Monday, April 30, 2012

விஜயவாடா...தொடரும் நினைவுகள்.


                                 விஜயவாடா ....தொடரும் நினைவுகள்.
                                -----------------------------------------------------

( கற்பனை செய்து கதைகள் எழுதுவது ஒருவிதம். ஆனால் நிஜ வாழ்வில் சில சம்பவங்கள் 
கற்பனையை விட சுவையாய் இருக்கின்றன. இதுவே என் பதிவுகளில்அனுபவங்களின் 
வெளிப்பாடாக இருக்கிறது.)


                                                                                      நண்பேன்டா...
                                          --------------------
விஜயவாடா நினைவுகள் குறித்து முன்பொருமுறை எழுதி இருந்தேன். கீழ்காணும் செய்திகள் இல்லாமல் விஜயவாடா வாழ்க்கை முற்றிலும் சொல்லப்பட்டதாகாது. திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலை கொதிகலன்களுக்கான பாகங்களை தயார் செய்து அவை அனல் மின் நிலையத்தில் ஒருங்கிணைக்கப் படும். விஜயவாடா அனல் மின் நிலையத்துக்கு , கொண்டபள்ளி என்னும் ரயில் நிலையத்துக்கு தளவாடங்கள் வந்து சேரும். அங்கிருந்து அவை மூன்று நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள இப்ராஹிம்பட்டினத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.மிகவும் கனமான பொருட்களை அனல் மின் நிலையத்தருகிலேயே இறக்க வசதியாக ரயில்வே லைன் போட்டிருந்தார்கள்.


தளவாடங்கள் வந்து சேர்ந்ததும் அவற்றை இறக்கி ( unload ) ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரயில்வேக்கு டெமரேஜ் என்று அபராதம் கட்ட வேண்டும். ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தாலேயே அவர்களுக்கு “ கப்பம்
கட்ட வேண்டும் என்பது எழுதப் படாத விதி..வரும் ரயில் வாகன்களின் சக்கர எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுக்க வேண்டும்

அனல் மின் நிலையத்துக்கான கொதிகலனின் பாய்லர் ட்ரம் எனப் படும் பாகம் மிக முக்கியமானது. 210 மெகாவாட் அனல் மின் நிலையத்துக்கான பாய்லர் ட்ரம், சுமார் 140 மெட்ரிக் டன் எடையிருக்கும். அதை வாகனிலிருந்து இறக்குவது முக்கிய பணி. இதற்காக TATA  P&H CRANE-கள் உபயோகப் படுத்தப் படும். ஒரு க்ரேனின் தூக்கும் சக்தி அதிக பட்சமாக 75-டன் ஆகும். ஒரே சமயத்தில் இரண்டு க்ரேன்களும் சரியாக இயக்கப் பட்டால் வேகனிலிருந்து இறக்கலாம். SYNCHRONISE ஆக இயக்காவிட்டால் விபரீதமாகிவிடும். ட்ரம் கீழே விழுந்து சேதப்பட வாய்ப்புண்டு.

அன்றைக்கு எனக்கு உடல் நலம் சற்றுக் குறைவாக இருந்ததால் ,அன்று பாய்லர் ட்ரம் வராது என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு ஓய்வெடுக்க வீடு நோக்கிப் பயணப் பட்டேன். போகும் வழியில் பாய்லர் ட்ரம் வேகன் கொண்டபள்ளி நோக்கி வருவதை கண்டு மீண்டும் பணியிடத்துக்கு வந்து விட்டேன். எல்லாம் சரியாகத் திட்டமிட்டு அதன் படி நடந்தால் இர்ண்டு மூன்று மணி நேரத்தில் ட்ரம்மை இறக்கி விடலாம். மீண்டு வந்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டேன். ட்ரம்மை இறக்கி வைக்க மர ஸ்லீப்பர்களை ஏற்கனவே வாங்கி வைத்திருந்தேன். அந்த நாள் என் கட்டுமான பணி அனுபவத்தில் மறக்க முடியாதது.


முதன் முதலாக அந்த எடையுள்ள முக்கிய பாகம்  பார்ப்பதற்கும் ,அதை எப்படி இறக்குகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் ஒரு கும்பலே கூடி விட்டது. கட்டுமானப் பணி நடந்த இடம் BLACK COTTON SOIL எனப் படும் நிலம். பளு ஏற்றப் பட்டால் க்ரேன் மண்ணில் புதைய வாய்ப்புண்டு என்று கணித்திருந்தோம். அதற்கேற்றாற்போல் க்ரேன் நிற்க வேண்டிய இடத்தில் சில சிறிய போல்டர்கள் மற்றும் ஸ்லீப்பர்கள் அடுக்கி அதன் மேல் க்ரேனை நிற்க வைத்தோம். வேகன் வந்ததும் ட்ரம்மின் இரண்டு பக்கங்களிலும் ஸ்லிங்கை மாட்டி ட்ரம்மை மேலே தூக்கி வேகனை ரிலீஸ் செய்வது , பிறகு அந்த இடத்தில் ஸ்லீப்பர்கள் மேல் ட்ரம்மை இறக்குவது என்று ப்ளான்.

வேகனில் ட்ரம்முக்கு சப்போர்டாக க்ளாம்ப் எனப்படும் பொருள் வெல்ட் செய்யப் பட்டிருந்தது. அதை முதலில் எடுக்க வேண்டும் . பிறகே ட்ரம்மைத் தூக்க வேண்டும். அதற்கு வேண்டிய காஸ் கட்டர் எடுத்துவர நான் ஸ்டோருக்குச் சென்றவுடன், அதையறியாத ,இதில் சம்பந்தப் படாத அதிகாரி ஒருவர்ட்ரம்மில் ஸ்லிங்கை மாட்டி க்ரேனை இயக்க உத்தரவு கொடுத்து விட்டார். க்ரேன் ஆப்பரேட்டர்கள் அவர் சொல் கேட்டு இயக்க நடக்கக் கூடாதது நடந்து விட்டது. க்ரேன் இரண்டும் முன் பக்கம் சாய்ந்து மண்ணில் கொஞ்சம் புதைந்து இயக்க முடியாத நிலைக்கு வந்து விட்டது. நடந்த தவறு உணர்ந்ததும் உத்தரவு கொடுத்தவர் ஓடிவிட்டார். அருகில் இருந்தால் நமக்கும் வம்பு என்று ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு அகன்றனர். ட்ரம் ஒரு ப்ரிகாரியஸ் பொசிஷனில்.வேகன் நகர முடியாது. க்ரேன் இயக்க முடியாது. அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாந்தான் பொறுப்பு. மாலை ஆறு மணிக்கு மேலாயிற்று. என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே தலைமேல் கை வைத்து அமர்ந்து விட்டேன்.

அப்போதுதான் “ பட்டாளத்தார் “ என்று நான் அழைக்கும் என் நண்பர் எனக்கு ஆறுதல் கூறி நடக்க வேண்டியதைச் செய்ய திட்ட மிடச் சொன்னார். என்ன செய்தோம் ஏது செய்தோம் என்று விவரிக்கப் போனால் புரிந்து கொள்வதோ உணர்ந்து கொள்வதோ கஷ்டம் மொத்தத்தில் அந்த இக்கட்டான நிலையிலிருந்து எனக்கு ( கூடவே இருந்த நண்பருக்கும் )இரண்டு இரவுகளும் ஒரு பகலும் முடிந்து, அடுத்த நாள் காலையில்தான் மீண்டு வர முடிந்தது. இந்தக் காலத்தில் குறிப்பிடப்படும் “ நண்பேண்டா) என்ற பட்டம் அவருக்கு முழுவதும் பொருந்தும்.அருகிலிருந்தவர்களை அடையாளம் காட்டிய அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் மாற்றி விட்டது.
                          ----------------
                                THE BIGGEST WASHING MACHINE
                                      ----------------------------

கட்டுமான பணியில் நான் இருந்த போது, விஜயவாடாவுக்கு ஜெர்மானியர் ஒருவர் வந்திருந்தார். ஜெர்மன் கூட்டுறவில் தயாராயிருந்த பொருட்கள் சரியாகப் பொருத்தப் படுகிறதா என்று பார்க்க வந்திருந்தார். விஜயவாடாவில் ஒரு வார காலமே இருந்த அவருக்கு, எங்களைவிட விஜயவாடா பற்றிய சேதிகளும் வசதிகளும் ( இரவு வாழ்க்கை உட்பட )தெரிந்திருந்தது. அவர் அனல் மின் நிலையத்துக்கு வந்து போவதற்கு மட்டும் நாங்கள் அனுப்பும் காரை உபயோகிப்பார். மற்ற நேரங்களில் விஜயவாடாவுக்கே உரித்தான சைக்கிள் ரிக்‌ஷாவில்தான் சுற்றுவார். எந்த இடத்தில் எந்த மாதிரியான மக்கள் ,இரவு கேளிக்கைத் தலங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. கிருஷ்ணா நதிக்கரையில் சலவை செய்யப் பட்டுக் காயப் போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து “THE BIGGEST WASHING MACHINE “ என்று சொல்லி சிரிப்பார். வேலை நேரத்தில் அதைத் தவிர வேறெதுவும் பேசமாட்டார்.ஒரு மறக்க முடியாத கேரக்டர்.
---------------------------------------------------    

.

9 comments:

 1. அசம்பாவிதக் கேள்வி. கேஸ் கட்டரை வேறு யாராவதை விட்டு எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமோ?

  ReplyDelete
 2. சம்பவம் நடந்து முடிந்த பிற்கு இப்படியும் நடந்து இருக்கலாமோ, அப்படியும் நடந்திருக்கலாமோ என்று எனக்கு நானே நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டாயிற்று.சம்பவிக்காதது அசம்பாவிதம் என்று அர்த்தம் எடுத்து கொள்கிறேன். வருகைக்கும்கருத்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 3. அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 4. நாம் யூகிக்கமுடியாத சம்பவங்கள்தான் நமக்குப் பாடங்கள் கற்றுத் தந்து நம்மையும் சுற்றியிருப்பவர்களையும் அடையாளம் காட்டுகின்ற்ன.

  உடல்நலமில்லை என வீடு திரும்பிய உங்களின் உடலும், மனமும் அடுத்த இரண்டு நாட்களுக்கு என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அறியமுடிந்தது.

  நம்பிக்கை தந்த உங்கள் நண்பருக்குப் பாராட்டுக்கள் பாலு சார்.

  ReplyDelete
 5. ரத்னவேல் நடராஜன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. சுந்தர்ஜி, சரியாகச் சொன்னீர்கள். அடுத்த இரண்டு நாளும், என்னையறியாமல் வேலை குறித்து நான் உளறிக் கொண்டிருக்க என் மனைவி மருத்துவரிடம் அழைத்துப் போனார். வானம் இடிந்து என் தலையில் விழப்போவதில்லை என்று ஆறுதல் கூறிய டாக்டர், இரண்டு மூன்று நாட்களுக்கு மைல்ட் செடேடிவெ கொடுத்து உறங்க வைத்தார்.! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்ஜி.

  ReplyDelete
 7. பல வருடங்களுக்கு முந்தைய அனுபவம் என்றாலும் அதை எழுதிய விதம், அந்த இடத்திலேயே நேரில் காண்பதைப் போன்ற பதைபதைப்பையும் சூழலின் விபரீதத்தையும் உணரமுடிந்தது. கைவிட்டுப் போனவர்கள் மத்தியில் உடனிருந்து உதவிய நண்பரின் குணம் மிகவும் போற்றுதற்குரியது. கேட்டில் உதவுபவனே நண்பன் என்னும் பழமொழி நினைவுக்கு வருகிறது.

  ஜெர்மானியரின் நகைச்சுவை உணர்வையும் ரசித்தேன். அனுபவப் பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா.

  ReplyDelete
 8. உண்மையில் படிக்கையிலேயே திரில்லிங்காகத்தான் இருக்கிறது
  இதுவும் கடந்து போகும் என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்
  இந்த நிகழ்வுக்குப் பின் உங்க்களுக்கு நிச்சயமாகப் புரிந்திருக்கும்

  இதை மிகச் ச்ரியாக சொல்லிப் போவது கடினம்
  நீங்கள் சரியாகச் சொல்லிப் போவது தங்கள் எழுத்தாற்றலுக்கு அத்தாட்சி

  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 9. @கீதமஞ்சரி,
  @ ரமணி,
  வாழ்க்கையில் அனுபவங்களின்
  வெளிப்பாடே பல்ரது குணங்களை
  நிர்ணயிக்கிறது. என் அனுபவங்களைப்
  பகிர்ந்து கொள்ள வலையுலகம்
  உதவுகிறது. பலரும் படித்துக் கருத்து
  சொல்லும்போது மனம் மகிழ்ச்சி
  அடைகிறது. வருகைக்கும் கருத்துக்
  கும் நன்றி.

  ReplyDelete