமயம் தவறாக எடை போட்டு விட்டால்... எண்ண எண்ண குழப்பம்தான் அதிகரிக்கிறது.வரும்போது வரட்டும் பேசுவது பற்றி பிற்கு யோசிக்கலாம். நான் காத்திருப்பதே அவளுக்குத் தெரியாமல் இந்த காஃபி பார் உள்ளிருப்பது. வந்து அவள் என்னைத் தேடட்டும். என்னைக் காணாமல் அவள் சந்தோஷப் பட்டால், அவளைப் பார்க்காமலேயே திரும்பிப் போய் விடுவது. ஏமாற்றமடைந்து வருத்தப் படுவதுபோல் தோன்றினால் அவளைப் போய்ப் பார்ப்பது”. இந்த முடிவுக்கு வந்ததும் அதை செயல் படுத்த அருகில் இருந்த காஃபி பாருக்குள் பாபு நுழைந்தான். தன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள ஒரு காஃபியும் வாங்கி அருந்தினான். பத்து நிமிடங்கள் கழிந்து விட்டன. இரண்டு பஸ்க்ளும் வ்ந்து போய் விட்டது. சியாமளா வரவில்லை. பாபுவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அவனை அறியாமலேயே அடுத்திருந்த கடைக்குள் நுழைந்தான்.உயர்ரக சாக்லெட்டுகளும் மிட்டாய்களுமாக கொஞ்சம் வாங்கிக் கொண்டான். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான். இரண்டு முறை புகையை இழுத்துவிட்டிருப்பான். பிறகுதான் அவனுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. சிகரெட் புகைப் பதில்லை என்ற தன்னுடைய தீர்மானம் தன்னை அறியாமலேயே மறந்து சிகரெட் புகைத்து விட்டோம் என்ற எண்ணம் வந்ததும் அதை நசுக்கி எறிந்தான். 16-ம் நம்பர் பஸ் வந்தது. சியாமளா அதிலும் இருக்க மாட்டாள் என்று நினைத்தான் என்றாலும் கண்கள் அதிலிருந்து இறங்குபவர்களைக் காணத் துடித்தது. இம்முறையும் ஏமாற்றம்தான் என்று நினைக்கும்போது பாபுவுக்கு தன் நெஞ்சே வாய்க்குள் வந்து விட்டது.போன்ற எண்ணம். கைகால்கள் சற்றே நிதானமிழந்து வெட வெடக்க ஆரம்பித்தது. காரணம் அவனுக்குப் புரியவில்லை. ஆயிரக் கணக் கானவர்கள் முன்பு நிதானம் தவறாமல் நினைவு சிதறாமல் எண்ணிய வற்றை ஒழுங்காக,அழகாக, கோர்வையாக எடுத்தியம்பும் திறன் பெற்ற பாபு, சியாமளா பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ,அவளைக் கண்டதும் தன் நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டதைப் போன்ற உணர்ச்சி யடையப் பெற்றதும் ,நினைவு கூர்ந்தது, அவன் எங்கோ எப்போதோ படித்த ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் காணும்போதெல்லாம் முகம் வெளிறி நிற்பான்என்ற வரிகள்தான். எனக்கே இப்படி என்றால் அவளுக்கு.......என்ற எண்ணம் வந்ததும் அவன் அவனைச் சுதாரித்துக் கொண்டான்.மீண்டும் ஒரு சிகரெட் வாங்க கடைக்குத் திரும்பினான்.


    பஸ்ஸிலிருந்து இறங்கிய சியாமளா சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். பாபுவைக் கணவில்லை. அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஒரு சமயம் நான் எப்பேற்பட்டவள் என்று சோதிக்க வேண்டி இங்கு வரச் சொல்லி இருப்பாரோ.? நான் வந்ததால் ஒரு சமயம் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டால்......சே.! நான் வந்திருக்கவே கூடாது. என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் போக பஸ் வருகிறதா என்று நோட்ட மிட்டவளின் கண்களுக்கு பாபு தென் பட்டான். இருந்தாலும் தான் அவனைக் கண்டு விட்டதாகக் காட்டிக் கொள்ளாமலிருக்க வேறு திசையை நோக்கினாள். தன்னைப் பார்த்துப்பேச தன்னிடம் தேடி வரட்டும் என்று எண்ணினாள்

               பாபுவும் சியாமளாவைக் கண்டதும அவளே அவனை நோக்கி வருவாள் என்று எண்ணிக் கொண்டு அங்கேயே நின்றான்.ஒருவர் அருகே ஒருவர் செல்லாததால் இருவருக்குமே கொஞ்சம் கோபமேற்பட்டது. ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். பாபு அவனை மறந்து சியாமளாவின் அருகே போய்க் கொண்டிருந்தான். அருகே சென்றவன் ஏதும் பேசவில்லை. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல் அவனும் நின்றான். உண்மையில் அவன் அப்போது பஸ்ஸைவிட ஆட்டோ ரிக்‌ஷாவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் அருகிலிருக்கும் லால்பாக் போய் அங்கே ஆற அமரப் பேசிக் கொள்ளலாம் என திடீர் திட்டம் வகுத்து விட்டான். அதை நிறைவேற்ற ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவைக் கூப்பிட்டான். சியாமளா இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. பாபுவுடன் ஆட்டோவில் செல்வதைக் கூட அவளால் நினைக்க முடியவில்லை. ஆட்டோ வந்ததும் வேண்டாம் பஸ்ஸிலேயே போகிறோம் என்று பாபுவுக்கும் ட்ரைவருக்கும் பொதுவாகவே சொன்னாள். ஆட்டோ ட்ரைவர் ஏதோ முணு முணுத்துக் கொண்டே சென்று விட்டான். .

    ”என்ன சியாமளா.. அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்.? நாமிருக்கும் நிலையும் பழகும் விதமும் ,எல்லோருக்கும் நம் மீது சந்தேகப் படத் தூண்டும். சகஜமாக இருந்தால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்பேசப் பேச அது போகும் விதம் திருப்தி அளிப்பதாகத் தோன்றவே தனக்குத்தானே ஒரு ஷொட்டுப் போட்டுக் கொண்டான். மனதிற்குள்ளாக அந்த சந்தோஷத்தில் ஒரு வசீகரமான புன்னகையும் வெளிப்பட்டது.

    பாபுவையே பார்த்துக் கொண்டிருந்த சியாமளா அவனுடைய அந்த தன்னம்பிக்கை நிறைந்த புன்சிரிப்பில் மயங்கினாள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவள் போல் அதை மறைக்கவே “ எதற்காக என்னை இங்கு வரச் சொன்னீர்கள்? வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறேன். நேரமானால் தேடுவார்கள்.என்றாள்.

   “ ஆஹா..! வந்ததும் வராததுமாக விஷயத்தைப் புட்டு வைடா என்கிறாய். சியாமளா உன்னிடம் எனக்கு நிறையப் பேசவேண்டும். இங்கேயே நின்று பேசுவதென்றால் முடியாத காரியம். லால் பாக் வரை போய் விஷயத்தை நன்றாகப் பேசுவோம். ஆட்டோவைக் கூப்பிடட்டுமா.?

      வேண்டாம் ,வேண்டாம், நடந்தேபோகலாம். போகும்போது பேசிக் கொண்டே போகலாம்.

      நடந்து கொண்டு பேசும்போது பேசுவதில் கோர்வை இருக்காது. மனசும் செல்லாது. எங்காவது ஓரிடத்தில் இருந்துதான் பேச முடியும்.

       “ அப்படியானால் இங்கேயே இப்படியே நின்று சொல்லுங்கள் “

       “இங்கேயேவா.? ப்ரைவஸி கொஞ்சம் கூட இல்லையே ஹூம்.! சரி நடந்து கொண்டே பேசலாம். முக்கிய விஷயம் பேசும்போது அங்கேயே நின்று விடுவேன். சரிதானே?

       “ எனக்கு சரிதான், பேசுங்கள்..கேட்கிறேன். “

       என்ன பேசுவது ,எப்படிப் பேசுவது என்றே மறந்துபோச்சு சியாமளா.உன்னிடம் ஆயிரமாயிரம் பேச வேண்டும் என்று மனசு துடிக்குது. கண் உன்னையே பார்த்துக் கொண்டு இருப்பேன் என்கிறது. வாய் சத்தியாக்கிரகம் செய்கிறது. “

       “ சத்தியாக்கிரகத்திலும் சண்டித்தனமான சத்தியாக்கிரகம் போலிருக்கு. “
சியாமளாவுக்கும் பாபுவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதற்கு தைரியம் வந்தது. பேச்சும் வளர்ந்தது.

       “ என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சியாமளா..?

       என்ன நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை நினைக் கிறேன்.

       விளையாட்டுக்குச் சொல்ல வில்லையே. ?
      
       இல்லை.

       நிச்சயமாக...? :

       நிச்சயமாக.

       “ சியாமளா, எனக்குத் தாயாக, தாதியாக, துணையாக,நண்பனாக, சேயாக எல்லாம் நீ இருக்க வேண்டும் என்று நான் மனதார ஆசைப் படுகிறேன். சுருங்கச் சொன்னால், என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் காணத் துடிக்கிறேன். அந்த எண்ணம் உனக்குண்டா, சியாமளா.?

       பேசிக் கொண்டே நடந்து சென்றவன் உணர்ச்சிவசப்பட்டு நின்று விட்டான். அவன் கண்களில் நீர் பனித்திருந்தது.

      சியாமளா பதில் பேசவில்லை.அவளால் முடியவில்லை.. பாபு தன்னை அழைத்ததன் காரணம். அவள் ஓரளவுக்கு யூகித்திருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு சஞ்சலம் இருந்தது. உணர்த்தப் பட்ட பின்போ, அதன் இன்பச் சுமையில் இயந்திரியங்கள் எல்லாமே செயலிழந்து நின்றன.

      வீதியில் சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போவதைக் கவனித்த பாபு,உடனே தன்னிலை வரப் பெற்றான்.

      “ ஐ ஆம் சாரி, சியாமளா. உன் மனதை என் பேச்சாலும் செய்கையாலும் புண் படுத்தி விட்டேன். உண்மையாகவே நான் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடு. சியாமளா. “

      “ஏன் இப்படி என்னென்னவோ மாதிரிப் பேசறீங்க.?நான் என்னதான் அப்படி தவறு செய்தேன். ?

      “ என் பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை என்று உன் மௌனத்திலேயே தெரிஞ்சு போச்சே.! அதுவே என் தவறுதானே.

      “ மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பார்களே.. அது மாதிரி இருக்கக்கூடாதா.?

      வாட்.? சியாமளா நான் கேட்பது, பொய்யில்லையே “

      எளிதில் உணர்ச்சி வசப் படும் பாபுவுக்கு, அதை எளிதில் அடக்க மட்டும் தெரிய வில்லை. சந்தோஷத்தின் எல்லைக் கோட்டுக்கே சென்றவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சற்று முன்பு வாங்கிய சாக்கலெட்டுகளை சியாமளாவிடம் அள்ளிக் கொடுத்தான். அவனுடைய செய்கைகளை எல்லாம் அவளால் அனுமானிக்க முடியவில்லை. சில சமயம் குழந்தைத் தனமாகப் பட்டது. சில சமயம் உணர்ச்சி வசப் படுத்தியது

     உங்கள் மேல் எனக்கு ஒரே கோபம். தாயாக, தாதியாக, துணையாக, நண்பனாக, சேயாக என்றெல்லாம் நினைக்க விரும்பும் நீங்கள் முக்கியமாக ஒரு பெண் விரும்பும் ஸ்தானத்தை எனக்குத் தர விரும்ப வில்லை. உங்களுக்கு மனைவியாக என்று மட்டும் கேட்க வில்லை. அதற்கு எனக்கு அருகதை இல்லை என்று உணர்த்தி விட்டீர்கள். “ சியாமளாவுக்கு சொல்லும்போது அழுகையே வந்து விட்டது.

    “ சியாமளா என்னை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன்னை மனைவியாக அடைய நான் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். நான் அப்படிக் கேட்க வில்லை என்றால் அது எனக்கே விளங்காத புதிர் போன்ற உணர்ச்சியால்தான் சியாமளா. எல்லாம் நல்ல படியாக ஆண்டவன் அருளால் நடக்கும் என்றால் இன்னும் ஒரு வருஷம் கழிந்ததும் உரிமையொடு உன்னைக் கேட்பேன்..நீதான் என் மனைவி என்று பெருமையாகப் பேச ஒரு வருஷம் அவகாசம் தேவை. அதுவரைக்கும் என்னால் அப்படி நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.

     உங்களைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. எதற்கு ஒரு வருஷம் அவகாசம் தேவை என்று நான் தெரிந்து கொள்வதில் தவறு இருக்காதே.?

            வேண்டாம் சியாமளா,இன்ப வானில் சிறகடித்துப் பறக்கும் நான் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிட்டால் அது உனக்கும் சரி எனக்கும் சரி துன்பத்தைத்தான் தரும். தயவு செய்து என்னை வற்புறுத்தாதே.

     முக்கியமாய் கேட்க வேண்டியதை பாபுவால் கேட்க முடிய வில்லை என்றால், அதற்கு முக்கிய காரணம்,பாபுவுக்கு விளங்காத எச்சரிக்கையை அவன் மனம் அவனுக்கு அளித்தது.தான். தான் இன்னும் ஒரு வருஷத்தில் இறந்து விடுவோம் என்ற இனம் தெரியாத புதிர்தான் சியாமளாவை மனைவியாகும்படி அவனால் கேட்க முடியாமல் செய்தது. நிகழ் காலத்தின் கட்டுப் பாட்டுக்கு அடங்க மறுக்கும் கற்பனையின் வேகம்தான், அவனுடைய உணர்ச்சியின் வேகத்துக்குத் தடை போட்டது. சியாமளாவைப் பொறுத்தவரை புதிர் புதிராகவே நின்றது. அது விடு படாத வரைக்கும் அவளுக்கு மன அமைதி இருக்காது. இருந்தாலும் பாபுவின் வேண்டு கோளுக்கு இணங்கி அவள் அதற்கு மேல் ஒன்றும் கேட்க வில்லை. ஒருவரைப் பற்றிய ஒருவர் சிந்தனையில் இருவரும் லயித்தவராக அவர்கள் நடந்து கொண்டே வந்தனர்.. இருந்தாற்போலிருந்து பாபு ,சியாமளா, நீ என்னோடு இருக்கும்போது எனக்கு பாரதியின் காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக் கண் பார்வையிலேஎன்ற பாடலின் நினைவுதான் வருகிறது. அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது, “ என்றான்.

               எனக்கு நேரமாகிவிட்டது.வீட்டில் தேட ஆரம்பிப்பார்கள் “ என்றாள் சியாமளா.

       பாபுவுக்குப் பிரிய மனமில்லை என்றாலும் விடை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலையில் அங்கு வந்த ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றி அனுப்பினான். அவள் சென்ற திக்கிலேயே மனம் பறிகொடுத்து நின்றவன் திரும்பியதும், கமலத்தின் கணவன் சிவராமன் தன் அருகில் நின்று கொண்டு விஷமமாகச் சிரிப்பதைக் கண்டான்.

       “பலே, பாபு, என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன். பெரிய ஆசாமிதான் நீ. உனக்குத் தெரியாத வித்தையே இல்லை போலிருக்கே.
       
        தன் தமக்கையின் கணவன் என்ற நினைப்புதான் பாபுவைக் கட்டுப் படுத்தியது. சிவராமன் பார்த்த விதம் அவன் நின்று கொண்டிருந்த தோரணை மேலே பேசிய பேச்சுக்கள் ஒன்றுமே பாபுவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் அவன் பெசிய போது வீசிய வாடை  வேறு அவன் நன்றாகப் போட்டு விட்டு வந்திருக்கிறான் என்பதையும் உணர்த்தியது.குடியின் பிடியில் சிக்கி இருப்பவனின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதுதான் சிறந்தது என்று பாபுவுக்குத் தெரிந்திருந்தாலும், சில வினாடிகள் கழித்து
“ அது சரி, யார் அந்தக் குட்டி.?எங்கிருந்து பிடித்தாய்.?என்று அவன் கேட்டதும், பாபுவால் அவனையும் மீறி வந்த கோபத்தை அடக்க முடிய வில்லை.

     “ சிவராம், கொஞ்சம் ஜாக்கிரதையாய்ப் பேசுங்கள்..யாரிடம் என்ன பேசுகிறோம் என்பது நினைவிருக்கட்டும். குடிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்து விட்டு, அதையும் மீறிக் குடித்து விட்டு அனாவசியமாகப் பிதற்ற வேண்டாம். “

     முதன் முறையாக பாபு தன்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டதே சிவராமனுக்கு அந்த நிலையிலும் உறைத்தது. மரியாதை, பணிவு எல்லாம் குறைந்து, தன்னை மிரட்டும் தொனியில் பாபு பேசியது அவன் கோபத்தைக் கிளறியது. மனிதனுக்கு தன்னுடைய மதிப்பில் பிறர் ஏற்படுத்தும் களங்கத்துக்கு காரணம் தானாகவே இருக்கலாம் என்றே தெரிவதில்லை. சிவராமனுக்கும் தெரியவில்லை.

     “சரிதான் போடா...ஊருக்கு உபதேசம் செய்கிறாய்.நீ சரியாக இருக்கப் பழகிக் கொள். இவளைப் போல எத்தனை பெண்களை இப்படிக் கெடுக்கத் திட்டம் போட்டிருக்கிறாயோ. சொல்ல வந்தால் கோபம் வேறு வருகிறதோ.? தான் இருக்கிற கேட்டில் மற்றவர்களுக்கு வேறு உபதேசம். நான் குடிப்பேன். அப்படித்தான் குடிப்பேன்.உங்க தாத்தா வீட்டுக் காசிலா குடிக்கிறேன்.!

      அவன் பேசி முடிப்பதைக் கேட்டு அதற்கு பதில் சொல்ல பாபு அங்கிருக்க வில்லை. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் நிலைமை மிகவும் அசம்பாவிதமாக முடியுமென்று தெரிந்ததால் வேகமாக அங்கிருந்து பாபு சென்றுவிட்டான்.
---------------------------------------------------------------------
                                                            ( தொடரும் )   ,                  

       


  
   


       

    



வெள்ளி, 23 மார்ச், 2012

நினைப்பவை எழுத்தில்......


                                         நினைப்பவை எழுத்தில்........
                                         ---------------------------------

      என் எண்ணங்கள் சில நேரங்களில் OUTLANDISH ஆகத் தெரியலாம். பெண்கள் வேலைக்குப் போவது என்பது ஆண்களுடன் சம உரிமை கோருவதற்கா, இல்லை தேவையின் அடிப்படையிலா என்பது முதலில் தெரிய வேண்டும். கிராமப் புறங்களில் ஆணும் பெண்ணும் வேலை செய்வது இயல்பாகப் போய் விட்டது. நகர்ப் புறங்களில் பெண்கள் ஆணுக்குச் சமமாகப் படித்துவிட்டார்கள் என்னும் ஒரே காரணத்துக்காக வேலைக்குப் போகிறார்களா., குடும்பத்தை நிர்வகிக்க இருவரும் பொருளீட்ட வேண்டிய கட்டாயத்துக்காக வேலைக்குப் போகிறார்களா. இல்லை யாரையும் சாராதிருக்கப் பொருளாதார பலம் வேண்டும் என்பதற்காக வேலைக்குப் போகிறார்களா. என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது. பெண்கள் வேலைக்குப் போவதால் முதலில் நஷ்டப் படுவது , ஒரு நல்ல குடும்ப சூழல். படித்த பெண் குடும்பத் தலைவியாக மட்டும் இருந்தால் அவளுக்குக் குடும்பத்தில் அக்கறை காட்ட எந்த தடங்கலும் இருக்காது. குடும்பத் தலைவி சம்பாதிக்கப் போகும்போது பண வரவு இருந்தாலும் இழப்புகள்( INTANGIBLE.) அதிகம்தான். பொருளீட்டத் துவங்கி விட்டால் அவர்களது எண்ணப் போக்கே மாறி விடுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து அன்னியோன்யமாய் வாழ்க்கை வாழத் தடங்கல்கள் அதிகமாகும். மணவயது வந்து விட்டால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல் FINANCIALLY INDEPENDENT  என்ற மன மயக்கத்தில் அதை ஒத்திவைப்பதும் பிறகு வருத்தப் படுவதும் வாடிக்கையாகி விட்டது. உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் ஆணும் பெண்ணும் வித்தியாச மானவர்களே.. அதிலும் இப்போதைய NUCLEAR FAMILY  எதற்கும் உதவுவதில்லை. குடும்பத்தை தொலைக்கும் பெண்ணீய எண்ணங்கள் சரியா.?பெண்கள் வேலைக்குப் போகாத பல குடும்பங்களிலும் பெண்ணே தலைவியாக இருந்து குடும்பத்தை வழி நடத்திச் செல்வது நடப்பதுதான். நடந்ததுதான். ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமா.?


                                குழந்தைகள்.
                                ------------  


    குழந்தைகள் பற்றிய பல பதிவுகள் படிக்கிறேன். நானும் எழுதி இருக்கிறேன். பலவற்றில் அவர்களது குழந்தைமை விவரிக்கப் படுகிறது. அவர்களது உலகமே தனி. என் சின்ன வயதில் என்னை ஒரு வீரனாக கற்பனை செய்து கொண்டு, உட்காரும் மணையை குதிரையாகக் கருதி கையில் குச்சியுடன் போருக்குப் போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது.ஹைதராபாத் அருகே இருக்கும் கோல்கொண்டா கோட்டைக்குச் சென்றிருந்தோம்..( பல வருடங்களுக்கு முன்.) கோட்டையின் மேலிருந்து கை தட்டினால் கீழே கோட்டைக் கதவருகே நன்றாகக் கேட்கும். அங்கிருந்த நெரத்தில் உண்மை சொல்லப் போனால் குழந்தையாக மாறி நான் சரித்திர காலத்துக்கே சென்று விட்டேன்.

இன்றைக்கு என் பேரன் அவன் தாய் சமைக்கும்போது அருகில் இருந்து செய்முறைகளை கேட்கிறான். எதற்கு என்று கேட்டால், நாளை அவன் பெரிதாகும்போது அவன் மனைவி நேரத்தில் உணவு கொடுக்க வில்லை என்றால் அவனாகச் செய்து கொள்ள வேண்டுமாம்.! அவன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள உதவுமாம்.இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அவனிடம் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் வாங்குவாயா என்று கேட்டால், முடியாது 25/25 தான் வாங்குவேன் என்கிறான். ஒரே குழந்தை இரு வேறு தளங்களில் சிந்திப்பதைக் காணும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் என்னைப் பார்த்து ஒருமுறை பொறாமையுடன் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம் உன்னைப் போல் நானாவது எப்போது என்று கூறியதை ஒரு முறை பதிவிட்டிருந்தேன்.


                பதில் தெரிய வேண்டிய கேள்விகள் சில
                --------------------------------------.

சில விஷயங்களை ஆங்கிலத்தில் படித்ததை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் அதை தமிழாக்கம் செய்தால் சுவை குறைந்து விடும், அல்லது எனக்கு சுவை குன்றாமல் தமிழாக்கம் செய்யத் தெரியவில்லை, என்பதனால் அவற்றை அப்படியே ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

1.        WHY IS ABBREVIATION  SUCH A LONG WORD.?

2      WHY IS IT THAT DOCTORS CALL WHAT THEY DO “ PRACTICE.”

3.     WHY IS THE MAN WHO INVESTS ALL YOUR MONEY CALLED THE “BROKER.”?

4.        WHY IS THE TIME OF THE DAY WITH THE SLOWEST OF TRAFFIC CALLED “THE RUSH HOUR.”?

5.        WHY DO THEY STERLISE THE NEEDLE FOR LETHAL INJECTION.?

6  YOU KNOW THAT INDESTRUCTIBLE  BLACK BOX THAT IS USED IN AEROPLANES. WHY
        
     .  DON’T THEY MAKE THE WHOLE PLANE OUT OF THAT STUFF.?

7     WHY ARE THEY CALLED THE APARTMENTS WHEN THEY ARE ALL STRUCK
  
       TOGETHER.

8.  IF FLYING IS SAFE, WHY DO THEY CALL THE AIRPORT THE TERMINAL.?

9. IF CON IS THE OPPOSITE OF PRO, IS CONGRESS THE OPPOSITE OF PROGRESS.?

                    இனி ஒரு குட்டிக் கதை,
                                   --------------------------
கண்ணில்லாத பெண் ஒருத்தி தன்னையும் வெறுத்து எல்லோரையும் வெறுத்து வந்தாள். இருந்தாலும் அவள் மேல் தனி அன்பு கொண்ட அவளது காதலனை மிகவும் விரும்பினாள். “ எனக்கு எப்படியாவது பார்வை கிடைத்தால் உன்னை மணந்து கொள்வேன் “ என்று அவனிடம் கூறினாள்..இப்படி இருக்கும்போது அவளுக்கு இரண்டு கண்கள் தானமாய்க் கிடைக்கப்பட்டு ஆப்பரேஷன் செய்யப் பட்டது. அவளது கட்டு பிரிக்கப்பட்டு அவளால் எல்லாவற்றையும் காண முடிந்தது. அவளது காதலனையும் காண முடிந்தது. அவன் அவளிடம், “இப்போதுதான் உனக்குக் கண் பார்வை வந்து விட்டதே .என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ?என்று கேட்டான்.

அவள் அவளது காதலனை உற்றுப் பார்த்தாள். விழியில்லாத கண்களைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள். அவள் அதை எதிர்பார்க்கவில்லை. காலம் முழுவதும் ஒரு பார்வை இல்லாதவனுடன் வாழ்வா என்று யோசித்தவள் அவனை மணக்க மறுத்து விட்டாள்.

பார்வையில்லாத விழிகளிருந்து கண்ணீர் வழிந்தோட அவன் சொன்னான். “உன் கண்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். அவை உனதாகும் முன்பாக எனதாய் இருந்தது.

இப்படித்தான் கடந்து வந்த பாதையை மறந்துபோய் பலரும் நடந்து கொள்கிறோம். வாழ்வு நமக்குக் கிடைத்த பரிசு.

பிறரைக் கடிந்து பேசுமுன். பேசவே முடியாதவரைப் பற்றி நினைக்கிறோமா.?

உணவின் சுவை பற்றிக் குறை கூறுமுன், உணவே கிடைக்காமல் கஷ்டப் படும் எளியோரைப் பற்றி நினைக்கிறோமா.?

வண்டியோட்ட வேண்டிய தூரத்தைப் பற்றிக் குறை கூறுமுன், அந்த தூரத்தை நடந்தே கடக்க வேண்டி இருப்பவர் பற்றி சிந்திக்கிறோமா.?

இதையெல்லாம் என்னை எழுத வைப்பதே நான் “ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும் “ என்று பதிவிட்டபின் விஜய் டீவியில் ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஓரிருவரது வாழ்க்கையை அவர்கள் சொல்லக் கேட்ட பிறகு எழுந்த எண்ணமே.

வாழ்க்கை ஒரு பார்ட்டியோ கச்சேரியோ அல்ல. இருந்தாலும் நாம் இருக்கும் வரை மகிழ்வோடு நடனமாட முயல்வோம்.

                                 சில உண்மைகள்
                                 ------------------------
வாழ்க்கையில் நம் எண்ணங்களை பிறரது மனதில் பதிய வைப்பதும், பிறர் பணத்தை நம் உடைமையாக்குவதும் மிகவும் கடினம். இதில் முந்தையதில் வெற்றி பெறுபவர் ஆசான் எனப்படும் குரு. பின்னதில் வெற்றி பெறுபவர் பிஸினஸ்மேன் எனலாம். இது இரண்டிலும் வெற்றி பெறுபவரை மனைவி எனலாம். இரண்டிலுமே தோல்வியைத் தழுவுபவர் பாவம் கணவன்.
------------------------------------------------------------------------



புதன், 21 மார்ச், 2012

நினைவில் நீ ( அத்தியாயம் பதினைந்து )



                                 நினைவில் நீ ( நாவல் தொடராக.)
                                 ----------------------------------------------
                                                -------  15  ---------

          பாட்டி இற்ந்து போன பிறகு கமலத்துக்கு உறவினர்களின் க்ஷேம லாப நஷ்டங்களைப் பற்றி செய்தி கிடைப்பது மிகவும் அரிதாயிருந்தது. மேலும் அவ்வப்போது கிடைத்துவந்த கணிசமான உதவிகளும் நின்று போயிற்று. பாட்டியின் பெருமைகளைப் பற்றி பிரலாபித்துப் பேசியே கிட்டத்தட்ட  ஒரு மாத காலத்தை ஓட்டிவிட்டாள். கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணம் போதாத போதெல்லாம் பாட்டியின் ஞாபகமே அவளுக்கு வந்தது. கண்ணன் கல்யாணமான பிறகு அவளை வந்து பார்ப்பதைக் கூட நிறுத்தி இருந்தான்.பாபுவைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.முன்பும் அவன் அடிக்கடி வருபவனல்ல. இப்போதும் கிடையாது. எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் என்னடா பாபு, உன் அக்காளின் ஞாபகமே உனக்கு இல்லை. யாருக்கெல்லாமோ. என்னவெல்லாமோ செய்கிறாயே ஒரு முறை வந்தாவது, அக்கா ஏதாவது என்னால் ஆகணுமான்னு, கேட்டிருப்பாயா.? நானென்ன அப்படி உங்கிட்டேதான் ஏதாவது இதுவரைக் கேட்டிருப்பேனாஎன்று தொண தொணப்பாள். பாபுவும் சாதுரியமாக “ உனக்கு நான் ஏதாவது வேண்டுமா என்று கேட்பதே அத்திம்பேரை அவமதிப்பதாய் இருக்கும். அவரிருக்கும்போது உனக்கென்ன குறைஎன்று கேட்டே மடக்கி விடுவான்.

      பாபுவுக்கு பெயரும் புகழும் அதிகமாகிக் கொண்டு வருவதாகக் கேள்விப் பட்டிருந்தாள், அதுவும் அரையும் குறையுமாக தன் கணவனிடமிருந்து. எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளா விட்டால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது அவளுக்கு. அதற்காகவே கண்ணனின் வீட்டுக்கு ஒரு நடை வந்தாள்.. அவள் வந்த நேரம் சரியாக இருக்கவில்லை.. அதற்கு முந்தின தினம்தான் கண்ணனும் மாலதியும் பாபுவின் வீட்டுக்குச் சென்று கோபப் பட்டு திரும்பி இருந்தனர்.

      கமலத்தைப் பார்த்ததும் கண்ணன் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டான்.. வாவென்று கூடச் சொல்லவில்லை. அந்த ஆத்திரம் கமலத்துக்கு மாலதியிடம் திரும்பியது.

          நான்கைந்து நண்டும் சிண்டுமான வாண்டுகளுடன் கமலம் வந்ததும் மாலதிக்குப் பகீரென்றது. “ இதுகளுக்கு காப்பி, பலகாரம் இத்தியாதி வகையறாக்களுக்கு எங்கே போவது.ஏற்கனவே அரைப் பட்டினியாகக் காலம் தள்ள வேண்டி இருக்கு.இன்றைக்கு முழுப் பட்டினி என்றே அவள் எண்ணம் ஓடியது. அதனால் அவளுக்கு கமலத்தை வா என்று வரவேற்கவும் மறந்து போயிற்று. அது கண்டு “ என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்.? நான் வந்தது கூடத் தெரியாமல் பிரமிச்சு நிக்கறேளே. கல்யாணம் ஆனதற்கப்புறம் கண்ணன் ரொம்பவே மாறிட்டான்.அதுக்கு முன்னால் அக்கா, அக்கான்னு உயிரையே விடுவான். இதுக்குத்தான் சொல்றது; நல்லது பொல்லாது தெரியாமே ஒரு வீட்டிலேருந்து பொண் எடுக்கக் கூடாதுன்னு. டேய். சனியன்களா வந்த இடத்திலேயாவது வாலைச் சுருட்டிண்டு இருக்க மாட்டேள். “

          அக்கா, நான் பண்ணிண்ட கல்யாணத்தில் ஒண்ணும் குறைச்சல் இல்லை.. எல்லாம் நம்ம குடும்ப தோஷந்தான்.அண்ணா தம்பிகள் மாதிரியா இருக்கு. சேச்சே.! சுத்த மோசம். எல்லாருக்கும் கொடுக்கிற வரைக்கும்தான் நல்லவன். இல்லாட்டா பொல்லாதவன். அப்பா விஷயத்திலேயும் அப்படித்தான். இப்போ உன் விஷயத்துலேயும அப்படித்தான்.

           கமலத்துக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்து விட்டது. மெள்ள மெள்ள எல்லா சமாச்சாரங்களையும் கறந்து விட்டாள். பாபுவுக்கும் க்ண்ணனுக்கும் மனத்தாங்கல்.இதுக்குக் காரணம் கண்ணன் பாபுவிடம் உதவி கேட்கப் போயிருக்கிறான். அவன் கண்ணனைக் கன்னா  பின்னா வென்று பேசியிருக்கிறான்  அவன் இதையும் செய்வான் இதுக்கு மேலேயும் செய்வான். எல்லாம் அந்த சாதி கெட்டவளோட வேலையாய்த் தானிருக்கும். பாபுவுக்கு ரொம்ப நல்ல பெயராமே. ஹூம்.! எப்படி எப்படி எல்லாம் பேசி யாரையெல்லாம் ஏமாற்றுகிறானோ. ! அதுக்கு மட்டும் அவனுக்கு கொள்ளை சாமர்த்தியம். ..... என்றபடியெல்லாம் முடிவுக்கு வந்து, பொருமியும் ,சிலாகித்தும் தனக்குள்ளேயே எண்ணிக் கொண்ட கமலம், மாலதி பயந்ததுபோல் அவர்களை முழுப் பட்டினி யாக்கிவிட்டுத்தான், அங்கிருந்து போனாள்.

       வீட்டிற்கு திரும்பியவள் காட்சி, அவளாலேயே நம்ப முடியவில்லை. அவளுடைய கணவன் கட்டிலில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தான். அருகில் பாபுவும் இன்னொருவனும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

        முதலில் கமலம் பதறிப்போனாள். கணவனுக்கு என்னவோ ஏதோ என்று கலங்கினவளுக்கு, அருகில் சென்றதும் எழுந்த நெடியும் கணவன் கிடந்த நிலையும் அவன் நன்றாகக் குடித்துவிட்டுப் போதையிலிருக்கிறான் என்று தெரிய வைத்தது. கணவன் குடிப்பது கமலத்துக்குத் தெரியாததல்ல. இருந்தாலும் நினைவு தவறும்வரைக் குடித்து வந்து பார்த்ததில்லை.

      அவளுக்கு பாபுவிடம் என்றுமில்லாத ஒரு தனி அன்பு அன்று ஏற்பட்டது. நிலை தவறி விழுந்து கிடந்த கணவனை வீட்டில் சேர்ப்பித்தவன் என்பதற்காக மட்டுமல்லாமல் இப்படி நடந்த நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் போகப் பண்ணியவன் என்பதாலும் அவளுக்கு அவனிடம் மதிப்பும் சற்றே கூடியது.

     ”அக்கா, நான் எதுவும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. நீயே யூகித்திருக்கிறாய். அத்திம்பேருக்கு இந்தப் பழக்கம் உண்டு என்று எனக்குத் தெரியாது. நல்ல காலம்.! நான் பார்த்திருக்காவிட்டால், அவர் இந்நேரம் லாரியில் அறைபட்டு ஆஸ்பத்திரியில்தான் இருந்திருப்பார். ஹும். அது போகட்டும். இனிமேலாவது அவர் இந்த வழிக்குப் போகாமல் நீதான் தடுக்க வேண்டும். நானும் அடிக்கடி வந்து பார்ப்பேன். இப்போதுதானே தெரிகிறது, நீ ஏன் கஷ்டப் படுகிறாய் என்று. அவரை இந்தப் பழக்கத்திலிருந்து நீதான் மாற்றி திருத்தணும். நேரமாயிட்டது. நாளை வந்து பார்க்கிறேன். “ என்று கூறிவிட்டு பாபு சென்றுவிட்டான். அவனைப் பற்றி அவளுக்குக் கிடைத்த தகவல்களவன் அவளுக்குச் செய்த உதவி, இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது கமலத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.

        “ இந்தப் பிள்ளைக்குத்தான் எவ்வளவு நல்ல குணம். இது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று. “ என்று முதன் முதலில் தனக்குத் தெரியாதது ஒன்றும் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். பாபு போன பிறகு தன் கணவனைக் கண்ட போது அவளுக்கு ஒருவித அருவருப்பு கலந்த பயமும் ஏற்பட்டது. தன்னுடைய தலை விதி என்று விதியின் மேல் பழியைப் போட்டு சமாதானம் அடைந்து கொண்டாள்.

      மறுநாள் பாபு வந்தபோது, அவனைப் பார்க்கவே கமலத்துக்கும் அவள் கணவனுக்கும் வெட்கமாயிருந்தது. பக்குவமாகப் பேசி பாபு தன் அத்திம்பேரின் தவற்றை சுட்டிக் காட்ட, ஏதாவது பதில் சொல்ல வாயெடுத்த தன் கணவனை கமலம் பார்த்த பார்வையில் அவர் அடங்கி விடுவதை பாபு கவனித்தான்.இனிமேல் இந்த மாதிரி தவறான வழிக்குச் செல்லாமலிருந்தால், தன்னால் கூடிய மட்டும் உதவி செய்வதாகவும் வாக்களித்தா.ன்..அதற்கு இருவரும் சரி என்று தலை அசைக்கவே இருபத்தைந்து ரூபாய்களை கமலத்திடம் கொடுத்துவிட்டு பாபு சென்று விட்டான்.

      அவன் எதிர்பார்த்த பலன் கிடைத்து விட்டதாக ஏமாந்துதான் போனான். கமலத்தால் கணவனைக் கட்டுப் படுத்தவும் முடியவில்லை. அவனால் குடிக்காமல் இருக்கவும் முடியவில்லை. பாபு வரும்போதெல்லாம், கேட்கும்போதெல்லாம், குடிப்பதை ஒரேயடியாக நிறுத்தி விட்டேன். அப்போதாவது ஏதாவது கஷ்டம் வரும்போது குடியில் மறந்து போயிருந்தேன். ஆனால் குடிதான் மறைந்து விட்டதே தவிர கஷ்டம் வடியவில்லை என்று கூறி பாபுவிடம் அனுதாபத்துடன் பணமும் பெற்று வந்தான்-இன்னும் குடிப்பதற்கு
-----------------------------------------------------------------------
                                                         ( தொடரும்.)
   

செவ்வாய், 20 மார்ச், 2012

தாய்மையின் வலிமை



விலங்குகளிடத்தும் காணும் தாய்மையின் வலிமையைக்
காட்டும் இந்த வீடியோவை பகிர்வதில் மகிழ்ச்சி .     ஏதேதோ செய்து இந்த வீடியோவை
வலையேற்றுகிறேன். 

ஞாயிறு, 18 மார்ச், 2012

நினைத்ததை எழுதவா.?

                         
                                      நினைத்ததை எழுதவா.?
                                      -------------------------------
                                        எண்ணச் சிதறல்கள்.
                                           -----------------------

1.        காத்திருப்பு வட்டம்.

கருவிலிருக்கும் குழந்தைப் புவியில் வந்துதிக்கக் காத்திருந்து,பிறந்து,
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்ந்து, ஏதுமறியாப் பருவத்தில் எல்லாவற்றுக்கும் காத்திருந்து, உடலும் உள்ளமும் பருவமடைய இரு பாலரும் மறுபாலரைக் கவரக் காத்திருந்து,பின் மணவினையில் ஒருவர் கைப் பிடித்து, சந்ததி பெருக்கக் காத்திருந்து பின் நரை கூடிக் கிழப் பருவம் எய்தி, கூற்றுவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது , காத்திருப்பு என்பது ஒரு வட்டம் என்று நன்றாகத் தெரிகிறது.

புகழொடு தோன்றல்.

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று.. அவருக்கென்ன எழுதி விட்டார். தோன்றும்போது புகழோடு தோன்றுவது நம் கையிலா இருக்கிறது.? மேலும் புகழ் என்பது ஒரு RELATIVE TERM..அதற்கு அளவு கோல் என்ன.? வள்ளுவர் வாக்குப்படி நடப்பதென்றால் 90% க்கு மேற்பட்டவர்கள் தோன்றியே இருக்கக் கூடாது. வள்ளுவருக்கு ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். வாய்ப்புகிடைக்கப் பாடுபட்டு, தோன்றியபின் புகழடைக என்றல்லவா எழுதி இருக்க வேண்டும்.!

எதையும் எதிர்க்க வேண்டாம்.

இதை நான் எழுதுவதற்கே எதிர்ப்புகள் இருக்கலாம். இருந்தாலும் மனசில் பட்டதை எழுதாமல் இருக்க முடியவில்லை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்று கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்துவிட்டால் முன்னேற்றம் பகல் கனவாகி விடும். மேலும் முன்னேற வேண்டும் என்னும் உந்துதலே நம்மை முன்னோக்கி நகர வைக்கும். ஆனால் அதற்காக இதுவரை முன்னேறவே இல்லை என்று அழிச்சாட்டியத்தில் எதையும் குறை கூறுவது எனக்கு ஏற்புடையதல்ல. நான் என்னைப் பற்றித்தானே கூற முடியும். நான் எந்த 


நிலையில் இருந்தேன். கடந்து வந்த பாதை என்ன. என் தந்தை எனக்குச் செய்தது என்ன. நான் என் மக்களுக்குச் செய்த்து என்ன. என் மக்கள் அவர்களின் குழந்தைகளுக்குச் செய்வது என்ன. செய்ய முடிவது என்ன. என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் பெற முயலும்போது. எங்கள் முன்னேற்றம் தெரிகிறது. இது இக்கால சந்ததியினர் எல்லாருக்கும் பொருந்தும் என்று நான் கூறத்தேவையில்லை. என்ன.? இன்னும் வேகமாய் வளர்ந்திருக்கலாமோ என்னும் எண்ணம் வேண்டுமானால் தோன்றலாம். நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது நம் மக்கள் தொகை சுமார் நாற்பது கோடி என்றால், இப்போது அது நூறு கோடியைத் தொட்டுவிட்டது.அப்போது சாராசரி இந்தியன் வயது 35-க்கு பக்கம் இருந்தது. தற்போது 65 வயது என்று கூறப் படுகிறது. எழுத்தறிந்தவர் தொகை 30% க்கும் குறைவாக இருந்தது. இன்று சுமார் 60% சராசரியாக இருக்கிறது. மற்றபடி வாழ்க்கையின் எல்லா வசதிகளும் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக ஏற்ற தாழ்வுகள் மறைந்து கொண்டு வருகின்றது. இன்னும் சில இடங்களில் அது நீடிக்கிறதென்றால் அது நாம் போற்றிப் பாதுகாக்கும் கலாச்சாரக் காரணங்களே ஆகும். ஏற்ற தாழ்வற்ற இலவசக் கல்வி எல்லோருக்கும் பொதுவாக்கப் பட்டால் அதுவும் மறையலா.ம். ஆனால் இப்போதைய EMANCIPATED  மக்கள் அதை வரவேற்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஏற்ற தாழ்வுள்ள சமுதாயம் தான் இவர்களுக்கு ஆதிக்கம் செய்ய உதவும்.

முதல் படியாக அரசு கொண்டு வரும் சமச்சீர் கள்வியோ, இலவசக் கல்வியோ நடைமுறைப் படுத்தப் பட்டால் கல்வி வியாபாரிகள் பாடு திண்டாட்ட மாகி விடும். அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். விளை நிலங்கள் விற்கப்பட்டு விவசாயிகள் இடமாற்றம் செய்ய முயல்கிறார்கள். விவசாய வேலை இல்லாமல் திண்டாடும் மக்களுக்கு வருடத்தில் குறைந்தது நூறு நாட்களுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் வந்த MGNRES   திட்டம் ஒழுங்காக் ந்டைமுறைப் படுத்தப் பட வேண்டும். திட்டத்தில் குறையில்லை. நடைமுறைப் படுத்துவதில் புறங்கையை நக்குகிறவர்கள் அதற்குப் பதில் அள்ளிக் குடிக்கிறார்கள். FOOD SECURITY என்னும் திட்டம் வருமுன்பே ஏகப்பட்ட எதிர்ப்பு. எங்கெங்கு சட்டங்களில் ஓட்டை இருக்கிறதோ அதை திறமையாகப் பயன் படுத்துபவரை நமக்கு ஏனோ அடையாளம் தெரிவதில்லை. எழுபதுகளுக்கு முன்பு குடி என்றால் என்ன என்றே தெரியாத ஒரு சமுதாயம் தலை எடுக்க இருந்தது. இப்போது குடியில்லாமல் இருக்க எண்ணினாலும் முடியாது.

 நானும் பார்த்துக் கொண்டு வருகிறேன். எதையும் எதிர்க்கும் மனோபாவம் உள்ள இளைய சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் தற்போதைய மத்திய தர இளைஞர்கள் அதிகம் ஆவேசப் படுகிறார்களே அல்லாமல் ஆழ சிந்திப்பது இல்லை. இம்ம் என்பதற்குள் எல்லோரையும் இறக்கி விட்டு , உம்ம் என்பதற்குள் உயரப் பறக்க விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றாற் போல் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இளைஞர்களின் உணர்வுகளை சாதி மத இன மொழி என்றெல்லாம் கூறி உசுப்பேற்றுகிறார்கள். இருந்தால்தானே அவர்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.


எண்ணச் சிதறல்கள் என்று எழுதத் துவங்கினேன். ஆனால் சிதறிய எண்ணங்கள் என் ஆதங்க்கக் குவியலில் மூழ்கி எழ ஆரம்பித்து விட்டது.

எழுதுவதன் நிமித்தம்

என்னதான் நினைத்து எழுதினாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போகிறதா என்பது சந்தேகமே. இப்படியும் சிந்திக்கலாமா என்று நினைப்பவர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை. வலையில் எதையும் சீரியஸாக எழுதினால் அது படிக்கப் படாமலேயே போகும் என்றே தோன்றுகிறது. நானும் பார்த்துவிட்டேன். மூளையைக் கசக்கி எழுதுபவை சீண்டப் படாமலும் மொக்கையாய் எழுதப் படுபவை அமோக வரவேற்பு பெறுவதையும் நான் வலையில் எழுதத் துவங்கியதிலிருந்து கவனித்து வருகிறேன். இந்த வயதுக்குமேல் மொக்கையாக எழுத மனம் வருவதில்லை. இதில் மொக்கை என்பது என் கணிப்பே அல்லாமல் மொக்கைக்கு அளவு கோல் என்னிடம் இல்லை. சொல்லாமல் செல்வதே நன்று என்று எழுதி விட்டு இவ்வளவையும் சொல்கிறேன் என்றால் என் மனத்தாங்கல் புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன். ஆமாம்  புரிந்து கொண்டு என்ன ஆகும்.? 
------------------------------  ------------------------------------------------------------------------

                            


  
                        :          .               .                                  .