Tuesday, June 2, 2015

எனக்கு நானே......கடிதமா....?


                       எனக்கு நானே...... கடிதமா......?
                      --------------------------------------------


அன்புள்ள ......
என்னை நானே எப்படி அழைத்துக் கொள்வது. . இருந்தாலும் எனக்கு நானே கடிதம் எழுத வேண்டும் போல் இருந்தது. என்ன எழுதுவது. அன்புள்ள என்று துவங்கி விட்டேன் எனக்கு நானே அன்புள்ளவனா... ஏன் இருக்கக் கூடாது. உன்னை நீ நேசிப்பது போல் அடுத்தவனை நேசி என்று பைபிளில் கூறி இருப்பதாகப் படித்திருக்கிறேன் LOVE THY NEIGHBOR  AS THYSELF என்னை நான் என் எல்லாக் குறைகளையும் சேர்த்து நேசிக்கிறேன் என்பது உண்மைதானே. உன்னை நேசிப்பது போல் அனைவரையும் நேசி என்றால் குறைகள் இல்லாத மனிதரே இருக்க வாய்ப்பில்லை. அந்தக் குறைகளையும் பொருட்படுத்தாமல் நேசிக்க வேண்டும் சொல்வது சுலபம் ஆனால் கடைப்பிடிப்பது சிரமம் நீ எப்படி? வஞ்சனை இல்லாமல் நேசிக்கிறாயா? கேள்வி கேட்டு விட்டேன் பதிலை கடிதத்தில் எதிர்பார்க்கிறேன் சுய சிந்தனை செய்.
கடிதம் எழுத முதலில் நலம் விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்படாத நியதி. உண்டு. உன்னிடம் நலன் பற்றிக் கேட்டால் அது உனக்குப் பிடிக்காது. என்று தெரியும். உனக்கு நீ உடல் நலமில்லாவிட்டாலும் நலமே என்றுதான் சொல்வாய். உள்ளுக்குள் சிறிது கோபம் கூட வருமே. ஆனால் பலருக்கும் நலம் விசாரித்தால்தான் நமக்கு அவர்கள் மீது அக்கறை என்பது தெளிவாகும்
ஆஹா..... ஒருவர் மீதுள்ள அக்கறையைக் காட்டத்தான் நலம் விசாரிக்கச் சொல்கிறேன் என்றோ நலம் விசாரிக்கிறேன் என்றோ பொருள் கொள்ளக் கூடாது. நீ அப்படி இல்லை என்று எ(உ)னக்குத் தெரியும்
 எனக்கு நானே ஆகவோ உனக்கு நீயே ஆகவோ கடிதம் எழுதுவது சிரமமாய் இருக்கிறது. எதையாவது எழுதுவதற்குள் உடனே அதில் கூறுவது நீயா அல்லது நானா என்று பிடிபடுவதில்லை

இருந்தாலும் வித்தியாசமாக எழுதத் துவங்கி விட்டேன் நீ ஏதாவது பதில் சொல்ல விரும்பினால் திண்டுக்கல் தனபாலன் சொல்வது போல் மனசாட்சியின்(உள்ளத்தின் குரல்) பதிலாக எடுத்துக் கொள்கிறேன் ஓக்கேவா.?
இருந்தால்தான் என்ன.?எழுதுபவனும் நானே எழுதப்படுபவனும் நானே கடவுளைப்போல
உன்னைப் பற்றி வலைஉலகில் என்னநினைக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? வித்தியாசமான குழப்பவாதி என்றே நினைக்கிறார்கள். உன் பின்னூட்டங்கள் நீ மற்றவர்களை அனுசரித்துப் போகாதவன் என்பதைக் காட்டுகிறது. என்றும் நீ ஒரு மரை கழண்ட லூஸென்றும் உன்னிடம் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லையென்றும் பெரிய சீர்திருத்தவாதி போல் நடிக்கிறவன் என்றும் இன்னும் என்னவெல்லாமோ நினைக்கிறார்கள்.
இந்த இடத்தில் நான் பதில் சொல்லியே ஆகவேண்டும் .இந்த மாதிரி மனிதர்களைத்தான் நான் முன் பல்லில் சிரித்துக் கடைவாய்ப் பல்லில் கடிக்கிறவர் என்பேன் 
அது உன்னைப் பற்றிய விமரிசனம் என்பது உனக்கு எப்படித் தெரியும்?ஓ...அதைத்தான் நீயே சொல்லி விட்டாயே..........
இந்த வயதில் என்னால் சில விஷயங்களை அனுமானிக்க முடியும் என்றே நினைக்கிறேன்
இன்னொருவர் தன் பதிவில் எனக்கான ஒரு மறு மொழியில் என்னைப் புரிந்து கொள்வதே சிரமமாய் இருக்கிறதென்று எழுதி இருந்தார். இதை நான் வரவேற்கிறேன். என் குறையோ நிறையோ என்னிடமே சொல்லும் பக்குவம் பிடித்திருந்தது. அதற்கு மாறாக இன்னொருவர் வலைத் தளத்தில் நான் அதைப் படிப்பேன் என்று நன்கு அறிந்து தான் தோன்றித்தனமாக எழுதுவது சுத்த கோழைத்தனம் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உன்னைப் போல் அடுத்தவரையும் நேசி என்று கூறிவிட்டு இப்படி ஊர்ஜிதப் படுத்தப் படாத குற்றச் சாட்டுகள் தவறு என்று உனக்குத் தெரிவதில்லையேபோற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.? உன்னிடம் எனக்குப் பிடித்ததே இதுதான் உன் குறை எது நிறை எது என்று பட்டவர்த்தனமாக ஆராய்கிறாயே I LIKE IT. அதைத்தான் உன் பலமாகவும் பலவீனமாகவும் கருதுகிறேன்
சரி  நீ ஒரு bundle of contradictions  என்பது சரியாய்த்தான்  இருக்கிறது.
அது சரி இல்லை. ஒருவேளை பிறருக்கு அப்படித்தோன்றலாம் ஆனால் என்னைப் புரிந்து கொண்டவர்களுக்கு என்னுடைய கன்ஸிஸ்டென்சி புரியும். எதைப் பற்றியாவது கருத்துக் கூற வேண்டும் என்றால் ஓரளவுக்காவது அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன் எனக்கு அதற்குண்டான நூல்களைத் தேடிப்பிடித்து படிப்பது இயலாததாகி இருக்கிறது. கணினியின் உதவியுடன் பல விஷயங்களைக் கற்கிறேன்  
போதும் நிறுத்து. நான் உனக்குக் கடிதம் எழுதுவதில் இருப்பதை விட உன் பதிலில் நீ உன்னை நிரூபிக்கப் பார்க்கிறாய் அது சரி. கணினி உன் நேரத்தை மிகவும் ஆக்கிரமிக்கிறதுஎழுதுவது உன் சுதந்திரம். கருத்து சொல்வதும் சொல்லாததும் வாசிப்பவர் சுதந்திரம் நீ உன் எழுத்துக்களைப் பற்றி அதிகம் எடைபோடுகிறாய் என்றே தோன்றுகிறது
 இரு இரு இதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் நானும் பிறரது பதிவுகளைப் படிக்கிறேன் எல்லோர் கருத்துகளும் உடன்பாடு என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் நாசுக்காக நான் அதை தெரிவித்துவிடுவேன் சிலர் ஒரே மாதிரி இடுகைகளைப் பதிக்கிறார்கள் அவற்றையும் படிக்கிறேன் ஆன்மீகப் பதிவுகளில் எதிர்மறைக் கருத்துக்கள் பதிப்பதில்லை. அவை மிகுந்த நம்பிக்கையோடு எழுதப் படுபவை. இருந்தாலும் நான் நினைப்பதைக் கூறி விடுவேன் அதே போல் என் பதிவுகளும் படிக்கப் படுகின்றன என்பதும் தெரியும் என் பதிவுகளில் நான் ஸ்ட்ராங்காக நினைப்பதை எழுதுகிறேன் அதுவும் ஒரு கலந்தாடலுக்குத்தான். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது நடப்பதில்லை
எப்படி நடக்கும்? நீ விரும்பமாட்டாய் என்று சிலர் கருத்துக்களைப் பதிக்காமல் இருக்கலாம் .உனக்கு நினைவிருக்கிறதா? தஞ்சாவூர்க் கவிராயரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் எழுத்தாளனை ஊக்குவிப்பது அவன் படைப்பு பற்றிய சில நல்ல வாக்கியங்களே. பொன் தரவேண்டாம் பொருள் தரவேண்டாம் சில புகழ் வார்த்தைகளையாவது தாருங்கள் என்று படைப்பாளி ஏங்குவான் என்றது. அதற்காக இந்திரன் என வேண்டாம் சந்திரன் என வேண்டாம் ஊக்குவிக்க வேண்டும் என்றாரே
அவருக்குத் தெரியும் எப்படி மறைமுகக் கருத்துக்களை கூறவேண்டும் என்று. என் சிறுகதைத்தொகுப்புக்கு அவர் எழுதி இருந்த வாசகங்களே சான்று. அணிந்துரையில் அவர் ஜி.எம்.பாலசுப்பிரமணியத்தின் கதைகளைப் படித்துப் பார்த்தேன் இக்கதைகள் எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரமானவை அல்ல.ஆகக் கூடியவையும் அல்லஎன்றும் “ எழுத்தாளர் ஆகவேண்டுமென்ற உத்தேசமோஅல்லது அவ்வாறு ஆகி இருப்பதை அடையாளப் படுத்தும் நோக்கமோ சிறிதுமின்றி, தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். வாசகர்களின் சுவாரசியத்துக்காகவும் இவை எழுதப் படவில்லைஎன்றும் எழுதி இருந்தார். இதைப் புகழாரமாகவோ அல்லாததாகவோ ஏற்றுக் கொள்ளலாம் எடுத்துக் கொள்பவரைப் பொறுத்தது அது
சிலர் உன் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவல் உனக்கிருக்கிறதுஅது நடைபெறாமல் போகும் போது ஏமாற்றமும் இருக்கிறது தானே. 
ஆம் உண்மைதான் வலை உலகில் பலரது எழுத்துக்களைப் படிப்பவன் நான் சிறுகதை எழுதுவதில்பெயர் பெற்றவர்கள் என்று அறியப்பட்டவர்கள் என் கதைகளைப் படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டு. அப்படி அறியப் பட்டவர் ஒருவருக்கு என் சிறுகதைத் தொகுப்பினை அனுப்பவா  விமரிசனம் செய்வீர்களா என்று கேட்டு எழுதி இருந்தேன். அவரும் ஒப்புதல் அளித்தபின் என் சிறுகதைத் தொகுப்பை அனுப்பினேன் மாதங்கள் ஓடி விட்டன. ஓரிரு முறை நினைவு படுத்தினேன் எனக்கு வந்த ஒரு பதில் எனக்கு இன்னும் புரியாததாய் இருக்கிறது. “ காரசாரமாய் சாடி ஒரு விமரிசனம் எழுதியதாகவும் அதன் காரம் குறைத்து ஒரு விமரிசனம் எழுத முயல்வதாகவும் கூறி இருந்தார். விமரிசனம் என்பது நடுநிலையோடு இருக்க வேண்டும். எழுதியவனை விமரிசிக்காமல் எழுத்தை விமரிசித்தல் அது எப்படி ஆயினும் தவறில்லையே. வலை உலகில் புரியாத விஷயம் இது.
சும்மா அல்ல பதிவர்கள் நினைப்பது உன்னைப் புரிந்து கொள்வதே கடினமப்பா. உனக்கு நினைவிருக்கிறதா?அவதாரக் கதைகள் நீ முதலில் எழுதத் துவங்கியபோது ஒரு சிறுமி தான் நாட்டியம் பயில்வதாகவும் தனக்கு இக்கதைகள் உபயோகமாய் இருப்பதால் தொடர்ந்து எழுத வேண்டி பின்னூட்டமிட்டபோது அதுவே உனக்கு ஒரு உந்து சக்தியாகி எல்லா அவதாரக் கதைகளையும் பதிவிட்டாயே..!
அவதாரக் கதைகள் என்று சொல்லும் போது ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் ஒன்பது அவதாரங்களிலும் அவதார புருஷர்களின் தோற்றம் இருக்கிறது தெரிகிறது கிருஷ்ணாவதாரத்தில்தான் கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் இருக்கிறது.மற்ற அவதாரங்களில் அவதாரங்களின் மறைவு பற்றி எங்கும் படித்த நினை வில்லை.
இதைப் படிப்பவர்கள் தங்களது கருத்துக்களைப் பதியும் போது யாராவது இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்னும் நம்பிக்கையோடு இரு. கடிதமாய்த் துவங்கி எப்படியோ போய் என்னவோ எழுதும் படி ஆகி விட்டது

அதனால்தான் என்னை நான் DIFFERENT என்று சொல்லிக் கொள்கிறேன்    
 

39 comments:

  1. //கிருஷ்ணாவதாரத்தில்தான் கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் இருக்கிறது.மற்ற அவதாரங்களில் அவதாரங்களின் மறைவு பற்றி எங்கும் படித்த நினை வில்லை. //

    ராமாவதாரத்தில் ராமன் மறைவைப் பற்றிய ஒரு அத்தியாயமே உண்டு. நானும் அயோத்தி போய்விட்டு வந்து ராமன் மறைந்த இடத்தைப் பார்த்தது குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தேன். மற்ற அவதாரங்களில் வாமன அவதாரம், பரசுராம அவதாரம் தவிர மீதி எல்லாம் கடவுளாகவே தோன்றிய அவதாரங்கள். வாமன அவதாரமும் அவதார நோக்கத்தைத் திரி விக்கிரம் அவதாரத்தில் காட்டியது. பரசுராமர் மறைந்தது குறித்தும் படித்த நினைவு. தேடிப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. நான் எழுதிய ராமாயணத்தில் கூட ராமன் மறைவைக் குறித்துக் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். :)

    ReplyDelete
  3. //கிருஷ்ணாவதாரத்தில்தான் கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் இருக்கிறது.மற்ற அவதாரங்களில் அவதாரங்களின் மறைவு பற்றி எங்கும் படித்த நினை வில்லை. //

    ராமாவதாரத்தில் ராமன் மறைவைப் பற்றிய ஒரு அத்தியாயமே உண்டு. நானும் அயோத்தி போய்விட்டு வந்து ராமன் மறைந்த இடத்தைப் பார்த்தது குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தேன். மற்ற அவதாரங்களில் வாமன அவதாரம், பரசுராம அவதாரம் தவிர மீதி எல்லாம் கடவுளாகவே தோன்றிய அவதாரங்கள். வாமன அவதாரமும் அவதார நோக்கத்தைத் திரி விக்கிரம் அவதாரத்தில் காட்டியது. பரசுராமர் மறைந்தது குறித்தும் படித்த நினைவு. தேடிப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  4. மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்கள் கடவுளாகவே தோன்றியவை. அவற்றுக்கு ஆரம்பம், முடிவுனு சொல்லும்படியா இல்லை.

    ReplyDelete

  5. @ கீதா சாம்பசிவம்
    அவதாரங்களின் மறைவு என நான் கூற வந்தது இறப்பு பற்றியே.

    ReplyDelete

  6. அருமையானதொரு மனசாட்சியுடன் கலந்துரையாடல் ஐயா ஒவ்வொரு வாக்கியங்களும் ஆழ்மனதுடன் கலந்தாலோசித்து அனுபவித்து எழுதி இருக்கின்றீர்கள்

    தங்களது பதிவுகளிலேயே ஒரு மாறுபட்ட விடயத்தை தந்து இருக்கின்றீர்கள்.

    //சிலர் உன் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவல் உனக்கிருக்கிறது அது நடைபெறாமல் போகும் போது ஏமாற்றமும் இருக்கிறது//

    இது 100க்கு100 உண்மை ஐயா யாருமே மறுக்க முடியாது

    ReplyDelete
  7. ஒரு முறை படித்தேன். இன்னும் பலமுறை படித்தால்தான் என் மரமண்டையில் ஏறும். பிறகுதான் உண்மையான கருத்து சொல்ல முடியும்.

    ReplyDelete
  8. உங்களுக்கு நீங்களே ஓர் கடிதம் எழுதத் தொடங்கி,
    உங்களை நீங்களே, ஒரு ஆய்வுப் பொருளாக்கி
    ஆய்வு செய்திருக்கிறீர்கள்
    அனைவராலும் செய்ய இயலாத அலசல்தான் ஐயா
    இதற்கும் ஓர் மனம் வேண்டும்
    உயரிய உள்ளம் வேண்டும்

    ReplyDelete
  9. //என்னை நான் என் எல்லாக் குறைகளையும் சேர்த்து நேசிக்கிறேன் என்பது உண்மைதானே//


    நம் குறைகள் நம் கண்ணுக்குத் தெரியாதே... நம் குறைகளுக்கு நாம் வக்கீலாகவும், அடுத்தவர் குறைகளுக்கு நீதிபதியாகவும் இருப்போம் என்று படித்திருக்கிறேன்.


    //உன்னிடம் நலன் பற்றிக் கேட்டால் அது உனக்குப் பிடிக்காது. என்று தெரியும். உனக்கு நீ உடல் நலமில்லாவிட்டாலும் நலமே என்றுதான் சொல்வாய்.//


    நிறையப் பேர்கள் அப்படிச் சொல்வதில்லை. கேட்டவுடன் பட்டியல் தொடங்கி விடும்! :)))))


    சொல்லப்பட்ட பதிவர்களில் காரசாரமான விமர்சகர் மட்டும் யாரென்று தெரியும். மற்ற கிசுகிசுக்கள் புரியவில்லை!


    :)))))))

    ReplyDelete
  10. காரசாரம் விமர்சகர் கில்லர்ஜி,மேலே ,பதில் கூறக் காணாமே வேறு யார் ?நீங்களே சொல்லிவிடுங்கள் :)

    ReplyDelete
  11. ஐயா,

    வணக்கம்.

    வித்தியாசமாகச் சிந்திக்கிறீர்கள் என்பது மட்டும்தான் உங்களைப் பற்றிய எனது மதிப்பீடு.

    அது எனக்குள் நான் வைத்திருக்கின்ற உங்களின் அடையாளம் கூட.

    இந்தப் பதிவுகாண இதைச் சொல்லத்தோன்றியது.

    நன்றி.

    ReplyDelete
  12. குழம்பிப் போனேன்..

    நிறையப் பேசியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் அத்துனை எளிதில் எடுத்துக் கொள்ளவோ அல்லது மறுத்துக்கொள்ளவோ முடியாத ஒன்று.

    சட்டென ஒற்றை வரியில் கருத்துச் சொல்ல முடியாத பதிவு. நீண்ட பதிவு மட்டுமல்ல மிகுந்த 'கனமான' பதிவும் கூட.

    God Bless You

    ReplyDelete
  13. //அதனால்தான் என்னை நான் DIFFERENT என்று சொல்லிக் கொள்கிறேன்//

    ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்தான். என் கருத்து என்னவென்றால், முதலில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே ஒப்புக்கொள்ளவேண்டும். தன் கொள்கைகளில் நம்பிக்கை வேண்டும். நான் எனக்காக வாழ்வேன். அடுத்தவர்களுக்காக என் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று வாழ்வதற்கு ஒரு மனோதிடம் வேண்டும். அது உங்களிடம் இருப்பது கண்டு மகிழ்கிறேன்.

    அடுத்தவர்களின் அபிப்பிராயங்கள் வெகு சீக்கிரம் மாறக்கூடியவை. அதனால் அவைகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

    உங்கள் அலசல் நன்றாக இருக்கிறது. ஆனால் பலருக்கு அது ஏன், எதற்கு, என்ற குழப்பம் தோன்றும். பொதுவாக நாம் வேடம் போட்டுக்கொண்டுதான் வாழ்கிறோம். ஒவ்வொருவரைச் சந்திக்கும்போதும் ஒவ்வொரு வேடம். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. ஆனால் அது மாதிரி வேடம் கட்டுகிறோம் என்று உள்ளதைச் சொல்லும்போது அதை பலரால் ரசிக்க முடிவதில்லை. எப்பொழுதும் போலிக்குத்தான் மவுசு அதிகம்.உண்மை பளபளப்பில்லாமல்தான் இருக்கும்.

    ReplyDelete
  14. நாமே பொருளாக ஆகுதல் என்ற நிலையானது நம்மை சுயமதிப்பீடு செய்துகொள்ள உதவும் உத்திகளில் ஒன்று. அருமையான ஓர் உத்தியை இப்பதிவின் மூலமாகத் தந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete

  15. @ கில்லர்ஜி
    வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துரைக்கும் நன்றி ஜி

    ReplyDelete

  16. @ டாக்டர் கந்தசாமி
    முதல் வாசிப்பில் குழப்பி விட்டேனா.?ஏதோமனம் போன போக்கில் எழுதியது. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  17. @ கரந்தைஜெயக்குமார்
    என் குழப்பங்களைத் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு வழி. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  18. @ ஸ்ரீராம்
    என்னை நான் நேசிப்பது உண்மை. அதேபோல் பிறரையும் நேசிக்க முயற்சி செய்கிறேன் நான் என்னைப் பற்றித்தான் எழுதி இருக்கிறேன். அதில் ஒனறுதான் என் உடல் நலம் பற்றிய கருத்தும் இதுவரை யாரும் காரசாரமாக விமஎசிக்கவில்லை. என்னைப் பற்றிய செய்திகள் கிசு கிசு போல் தோன்றி விட்டதோ.?வருகைக்கு நன்றி. ஸ்ரீ.

    ReplyDelete

  19. @ பகவான் ஜி
    ஸ்ரீராம் கூறியது போல இது ஒரு கிசுகிசுவாகவே இருக்கட்டும். கில்லர்ஜி அல்ல.

    ReplyDelete

  20. @ ஊமைக் கனவுகள்
    நானே என்னைப் பற்றிய சுய மதிப்பீட்டில் கூறியதே உங்களுக்கும் தோன்றி இருக்கிறது. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  21. @ வெட்டிப்பேச்சு
    நிறைய குழப்பி விட்டேனா. மனம் போன போக்கில் என்னைப் பற்றி விமரிசித்துப் போகும் போது சில கனமான செய்திகளும் வந்து விழுகின்றன. பதிவு வாசகர்களின் நல்லெண்ணமே போதும் கடைசி வாக்கியம்.....? எனக்குப் புரியாதது.

    ReplyDelete

  22. @ டாக்டர் கந்தசாமி
    இரண்டாம் வாசிப்பில் சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறீர்கள். நான் என் கொள்கைகளில் திடமாக இருந்தாலும் மற்றவர்களின் எண்ணங்களையும் மதிக்கிறேன் வருகைக்கும் என்னைப் பற்றிய மதிப்பீட்டிற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    எண்ணம் போன போக்கில் எழுதியது ஒரு சுய மதிப்பீடாக அமைந்து விட்டது போல் தோன்றுகிறது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  24. எழுத்தை விமர்சிப்பதில் தவறே இல்லை ஐயா... படைப்பாளியே இப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வருவது தவறு - இல்லை இல்லை தப்பு...

    "நடையைக் கட்டுங்கள்... எதுவும் சொல்ல வேண்டாம்..." இந்த பதிவில் நண்பர்கள் + அடுத்தவர் + புலவர்கள் என்கிற இடத்திலெல்லாம் "பதிவர்கள்" என்று மாற்றி வாசித்துப் பார்த்தாலும் சரியாகவே வரும்... ஆனால் வலையுலகம் சிறிது... அதற்காக எழுதப்பட்ட பதிவே அல்ல அது <--- இது உண்மையா...? பொய்யா...? ---> இது இன்றைய பதிவு....!

    ReplyDelete
  25. நம்மை நாமே நேசித்தால்தான் வாழ்க்கையை நேசிக்க முடியும். ஆனால் நம்மை நேசிப்பதைப் போலவே பிறரையும் நேசிப்பது... கொஞ்சம் கடினம்தான்.

    \\உன்னிடம் எனக்குப் பிடித்ததே இதுதான் உன் குறை எது நிறை எது என்று பட்டவர்த்தனமாக ஆராய்கிறாயே\\ தங்களிடம் எனக்குப் பிடித்ததும் இதுதான்.

    பலராலும் தங்கள் நிறைகளை ஏற்றுக்கொள்வதுபோல் குறைகளை ஏற்றுக்கொள்ள இயல்வதில்லை. தங்களிடமும் குறை இருக்கும் என்று எண்ணவும் விரும்புவதில்லை. ஆனால் தாங்களோ மிக அழகாக சுய மதிப்பீட்டை மற்றவர் பார்வையிலும் தன்பார்வையிலுமாக மாற்றி மாற்றி செய்து எழுதியுள்ளீர்கள்.

    கடிதத்தில் துவங்கி உரையாடலாய் ஆனாலும் சொல்ல வந்திருக்கும் கருத்து மையம் விட்டு விலகவில்லை. நீங்கள் வித்தியாசமானவர்தாம்... மறுப்பேதுமில்லை. வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  26. நேற்று பதிவு வெளியானதிலிருந்து இரண்டு - மூன்று தடவை படித்து விட்டேன்..

    >> சிலர் உன் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவல் உனக்கிருக்கிறது. அது நடைபெறாமல் போகும் போது ஏமாற்றமும் இருக்கிறது.<<

    நியாயமான வார்த்தைகள்..

    என்னிடமும் சில குறைகள் இருக்கின்றன..
    அவை நீங்கி விட்டாலோ அல்லது அவற்றை நீங்கி விட்டாலோ - நான் நானாக இருப்பது எப்படி!?..

    ReplyDelete
  27. எழுத்தாளன் என்பவன் பிறர் தனது படைப்பை விமரிசிக்கவில்லையே என கவலைப்படக்கூடாது. ‘’ போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.
    அன்புள்ள .. என ஆரம்பித்த நீங்கள் கடைசியில் கடிதத்தை முடிக்கவில்லையே!

    ReplyDelete

  28. @ திண்டுக்கல் தனபாலன்
    எழுதிய அப்போதைய பதிவையே சரியாக உள்வாங்கிக் கொள்ளாத வாசகர்கள் நிறைந்தது பதிவுலகம் இதில் நீங்கள் குறிப்பிடும் “ நடையைக் கட்டுங்கள் எதுவும் சொல்லவேண்டாம் “ பதிவில் வரும் வார்த்தைகளையா நினைத்துப் பார்ப்பார்கள்நாம் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து எழுதுகிறோம் எழுதுவதன் gist-ஆவது உள்வாங்கப் பட்டால் நலமாயிருக்கும் நான் எழுதுவது என் கருத்துக்களே என்றாலும் வலை உலகுக்குப்போய்ச் சேரவேண்டும் என்னும் எண்ணம் எனக்குண்டு என்று சொல்வது மிகையாகாது. இப்படி எல்லாம் எழுதினால் கீழ்பாக்கக் கேஸ் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்ஒரு உங்கள் கணக்குக்கு நீண்ட பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி டிடி.

    ReplyDelete

  29. @ கீதமஞ்சரி
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேம் கூடியவரை அடுத்தவரை நேசிக்க முயலலாம். முடியாவிட்டால் வெறுக்காமலாவது இருக்கலாமே. உன்னிலும் நான் சிறந்தவன் என்னும் எண்ணமே உயர்வு தாழ்வுக்கு அஸ்திவாரம் என்பது என் கணிப்பு. மனதில் பட்டதை சற்றே வித்தியாசமாக எழுதினேன். அப்படியாவது எழுதுவது இலக்கை அடையாதா என்னும் நப்பாசைதான்

    ReplyDelete

  30. @ துரை செல்வராஜு
    தெரிந்த நம் குறைகளை மாற்றிக் கொள்வதாலும் நாம் நாமாக இருக்கலாம் என்பதே என் துணிபு, வருகைக்கு நன்றி ஐயா. .

    ReplyDelete

  31. @ வே.நடனசபாபதி
    பிறர் போற்றுவதோ தூற்றுவதோ எனக்குப் பொருட்டல்ல. என் மனக் கிடக்கைகளுக்கு பதிவுகள் ஒரு வடிகால் அது அதன் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சியே, கடிதம் மாதிரி துவங்கி முடிக்காமல்.....may be that shows i am different. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  32. ஆம் உண்மைதான் வலை உலகில் பலரது எழுத்துக்களைப் படிப்பவன் நான் சிறுகதை எழுதுவதில்பெயர் பெற்றவர்கள் என்று அறியப்பட்டவர்கள் என் கதைகளைப் படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டு.//
    எங்களுக்கும் உங்கள் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க ஆவல். இப்போது இருவருக்குமே கொஞ்சம் வேலைபளு....அதன் பின் ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கின்றது.....வித்தியாசமாக தாங்கள் சிந்திப்பதால் எங்களைக் கவர்ந்தவர். உங்கள் சிந்தனைகள் எங்களையும் சிந்திக்க வைக்கின்றன என்பது உண்மை.

    இந்தப் பதிவு நல்ல ஒரு சுய அலசல்? உங்கள் சிந்தனைகளின் வெளிப்பாடு. ஜிஎம்பி என்பவரின் அடையாள்ம்.

    ஆம் நம் குறைகளுடனேயே நம்மை ஏற்றுக் கொண்டு நேசிப்பது ஒரு நல்ல பாசிட்டிவ்தான்....குறைகளை மாற்றிக் கொள்ள முடியுமென்றால் இன்னும் சிறப்பு...நாம் விஸ்டமுடன் வாழ்கின்றோம் எனலாம்.....20 வயதில் இருந்த படி 60 லும் இருந்தால் நாம் வளரவில்லை என்பதே இல்லையா சார்...

    ACCEPT PEOPLE AS THEY ARE என்ற என்பதைப் பின்பற்ற கடினம் என்றாலும், அது வாழ்க்கைக்கு மிகவும் ஏற்ற ஒரு தத்துவமே...அது போன்று மேற் சொன்னது....

    இப்போது அவதாரங்களுக்கு வருகின்றோம்....எங்களின் கருத்து இந்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் வரை கடவுளர்களாகவும் அதன் பின் வருவது வாமனன் முதல் (இதில் எங்களுக்கு நிறைய கேள்விகள் உண்டு...அதையும் பதிந்திருந்தோம்...இன்னும் அடுத்தடுத்த அவதார்ங்களிலும் நிறைய உண்டு...) கிருஷ்ண அவதாரம் வரை மானிட வகை என்று சொல்லப்படுகின்றது.
    அதாவது பூமி தோன்றி முதலில் நீரில் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன,,நிலத்தில் வாழ்வன, மனிதன் பாதி மிருகம் பாதி, ட்வார்ஃப், உணர்வுகள் மிக்க உயரமான மனிதர், பின்னர் பக்குவப்பட்ட ஐடியலிஸ்டிக் நிலையில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பது போல, அதன் பின் மனிதனின் முன் கோபம், பின்னர் மனிதன் இந்த உலகிற்கு ஏற்றபடி, யதார்த்த ரீதியில், எப்படித் தந்திரங்களை உபயோகிக்க வேண்டும் தர்மம் என்று சொல்லிக் கொண்டு எனப்தாகத்தான் தெரிகின்றது. கிருஷ்ணன் செய்தது சரி என்றால், இப்பொது நமது அரசியல் வாதிகள் செய்வதும் சரியே. அவர் கடவுளாகப் பார்க்கப்படுவதால் அவர் எது செய்தாலும் சரி என்ற எண்ணம். ஆன்மீக வாதிகள் தயவு செய்து மன்னிக்கவும். நாங்களும் இறை உணர்வு மிகவும் உள்ளவர்கள். ஆனால் அது பொதுவாசப் பேசப்படுவது போல் இல்லை. கிருஷ்ணன் பீஷ்மரைக் கொல்வதற்கும், ஜராசந்தநைக் கொல்வதற்கும், துரியோதனனைக் கொல்வதற்கும், கர்ணனைக் கொல்வதற்கும், துரோணரைக் கொல்வதற்கும், பாண்டவர்களுக்கு உதவும் தந்திரங்களை ஒத்துக் கொள்ள இயலவில்லை. துரியோதனனின் பக்கம் நின்றார்கல் என்பதற்காக கொல்வது என்பதை ஒத்துக் கொள்ள இயலவில்லை. அவர்களின் உள் மனது அப்படி நினைக்கவில்லையே. இது ஒன் டு ஒன் என்பதல்லாமல் போர் என்ற வலைக்குள் வந்ததால் டிட் ஃபார் டிட் என்று ஆகிவிட்டது.

    அப்படித் தர்மம் என்ற முகமூடியில் அவர் கொடுத்த தந்திரங்கள் சரி என்றால், இப்போது நம்மில் பலரும் அதைச் செய்துதானே வருகின்றோம்? அப்போ அது சரியல்ல தெய்வக்குற்றம் என்று சொல்லப்படுவது ஏன்? கீதையில் பல விஷயங்களை மனது ஒப்ப மறுக்கின்றது......சம்ஸ்க்ருதம் மட்டும்தான் தேவ பாஷை...அப்படி என்றால் மற்ற பாஷைகள்? அதைப் பேசுபவர்கள் எல்லாரும் கடவுளை நெருங்க முடியாதா? கடவுள் மொழி வெறியரா? நாம் மனித நேயத்துடன், அன்பே சிவம் என்ற அடிப்படையில் வாழ்ந்து விட்டால் நல்லதே எனப்து எங்களது தாழ்மையான கருத்து. சார்...

    துளசிதரன், கீதா (துளசிதரன் பிசியாக இருப்பதால்..கீதாதான் இருவரின் கருத்தையும் இங்கு பதிவது)

    ReplyDelete

  33. @ துளசிதரன் தில்லையகத்து
    என்னைப் பொறுத்தவரை இவற்றையெல்லாம் கற்பனைக் கதைகளாகவே காண்கிறேன் அதில் வரும் கதாபாத்திரங்களின் செயல்கள் கற்பனை செய்தவரின் கருத்துக்கள். இருந்தாலும் ராமாயணமும் மஹாபாரதமும் சிறந்த கற்பனைக் காவியங்கள்ராமாயணத்தில் ராமனின் பிறப்பு பற்றிப் படித்திருக்கிறேன் இறப்பு பற்றிய செய்திகள் உண்டா தெரியவில்லை. கிருஷ்ணரின் கதையில் பிறப்பு இறப்பு இரு செய்திகளும் உள்ளன, மற்ற கதைகளில் பிறப்பு பற்றியோ இறப்பு பற்றியோ செய்திகள் இல்லை என நினைக்கிறேன் ,நீங்கள் இட்ட பின்னூட்டங்களில் இருக்கும் கேள்விகளுக்கு கதையைக் கதையாக எடுத்துக் கொண்டால் சந்தேகங்களும் மறைந்து போகும் என்பதே என் கருத்து. நல்லாட்சி செய்து வந்த மஹாபலிச் சக்கிரவர்த்தியை அழிக்க வாமன அவதாரம் என்பதே சரியில்லையே. அப்பேற்பட்டவருக்கா கடவுள் ஸ்தானம் ?கடவுள் கதைகள் நன்கு மூளை சலவை செய்யவே பயன் பட்டிருக்கின்றன. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கீதா, துளசிதரன்

    ReplyDelete
  34. துளசிதரன் பின்னூட்டங்கள் பிரமாதம்.

    அத்யாத்ம ராமாயணத்தில் ராமனின் இறப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  35. dear me என்று ஒரு பிரபல ஆங்கில கவிதை உண்டு. கல்லூரியில் படித்தது.

    வித்தியாசமான குழப்பவாதியா?!

    ReplyDelete

  36. @ அப்பாதுரை
    நான் அத்யாதம ராமாயணம் படித்ததில்லை. தேடிப்பார்க்கிறேன்

    ReplyDelete

  37. @ அப்பாதுரை
    dear me என்று சொன்னால் it is an expression of mild dismay or regret --Right sir...!
    I am not dismayed or have any regret. அந்த மாதிரியான தொனியில் என் பதிவு இருந்ததா சார்,?

    ReplyDelete
  38. true. ஆனால் இந்த 'dear me' தனக்குத் தானே எழுதிக்கொண்ட கடிதம். கவிதை வடிவில்.

    ReplyDelete

  39. @ அப்பாதுரை
    புரிந்தது சார்.என் பதிவு அந்தத் தொனியில் இருந்ததா என்று கேட்டிருந்தேனே, வருகைக்கு நன்றி.

    ReplyDelete