Monday, June 29, 2015

ராமன் எத்தனை ராமனடி..........


                               ராமன் எத்தனை ராமனடி......
                               ---------------------------------------


அவதாரக் கதைகளில் அவதார புருஷர்களின் தோற்றம் பற்றி மட்டுமே சேதி இருக்கிறது கிருஷ்ணர் தவிர மற்றவர்களின் மறைவு பற்றி எங்கும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை  என்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . திருமதி கீதா சாம்பசிவம் ராமன் மறைவு பற்றி இருக்கிறது என்றும் அவரே எழுதி இருப்பதாகவும் எழுதி இருந்தார்.திரு அப்பாதுரை அத்யாத்ம ராமாயணத்தில் ராமன் மறைவு பற்றி இருக்கிறது என்றும் பின்னூட்டம் எழுதி இருந்தார். அதில்லாமல் துளசிதரன் மற்ற அவதாரங்கள் கடவுளாகவே தோன்றியதால் மறைவு இல்லை என்றும் ராமனின் மறைவு பற்றி இருக்கிறது என்றும் எழுதி இருந்தார்கள். இந்த செய்திகள் என் சந்தேகத்தைப் போக்கவில்லை. அப்பாதுரை கூறி இருந்த அத்யாத்ம ராமாயணம் பற்றிய விவரங்களுக்காக கூகிளில் தேடினேன் அப்படித் தேடி அறிந்த சில விஷயங்களைப் பகிர்கிறேன் 

ராமாயணக்கதை என்பது பொதுவாக ராமர் சீதையைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தாலும் அதில் இருக்கும் விஷயங்கள் கதைசொல்லிகளைப்  பொறுத்து மாறுபட்டிருக்கிறது முதன் முதலில் வால்மீகி ராமாயணம் எழுதினார் என்றும் அது 24000 பாடல்கள் கொண்டது என்றும் பலருக்கும் தெரிந்திருக்கும் இந்த ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பல  ராமாயணங்கள் எழுதப் பட்டது என்றும் தெரிகிறது.சம்ஸ்கிருதத்தில் வால்மீகி ராமாயணம் , அத்யாத்ம ராமாயணம், வசிஷ்ட ராமாயணம் அகஸ்தியராமாயணம், ஆநந்த ராமாயணம் போன்றவைகளும் தமிழில் கம்பராமாயணம், தெலுங்கில் ரங்கநாதராமாயணம் , ஹிந்தியில் துளசி ராமாயணம் அல்லது ராமசரித மனசா, பெங்காலியில் கீர்த்திவாச ராமாயணம் , மற்றும் மலையாளத்தில் துஞ்ச்த்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயண மொழி பெயர்ப்பும் பிரசித்தி பெற்றவை. இவை எல்லாவற்றுக்கும் மூலமாகக் கருதப் படுவது வால்மீகியின்  ஆதி காவ்யம் எனக் கருதப் படும் ராமாய்ணமே.

 ராமனின் மறைவு பற்றிய செய்திகள் தேடப்போன இடத்தில் அது பற்றிய கதை ஏதும் கிடைக்கவில்லை. அத்யாம ராமாயணத்தில் இருக்கலாம் என்றால் எனக்கு சம்ஸ்கிருதமோ மலையாளமோ எழுதப் படிக்கத் தெரியாது. இருந்தாலும் இந்த ராமாயணங்களுக்குள்ளான வேறுபாடுகளைக் கண்டறிய ஒரு வாய்ப்பாயிருந்தது
அத்யாத்ம ராமாயணம் பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது இதை எழுதியவர் வேதவியாசர் என்றும் இது பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையிலான சம்பாஷணையை பிரம்மா நாரதருக்குக் கூறியதாகவும் சொல்லப் படுகிறது ஏற்கனவே வால்மீகியின் ராமாயணம் இருக்கும் போது இது ஏன் என்னும் கேள்விக்குப் பதிலாக, இது அத்வைத மார்க்கத்தின் ஒரு நீட்சியாகவே கருதப் படுவதாலேயே வியாச ராமாயணம் என்பதற்குப்பதிலாக  அத்யாம ராமாயணம் என்று அழைக்கப் படுவதாகவும் சொல்லப் படுகிறது 24000 பாக்களின்  சாரத்தை 4000 பாக்களிலேயே சொல்லியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் வரும் பாக்கள் மந்திரங்களாக எண்ணப் படுவதால் இதை மந்திர சாஸ்திரம் என்றும் சொல்கிறார்கள் இதை முறைப்படி பாராயணம் செய்வது பக்தியின் வெளிப்பாடு என்றும் எண்ணப்படுகிறது

அதனால்தானோ என்னவோ கேரளமக்கள் மலையாள கர்க்கடகமாதத்தை (ஆடி) ராமாயண மாதமென்று கூறி துஞ்சத்து எழுத்தச்சனின்அத்யாத்ம ராமாயணத்தை தினமும் பாராயணம் செய்வார்கள்

கதை சொல்லிகள் அவரவர் பண்புகளின் படி சில சம்பவங்களை வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்டு எழுதி இருப்பார்கள். சரி. வால்மீகி ராமாயணத்துக்கும் அத்யாத்ம ராமாயணத்துக்குமான சில்முக்கிய வேறுபாடுகளைக் காண்போம்
வால்மீகி ராமாயணத்தில் ராமன் ஒரு சிறந்த மனிதப்பிறவியாக, எல்லா ஆசாபாசங்களுடனும் சித்தரிக்கப்படுகிறான் அத்யாத்ம ராமாயணத்தில் ராமனை விஷ்ணுவின் அவதாரமாகவே சித்தரிக்கிறார்கள்.வால்மீகி நாரதரிடம் எல்லா நல்ல குணநலன்களுடனான பிறவி யார் என்று மூன்று கேள்விகளைக் கேட்கிறார். அதற்குப் பதிலாக நாரதர் ராம கதையைச் சுருக்கமாகச் சொல்ல அதனை விரிவாக ராமாயணமாக வால்மீகி எழுதியதாகச் சொல்லப் படுகிறது இந்த இரு ராமாயணக்கதையில் முக்கியமாக உள்ள வேற்றுமைகள் சில
.வால்மீகி ராமாயணத்தில் சீதை சீதையாகவே கடத்தப் படுகிறாள் அத்யாத்ம ராமாயணத்தில் சீதை கடத்தப் படுவாளென்பது ராமனுக்கு முன்பே தெரிந்து சீதையை அக்னிப் பிரவேசம் செய்ய வைத்து அவள் இடத்தில் ஒரு நிழல் சீதையை உருவாக்க அவள் கடத்தப் படுகிறாள் இது லக்ஷ்மணனுக்கும் தெரியாமல் செய்தது. போர் முடிந்தபின் அக்னிப் பிரவேசம் செய்வது  நிழல் சீதை. அதில் இருந்து மீண்டு வருவது உண்மை சீதை.அத்யாத்ம ராமாயணத்தில் ராவணனுக்கு ராமன் யார் என்று தெரிந்து அவர் கையால் இறப்பது முக்தி என்று தெரிந்திருந்தது. லங்கைக்குப் போகும் முன் ராமேஸ்வரத்தில் லிங்க்த்தை ஸ்தாபித்து வண்ங்கியது வால்மீகி ராமாயணத்தில் இல்லையாம்அத்யாத்ம ராமாயணத்தில் ராவணன் சீதையை ஒரு தாயைப் போல் மரியாதையுடன் நடத்தினான் என்று சொல்லப் படுகிறது அத்யாதம ராமாயணத்தில் ராமன் நான்கு கைகளுடன் ஒரு அவதார புருஷனாகவே பிறக்கிறான் கௌதம முனிவரின் மனைவி அஹல்யா வால்மீகி ராமாயணத்தில் உருவமில்லாதவள். அத்யாத்ம ராமாயணத்தில் கல்லாகக் காட்டப் படுகிறாள்.அத்யாத்ம ராமாயணத்தில் ராமனின் வனவாசத்துக்குக் காரணமாக சரஸ்வதி தேவியே மந்தரை கைகேயி ரூபத்தில் செயல் படுகிறார் என்று சொல்லப் படுகிறது. அத்யாத்ம ராமாயணத்தில் வால்மீகி முனியின் பின்னணி விவரிக்கப் படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் அது இல்லை அத்யாத்ம ராமாயணத்தில் வாலியின் மனைவியை ஆறுதல் படுத்துவது ஹனுமான். ஆனால்வால்மீகிராமாயணத்தில் ராமனே தாராவுக்கு ஆறுதல் கூறுகிறான் மாயையால் ஒரு சீதையை உருவாக்கி அவளை இந்திரஜித் கொல்வது போல் சொல்லப்பட்டிருப்பது வால்மீகி ராமாயணத்தில் அத்யாம ராமாயணத்தில் அது போல் இல்லை போருக்குப் போகும் முன் அக்னி யாகம் செய்து சிரஞ்சீவித்தனமையை அடைய  ராவணன் சுக்ராச்சாரியாரின் ஆலோசனைப்படி முயற்சிப்பதும் அது வானரங்களால் முறியடிக்கப் படுவதும் அதயாம ராமாயணத்தில் உண்டு. வால்மீகியில் இல்லை
அத்யாம ராமாயணத்தில் ராமன் ஒரு அவதார புருஷனாகவே ஆரம்பத்திலிருந்தே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் வால்மீகியில் அது

இலைமறை காய் மறையாகவே கூறப்பட்டிருக்கிறது 

நாம் கேள்விப்பட்டிருக்கும் கதைகள் எல்லாம் எல்லா ராமாயணங்களிலிருந்தும் எடுத்துக் கையாளப் பட்டவையே

எததனை ராமாயணங்கள் இருந்தாலென்ன. தாத்தா பாட்டி சொல்லிய கதைகளின் ராமாயணம்தான் மனசில் நிற்கும்அவர்களும் எல்லாக் கதைகளையும் கலந்து கட்டித்தான் சொல்கிறார்கள் ஏறத்தாழ எல்லாவிதக் கதைகளையும் கேட்டிருந்தாலும் அவற்றின் துவக்கம் எங்கே என்று கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. ராமனின் மறைவு பற்றித் தேடப் போன எனக்கு அது பற்றிய செய்தி மாத்திரம் கிடைக்கவில்லை. நானிது வரை திரட்டியசெய்திகள் ஹிந்து பிடியாவின் வெளியீட்டிலிருந்துதான்.

கடைசியில் மனிதனாக சித்தரிக்கப்பட்ட ராமனின் இறப்பு குறித்து வால்மீகியில் இல்லை. ஆனால் அவதாரமாகவே சித்தரிக்கப்பட்ட ராமனின் இறப்பு பற்றி அத்யாத்ம ராமாயணத்தில் இருப்பதாக அப்பாதுரை சொன்னார்.படித்துத் தெரிந்து கொள்ள முடியவில்லையே.                 
-  

32 comments:

  1. எத்தனை ஆராய்ச்சி! அடிப்படைக் கதை ஒன்றுதான் ஆங்காங்கே சிலபல நுண்ணிய வித்தியாசங்கள். அக்னியில் சீதையை மாற்றுவது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    அப்பாதுரை சொன்னது? அது எந்த ராமாயணமோ!

    :)))))))

    ReplyDelete
  2. தங்களுடைய ஆய்வின் பயன் - நிறைய செய்திகள் இன்றைய பதிவில்!..

    ஸ்ரீராமன் மானுடனாக இருந்தாலும் சரி.. அவதார புருஷனாக இருந்தாலும் சரி!..

    ஸ்ரீராமனின் - பெற்றோரிடம் மரியாதை, ஏகபத்னி விரதம், சகோதர வாஞ்சை, சிற்றுயிர்களிடம் அன்பு - இவையெல்லாம் மனதில் நிறைகின்றனவே!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. தனிமனித ஒழுக்கம் ராமன்... அவ்வளவே...

    ReplyDelete
  4. நீங்கள் இராமனைப்பற்றி தலைப்பில் சரியாக சொல்லியுள்ளீர்கள்! தங்களின் வால்மீகி ராமாயணம் மற்றும் அத்யாத்ம ராமாயணம் ஆகியவைகளின் ஒப்பீட்டை படித்தவுடன் தலை சுற்றியது உண்மை.

    ReplyDelete
  5. புதிய கோணத்தில் அதிக செய்திகள் ராமனைப் பற்றி. ஓர் அருமையான ஆய்வுக்கட்டுரையைப் படித்ததுபோலிருந்தது. நன்றி.

    ReplyDelete
  6. இராமரைப் பற்றிய தங்களின் ஆய்வு வியக்க வைக்கிறது ஐயா

    ReplyDelete
  7. ராமானந்த சாகர் எடுத்த டிவி தொடரில் ராமனின் முடிவு காட்டப்படுகிறது. அவரும் தங்களை மாதிரி நிறைய ராமாயணங்ளை ஆராய்ச்சி செய்திருக்கிறார்.

    ReplyDelete
  8. நல்ல ஆராய்ச்சி.

    உங்கள் மூலம் நாங்களும் சில கதைகள் தெரிந்து கொண்டோம்.

    எத்தனை ராமாயணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன! வியப்பாக இருக்கிறது!

    ReplyDelete

  9. @ ஸ்ரீராம்
    /அப்பாதுரை சொன்னது. அது எந்த ராமாயணமோ?/ அவர் அத்யாத்ம ராமாயணம் என்று சொல்லி இருந்தார். அதைத் தேடலில் படிக்க முடியவில்லை. எழுதி இருக்கிறேனே.

    ReplyDelete
  10. படித்தேன். வேறு எந்த ராமாயணமோ என்றிருந்திருக்க வேண்டும். வேகமாகத் தட்டச்சினால் சில வார்த்தைகள் காணாமல் போய்விடுகிறது!

    :)))))))

    ReplyDelete

  11. @ துரை செல்வராஜு
    ராம காதை மிகவும் சிறப்பானது. அதை ஒருவர் கூற பின் கற்பனைகள் கூட ஏராளமான கதைகள். எனக்கு இந்தகற்பனைக் கதாபாத்திரத்துக்கு ஒரு நல்ல இடம் கொடுத்தால் தவறாகத் தெரியாது. எது உண்மை என்றே தெரியாமல் கடவுள் அந்தஸ்து கொடுப்பதுதான் இடிக்கிற்து. இது என் கருத்து, யாருடைய நம்பிக்கையையும் பற்றி பேசவில்லை. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  12. @ திண்டுக்கல் தனபாலன்
    தனி மனித ஒழுக்கத்துக்கு ராமன் . சரிதான் கதை நல்ல ஒழுக்கங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டிருக்கிறது

    ReplyDelete

  13. @ வே. நடன சபாபதி.
    ராமாயணப்பெயர் தெரியாமலேயே நமக்குப் பல கதைகள்சொல்லப்பட்டிருக்கின்றன. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  14. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    படித்தது பகிர்ந்தேன் ஐயா அவ்வளவுதான் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ கில்லர்ஜி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி

    ReplyDelete

  16. @ கரந்தை ஜெயக்குமார்
    ஒரு பொருள் பற்றிப்பேசும் முன் அது பற்றியவிஷயங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன் . அது என் சுபாவம் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  17. @ டாக்டர் கந்தசாமி
    ராமானந்த சாகரின் ராமாயணத்தில் பார்த்த நினைவில்லை. எப்ப்டிஎன்று பின்னூட்டத்தில் கூறி யிருக்கலாமே. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  18. @ வெங்கட் நாகராஜ்
    இன்னும் நிறைய இருக்கலாம் கற்பனை கை கொடுக்குமானால் நாமும் ஒரு ராமாயணம் எழுதலாம் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  19. கம்பராமாயணத்திற்கு முன்னரும் ராம கதைகள் தமிழில் இருந்திருக்கின்றன.
    அவற்றின் பாடல்கள் சில உரைநூற்களில் மேற்கோளாய் ஆளப்படுகின்றன.
    கம்பவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டன அவை.
    தங்களின் ஆய்வு சுவைபட உள்ளது.

    நன்றி.

    ReplyDelete
  20. ஐயா,
    என் பின்னூட்டங்களை வெளியிட முனையும்போது, “நான் இயந்திர மனிதன் இல்லை” என்று கணினிக்கு நிரூபிக்க வேண்டியிருக்கும் சோதனைக்கான காத்திருப்பு, சீதையின் அக்கினிப்பிரவேச சோதனையை விடக் கடினமாய் உள்ளது. கவனிக்கவும்:)

    ReplyDelete

  21. @ ஊமைக் கனவுகள்
    வாருங்கள் ஐயா. எத்தனை ராமாயணம் இருந்தாலும் படித்தறிந்த கதைகளைவிட கேட்டறிந்த கதைகளே முன் நிற்கும் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  22. @ ஊமைக் கனவுகள் இயந்திர மனிதன் அல்ல என்று கணினிக்கு நிரூபிக்கமுயலவேண்டாம் அதைப் பொருட்படுத்தாமல் பின்னூட்டம் இடவும் அது கோகிளாரின் தொந்தரவு இல்லாத கை வண்ணம் எனது விருப்பமல்ல. நன்றி

    ReplyDelete
  23. ராமாயணக்கதை என்பது பொதுவாக ராமர் சீதையைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தாலும் அதில் இருக்கும் விஷயங்கள் கதைசொல்லிகளைப் பொறுத்து மாறுபட்டிருக்கிறது // உண்மை அதுதான்....இடைச் செறுகல்கள் அதிகம் உண்டு....அவரவர் காலகட்டத்திற்கேற்ப, அவரவர் கற்ற சித்தாந்தங்களின் அடிப்படையில் மாறியிருக்கிறது...வரலாறு என்பதும் அப்படித்தான். புராணங்களும் வரலாறுதானே....வித்தியாசம் புராணங்கள் மத சம்பந்தப்பட்ட வரலாறு....


    //அதனால்தானோ என்னவோ கேரளமக்கள் மலையாள கர்க்கடகமாதத்தை (ஆடி) ராமாயண மாதமென்று கூறி துஞ்சத்து எழுத்தச்சனின்அத்யாத்ம ராமாயணத்தை தினமும் பாராயணம் செய்வார்கள்// ஆம் சார்! ஆனால் அவரது அத்யாத்ம ராமாயணத்தில் இருந்த அத்வைத சாரம் பின்னர் மாற்றப்பட்டது என்றும் பின்னர் சேர்க்கப்பட்டவை துஞ்சத்து எழுத்தச்சனின் வரிகள் இல்லை, வித்தியாசம் இருக்கின்றது...என்றும் இருக்கிறது....இதைச் சிறிது சுட்டிக்காட்டியிருக்கிறோம் படத்தில்....அவரது காலகட்டத்திலும் வைணவ, சைவ சித்தாந்தங்களின் தர்க்கங்கள் இருந்திருக்கின்றன.....

    நாம் கேள்விப்பட்டிருக்கும் கதைகள் எல்லாம் எல்லா ராமாயணங்களிலிருந்தும் எடுத்துக் கையாளப் பட்டவையே

    //எததனை ராமாயணங்கள் இருந்தாலென்ன. தாத்தா பாட்டி சொல்லிய கதைகளின் ராமாயணம்தான் மனசில் நிற்கும்அவர்களும் எல்லாக் கதைகளையும் கலந்து கட்டித்தான் சொல்கிறார்கள்// உங்கள் பதிவை வாசித்து வரும் போது இதைப் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருக்க னீங்களே அதைச் சொல்லியும் விட்டீர்கள்....

    கீதா: எங்கள் வீட்டில் அத்யாத்ம ராமாயணம் புத்தகம் உள்ளது....பெரியவர்கள் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்..அந்தப் புத்தகம் எங்கிருக்கிறது என்று தேடிப்பார்த்து ஆங்கிலத்தில் இருந்ததாக நினைவு...பார்க்கிறேன் இருந்தால் நீங்கள் இங்கு வரும் போது தருகின்றேன் சார்....

    ராமார் சரயு நதியில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது தற்கொலை என்றும் ஏதோ ஒரு வலைத்தளத்தில் எழுதியிருந்ததை வாசித்த நினைவும் உள்ளது ஆனால் அது எந்த வலைத்தளம் என்பது மறந்து போனது......




    ReplyDelete

  24. @ துளசிதரன் கீதா,
    இதை இதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் அவதார புருஷனாக சித்தரிக்கப் பட்ட அத்யாத்ம ராமாயணத்தில் ராமன் சரயு நதியில்மூழ்கி இறந்ததாக இருந்தால் அது தற்கொலையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. வரவுக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  25. வால்மீகி இராமாயணமே மூலம், அதில் இருந்து பல இராமாயண நூல்கள் தோன்றின என்கிறார்கள். மாயசீதை பற்றி நானும் படித்து இருக்கின்றேன். பூமி பிளந்து சீதையை விழுங்கியவுடன் இராமனும் இறப்பதாக எதிலோ படித்து இருக்கிறேன். ராமாணந்த் சாகரின் இந்தி டீவித்தொடரிலும் இவ்வாறு காட்டப்படும். நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete

  26. எது எப்படி இருந்தாலும் கதையைக் கதையாய் ரசித்தால் சரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  27. அருமை ஐயா அருமை...

    ReplyDelete

  28. @ உமையாள் காயத்ரி
    பாராட்டுக்கு நன்றி மேம்.

    ReplyDelete
  29. //அதனால்தானோ என்னவோ கேரளமக்கள் மலையாள கர்க்கடகமாதத்தை (ஆடி) ராமாயண மாதமென்று கூறி துஞ்சத்து எழுத்தச்சனின்அத்யாத்ம ராமாயணத்தை தினமும் பாராயணம் செய்வார்கள்//

    கேரளாவில் மட்டுமல்ல, வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத்திலும் கர்க்கடக மாதம் ராமாயண பாராயணம் நடைபெறும். தமிழ்நாட்டில் நவராத்திரி ஒன்பது நாட்களில் சில வீடுகளில் ராமாயண பாராயணம் நடைபெறும்.முக்கியமாகச் செட்டிநாட்டு மக்கள் நவராத்திரி சமயம் ராமாயண பாராயணம் செய்வார்கள்.

    ReplyDelete
  30. வால்மீகியில் ராமன் மறைவு குறித்து ஒரு அத்தியாயமே உள்ளது. விரைவில் எடுத்துக் காட்டுகிறேன். :) கொஞ்சம் பொறுத்திருக்கவும்.

    ReplyDelete

  31. @ கீதா சாம்பசிவம்
    /வால்மீகியில் ராமன் மறைவு குறித்து ஒரு அத்தியாயமே உள்ளது. விரைவில் எடுத்துக் காட்டுகிறேன். :) கொஞ்சம் பொறுத்திருக்கவும்./ அதெல்லாம் தேவை இல்லை மேடம் நீங்கள் சொன்னால் போதும் எப்படி என்னவென்று. ராமன் பற்றிய பதிவில் கீதா மெடத்தைக் காணோமே என்றிருந்தது. வருகைக்கு நன்றி.


    ReplyDelete